பெண் ஆணின் இதயத்தை வெல்லும் விதம்
ஆணின் ஒரு கேள்விக்கு
பெண்ணிடம் பல பதில்கள் உள்ளன
கேட்பவர் யாரென்றறிந்த பிறகு
அவள் பதிலை வெளிப்படுத்துகிறாள்
அப்பெண்
ஓர் ஆணின் இதயத்தை வெல்லும் விதம்
அவனைக் காதலிப்பதாக நம்ப வைப்பதுதான்
பிறகு
ஆணின் உடலுக்கு ஒரு மலரின் இயல்பு வந்துவிடுகிறது
அது மலரும் உலரும் உதிரும்
அதற்குள்
பெண் மிக நீளமான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பாள்
அவனைக் காதலிக்கவும் அல்லது மறுதலிக்கவும்
என்ன பதில் வந்தாலும்
வானத்தின் நீல நிறத்திற்கு எதிராகவே பூமியில் நடக்கிறான் ஆண்
அவனிடம்
சூரியன் ஒரு குட்டிப்பையன் போல நடந்துகொள்கிறது.
காதல் முறிவுக்குப்பின் இதயம் உலர்த்தும் முறை
சூரியனின் காய்கறி கூடையில் மனிதர்கள் இருக்கின்ற காரணத்தால்
காதல் முறிவுகளுக்குப் பின் இதயத்தை உலர்த்தும்
என் விருப்பத்திற்காக
அந்தியம்பொழுதில் பூக்கள் கணக்கின்றி பூத்து
சூரியனைத் திசைதிருப்ப முயல்கின்றன
காதலில் இருக்கும் பெண்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை
இதற்காகக் கேள்வி எழுப்பினால்,
பெண்கள் மலைகளின் உயரத்தை நம்புவதாகச் சொல்கிறார்கள்
ஆனால் உண்மை என்ன?
மலைகள் சூரியனை அடைத்து வைக்கும் கதவு போல இருக்கின்றன.
காதல் மிகுந்த என் இதயத்திற்காக
நாய்கள் குலைத்தபடி
சூரியனைத் திசைத்திருப்ப முயல்கின்றன
திருமணத் தேதியைக் குறித்து விட்டு
காத்திருக்கும் பெண்கள் அதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை
இதற்காகக் கேள்வி எழுப்பினால்,
அப்பெண்கள் மேகங்களை நம்புவதாகச் சொல்கிறார்கள்,
ஆனால் உண்மை என்ன?
மேகங்கள் சூரியனை மூடி வைக்கும் போர்வை போல இருக்கின்றன.
புதிய காதலியிடம்
சூரியனைத் திசைத் திருப்ப ஏதேனும் வழி இருக்கிறதா என்றேன்?
மடியில் படுத்து உறங்கு என்றாள்
சூரியனைத் திசைத்திருப்ப இதைவிட சிறந்த வழி இருக்கிறதா என்ன?
நீள்வட்டமான முத்தம்
வங்கியில் வரிசையில் நிற்கும் அவளின் தோளில் தெரியும் சிவப்பு ஸ்டிராப்-ஐ
கற்பனையான கையால் இழுத்துவிட்டு சிரித்தேன்
பற்களை
கீழே உதிர்த்துவிடுவதுபோல பதிலுக்குச் சிரித்தாள்
முக்கோண வடிவத்தில் ஒளிரும் பொருளை
சூரியனென நம்பவைக்க முயல்வது போல அருகில் சென்றேன்.
களைந்திருக்கும் கூந்தல் அவ்வளவு அழகாய் அசைந்தது
காற்றை அதிசயமென ஏன் இதுவரை யாரும் சொல்லவில்லை?
நல்ல உரையாடலைப் பெண்கள்தான் தொடங்குகிறார்கள் என்பதற்கு ஏற்ப
“பேங்க் சர்வர் ” பிரச்சனையாம் – என்றாள்.
இயந்திர சிக்கல்கள்
மனிதர்களிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சொற்களை
பயன்படுத்த உதவி செய்கின்றன.
நீ பரிசளித்த புடவையை உடுத்தினால் இப்போதும் அம்மா சிலாகித்துச் சொல்கிறாள் என்றாள்
உலகத்தில் நிறங்கள் கண்டுபிடிக்கப்பட்டதே புடவைகளுக்காகத்தான் என்பது போல சிரித்தேன்.
எதிரில் இருப்பவரிடம் பூங்கொத்தைக் கையளிப்பது போல
சில சொற்களைப் பெண்களால் மட்டும் எப்படிச் சொல்ல முடிகிறது ?
பதிலுக்குச் சில இலைகளையாவது தர வேண்டும் அல்லவா?
உனக்கு எல்லா உடைகளுமே பொருந்தும் உடல் வாகு.
உண்மையாகவே அவள் பார்வையில் காதல் முறிவு பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை
உனக்குப் பிடித்த பெலூடா சாப்பிடலாமா என்றாள்
பூமி சுற்றுவதில் ஏதோ கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்தவன் போல நின்றேன்.
என் கையோடு கை கோர்த்து சேர்ந்து நடந்தாள்.
எங்களைப் பார்த்த யாராவது காதலைப் பற்றிய குறிப்புகள் சிலவற்றை
வங்கிப் படிவங்களில் எழுதியிருக்கக்கூடும்.
கண்களுக்குப் பதிலாகவும்
இரண்டு வாய்கள் கூடுதலாக பெற்றவர்கள் போல பேசினோம்
மகிழ்ச்சியாக கழித்த ஒரு மழைநாளை நினைவுபடுத்துவதுபோல
மழைத்தூறல் விழுந்தது
நனையும் உள்ளாடை பற்றிய ஒரு ஜோக்கை நினைத்து சிரித்தேன்
புரிந்தவள் போல
தோளில் ஸ்டிராப்பை சத்தமாக இழுத்துவிட்டு சிரித்தாள்.
“சர்வர் அப்படியேதான் இருக்காம் – நாளையும் வரனும் ” என்று
பேசியபடி யாரோ ஒருவர் தேநீர் குடித்தார்.
காதலைச் சிறு குழந்தை போல திறந்து பார்த்தோம்.
சிறிய பரிசு பெட்டி போல இருந்த எங்களின் வாய்.
முத்தம் என்பதை நீள்வட்டம் என்று நிறுவியது