மகிழம் பூ
‘மகிழம்பூ’ என்பது
இவ்வுலகிற்கு ஒரு மலர்;
நம்மிருவர்க்கும்
அஃதொரு மறைபொருள்
நமக்கு மட்டுமே தெரிந்த
அந்த மகிழம்பூ
நீ பிறக்கும்போதே
உன்னோடு பூத்தது
உள்ளுந்தோறும்
மகிழச் செய்வதால்
நான்தான் அதற்கு
மகிழம்பூ என்று பெயரிட்டேன்
மறுப்பேதும் சொல்லாமல்
நீயும் ஏற்றுக் கொண்டாய்
நாம் பிரிவுற்ற நாளொன்றில்
உன்னோடு ஒட்டிக்கொண்டு
வந்து விட்டதந்த மகிழம்பூ
அதன் மணம் மட்டும் நீங்காமல்
தங்கிவிட்டது என் நினைவில்.
நல்மனம்
ஒரு பெண்ணைக் காதலித்ததற்காய்
ஊரைவிட்டு அடித்துத் துரத்தப்பட்டவன்.
உற்றார் உறவினரிடம் பட்ட கடனுக்காய்த்
தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுப்
பொருளீட்டச் சென்றவன்.
நல்லறம் பேணாத் தந்தையினால்
இல்லறவாழ்வு அமையப் பெறாதவன்
தாயின் ஈமச்சடங்கில்கூட
கலந்துகொள்ள இயலாதவாறு
காலத்தாலும் வறுமையாலும்
கூட்டாக வஞ்சிக்கப்பட்டவன்
காயடிக்கப்பட்ட மாடுபோல்
கடும் உழைப்பிற்குக்
காலமெல்லாம் ஏவப்பட்டவன்.
இளமையுதிர் காலத்தில் நின்று
பெண்ணின்பப் பாடுறலுக்காய்ப்
பேதுற்றுத் தத்தளிப்பவன்
ஆள்நடமாட்டம் கண்டு அஞ்சியவாறே
தெருவில் புணர்ந்திருக்கும் நாய்களைத்
தொந்தரவு செய்ய மனமின்றித்
தொலைவாய் ஒதுங்கிச் செல்கிறான்.
அலைவாழ்வு
அதோ
கடலாடிக் கொண்டிருக்கும்
சிறுதுரும்பை அடித்து வந்து
கரையில் சேர்க்கிறது
ஓர் அலை
இதோ
கரைகிடக்கும் அத்துரும்பை
உள்ளிழுத்துச் செல்கிறது
இன்னோர் அலை
இவ்வளவுதானே
இந்த வாழ்க்கை
இதற்குள் எதற்கு
இத்தனை
காழ்ப்புகளும் கசப்புகளும் .
உள்ளன்பு
பனம்புத்தோலை வேயப்பட்ட
பழங்குடிலுள் நிறைந்திருக்கும்
நறுங்கமழ்ச்சி
சுடுமண் பானையில்
நீடுபொழுதாய் நிரப்பி
வைக்கப்பட்டிருக்கும்
புதுப்பெயல்நீரின் குளிர்ச்சி
அழகுமயிற் பைந்தோட்டின்
அழுந்தாப் பூந்தீண்டல்
இவற்றிற்கு ஈடிணையாய்
ஒன்றைச் சொல்லவேண்டுமெனில்
உன் உள்ளன்பைத்தானே
சொல்லமுடியும்.