வே.நி.சூர்யாவின் கவிதை உலகமும் சமகாலத் தமிழ்க் கவிதையின் புதிய எல்லைகளும்.
“கவிதை என்பது மொழியால் கட்டப்பட்ட வீடல்ல, மொழி மறைந்த பிறகும் வாசகருக்குள் தொடர்ந்து வாழும் அனுபவம்.”
கவிதை அனுபவத்தின் அழகியல் என்றாலும் கவிதை எப்போதும் கருத்தைச் சொல்வதை விடுத்து கவிதை நிகழ்வும் கணத்தை இன்னொருவருக்குள் நிகழ்த்துவதாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்க் கவிதை குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவான கவிதைச் சூழல், மொழியின் அலங்காரத்திலிருந்து அனுபவத்தின் நெருக்கத்திற்கு நகர்ந்தது. அதே நேரத்தில் அரசியல், உடல், பாலினம், நினைவு, இடம்பெயர்வு, தனிமை, தொழில்நுட்பம், சூழலியல், மனச்சிதைவு ஆகியவை கவிதையின் புதிய பொருட்களாக மாறின. இந்த மாற்றத்தின் மத்தியில், பெரும் கோட்பாடுகளோ பிரகடனங்களோ இல்லாமல், மிக அமைதியாகத் தனது கவிதை உலகத்தை உருவாக்கிய கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் வே.நி. சூர்யா.
அவரது கவிதைகள் முதலில் வாசிக்கும்போது மிக எளிமையானவைப் போலத் தோன்றலாம். ஆனால் அவற்றின் உள்ளமைப்பை ஆராயும்போது, அந்த எளிமை மிகக் கடினமான கலையின் விளைவு என்பதை உணர முடிகிறது. கவிதையின் மொழி எளிதாக இருக்கலாம், ஆனால் அதன் அனுபவம் அப்படியல்ல. வாசகர்களை மெதுவாகத் தன்னுள் இழுத்துக்கொண்டு, உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றுகிறது. நாகர்கோவிலை அடுத்தப் பறக்கையைச் சேர்ந்த சூர்யா, இயந்திரவியல் பொறியியல் பட்டதாரி. சிற்றிதழ்கள், இணைய இதழ்கள் வழியாகக் கவிதை, புனைகதை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கி வருகிறார். கரப்பானியம், அந்தியில் திகழ்வது என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் அவருடைய கவிதை உலகின் இரண்டு முக்கியமான நிலைகளைப் பதிவு செய்கின்றன.
இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் மையமாகக் கொண்டு நடைபெற்ற திணைகள் கவிதை உரையாடலில், சூர்யாவின் கவிதைகள் பற்றி ஆராயப்பட்டது. சமகாலத் தமிழ்க் கவிதை எவ்வாறு வாசிக்கப்பட வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பியது. விக்ரம், கண்டராதித்தன், சூரஜ் ஆகிய மூன்று விமர்சகர்கள் மூன்று முற்றிலும் வேறுபட்ட வாசிப்பு முறைகளை முன்வைத்தனர். ஒருவர் அனுபவத்தின் அழகியலைக் கவனித்தார். ஒருவர் மொழியின் பரிணாமத்தை ஆராய்ந்தார், மற்றொருவர் தத்துவத்தின் ஒளியில் கவிதைகளை மறுவாசித்தார்.
இவற்றின் இறுதியில் சூர்யாவே தனது படைப்பியல் குறித்த சுயவிளக்கத்தை வழங்கியபோது, அவர் தனது கவிதையை எவ்வாறு சிந்திக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ளமுடிந்தது. மூன்று பேரின் உரைகளும் சமகாலக் கவிதையின் இயல்பு, மொழியின் பங்கு, பொருட்களின் இருப்பு, நினைவின் அமைப்பு, காலத்தின் அனுபவம், கவிதையின் அரசியல் ஆகியவற்றைப் பற்றிய விரிவான சிந்தனையாக விரிந்தது. அந்நிகழ்வில் முன்வைக்கப்பட்ட கருத்துகளோடு விரிவுபடுத்தி, அத்துடன் தமிழ் இலக்கியக் கோட்பாடுகள் , தமிழ்க் கவிதை மரபுகளுடன் இணைத்து வாசிக்க முயல்கிறது.
அனுபவத்தின் கலை
முதலில் உரையைத் தொடங்கிய விக்ரம், “கவிதை என்றால் என்ன?” என்ற அடிப்படைக் கேள்வியை மீண்டும் எழுப்பினார். இது சாதாரணத் தொடக்கம் போலத் தோன்றினாலும், நவீனக் கவிதையைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான தத்துவ நிலைப்பாடாக மாறுவதாகக் குறிப்பிட்டார். அவருடைய கருத்தின் மையம் எளிமையானது, கவிதை தகவலைக் கொடுப்பதில்லை அது நல்ல அனுபவத்தை உருவாக்குகிறது. இது இருபதாம் நூற்றாண்டு முழுவதும் உலக இலக்கிய விமர்சனத்தில் நடந்த விவாதங்களின் சுருக்கமாகவே பார்க்கலாம்.
ஆங்கிலக் கவிஞர் ஆர்ச்சிபால்ட் மக்லீஷ் தனது புகழ்பெற்ற Ars Poetica கவிதையில், “A poem should not mean, but be.” என்று எழுதுகிறார். கவிதை பொருள் சொல்ல வேண்டியதில்லை, அது தானே நிகழ்வதாக இருக்க வேண்டும். இதையே விக்ரம் வேறுமொழியில் கூறுகிறார். ஒரு சிறுகதை அதற்குள் ஒரு சம்பவத்தைச் சொல்கிறது. ஒரு நாவல் ஒரு வாழ்க்கையை நிலைநிறுத்துகிறது. ஆனால் கவிதை? அது ஒரு தருணத்தை முடிவில்லாத காலமாக மாற்றுகிறது.
விக்ரம் பயன்படுத்திய மிக அழகான உருவகம் “Freeze செய்யப்பட்ட தருணம்.” இந்த உறைந்த தருணங்களையே ரோலான் பார்த் கூறும் punctum என்ற கருத்தோடு இணைத்துப் பார்க்கலாம். ஒரு புகைப்படத்திலிருக்கும் சிறிய விஷயம் திடீரென நம்மைத் தாக்குகிறது. அது முழுப் புகைப்படமல்ல. ஒரு கண், ஒரு விரல், ஒரு நிழல், ஓர் உடைந்த பொம்மை, அதுதான் punctum. சூர்யாவின் கவிதைகளும் இதே மாதிரியான செயல்பாட்டையே நிகழ்த்துகின்றன. பெரிய நிகழ்வுகளை எழுதுவதில்லை. மாறாக, சன்னலினூடே வரும் மாலை வெளிச்சம், காற்றில் ஆடியபடி ஒலியெழுப்பும் உலோகக் கிண்கிணிகள், கிழித்துப்போடப்பட்ட புகைப்படக் குவியல்கள், உலகை வரையும் தூரிகையைத் தன் வாலாகக் கொண்ட ஒரு பூனை. இப்படிப்பட்டவையே அவரது கவிதையின் மையமாக மாறுகின்றன. இவையே கவிதானுபவத்தின் துகள்களாக இருக்கின்றன. விக்ரம் சூர்யாவின் உலகத்தைச் சிறிய உலகமென்று குறிப்பிடுகிறார். முதல் பார்வையில் இது ஒரு வரம்பு போலத் தோன்றலாம். ஆனால் அதுவே அவரது மிகப் பெரிய வலிமையென நினைக்கிறேன். பிரெஞ்சு தத்துவவாதி காஸ்டன் பஷ்லார் , ‘ஒரு வீட்டின் மூலை முழுப் பிரபஞ்சத்தை விடப் பெரியதாக இருக்க முடியும்.’ ஏன்? ஏனெனில் மனிதனின் நினைவுகள் பெரும்பாலும் சிறிய இடங்களில்தான் வாழ்கின்றன. ஒரு சன்னல், ஒரு நாற்காலி, ஒரு படிக்கட்டு என அங்கேயே வாழ்க்கை நிற்கிறது. சூர்யாவின் கவிதைகளும் இதே செயலைச் செய்கின்றன. அவர் உலகத்தைச் சுருக்குவதில்லை. மாறாக, சிறிய விஷயங்களுக்குள் உலகையே அடக்குகிறார். சிறிய உலகத்தில் பேரளவு பரப்பினை உருவாக்குகிறார்.
சமகாலக் கவிதையின் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று, அது பல நேரங்களில் பெரிய கருத்துகளைத் தேடிச் செல்கிறது. சமூகம், அரசியல், வரலாறு, அடையாளம், இவை அனைத்தும் அவசியமானவை. ஆனால் அவற்றின் நடுவே மனிதன் தவறவிடும் மிகச் சிறிய அனுபவங்களை யார் பதிவு செய்வது? சூர்யாவின் கவிதை அங்கேயே தொடங்குகிறது. அவர் ஒரு விஷயத்தைப் பார்க்கிறார். மீண்டும் பார்க்கிறார். இன்னும் பார்க்கிறார். அந்த மூன்றாவது பார்வையில்தான் கவிதை பிறக்கிறது. இதைத்தான் ஜப்பானிய ஹைக்கூ மரபு கவனத்தின் ஒழுக்கமென்று சொல்கிறது. சூர்யாவின் பல கவிதைகளும் இந்த ஹைக்கூ மனநிலைக்கு மிக அருகில் செல்கின்றன.
சமகாலக் கவிதை மறந்துகொண்டிருக்கும் உணர்வு ஏக்கம், விக்ரம் குறிப்பிட்ட இந்த முக்கியமான கருத்துக் கவனிக்கவேண்டியது. தமிழில் இதனை ஏக்கம், விழைவு, தேடல், இல்லாததின் இருப்பு என்று பலவிதமாக மொழிபெயர்க்கலாம். சங்க இலக்கியத்தில் தோராயமாக ஏக்கம்தான் மைய உணர்வு. அகப்பாடல்கள் முழுவதும் ஏக்கத்தின் பல வடிவங்களே. ஆனால் சமகாலக் கவிதை பல நேரங்களில் ஏக்கத்தைச் சந்தேகத்துடன் பார்க்கிறது. உறவுகள் சிதைந்த உலகில், நிலையான காதல் இல்லாத உலகில், ஏக்கம் பழைய உணர்வாகத் தோன்றுகிறது.
அங்கே சூர்யா அதை மீண்டும் உயிர்ப்பிக்கிறார். இது நினைவின் ஏக்கம், இழந்த நேரத்தின் ஏக்கம், நம்மை விட்டுச் சென்ற பொருட்களின் ஏக்கம், இன்னும் வராத நாளின் ஏக்கம், இந்த ஏக்கம் ஒருபோதும் முழுமையடைவதில்லை அதனால்தான் அது கவிதையாகிறது. இது மைக்ரோ அப்சர்வேஷன் என்று சொல்லலாம். விக்ரம் மிக நுட்பமாகச் சுட்டிக்காட்டியது சூர்யாவின் கவிதைகளில் ‘நான்’ முழுமையாக இருக்கிறது. ஆனால் சுயசரிதையாகவோ, தனிமனித அகந்தையோ இல்லாமல் அனுபவத்திலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ள மறுக்கும் ஒரு குரல். ஒரு கவிஞன் தனது தனிமனித உணர்ச்சிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஆனால் சூர்யா முற்றிலும் வேறு வழியில் செல்கிறார். அவர் தன்னை நீக்குவதில்லை. தன்னையே அனுபவமாக மாற்றுகிறார். அதனால்தான் அவரது கவிதைகளில் ‘நான்’ ஒரு மனிதனாக இல்லாமல், ஒரு பார்வை மாறுகிறது. அந்த ‘நான்’ தான் சன்னலாகிறது, கல்லாகிறது, அந்தியாகிறது, கடலாகிறது, மௌனமாகிறது. நான் இங்கு உயிருள்ள இருப்பாக மாறுகிறது.
கவிஞரின் வளர்ச்சியை எப்படிப் புரிந்துகொள்வது? அவர் முதல் தொகுப்பிலிருந்து இரண்டாவது தொகுப்பிற்கு எவ்வளவு மாறியிருக்கிறார் என்பதைக் கொண்டு மட்டுமா? அல்லது அந்த மாற்றங்களுக்கிடையில் தொடர்ந்து உயிருடன் இருக்கும் கவிதைச் சிந்தனையைக் கொண்டா? வே.நி.சூர்யாவின் கவிதைகள் குறித்த கண்டராத்தனின் உரை, இந்தக் கேள்வியை நுட்பமாக முன்வைக்கிறது. விக்ரம் வாசகரின் அனுபவத்தின் அடிப்படையில் சூர்யாவின் கவிதைகளை அணுகியிருந்தார், கண்டராதித்தன் அவரது கவிதை மொழியின் பரிணாமத்தை மையமாகக் கொண்டு வாசிக்கிறார். இந்த இரு பார்வைகளும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை. ஆனால், ஒன்று மற்றொன்றை நிறைவு செய்கிறது.
கண்டராதித்தனின் உரையின் மிக முக்கியமான அம்சம், அவர் ஒரு வாசகராக மட்டுமல்ல, சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சூர்யாவின் எழுத்துப் பயணத்தை அருகிலிருந்து கவனித்த ஒருவராகப் பேசுகிறார் என்பதே. அது ஒரு படைப்பாளியின் உள்மாற்றங்களின் அடிப்படையைப் பதிவு செய்கிறது.
ஆரம்பத்தில் சூர்யாவின் மொழி டென்ஸாக இருந்தது என்றார். அந்த அடர்த்தியை இரண்டுவிதமாகப் பார்க்கலாம். முதலாவது, மொழி சிக்கலாக இருந்தது. இரண்டாவது, அந்த மொழிக்குள் அனுபவம் மிக அதிகமாக அழுத்தப்பட்டிருந்தது. நல்ல கவிதைகளில் இந்த இரண்டும் ஒன்றாக நிகழும். ஆனால் எல்லாக் காலங்களிலும் அது வாசகருக்கு திறந்த கதவாக மாறுவதில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டி.எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட், பால் செலான் போன்ற கவிஞர்களின் கவிதைகளும் இப்படித்தான் இருந்தன. அவற்றை வாசிப்பதற்கு மொழி மட்டுமல்ல, இலக்கிய வரலாறு, புராணம், தத்துவம் ஆகியவற்றின் பின்னணியும் தேவைப்பட்டது. தமிழிலும் இதற்கு இணையான பரிணாமத்தை நாம் பார்த்திருக்கிறோம். பிரமிளின் ஆரம்பக் கவிதைகள், தேவதேவனின் சில தொகுப்புகள், நகுலனின் மொழிச் சோதனைகள் இவை அனைத்தும் வாசகரிடமிருந்து ஓர் அறிவார்ந்த பங்கேற்பைக் கோரின.
சூர்யாவின் ஆரம்பக் கவிதைகளும் இந்த வரிசையில் நின்றிருக்கலாம். பின்னர் அவர் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த மாற்றத்தைக் கண்டராதித்தன் எளிமையாக அடர்த்தியிலிருந்து வெளிச்சத்திற்கு வருபவை என்று குறிப்பிடுகிறார். கவிதையில் எளிமை என்பது மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் சொல். எளிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதோ எளிதில் புரியும் கருத்தை எழுதுவதல்ல, மிகச் சிக்கலான அனுபவத்தை மிகச் சாதாரணமான மொழியில் வெளிப்படுத்தும் திறன். இதனை ஆண்டன் செகாவ் தனது கதைகளில் நிகழ்த்தினார். பாஷோ தனது ஹைக்கூக்களில் நிகழ்த்தினார். தமிழில் ஆத்மாநாம், தேவதச்சன், தேவதேவனின் பிற்காலக் கவிதைகள் இதற்கு எடுத்துக்காட்டலாம். இந்த வரிசையில்தான் சூர்யாவின் பிற்கால மொழியையும் வைக்கலாம். வாசகரை அவரது மொழியின் மீது வியக்கச் செய்வதில்லை. மொழியின் வழியாக உலகத்தை வியக்கச் செய்கிறார். இதுவே முதிர்ந்த கவிஞரின் அடையாளம்.
இலக்கியத்தில் மொழி குறித்து நீண்டகாலமாக இரண்டு கருத்துகள் இருக்கின்றன. மொழி தன்னையே வெளிப்படுத்த வேண்டுமா? அல்லது மொழி தன்னைத்தானே கடந்தபடி உலகத்தை மட்டும் காட்ட வேண்டுமா? மாடர்னிசக் கவிதையின் ஒரு பகுதி மொழியையே பொருளாக மாற்றியது. வார்த்தைகளின் அமைப்பு, ஒலி, உடைப்பு, இலக்கண மீறல்கள் ஆகியவை அங்கே முக்கியமானவை.
மொழியைக் கிராஸ் செய்து போக முடியுமா என்பதைத் தொடர்ந்து முயற்சிக்கிறார். இது அவரது முழுக் கவிதையியலை விளக்குகிறது. அவருக்கு மொழி ஒரு கண்ணாடியாக இல்லாமல் சன்னலாக இருக்கிறது. வாசகர்கள் சன்னலைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. சன்னலின் வழியாக வெளியில் இருக்கும் மாலையைப் பார்க்க வேண்டும். ஃப்ராபர்ட் ஃப்ராஸ்ட் “The best poetry begins in delight and ends in wisdom” என்று வேறு கோணத்தில் சுட்டிக்காட்டினார். அந்தியில் திகழ்வது தொகுப்பு ஒரு புதிய கட்டத்தை அடைந்திருப்பதாகும். என்ன மாறுகிறது? மொழியா… பார்வையா… சொல்லப்போனால் உண்மையில் இரண்டும். கரப்பானியம் தொகுப்பில் கவிஞர் பொருள்களை நோக்கிப் பார்க்கிறார். அந்தியில் திகழ்வது தொகுப்பில் பொருள்களே கவிஞரை நோக்கிப் பார்க்கத் தொடங்குகின்றன. இது மிகச் சிறிய மாற்றம் போலத் தோன்றினாலும், கவிதையின் முழு இயங்குமுறையையும் மாற்றிவிடுகிறது. முன்பு கவிஞர் உலகத்தைப் பதிவு செய்தார். இப்போது உலகம் கவிஞருக்குள் நுழைகிறது. இந்த நகர்வுதான் அவரது மொழியையும் மாற்றுகிறது.
கண்டராதித்தன் சுட்டிக்காட்டும் இன்னொரு அம்சம் சூர்யாவின் மொழியில் இன்னும் உயிருடன் இருக்கும் செவ்வியல் தன்மை. இது சங்க இலக்கியச் சொற்களைப் பயன்படுத்துவதோ, பழைய இலக்கண வடிவங்களை மீட்டெடுப்பதோ இல்லை. மொழியின் இயல்பான நெகிழ்வுத்தன்மை. ஒரு சொல் இன்னொரு சொல்லை மெதுவாகத் தொடும் விதம். ஒரு வாக்கியம் சத்தமின்றி முடியும் முறை. ஓர் உருவகம் தன்னியல்பில் உருவாக்கும் அமைதி, இவையனைத்தும் தமிழின் நீண்ட கவிதை மரபிலிருந்து வந்தவை. மரபு என்பது கடந்தகாலத்தை நகலெடுப்பதல்ல, கடந்தகாலம் நிகழ்காலத்தில் தொடர்ந்து உயிரோடு இருப்பது என்ற அடிப்படையில் பார்த்தால், சூர்யாவின் கவிதை மொழி ஆழமான மரபுணர்வைக் கொண்டது.
மிகவும் நுட்பமாக அடையாளம் காணும் ஒரு கவிதை உத்தி வெளியிலிருந்து உள்ளுக்குத் திரும்பும் நகர்வு. இதனை அவர் “மாபெரும் அஸ்தமனம்” போன்ற கவிதைகளின் மூலம் விளக்குகிறார் கண்டராதித்தன். முதலில் கவிதை வெளிக்காட்சியை வரைகிறது. சூரியன் மறைகிறது, கடல் சிவக்கிறது, மாலை இறங்குகிறது. இதை இயற்கைக் கவிதை என்று நினைக்கத் தொடங்கும் தருணத்தில், கவிதை திடீரெனத் திரும்புகிறது. அது வெளிக்காட்சியை விட்டுவிடுகிறது. கவிஞரின் உள்ளுக்குள் நுழைகிறது. இந்தத் திருப்பம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது காட்சியை அனுபவமாக மாற்றுகிறது. வெளியிலிருந்து உள்ளுக்குச் சூர்யாவின் கவிதைக் கட்டமைப்பு.
இவர் குறிப்பிட்ட இன்னொரு கவிதை மிகவும் சுவாரசியமானது. அஸ்தமனம் என்பது இன்னொரு இடத்தில் ஒரு விடியல்தான். ஒரு கவிதையின் முடிவு என்பது வேறொன்றின் தொடக்கம். ஒரு பிரிவு என்பது வேறொரு சந்திப்பு. ஒரு மரணம் என்பது வேறொரு நினைவின் பிறப்பு. இந்தப் பார்வை சூர்யாவின் கவிதைகளில் அடிக்கடி தோன்றுகிறது. அவர் இருளைப் பற்றிப் பேசும்போதும் அதற்குள் வெளிச்சம் மறைந்திருக்கிறது. அவர் மாலையை எழுதும்போதும் அதற்குள் காலையின் விதை இருக்கிறது. இந்த இரட்டை இயக்கமே அவரது கவிதைகளுக்கு ஆழத்தை வழங்குகிறது. சூர்யாவின் கவிதைகளில் கண்டராதித்தன் மிகவும் ரசிக்கும் அம்சம், பெரிய தலைப்புகள் மிகவும் எளிமையான வரிகளில் முடிவடைவது. ஒரு தத்துவ நிலைப்பாடும் கூட. உலகத்தின் மிகப் பெரிய உண்மைகள் பெரும்பாலும் மிகச் சாதாரணமான வாக்கியங்களில் தான் வெளிப்படுகின்றன. ஜென் மரபினர் இதைத்தான் செய்கின்றனர். நிலவு எங்கே? விரலைப் பார்க்காதே என்ற சிறிய வாக்கியத்திற்குள் முழுத் தத்துவம் மறைந்திருக்கிறது. சூர்யாவின் கவிதைகளும் இதேபோல இயங்குகின்றன, மிருதுவாக அமைதிக்குள் தள்ளுகின்றன.
ஒரு படைப்பாளி வளர்ந்திருக்கிறார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? அவரது மொழி சிக்கலாகிவிட்டதா? அல்லது இன்னும் எளிமையாகிவிட்டதா? இந்த இரண்டும் போதுமான அளவுகோல்கள் என்று வரையறுத்துவிட முடியாது. கவிஞரின் முதிர்ச்சி என்பது, அவர் எதை விட்டுவிடுகிறார் என்பதில்தான் இருக்கிறது. தேவையற்ற உருவகங்களை, தேவையற்ற அலங்காரங்களை, தேவையற்ற அறிவார்த்தக் காட்சிகளை, சூர்யாவின் இரண்டாவது தொகுப்பைப் பற்றிப் பேசும்போது கண்டராதித்தன் உண்மையில் இதைத்தான் சுட்டிக்காட்டுகிறார். அவர் அதிகமாக எழுதவில்லை. அதிகமாக நீக்கியிருக்கிறார். சிற்பி ஒரு கல்லைச் செதுக்கும்போது உருவத்தை உருவாக்குவதில்லை. தேவையற்ற கல்லை அகற்றுகிறார். அதுபோலவே, ஒரு கவிஞரின் மொழியும் காலப்போக்கில் தன்னைத் தானே செதுக்கிக்கொள்கிறது. கண்டராதித்தனின் வாசிப்பு, சூர்யாவின் கவிதைகளைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமான திறவுகோலை வழங்குகிறது. அவரது கவிதைகளின் வெளிப்புற எளிமையை மட்டும் பார்த்தால், அவற்றின் உள்கட்டமைப்பு நமக்குப் புலப்படாது. மொழி எளிமையாக இருக்கலாம். காட்சி மிகச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னாலிருக்கும் காலம், நினைவு, தனிமை, இருப்பியல் கேள்விகள் மிக ஆழமானவை. இதுவே சூர்யாவின் கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது.
கவிதை பொருட்களைப் பற்றி எழுதுவதல்ல, பொருட்கள் நம்மைப் பற்றி என்ன சொல்லுகின்றன என்பதைக் கேட்பது. விக்ரமும் கண்டராதித்தனும் சூர்யாவின் கவிதைகளை முறையே அனுபவம், மொழி என்ற இரு தளங்களில் வாசித்திருந்தால், சூரஜின் உரை முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கியது. கவிதையைத் தத்துவத்தின் ஒளியில் மறுபடியும் சிந்திக்கும் முயற்சியாக அமைந்தது. இத்தகைய வாசிப்புகள் தமிழில் அரிது. ஏனெனில் நமது இலக்கிய விமர்சனங்கள் பெரும்பாலும் இரண்டு முனைகளில் இயங்குகின்றன. ஒன்று, கவிதையின் மொழி உத்திகளை மட்டும் ஆராயும் அழகியல் விமர்சனம். மற்றொன்று, அதன் அரசியல் அல்லது சமூகப் பொருளை மட்டுமே முன்னிறுத்தும் வாசிப்பு. ஆனால் சூரஜ் தேர்ந்தெடுத்த பாதை வேறுபட்டது. அவர் கவிதையை ஒரு சிந்தனை முறை -Mode of Thinking என்று அணுகுகிறார்.
அவரது உரையின் பின்னணியில் இந்தியத் தத்துவ மரபுகள் ஒன்றோடொன்று உரையாடுகின்றன. இதனால் சூர்யாவின் கவிதைகள் ஒரு தனிப்பட்ட படைப்பாளியின் அனுபவத்தைத் தாண்டி, சமகால மனிதனின் இருப்பியல் தேடலாக மாறுகின்றன. சூரஜ் தனது உரையைச் சார்ல்ஸ் டேய்லரின் The Ethics of Authenticity நூலிலிருந்து தொடங்குகிறார். டேய்லரின் மையக் கருத்து என்னவென்றால், நவீன மனிதன் இனி முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட உலகில் வாழ்வதில்லை. மதம், மரபு, அரசியல், குடும்பம் ஆகிய பழைய அதிகார மையங்கள் உடைந்துவிட்டன. இப்போது மனிதன் தனது அர்த்தத்தைத் தானே உருவாக்க வேண்டியிருக்கிறது. இந்த உடைவை டேய்லர் Individuality அல்லது Authenticity என்கிறார். இந்தக் கருத்தை சூரஜ் சூர்யாவின் கவிதைகளுடன் இணைக்கும்போது மிக முக்கியமான ஒரு வாசிப்பு உருவாகிறது. சூர்யாவின் கவிதைகளில் உலகம் முன்பே அர்த்தம் கொண்ட ஒன்றாக இல்லை.
சூரஜ் பயன்படுத்திய மிகச் சுவாரசியமான கோட்பாட்டு இணைப்பு டெலியூஸ் , ஃபெலிக்ஸ் கட்டாரியின் Deterritorialisation என்ற கருத்து. முதலில் இந்தக் கருத்து சிக்கலாகத் தோன்றலாம். ஆனால் அதன் அடிப்படை மிகவும் எளிமையானது. ஒரு பொருளுக்குச் சமூகம் ஒரு குறிப்பிட்ட வேலையை அளிக்கிறது. கதவு திறக்கிறது. நாற்காலி உட்கார்வதற்கானது. கடிகாரம் நேரத்தைக் காட்டுகிறது. இந்தச் செயல்பாடுகளே அதன் “Territory”. ஆனால் கலை என்ன செய்கிறது? அந்த எல்லைகளை உடைக்கிறது. கதவு நினைவாக மாறலாம். கடிகாரம் மரணத்தின் உருவகமாக மாறலாம். சன்னல் தனிமையின் முகமாக மாறலாம். இதைத்தான் டெலியூஸ் பிராந்தியமயமாக்கல் என்கிறார்.
பொருள்களுக்கு ஒரு ரகசிய வாழ்க்கை இருக்கிறதா?
நிகழ்வின் இறுதியில் சூர்யா கூறிய ஒரு வாக்கியம், சூரஜின் வாசிப்பை முழுமையாக உறுதிப்படுத்துகிறது. பொருள்களுக்கு ஒரு சீக்ரெட் லைஃப் இருக்கிறது. இந்த ஒரு வாக்கியத்திற்குள் அவரது முழுக் கவிதையியல் அடங்கியிருக்கிறது. நாம் தினமும் பார்க்கும் பொருட்களை நாம் உண்மையில் பார்ப்பதில்லை. ஒரு மலையை நாம் கவனிப்பதில்லை. ஒரு பழைய கதவை, ஒரு தேநீர் கோப்பையை, ஒரு பாசி படிந்த சுவரை, ஆனால் அவற்றின் நடுவில்தான் நமது வாழ்க்கை முழுவதும் நடக்கிறது. உலகம் உயிருள்ள மனிதர்களால் மட்டுமே நிரம்பியதல்ல. உயிரற்றவை என்று நாம் கருதும் பொருட்களும் நமது அனுபவத்தை வடிவமைக்கின்றன. சூர்யாவின் கவிதைகள் இதையே தொடர்ந்து நினைவுபடுத்துகின்றன.
சூரஜ் எடுத்துக்காட்டிய “அலைகளை எண்ணுபவன்” கவிதை இந்தத் தத்துவத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அங்கே கடல் மெதுவாகத் தேநீராக மாறுகிறது. சூரியன் தேயிலைப் பையாக மாறுகிறது. இது ஒரு கற்பனைக் காட்சி அல்ல. இது உலகத்தின் எல்லைகளை உடைக்கும் கவிதைச் செயல். சூர்யா கடலைப் போலத் தேநீர் என்று சொல்லவில்லை. அவர் உண்மையிலேயே கடலை தேநீராக மாற்றுகிறார். இதுவே கவிதையின் அற்புதம். உருவகம் இங்கே ஒப்பீடாக இல்லாமல், உருமாற்றமாகச் செயல்படுகிறது. அதேபோல் சூர்யாவின் கவிதைகளிலும் பொருட்கள் தங்கள் இயல்பை விட்டு வெளியேறுகின்றன.
அந்தி ஒரு Ecotone , சூரஜின் உரையின் மிகவும் புதுமையான உருவகம் Ecotone. இது சுற்றுச்சூழலியலில் பயன்படுத்தப்படும் சொல். காடு முடிந்து புல்வெளி தொடங்கும் இடம். ஆறு முடிந்து கடல் தொடங்கும் இடம். நிலமும் நீரும் சந்திக்கும் சதுப்புநிலம். இவ்வாறான இடைநிலைகளில்தான் அதிக உயிர்ப்பன்மை காணப்படுகிறது. ஏனெனில் இரண்டு உலகங்களும் அங்கே ஒன்றாக இருக்கின்றன. சூரஜ் இந்தக் கருத்தை அந்தியுடன் இணைக்கிறார். அந்தி என்பது நேரமல்ல அது நிலைப்பாடு பகல் முடிந்துவிட்டது ஆனால் இரவு இன்னும் தொடங்கவில்லை. அந்தி இந்த இரண்டிற்கும் நடுவில் நிற்கிறது. இது ஒரு Liminal Space. மனித வாழ்க்கையிலும் இத்தகைய இடைநிலைகள் இருக்கின்றன. குழந்தையுமில்லை. முழுப் பெரியவருமில்லை. வீட்டிலும் இல்லை. வெளியிலும் இல்லை. காதலிலும் இல்லை. பிரிவிலும் இல்லை. இத்தகைய எல்லை நிலைகள்தான் மிக அதிகமான உணர்வுகளை உருவாக்குகின்றன. அதனால்தான் சூர்யாவின் கவிதைகளில் அந்தி மீண்டும் மீண்டும் வருகிறது. அது நேரத்தை எழுதுவதோடு ஒரு மனநிலையை எழுதுகிறது. சூரஜ் சூர்யாவின் இரண்டாவது தொகுப்பை ஹைடேகரின் Being and Time உடன் இணைக்கிறார். ஹைடேகர் இரண்டு சொற்களை வேறுபடுத்துகிறார். Time மற்றும் Temporality. Time என்பது கடிகார நேரம். Temporality என்பது வாழப்பட்ட அனுபவம். ஒரு மணி நேரம் மருத்துவரின் அறைக்கு வெளியே காத்திருக்கும் ஒருவருக்கு எப்படி இருக்கும்? அதே ஒரு மணி நேரம் காதலரை எதிர்பார்க்கும் ஒருவருக்கு எப்படி இருக்கும்? கடிகாரம் ஒன்றே. ஆனால் அனுபவம் வேறு. இதுதான் Temporality. சூர்யாவின் கவிதைகள் இந்த இரண்டாவது காலத்தையே எழுதுகின்றன. அவரிடம் மாலை ஆறு மணி முக்கியமல்ல. அந்த மாலை எப்படித் தன்னைத் தொட்டது என்பதுதான் முக்கியம். சூரஜ் பயன்படுத்திய மற்றொரு ஆச்சரியமான ஒப்புமை Quantum Tunnelling. இயற்பியலில் இது ஒரு துகள் சாத்தியமற்றதாகத் தோன்றும் தடையைத் தாண்டிச் செல்லும் நிகழ்வு. சூர்யாவின் கவிதைகளிலும் இதேபோன்ற நகர்வு நிகழ்கிறது. கவிஞர் அறையில் இருக்கிறார், அடுத்த வரியில் கடற்கரையில், பிறகு குழந்தைப் பருவத்தில், பின்னர் மீண்டும் தற்போதைய தருணத்தில், இந்த நகர்வுகளுக்கு இடையில் விளக்கங்கள் இல்லை, ஆனால் அதை இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்கள். இதுவே கவிதையின் கால இயற்பியல்.
சூரஜின் உரையின் மிக முக்கியமான பங்களிப்பு, சூர்யாவின் நான் பற்றிய அவரது வாசிப்பு. பொதுவாகக் கவிதைகளில் “நான்” என்பது கவிஞரே என்று வாசிக்கப்படுகிறது. ஆனால் சூர்யாவின் கவிதைகளில் அந்த “நான்” தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அது ஒரு நினைவு. சில நேரங்களில் ஒரு நோய். சில நேரங்களில் ஒரு பார்வை. சில நேரங்களில் ஒரு தத்துவக் கேள்வி. ஒரு சொல்லுக்குத் தனியாக அர்த்தம் இல்லை. அது பயன்படுத்தப்படும் சூழலில்தான் அர்த்தம் உருவாகிறது. அதேபோல் சூர்யாவின் “நான்”க்கும் நிலையான அடையாளம் கிடையாது. ஒவ்வொரு கவிதையிலும் அது புதிதாக உருவாகிறது. இந்தியத் தத்துவமும் பார்வையின் பல அடுக்குகளும் சூரஜ் இந்தியத் தத்துவப் பள்ளிகளான சார்வாகம், நியாய-வைசேஷிகம் ஆகியவற்றையும் சூர்யாவின் கவிதைகளுடன் இணைக்கிறார். இதன் பொருள், சூர்யா அந்தத் தத்துவங்களைப் படித்திருக்க வேண்டுமென்பதல்ல. மாறாக, அவரது கவிதைகள் இயல்பாகவே அந்தத் தத்துவங்கள் சிந்தித்த சில அடிப்படை கேள்விகளைத் தொடுகின்றன.
நாம் எப்படிப் பார்க்கிறோம்? பார்ப்பது என்றால் என்ன? ஒரு பொருளை அதன் பெயரால் அறிகிறோமா? அல்லது அனுபவத்தாலா? சூர்யாவின் கவிதைகள் இந்தக் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் தொடர்ந்து அவற்றை எழுப்புகின்றன. மாற்றத்தைவிட முக்கியமானது Retention. சூரஜின் உரையின் இறுதிப் பகுதி மிக முக்கியமானது. பொதுவாக விமர்சகர்கள் ஒரு கவிஞர் எவ்வளவு மாறியிருக்கிறார் என்பதைப் பற்றியே பேசுவார்கள். ஆனால் சூரஜ் வேறு கேள்வி கேட்கிறார். அவர் எதைத் தக்கவைத்திருக்கிறார்? இதுதான் உண்மையான இலக்கியக் கேள்வி. சூர்யாவின் இரண்டு தொகுப்புகளுக்கும் இடையில் மொழி மாறியிருக்கலாம். உருவகங்கள் மாறியிருக்கலாம். ஆனால் மைய உணர்வு மாறவில்லை. ஒரு பொருள் இன்னொரு பொருளை நோக்கி இழுக்கப்படுகிறது. ஒரு மனிதன் இன்னொரு நினைவைக் நோக்கி இழுக்கப்படுகிறான். ஒரு மாலை இன்னொரு இருளை நோக்கிச் செல்கிறது. இந்த ஈர்ப்பு விசைதான் அவரது கவிதை உலகின் மையம். சூரஜின் உரை, சூர்யாவின் கவிதைகளை வெறும் அனுபவக் கவிதைகளாகவோ அல்லது மொழிச் சோதனைகளாகவோ மட்டுமே வாசிக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. அவை இருப்பியல், அறிவியல், தத்துவம், மொழியியல், சுற்றுச்சூழல் சிந்தனை, பொருட்களின் உயிர்ப்பு, கால அனுபவம், தனிமனித உருவாக்கம் ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று கலக்கும் இடமாக மாறுகின்றன. அதனால்தான் சூர்யாவின் கவிதைகளில் ஒரு கல்லைப் பற்றிப் படிக்கும்போது, நாம் உண்மையில் மனித இருப்பைப் பற்றியே படித்துக்கொண்டிருக்கிறோம்.
உரையாடலின் மிகச் சுவாரசியமான தருணம் எது? உரையாளர்கள் பேசும் தருணமா? அல்லது இறுதியில் படைப்பாளி தானே தனது படைப்பைப் பற்றிப் பேசும் தருணமா? இலக்கிய வரலாற்றைப் பார்த்தால், இந்த இரண்டு தருணங்களும் எப்போதும் ஒன்றோடொன்று ஒத்துப்போவதில்லை. பல நேரங்களில், விமர்சகர்கள் ஒரு படைப்பில் கண்டுபிடிக்கும் அர்த்தங்களைப் படைப்பாளியே மறுத்திருக்கிறார், சில சமயங்களில், படைப்பாளியின் விளக்கத்தைவிட விமர்சன வாசிப்பே அதிக வளமுடையதாக மாறியிருக்கிறது. ரோலான் பார்த் தனது “The Death of the Author” என்ற புகழ்பெற்ற கட்டுரையில், ஒரு படைப்பு வெளியான தருணத்திலிருந்து அது எழுத்தாளரின் சொத்து என்பதிலிருந்து, வாசகர்களின் உலகிற்குள் நுழைந்துவிடுகிறது என்று கூறுகிறார். ஆனால் வே.நி. சூர்யாவின் இறுதி உரை, இந்த இரு நிலைகளுக்கும் இடையில் சமநிலையை உருவாக்குகிறது. அவர் தனது கவிதைகளை விளக்கவில்லை, அவற்றை உருவாக்கிய படைப்பியல் மனநிலையை Poetics-ஐ பகிர்ந்துகொண்டார். சில பதில்களுக்குள் அவரது முழுக் கவிதை உலகத்தின் அடிப்படைத் தத்துவமே மறைந்திருந்தது.
“மொழியைக் கிராஸ் செய்து போக முடியுமா?”
சூர்யாவின் உரையில் மிகவும் கவனிக்கத்தக்க வாக்கியம் இதுதான். “மொழியைக் கிராஸ் பண்ணிப் போக முடியுமா என்பதுதான் என் முயற்சி.” என்றார். இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டாலும், அவரது முழுக் கவிதையியலைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு கவிஞருக்கு மொழியே கருவி. ஆனால் அந்தக் கருவியே வாசகருக்கும் அனுபவத்திற்கும் இடையில் சுவராக மாறிவிட்டால் என்ன செய்வது? டி.எஸ். எலியட் மொழியை ஓர் உயிருள்ள மரபு என்று சொல்கிறார். பால் வலேரி, கவிதை என்பது மொழிக்குள் மொழி என்று கூறினார். ஆனால் சூர்யாவின் பார்வை இன்னும் வேறுபட்டது. அவருக்கு மொழி இறுதி இலக்கல்ல. அது ஒரு கடந்து செல்லும் பாலம். வாசகர் பாலத்திலேயே நின்றுவிடக் கூடாது. அதைக் கடந்த பிறகு திறக்கும் உலகமே கவிதை. இது ஜென் புத்தமதத்தின் ஒரு பழமொழியை நினைவூட்டுகிறது, நிலவைச் சுட்டும் விரலை நிலவாக நினைக்காதே, மொழி அந்த விரல். அனுபவம்தான் நிலவு. இந்தப் புரிதலால்தான் சூர்யாவின் கவிதைகள் வார்த்தைகளின் அலங்காரத்தில் நின்றுவிடாமல், அவற்றின் பின்னாலிருக்கும் அமைதியை நோக்கிச் செல்கின்றன.
மொழி தன்னை மறைத்துக்கொள்ளும் போது…
சமகாலத் தமிழ்க் கவிதையில் இரண்டு விதமான மொழிப் போக்குகளை நாம் காண்கிறோம். ஒரு பக்கம், மொழியையே கவிதையின் மையமாக மாற்றும் முயற்சிகள் உள்ளன. இலக்கணத்தை உடைப்பது, புதிய சொற்களை உருவாக்குவது, ஒலியியல் சோதனைகள் செய்வது போன்றவை அதில் அடங்கும்.மற்றொரு பக்கம், மொழி தன்னையே மறைத்துக்கொண்டு அனுபவத்தை முன்னிறுத்தும் கவிதைகள் இருக்கின்றன. சூர்யா இரண்டாவது அணிக்குச் சொந்தமானவர். அவரது கவிதைகளில் மொழி தன்னை வெளிப்படுத்துவதில்லை. அது தன்னை அழித்துக்கொண்டு அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. இதை ஓவியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு கண்ணாடியைப் பாராட்டும்போது அதன் கண்ணாடித்தன்மையைப் பற்றி நாம் பேசுவதில்லை, அதன் வழியாகத் தெரியும் காட்சியைப் பற்றியே பேசுகிறோம். சூர்யாவின் மொழியும் அந்தக் கண்ணாடியைப் போன்றது. அது தனது இருப்பைச் சத்தமாக அறிவிக்காது. கவிதையைத் தேடாதே, கவிதை நிகழும் இடத்திற்குச் செல் என்பது போல் சூர்யாவும் இதையே செய்கிறார். அதை நிகழ அனுமதிக்கிறார். அதனை ஒரு நெறிப்பாடு (Ethics) என்ற அனுபவத்தைத் தேவையற்ற சொற்களால் மாசுபடுத்தாமல் பாதுகாக்கும் ஒழுக்கமாகச் சொல்கிறார். சூர்யாவின் உரையில் மிகுந்த கவனத்திற்குரிய மற்றொரு பகுதி, மொழிபெயர்ப்பு குறித்த அவரது சிந்தனை. பொதுவாக, மொழிபெயர்ப்பை ஒரு துணைச் செயலாகவே பார்க்கும் பழக்கம் நமக்குண்டு. ஆனால் உலக இலக்கிய வரலாறு வேறு கதையைச் சொல்கிறது. எஸ்ரா பவுண்ட், போர்ஹெஸ், ஆக்டேவியோ பாஸ், ஏ.கே. ராமானுஜன் .இவர்கள் அனைவருக்குமே மொழிபெயர்ப்பு என்பது படைப்பின் நீட்சியாக இருந்தது. சூர்யாவும் மொழிபெயர்ப்பை மூன்று நிலைகளில் பார்க்கிறார். முதலில் அது மொழிக்குள் தொடர்ந்து வாழ்வதற்கான பயிற்சி. ஓர் இசைக்கலைஞர் தினமும் சுருதி சேர்ப்பது போல, மொழிபெயர்ப்பு கவிஞரின் மொழியுணர்வைத் தொடர்ந்து உயிரோடு வைத்திருக்கிறது. இரண்டாவது, அது இன்னொரு கவிஞரின் தொழில்நுட்பத்தை உள்ளிருந்து கற்றுக்கொள்ளும் வழி. ஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போது அதன் மூச்சையும் தாளத்தையும் உள்ளிருந்து உணர வேண்டியிருக்கும். மூன்றாவது, அது பகிர்வு. ஒரு மொழியில் பிறந்த அனுபவத்தை இன்னொரு மொழியில் உயிர்ப்பிக்கும் பண்பாட்டுச் செயல். இதில் சூர்யாவின் பணிவு கவனிக்கத்தக்கது. எழுத முடியாத நாட்களில் மொழிபெயர்க்கிறேன் என்று அவர் கூறுவது, மொழிபெயர்ப்பை இரண்டாம் தரச் செயலாக அல்ல, படைப்பின் இன்னொரு வடிவமாகக் கருதுவதைக் காட்டுகிறது.
“உங்கள் கவிதைகளில் பொருட்கள் ஏன் இவ்வளவு முக்கியமானவை?” என்ற கேள்விக்குச் சூர்யாவின் பதில், பொருள்களுக்கு ஒரு சீக்ரெட் லைஃப் இருக்கிறது.” இந்த வாக்கியம் அவரது கவிதைகளின் மையச் சாவி. மனிதர்கள் மட்டுமல்ல, பொருட்களும் நினைவுகளைச் சுமக்கின்றன.
கவிதை ஒரு “Attention Capsule?”
சமகாலப் பங்கைப் பற்றிய மிக முக்கியமான சிந்தனையை முன்வைக்கிறது கவிதை. அந்த வகையில், சூர்யாவின் கவிதைகளை “Attention Capsule” என்று வரையறுத்தது மிகத் துல்லியமானது. ஒரு கவிதை வாசகரிடம் என்ன கேட்கிறது? வேகத்தைவிட நிறுத்தம் தான் அவசியமாகிறது. நிறுத்தம் கூட உடனடி தீர்வு அல்ல. கவனிப்பு, அவசரம் அல்ல, அமைதி, அதனால் கவிதை இன்று வெறும் இலக்கிய வடிவமல்ல. கவனத்தை மீட்டெடுக்கும் கலாச்சாரப் பயிற்சி.
கவிதையின் அரசியல் வாழ்க்கையை நோக்கித் திரும்புதல், போர், நுகர்வுக் கலாச்சாரம், வேகம், கவனச் சிதறல் ஆகியவற்றால் நிரம்பிய உலகில், கவிஞன் என்ன செய்கிறான்? அவன் குரலை உயர்த்திக் கோஷமிடுவதில்லை. ஆனால் வாழ்க்கையை மீண்டும் பார்க்கச் செய்கிறார். திரும்பிப் பார்க்கும் திறனே இன்று அரசியல் செயல். ஏனெனில் நுகர்வு கலாச்சாரம் மனிதனை எதையும் ஆழமாகப் பார்க்க விடுவதில்லை. கவிதை அந்த வேகத்தை எதிர்க்கிறது. அது வாசகரிடம் மெதுவாகச் சொல்கிறது. நில். மீண்டும் பார். உலகம் இன்னும் முழுவதுமாக முடிந்துவிடவில்லை.
வே.நி. சூர்யாவின் கவிதை உலகைப் பற்றிய இந்த உரையாடல், ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வின் எல்லைகளை வெகுவாகத் தாண்டிச் சென்றது. விக்ரம் அனுபவத்தின் அழகியலை வெளிச்சமிட்டார், கண்டராதித்தன் மொழியையும் அதன் பரிணாமத்தை ஆராய்ந்தார், சூரஜ் தத்துவத்தின் விரிவான வரைபடத்தில் சூர்யாவை நிலைநிறுத்தினார். இறுதியில் சூர்யா தாமே தனது படைப்பியல் பற்றிப் பேசியபோது, கவிதை என்பது மொழியை அலங்கரிப்பதல்ல, மொழியை மறைத்துவிட்டு அனுபவத்தை வெளிப்படுத்தும் கலை என்பதை மீண்டும் நினைவூட்டினார். அவரது கவிதைகளின் மையத்தில் மனிதர்களோடு பொருட்களும் இருக்கின்றன. நேரம் மட்டும் இல்லை, வாழப்பட்ட காலமும் இருக்கிறது. உலகின் பல்வேறு பார்வைகளால் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் ஒரு சுயமும் இருக்கிறது. இதனால்தான் சூர்யாவின் கவிதைகள் உடனடியாக முடிந்துவிடாமல் வாசகரோடு தொடர்ந்து எதிரொலிக்கின்றன. நல்ல கவிதை வாசித்து முடிந்த பிறகும் வாழ்ந்துகொண்டே இருக்கும். சூர்யாவின் கவிதைகள் அந்த வகையைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.
– இன்பா
19.07.2026 அன்று திணைகள் ஏற்பாட்டில் வே. நி. சூர்யா கவிதைகள் குறித்து நடைபெற்ற உரையாடலின் தொகுப்பு.


