க. மோகனரங்கனின் கவிதை உலகம்: திணைகள் கவிதையமர்வு
ஒரு கவிஞனைப் பற்றிய உரையாடல் பெரும்பாலும் பாராட்டுரையாகவோ நினைவுக்குறிப்பாகவோ முடிந்துவிடும். திணைகளின் மாதாந்திர நிகழ்வு இம்முறை வழக்கமான வடிவத்தைத் தாண்டியது. கவிஞர் க. மோகனரங்கன் உரையாடலின் இறுதிவரை உடனிருந்து, ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகப் பதிலளித்தவிதம் படைப்பாளியின் நாற்பதாண்டு எழுத்துப்பயணம் குறித்த திறந்த மதிப்பீடாகவும், தமிழ் நவீனக் கவிதையின் அடிப்படை வினாக்கள் சிலவற்றின் மீதான மீள்சிந்தனையாகவும் அமைந்தது.
உரையாடலின் மையச்சரடு, கவிதை ஒலிக்கப்பட வேண்டியதா, மௌனமாக வாசிக்கப்பட வேண்டியதா? மொழியின் இசையில் நாட்டம் கொள்ளும் கவிதை தன் அமைதியை இழக்கிறதா? எளிமை இயல்பாக வரவேண்டுமா, அல்லது கிராப்ஃடினால் அடையமுடியுமா? மொழிபெயர்ப்பு படைப்பாற்றலா, வெறும் மொழியின் மறுதிறப்பா? மரபு நவீனத்துக்குச் சுமையா, ஊற்றா? மூன்று பேச்சாளர்களும் பார்வையாளர்களும் இவற்றைப் பல கோணங்களிலிருந்து தொட்டனர். அவற்றை இங்கு வரிசைப்படுத்தி, கவிதையியல் நோக்கில் விரித்துப் பார்க்க முயல்கிறேன்.
நிகழ்வை ஒருங்கிணைத்த உமேஷ், மோகனரங்கனின் உலகத்தை, ஒருவர் தன் செல்வம் முழுவதையும் கொடுத்து ஒரு சிறு ஊதா மலரை வாங்கும் மனநிலை கொண்ட உலகம் என்று அறிமுகப்படுத்தினார். இந்த ஒரு வரியே மோகனரங்கனின் கவிதைக் குணத்தைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது: குறைவான எண்ணிக்கை, அதிகமான கவனம். இருபத்தைந்து ஆண்டுகளில் ஐந்து தொகுப்புகள் மட்டுமே என்பதை ஆனந்த்குமார் சுட்டினார். ஒரு கவிதையைத் திருத்தம் செய்ய ஒரு வாரமும் ஒரு மாதமும் சில சமயம் ஒவ்வோர் ஆண்டும் ஆகும் என்று கவிஞரே சொல்லியிருப்பதையும் நினைவூட்டினார். குறைவாக எழுதுவது இங்குக் குறைபாடாக இல்லை, ஒரு கவிதை நெறியோடு இருக்கிறதா என்பதே கவனிக்க வேண்டியது என்பதாக இருந்தது.
இரா. கவியரசு: கவிதை வாசகனின் வாசல்
கவியரசு தம் உரையைத் தனிப்பட்ட காட்சியோடு தொடங்கினார். அலுவலகத்துக்கு ரயில் பிடிக்க ஒவ்வொரு காலையும் அவசரமாகக் கடந்து செல்லும் தெருவில் ஐம்பது வீடுகள் இருந்தன. ஓராண்டாக எந்த வீடும் நினைவில் பதியவில்லை. ஒரு மழை மாலைப்பொழுதில் அதே தெருவை நிதானமாகக் கடந்தபோது ஒவ்வொரு வீடும் வேறொரு தோற்றம் தந்தது, குழந்தைகளின் சத்தங்கள், பாதிக் கட்டி முடிக்கப்பட்ட வீடு, மாலை வெளிச்சம். கவிதை வாசிப்பும் இப்படித்தான் அவருக்கு இருந்தது என்றார். அவசரமாக வாசிக்கும் காலம் ஒன்று, புரியாமல் பின்வாங்கும் காலம் ஒன்று, ஏற்கெனவே அவ்வழியே பயணம் செய்தவர் ஒருவர் வழிகாட்டும்போது நிதானமாகப் பார்க்கும் காலம் ஒன்று. மோகனரங்கனின் மைபொதி விளக்கு- கட்டுரைகள் அந்த மூன்றாம் நிலையைத் தந்தன என்றார்.
கவிதை வாசிப்பின் ஆரம்பக் கட்டத்தில் பிரமிள், நகுலன், பிரம்மராஜன் போன்றோரின் தொகுப்புகளை வாங்கி வைத்துவிட்டு, முதல் பக்கத்திலேயே பேயைக் கண்டவர்போலப் பயந்து மூடி வைத்த நாட்களை ஒளிவுமறைவின்றிப் பகிர்ந்தார். தேவதச்சனின் கவிதைகளும் அவருக்குத் தொடக்கத்தில் அச்சமூட்டியிருக்கின்றன. மோகனரங்கனின் கட்டுரைகளைப் படித்த பிறகு, எல்லோரும் தொடக்கூடியவர்கள்தான், பயப்பட ஏதுமில்லை என்ற நம்பிக்கை உருவானதாகச் சொன்னார். இங்குதான் கவிதையியல் உண்மை புலப்படுகிறது.
கவிதை விமர்சனம் இரண்டு வகைப்படும். தீர்வு சொல்வது ஒன்று, வழிநடத்துவது மற்றொன்று. மோகனரங்கனின் கட்டுரைகள் இரண்டாம் வகை. அவை கவிதையைத் தர்க்கத்தால் பிளந்து காட்டுவதைவிட, கவிதை அனுபவத்தில் கரைந்து நிற்கும் தருணங்களை முன்வைக்கின்றன என்று கவியரசு குறிப்பிட்டார். ஓவியம் வரைந்துகொண்டே இருப்பவன் திடீரென ஒரு வண்ணத்தில் திகைத்து நிற்பதுபோல, பாடகன் பாடலில் காணாமல் போவது போலக் கட்டுரையாளர் ஒரு கவிதையில் நின்று, இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை என்று வாசகன் முன் கைவிரித்து நிற்கிறார். சொல்லமுடியாததை எல்லையாகக் கொள்வது கவிதை விமர்சனத்தின் நேர்மை.
இக்கட்டுரைத் தொகுப்பில் அவர் சில பண்புகளைச் சுட்டினார்:
● மணிக்கொடி காலம் முதல் எழுத்து மரபு வழியாக 2010 வரை நவீனத் தமிழ்க் கவிதையின் போக்கை முதல் வாசகனுக்கு ஒரு நிலப்படம்போலத் தருகிறது.
● ஈழக் கவிஞர் பஹீமா ஜஹான் போன்ற அறியப்படாத குரல்களை வாசகனுக்கு அறிமுகம் செய்கிறது. ஒரு நல்ல கவிதை, ஒரு கவிஞருக்குள் நுழையும் அனுமதிச்சீட்டாக அமையலாம்.
● செவ்வியல் படைப்புகள் ஏன் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகின்றன என்ற கேள்வியை ஆராய்கிறது. மோகமுள் ஐந்து முறை வாசிக்கத் தக்கது என்று மறுவாசிப்பு பற்றி மோகனரங்கன் எழுதியதை நினைவுகூர்ந்தார்.
● தமிழில் கவிதை பற்றி எழுதப்பட்ட நூல்களைப் பட்டியலிடும் கட்டுரையின் பின்னால் இருக்கும் அளவற்ற உழைப்பு.
சொல் பொருள் மௌனம் தொகுப்பு விமர்சகனின் இளமைக்கால அவதானிப்பைக் காட்டுகிறது. அது தர்க்கபூர்வமானது, திறனாய்வுத் தன்மை கொண்டது, ஒருவகை உத்வேகமும் ஆவேசமும் கொண்டது. இரண்டு தொகுப்புகளுக்கு இடையிலான வேறுபாடு, ஒரு விமர்சகன் தன் பார்வையை எவ்வாறு காலத்தில் நிதானப்படுத்துகிறான் என்பதும் முக்கியம். பெண் கவிஞர்களின் நூற்றாண்டுப் பயணத்தை ஆய்ந்த கட்டுரைகளில், எந்தச் சாய்வுமின்றி, தோன்றிய எதிர்ப்புகளையும் அதைக் கடந்து கவிதைகள் முன்வைத்த அரசியலையும் விரிவாக எழுதியுள்ளார்.
கம்பனின் காதல் கவிதைகள் குறித்து இசை எழுதிய “ நறுமணத்துயரே நறுமணத்துயரே” கட்டுரைகளை உவமையால் விளக்கினார். இமயத்தையும் பெருங்கடலையும் கண்டு மலைப்பவன், காதல் என்ற வாசல் வழியாக முதலில் கால் வைக்கலாம் என்ற நம்பிக்கையை அந்நூல் அளிக்கிறது. அதைப் போலவே பெரும் மரபை நெருங்க சிறு வாயில் தேவை, அந்த வாயிலாகக் கட்டுரையாளர் செயல்படுகிறார். கவிஞர் இன்னும் தொடர்ந்து கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற தம் தனிப்பட்ட வேண்டுகோளோடு உரையை முடித்தார்.
ஆனந்த்குமார்: இசை, மொழி, மௌனம்
ஆனந்த்குமாரின் உரை இந்நிகழ்வின் கவிதையியல் மையமாக அமைந்தது. புத்தகக் கண்காட்சியில் மலையாளக் கவிஞர் பி. ராமனோடு நடந்த நீண்ட உரையாடல், மலையாளக் கவிதையின் பாடல்சார்ந்த சந்தம் குறித்த வழக்கமான வாதமாக விரிந்தது. சர்ப்பம் துள்ளல் என்னும் நாட்டார் சடங்கில் மூன்று இரவுகள் உறங்காமல் ஆடிய ஒரு மாணவியை மையமாக்கி ராமன் எழுதிய கவிதை, அதே சர்ப்பம் துள்ளல் பாடலின் மெட்டில் அமைந்திருந்தது. பலகையின் எழுத்துகள் நாகங்களாக மாறும் குழந்தையின் பார்வையைச் சொல்லும் அக்கவிதையில், உள்ளடக்கமும் வடிவமும் இசையும் பிரிக்க முடியாமல் இருந்தன என்றார். தெய்யம், களமெழுத்துப் பாடல், மாப்பிளா பாடல் என மலையாளத்தில் இன்னும் உயிரோடிருக்கும் இசை மரபுகள், அம்மக்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு, செயற்கையாக உருவாக்கப்பட்டவை அல்ல.
தமிழில் அப்படியொரு தொடர்ச்சி ஏனில்லை என்ற கேள்வியை எழுப்பினார். வில்லுப்பாட்டும் நாட்டார் பாடலும் நவீனக் கவிதைக்குள் ஏன் இயங்கவில்லை? அவை சினிமாவுக்குள் எடுத்தாளப்பட்டு நீர்த்துப்போனதா? இது விரிவாக உரையாடப்பட வேண்டிய இடம் என்றார். இங்கிருந்து தெளிவான வரலாற்று அவதானிப்பை முன்வைத்தார். தமிழ் நவீனக் கவிதை தொடக்கத்திலிருந்தே சந்தத்தையும் மொழியழகையும் உதிர்த்துவிட்டு, அகவிசை எனப்படும் உள்ளுறை இசையை மட்டுமே தன் இசைத்தன்மையாகத் தக்கவைத்துக்கொண்டது. அந்தச் சூழலில், புறவயமான இசையையும் அகவயமான இசையையும் ஒருங்கே கையாளும் கவிஞர்கள் மிகச் சிலர். ஞானக்கூத்தனை நினைவுகூர்ந்தபோதும், இன்று எழுதுபவர்களில் மோகனரங்கனே அதன் ஒரே எடுத்துக்காட்டு என்பது அவரது பார்வை. தாமே முதல் வாசிப்பில் அவரது மொழியோடு இணங்கவில்லை என்பதையும், பின்னர் மறுவாசிப்பில்தான் இசையின் வாசல் திறந்தது என்பதையும் அவர் ஒளிக்கவில்லை.
மோகனரங்கனின் கவிதைப் பயணத்தை ஆனந்த்குமார் மூன்று நிலைகளாகப் பகுத்தார்.
முதல் தொகுப்பின் கவிதைகள் அக்காலத் தமிழ்க் கவிதையின் பொதுவான கொந்தளிப்பான மனநிலையைச் சுமந்தவை. சுகுமாரன் போன்றோரிடம் காணும் உணர்வுப் பிரவாகத்தின் சூழலில், மோகனரங்கனின் கவிதைகளில் பக்தி இலக்கியத்தின் லயமும் மெட்டும் கட்டப்பட்ட இசை இருந்தது. காமம் சார்ந்த கவிதைகளில் அது உச்சம் தொடுகிறது. உறங்காப் பத்து- தொகுப்பின் ஒரு கவிதையில், குற்றங்களையெல்லாம் எரித்துவிட்டுச் சிவந்த கனலில் காமத்தின் மருந்து தேடும் தேறல், பக்திப் பாடலின் தொனிக்கும் காமத்தின் பாடுபொருளுக்கும் இடையிலான வியப்பூட்டும் பொருத்தத்தைக் காட்டுவதாகக் கவிதையை வாசித்துக் காட்டினார். கவிஞர் தாமே அக்காலத் தாக்கங்களைக் குறிப்பிட்டு, இவ்வகைக் கவிதைகள் வாய்விட்டுச் சொல்லத் தூண்டுபவை
இரண்டாம் தொகுப்பிலிருந்து கவிஞர் தனக்கே உரிய மொழியைக் கண்டடைகிறார். “உயிர்த்தேன்” என்ற கவிதையை அவர் தம் விருப்பமாகக் குறிப்பிட்டு, அதன் ஒலிநயத்தையும் துள்ளலையும் சுட்டினார். அதே கவிதை இடைவெளிகளோடும் இருக்கிறது. வாய்விட்டு வாசிக்கையில் சுவையாகவும், மௌனமாக வாசிக்கையில் பொருளாழம் கூடுவதாகவும் இருக்கிறது. இந்த இரட்டைத் தன்மையே அவர் கண்ட மிகத் தனித்தன்மையான அம்சம்.
மொழி மெல்ல இளகுகிறது. பதற்றம் அகல்கிறது. “சந்திப்பு” என்ற கவிதையில், வானம் இறங்கி மண்ணைத் தொடுகிறது என்ற கூற்றுக்கு, இல்லை, பூமிதான் உயர்ந்து வானைத் தாங்குகிறது என்ற மறுமொழி வருகிறது. இங்கு மொழியின் இறுக்கம் தளர்ந்து, நிகழ்வுத்தன்மையும் செறிவும் ஒருசேர அடைகிறது என்றார். “மறுமலர்” என்ற கவிதையில், உறங்கும் குழந்தையின் முன் ரோஜாவை நீட்டும் கடவுளின் காட்சி, இளஞ்சிவப்பு வண்ணப் புதிரை நினைவின் மடிப்பில் வாசனையாக மாற்றும் கவிதை, இந்தக் கட்டத்தின் சிக்கலான ஆழத்துக்குச் சான்று. இம்மாற்றம் மிகமிக மெல்லியது. நெருங்கிக் கவனிப்பவருக்கு மட்டுமே புலப்படும். வே.நி.சூர்யாவுடனான நேர்காணலில், தமிழ் நவீனக் கவிதை வடிவச் சுதந்திரத்தை நோக்கி நகர்கையில் நீங்கள் ஏன் நிலைத்து நிற்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, எழுத்து என்பது ஒரு முறைப்பாடு, அகவயமாக உருவாவது, மொழி தன் நினைவுகளின் சேகரத்திலிருந்து சில துளிகளைத் தன்னிச்சையாகச் சேர்க்கும் என்ற பதிலை அவர் மேற்கோளாகச் சுட்டினார். மாற்றம் திட்டமிட்டு நிகழ்வதல்ல, இயல்பாக நிகழ வேண்டும் என்பதே மோகனரங்கனின் நம்பிக்கை.
நவீனக் கவிதையின் அடிப்படைப் புரிதலை மறுபரிசீலிக்கும் இடம்
ஆனந்த்குமார் தமது உரையின் மையக் கருத்தை, மொழியின் இசைத்தன்மையுடனும் சொல்லழகுடனும் லயத்துடனும் சாய்வு கொள்ளும்தோறும் கவிதை தன் அமைதியையும் இடைவெளிகளையும் மலர்த்தும் சாத்தியங்களை இழக்கிறது என்பது நவீனக் கவிதைக்கான அடிப்படைப் புரிதல். மோகனரங்கனின் கவிதைகள் இதை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன. புறவயமாக ஒலித்து வாசிப்பதும், அகவயமாக உணர்ந்து மௌனமாக வாசிப்பதும் எதிரெதிரானவை போலத் தோன்றினாலும், இரண்டையும் இணைக்கும் மாயம் இவரது கவிதைகளில் நிகழ்கிறது. இதுவே தமிழ்க் கவிதைக்கு அவரது முக்கியப் பங்களிப்பு, என்றார்.
இதைக் கவிதையியல் முன்மொழிவாகப் பார்க்கலாம். நவீனக் கவிதைச் சொல்லாடல் பொதுவாக இருமையில் இயங்குகிறது: ஒருபுறம் சந்தம், ஓசை, அணி என்று வெளிப்படும் பாடல் மரபு, மறுபுறம் மௌனம், இடைவெளி, உணர்த்துதல் என்று செயல்படும் நவீனம். இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிராக வைக்கும் பார்வையை, ஓசைநயமும் மௌனமும் ஒரே கவிதையில் கூடி இயங்கும் மோகனரங்கனின் நடைமுறை சவால் செய்கிறது. மொழியின் இசைத்தன்மையுடனும், சொல் அழகுடனும் கூடுதல் சாய்வுகொள்ளும் தோறும், கவிதை அதன் அமைதியை, இடைவெளிகளை மலர்த்தும் சாத்தியங்களை இழக்கிறது எனும் நவீன தமிழ் கவிதைக்கான அடிப்படை புரிதல்களை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது மோகனரங்கனின் கவிதைகள்.
அதே சமயம் ஆனந்த் விமர்சனத்தையும் முன் வைத்தார். மொழிநயத்தில் கவனக்குவிப்புச் சிலசமயம் வாசகனை முதல் வாசிப்பில் உள்ளே விடாமல் தடுக்கலாம். மொழியின் துடிப்பிலேயே நம் ஈர்ப்பு நின்றுவிடுவதால், கவிதை தரும் அமைதியை முதல் வாசிப்பில் அடைய முடிவதில்லை. மறுவாசிப்பின் மூலமே அது திறக்கிறது. இது குறைபாடா, கவிதையின் தன்மையா என்பது தொடர்ந்து விவாதிக்கத்தக்கது. கவிஞரின் ஆளுமையையும் கவிதையையும் இணைத்து, தெளிந்த குளத்தில்தான் பிம்பங்கள் தெளிவாகத் தெரியும். கவிஞனின் அமைதி கவிதையின் தெளிவாக வெளிப்படுகிறது. மோகனரங்கனை நன்கறிந்தவர்கள் அவரது நிதானத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். நிஜவாழ்வில் அவ்வளவாக வெளிப்படாத அந்தத் தன்மை கவிதையில் ஆழமாக வெளிப்படுகிறது. ஆனால் ஆளுமை மட்டும் போதாது, மொழியின் மீதான ஆளுமையும், கவிதைக்கான தவமும் ஒன்று சேர வேண்டும். இவை இரண்டும் சேர்ந்த தனித்துவத்தை மோகனரங்கனிடம் காண்பதாகவும், இந்த நிதானம் இன்னும் கூர்மை பெறட்டும் என்றார்.
சூரஜ்: மொழிபெயர்ப்பின் தத்துவமும் கவிதையியலும்
சூரஜ் தம் உரையை மிகவும் அடக்கத்தோடு தொடங்கினார். தாம் பேராசிரியரோ மொழியியலாளரோ அல்ல, ஒரு வாசகன் என்றார். ஆயினும் அவர் முன்வைத்த தர்க்கம் கட்டமைப்பில் தத்துவச் செறிவு கொண்டது.
மீவியலும் அனுபவவாதமும்
மீவியல் (மெட்டாபிசிக்ஸ்) எந்த வரம்புக்கும் உட்படாதது. அனுபவவாதம் (எம்பரிசிசம்) தரவுகளின் அடிப்படையில் இயங்குவதால் தன்னைத் திருத்திக்கொள்ளும் கட்டமைப்பைக் கொண்டது. பெரும் தத்துவஞானிகளும் கருத்தாக்கங்களும் மீவியலிலிருந்தே பிறந்தவை. இதிலிருந்து சூரஜ், ஒருவர் தன் மொழியில் கவிதை எழுதுவது மீவியல் செயல், அதற்கு எல்லை இல்லாமலும் இருக்கலாம். ஒரு கவிதையை ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்கு மொழிபெயர்ப்பது அனுபவவாதச் செயல், அதற்கு எல்லைகள் உண்டு. எல்லைகளுக்குள் நிகழும் ஓர் இலக்கியச் செயலில் படைப்பாற்றல் எங்கே இருக்கிறது? மொழிபெயர்ப்பாளன் எப்படிப் படைப்பாளியாக இருக்க முடியும்? இக்கேள்விக்கு மோகனரங்கனை வாசிக்கையில் விடை கிடைக்கும் என்றார்.
பிளேட்டோவும் மூன்று தளங்களும்
பிளேட்டோவின் குடியரசு கலையை மிமெசிஸ் (பிரதிசெய்தல்) என்கிறது. உயர்ந்த கருத்துலகம் ஒன்று உண்டு, நம் அன்றாட உலகம் அதன் பிரதிபலிப்பு. ஓவியன் இந்த உலகத்தின் கட்டிலை வரையும்போது, பிரதிபலிப்பின் பிரதிபலிப்பை உருவாக்குகிறான். எனவே கலை உண்மையிலிருந்து இருமுறை விலகியது. மொழிபெயர்ப்பாளன் ஒரு கவிதையை, அதாவது ஏற்கெனவே விலகியதை, இன்னொரு மொழியில் கொண்டுவரும்போது மூன்றாம் முறை விலகுகிறான். ஆயினும் படைப்பாற்றல் உண்டு என்று சூரஜ் குறிப்பிட்டார். எந்தக் கலைஞனும் மூன்றாவது மாடியிலிருந்து நேராகத் தரையில் குதிப்பதில்லை. ஒவ்வொரு தளத்திலும் எதையோ வைத்துவிட்டு எதையோ எடுத்துக்கொண்டு அடுத்தத் தளத்துக்குச் செல்கிறான். மொழிபெயர்ப்பாளன் இழப்பவன் மட்டுமல்ல, மாற்றுபவனும்கூட. சாமுவேல் ஜான்சன் நன்றாக மொழிபெயர்ப்புக்கு ஆட்படக்கூடிய கவிதையே நல்ல கவிதை என்றதையும், மொழிபெயர்ப்பாளனை, ‘உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையாளன்’ என்று உருவகிக்கும் கட்டுரையையும் மேற்கோளிட்டார். இதற்கு எதிர்வாதமாக ராபர்ட் ஃப்ராஸ்டின் “கவிதை என்பது மொழிபெயர்ப்பில் இழப்பது” என்ற கூற்றை நினைவூட்டி, ஆக்டேவியோ பாஸ் அதற்குத் தந்த பதிலையும் குறிப்பிட்டார்: மொழிபெயர்ப்பில் எதுவும் இழக்கப்படுவதில்லை, எல்லாம் உருமாற்றப்படுகிறது. மோகனரங்கன் அந்த இருக்கையில் அமர்ந்தே மொழிபெயர்க்கிறார் என்றார்.
கவிஞனே கவிதையின் மொழிபெயர்ப்பாளன்
நாவலையோ சிறுகதையையோ மொழிபெயர்க்கும் ஒருவர் நல்ல புனைவெழுத்தாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வால்டேரின் “கேண்டிட்” நாவலின் சிறந்த மொழிபெயர்ப்பு ஒரு புனைவெழுத்தாளர் அல்லாத அறிஞரால் செய்யப்பட்டது. ஆனால் கவிதையை நல்ல கவிஞரே மொழிபெயர்க்க முடியும் என்பது சூரஜின் வாதம். ரூமியின் ஆர்பெரி மொழிபெயர்ப்பு மோசமானதாகக் கருதப்பட்டது. பாரசீகம் தெரியாத ராபர்ட் பிளை அதே அடிப்படையில் செய்த மொழிபெயர்ப்புச் சிறந்ததாகக் கொண்டாடப்பட்டது. அதே சமயம், கவிஞனாக இருப்பது மட்டுமே போதாது என்பதற்கும் உதாரணங்கள் உண்டு. ஆகவே மோகனரங்கனின் தனித்தன்மை எங்கே என்ற கேள்விக்கு அவர் ஜேன் ஹர்ஷ்ஃபீல்டின் மூன்று நிலைகளைக் கொண்டு விடை தேடினார்.
மொழிபெயர்ப்பாளன் மூலத்தோடு எவ்வளவு நெருங்குகிறான்? மோகனரங்கன் ஒரு கவிஞரையோ பத்துப் பேரையோ மொழிபெயர்ப்பவர் அல்ல. ஒவ்வொரு தொகுப்பிலும் நூற்றுக்கணக்கான கவிஞர்கள். தம் ரசனையை “விவரணைக் காட்சிகள் நிறைந்த கவிதைகள் எனக்கு ஒப்பானவை” என்று கவிஞரே முன்னுரையில் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரது சொந்தக் கவிதைகளில் படிமம் மந்திரத்தன்மை கொண்டது, மொழிபெயர்ப்புகளிலோ மந்திரத்தன்மை இல்லை. இந்த முரண் தம்மை யோசிக்க வைத்ததாகச் சொன்னார்.
மொழிபெயர்ப்பாளனுக்கும் பிரதிக்கும் இடையிலான உறவு இடம் மாறுகிறது. இங்கு மொழிபெயர்ப்பாளன் எடுக்கும் படைப்பூக்க முடிவுகளைப் பார்க்கலாம். சூரஜ் இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தந்தார். ஆக்டேவியோ பாஸின் கவிதையில் “பார்பர்ஸ் ஆஃப் காம்” (அமைதியாக முடிதிருத்துவோர்) போன்ற சொல்லுக்கு, நேரடிப் பொருளுக்கு அப்பால் “குடாக்கள்” என்ற சொல்லைக் கையாண்டதன் மூலம் அவர் தமிழுக்கு ஒரு புதுமையைக் கொண்டுவருகிறார்.
காற்றுக்கும் ரோஜாவுக்குமான காதலைச் சொல்லும் கவிதையில், ஆங்கிலத்தில் “காற்று” ஆண்பாலாகக் கையாளப்பட்டிருக்கும். தமிழ் மொழிபெயர்ப்பில் அந்தப் பாலினத்தை நீக்கி, “காற்றின் முகத்தில் கதவை அறைந்து மூடினான்” என்று செய்கிறார். ரீட்டா கோத்தாரியின் கருத்துப்படி, மொழிபெயர்ப்பு மூலமொழியின் வரம்பையும் பெறுமொழியின் செழுமையையும் ஒருசேரக் காட்டும். பாலினம் நீக்கப்பட்டதால், மூலத்தின் வரம்பாக இருந்த ஒன்று தமிழில் இயல்பான கவிதையாகவும் “செழுமையான” தெளிவின்மையாகவும் மாறுகிறது. இது ஒரு “கவிஞர்-மொழிபெயர்ப்பாளர்” மட்டுமே எடுக்கக்கூடிய முடிவு என்றார் சூரஜ்.
மொழிபெயர்ப்பாளன் மூலக்கவிஞனோடு ஒன்றிணைகிறான். தன் மொழியோடும் பண்பாட்டோடும் தொடர்பற்ற ஒரு கவிஞனைச் சந்திக்கும்போது அவன் ஆளுமை விரிவடைகிறது. அந்த விரிவு அவரது சொந்தத் தமிழ்க் கவிதைகளில், அவரது மொழிநடையில், ஒரு “பரிசாகப்” பிரதிபலிக்கிறது என்றார்.
கவிதை மொழிபெயர்ப்பில் இரட்டைச் செயல் உண்டு என்பதையும் சூரஜ் குறிப்பிட்டார். கவிதை என்ன சொல்கிறது என்பதை மொழிபெயர்ப்பது ஒன்று. கவிதை வாசகனுக்கு என்ன செய்கிறது என்ற அனுபவத்தை மொழிபெயர்ப்பது மற்றொன்று. இரண்டாம் செயலே கவிஞன் மொழிபெயர்ப்பாளரின் உண்மையான சவால்.
மரபின் புத்துயிர்ப்பு
மோகனரங்கனின் மொழிபெயர்ப்புத் தேர்வு அனைத்துக் கவிதை வகைகளையும் தழுவியது: ஜென், கிறித்தவத் தொன்மம், நவீனத்துவம், பீட் தலைமுறை, யதார்த்தக் கவிதை, பண்டைய கிரேக்கக் கவிஞர் சாஃபோ, முக்காராம், கபீர், இன்றைய கவிஞர்கள் வரை. இதன் மூலம் அவர் ஒரு கருத்தை நிறுவுகிறார்: மொழிபெயர்ப்பு ஐம்பதாண்டு உயிர்வாழும், பின் மீண்டும் புத்துயிர்ப்புத் தேவைப்படும். கபீரையும் துக்காராமையும் மீராவையும் நவீனத் தமிழுக்குக் கொண்டுவருவதன் மூலம் இலக்கியத்தின் காலமின்மை நிறுவப்படுகிறது. ஒரு படைப்புப் பொருளளவில் நிலையானதாக இருக்கலாம், ஆனால் பிரதியளவில் நிலைத்திருக்க மொழிபெயர்ப்பாளனே உதவுகிறான்.
துக்காராமின் கவிதையில் “கவிதையின் இயல்பு உண்மையாக இருப்பது, உண்மையின் உள்ளுறைக் கனலாகத் திகழ்வது” என்ற வரியில் “உள்ளுறைக் கனல்” என்ற சொல்லாக்கத்தைச் சுட்டி, ஒரு சொல்லின் பொருளையும் உணர்வையும் அதற்குரிய இன்னொரு சொல்லில் பொருத்துவது மொழிபெயர்ப்பாளனின் பெரும் திறன் என்றார். அதேபோல ஆங்கிலக் கவிதையில் “கிஸ்ஸோகிராம்” என்ற ஒரே சொல், தமிழில் “முத்தத்துடன் கூடிய வாழ்த்துச் செய்தி” என்று விரிவு கொள்ளும் இடத்தை எடுத்துக்காட்டாக்கி, தமிழின் வரம்பையும் ஒரு மொழிபெயர்ப்பாளனே நமக்குக் காட்டுகிறான் என்று குறிப்பிட்டார்.
இளைய கவிஞன் இயல்பாகவே தன் முன்னோடிகளைப் “பிரதிசெய்கிறான்”. ஆனால் ஒரு மூத்த கவிஞன் மொழிபெயர்ப்பின் வழியாக அந்நிய மனத்தையும் மொழியையும் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும்போது, கவிதையின் நீரோட்டத்தையே திசைதிருப்புகிறான். இது மொழிக்குச் செய்யும் மிகப் பெரிய பங்களிப்பு. பிரமிள் முதல் பிரம்மராஜன் வரையிலான மொழிபெயர்ப்புக் கவிஞர் வரிசையில் மோகனரங்கனும் இடம்பெறுகிறார். பால் ரிக்கூரின் “மொழியின் விருந்தோம்பல்” என்ற கருத்தையும் சூரஜ் இணைத்தார். மொழிபெயர்ப்பு, பெறுமொழி எவ்வளவு வரவேற்புள்ள மொழி என்பதைக் காட்டுகிறது. தமிழின் விருந்தோம்பலை மோகனரங்கனின் மொழிபெயர்ப்புகள் வெளிக்காட்டுகின்றன.
பாட்ஷா திரைப்படத்தில் வரும் காட்சியை நகைச்சுவையோடு நினைவூட்டிய பூவிதழ் உமேஷ், “நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாம் கவிதையில் ஊறிப்போன ஒருவன் மட்டுமே இப்படி மொழிபெயர்க்க முடியும்” என்றார். தைத்திரீயப் பறவை எங்கெங்கோ சென்று மிகச் சுவையான இரையைத் தன் குஞ்சுகளுக்கு எடுத்துவருவதுபோல, மோகனரங்கன் இனிமையான கவிதைகளைத் தேடித் தமிழ் வாசகர்க்குக் கொண்டுவருகிறார் என்ற உருவகத்துடன் முடித்தார்.
கவிஞரின் குரல்
நிறைவுரையில் மோகனரங்கன் மிகவும் நெகிழ்வோடும் எளிமையோடும் பேசினார். ஐம்பது அல்லது அறுபது வயதில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுரை சொல்வார்கள். இந்நிகழ்வு தம் எழுத்துக்கான அத்தகைய பரிசோதனையாக அமைந்தது என்றார். தன் அடுத்தத் தலைமுறையின் பார்வையில் தம் எழுத்து ஓரளவு பயனுள்ள செயலாக இருந்திருக்கிறது என்ற நிறைவை அளித்தது.
வாசிப்பு எழுத்து இரண்டிலும் தம் வளர்ச்சிக்கு காரணமானவர்களாகப் பிரம்ம ராஜன், நாஞ்சில் நாடன் சிவக்குமார், ஜெயமோகன், பாவண்ணன், சுகுமாரன், யுவன் சந்திரசேகர் போன்றோரை சுட்டி அவர்கள் எல்லோரும் 0கொடுப்பவர்களாக இருந்ததால்தான் தம்மால் எழுத முடிந்தது என்றார்.
தம் எழுத்து நெறியாக, ‘தனக்குப் பொய்யெனத் தெரியும் அல்லது திருப்தியில்லாத ஒன்றை எழுதக்கூடாது. ஒரு வரி எழுதினாலும் பத்து வரி எழுதினாலும், இருபது ஆண்டுகள் கழித்து அதை நிராகரிக்கும் நிலை வரக்கூடாது’ என்றார். இந்த நெறியே மிகக் குறைந்த எண்ணிக்கையையும் மிக நிதானமான எழுத்து வேகத்தையும் நிர்ணயிக்கிறது. ஆனந்த்குமார் சொன்ன நிகழ் வாழ்வைவிடக் கவிதையில் வெளிப்படும் இயல்பு என்பதை ஏற்றுக்கொண்டார். இது பெரிய முரண்தான் என்றும் சொன்னார். தம் கவிதைகளை ஒவ்வொன்றாகச் சித்திரமாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்ற உமேஷின் கருத்தும் தம் கவிதையின் இயல்பு என்றே தாம் கருதுவதாகச் சொன்னார்.
உரையாடல்: கவிதையியலின் பல முகங்கள்
சொல்லின் பயணம்
மு.செ. பிரகாஷ், கவிஞரின் சொல உடனான பயணம் குறித்து கேள்வியை எழுப்ப, மோகனரங்கன் தம் பயணத்தைப் படிப்படியாக விவரித்தார். சிறுவயதில் அம்புலிமாமா, காமிக்ஸ் கதைகளைவிட அதற்கான ஓவியங்களே ஈர்த்தன. எட்டாவது, பத்தாவது படிக்கையில் ஓவியம் வரைவதிலும் எழுதுவதிலும் ஆர்வம். பிறகு அது சொற்களின் மீதான ஈர்ப்பாக மாறியது. தந்தையின் நண்பர் நூலகர் என்பதால், அவர் தேநீர் குடிக்கப் போகும் நேரம் நூலகத்தைத் தாமாகவே பார்த்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்தது. அங்கு நா. காமராசன், மு. மேத்தா, வைரமுத்து போன்றோரின் புதுக்கவிதைகள். பாலிடெக்னிக்கில் படிக்கையில் ஜூனியர் விகடனில் அப்துல் ரகுமானின் தொடர் வழியாக உருது கசல் உள்ளிட்ட பிறமொழிக் கவிதைகளின் சுவை. பழைய புத்தகக் கடையில் கிடைத்த கணையாழி, தீபம் இதழ்கள். வேலூரில் அண்ணாமலை பதிப்பகத்தின் நூல்நிலையத்தில் மீரா வெளியிட்ட நவகவிதை வரிசை நூல்கள் பதினைந்து ரூபாய் விலையில் கிடைத்தன. அவற்றில் இந்திரன், கோ. ராஜாராம், விக்ரமாதித்யன், கல்யாண்ஜி, கலாப்ரியா போன்றோர். கணையாழிக்குக் கவிதைகள் அனுப்பி, சில வெளியானபோது தம்மால் எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்தது. ஆனால் அதைப் பற்றிப் பேச யாருமில்லை. சேலத்துக்கு வந்த பின்னரே நண்பர் வட்டம் அமைந்தது, அதன் வழி நடந்த நேரடி உரையாடல் எழுத்தை உணர்வுபூர்வமாக்கியது என்றார்.
பழந்தமிழ்த் தடங்கள்
சில கவிதைகளில் தமிழ் இலக்கிய மரபின் தொடர்களும் குறிப்புகளும் இடம்பெறுவது குறித்து உமேஷ் கேட்டார்.
இது கவிதையியலின் மையக் கேள்விக்கு இரண்டு அடுக்குகளாகப் பதிலளித்தார். முதலாவதாக, புதுக்கவிதை யாப்பையும் இலக்கணத்தையும் உதறியது ஏன்? இலக்கண மொழியில் சொல்ல முடியாதவற்றைச் சொல்வதற்கு. உரைநடை வந்த பின் எல்லா மொழிகளிலும், அச்சுப் புரட்சியோடு, இது இயல்பாக நிகழ்ந்தது. இரண்டாவதாக, தமிழுக்கு இரண்டாயிரம் ஆண்டு உயிரோட்டமுள்ள மரபு உண்டு. உலகில் சில மொழிகளுக்கே அது உண்டு. சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் பக்தி இலக்கியத்தையும் இன்றும் வாசித்து உணர முடிகிறது. அந்த உயிர்ப்பை நவீன மொழியில் தொடர்வது தவறல்ல, இயல்பான நீட்சி. தம் கவிதையில் சங்க இலக்கியச் சொல்லோ குறளின் வரியோ சேரும்போது, சொல்ல வரும் விஷயத்துக்குக் காலமற்ற நீட்சி கிடைப்பதாக உணர்கிறேன் என்றார்.
ஆனந்த்குமார் இதில் ஒரு முக்கியக் கருத்தைச் சேர்த்தார். இந்த நீட்சி அறுபடாமல் தொடர்ந்தது என்று சொல்ல முடியாது, இடைவெளிக்குப் பின்னும் அதை நவீனக் கவிதைக்குள் கொண்டுவர முடியும். நவீனக் கவிதை தட்டையாகி, உரைநடைக்குள் நீர்த்துப்போகும் நிலையை அடைந்த இடத்தில், மொழியின் அழகை நவீனக் கவிதையிலும் தக்கவைக்க முடியும் என்று மோகனரங்கன் செய்துகாட்டியுள்ளார். இது நவீனக் கவிதைக்கு “மறுமலர்ச்சி” நிகழக்கூடிய இடம் என்றார். உள்ளடக்கம், மொழி என்ற இரண்டிலும் அல்ல, மொழியின் நீட்சியாகவும் அதன் அழகைத் தக்கவைப்பதிலும் இந்தப் பங்களிப்பு இருப்பதாக அவர் வேறுபடுத்திச் சொன்னார்.
சிறுகதை முயற்சி
சிறுகதை எழுதிய அனுபவம் குறித்த உமேஷின் கேள்விக்கு, கவிஞர் தம் முதல் தொகுப்பு, 2000ஆம் ஆண்டுத் தமிழினி வெளியீடாக, எம். கோபாலகிருஷ்ணனின் கவிதைத் தொகுப்போடு ஒன்றாக வந்ததை நினைவுகூர்ந்தார். பின்னர் நண்பர் கோபாலகிருஷ்ணன் முழுமையாகப் புனைவுக்குத் திரும்பினார். புனைவு எழுதுவதற்கு நுண்விவரங்களை நினைவில் பதிக்கும் மனம் வேண்டும். இருவரும் ஒன்றாகப் பயணம் செய்த இடங்கள் அவரது நாவலில் வரும்போது, “ஆமாம், இங்கே போனோம்” என்று தோன்றுமே தவிர, தேதி, பெயர், உரையாடல் எதுவும் தம் நினைவில் இல்லை. ஒட்டுமொத்தமாக ஒரு படிமம் மட்டுமே இருக்கும். இந்தச் சுயவிமர்சனம் கவிஞனின் நினைவுக்கும் புனைவாளனின் நினைவுக்கும் இடையிலான வேறுபாட்டைச் சொல்கிறது. கவிஞன் காட்சியை ஒட்டுமொத்தப் படிமமாகச் சேமிக்கிறான், புனைவாளன் விவரங்களைச் சேர்க்கிறான். தொடக்கத்தில் “மழை” இதழில் சில கதைகள் எழுதிப்பார்த்து, பின் நிறுத்திக்கொண்டதாகவும் சொன்னார்.
செவ்வியலும் காலமும்
கவிதைகள் காலத்தைக் கடக்கின்றன என்றால் உரைநடைக்கு அது சாத்தியமில்லையா என்று கவியரசு கேட்டார்.
கவிஞர் தம் பதிலில் ஒரு தெளிவான வேறுபாட்டைச் சொன்னார். கவிதை சாரத்தைப் பேசுகிறது. யார் சொன்னார், எந்தச் சூழலில், யாரிடம் என்ற பின்புலத்தை அது பெரும்பாலும் விலக்கிவிடுகிறது. பொறாமை, கோபம், காதல், காமம் போன்ற அடிப்படை உணர்வுகள் சங்க மனிதனுக்கும் இன்றைய மனிதனுக்கும் ஒன்றுதான். அவற்றை வெளிப்படுத்தும் விதமும் மொழியும்தான் மாறுகின்றன. சங்கப் பாடல்களில் புலவன் தன்னைப் பெயரிட்டுச் சொல்லாததும், இலக்கணம் அகப்பாடலில் பெயர் குறிப்பிடலாகாது என்று கூறுவதும் இதனோடு தொடர்புடையது: யாரோ யாரையோ நோக்கிச் சொன்னது, இன்று நமக்கான ஒன்றாகப் பொருள்படுகிறது.
உரைநடையிலும் புதுமைப்பித்தனும் அழகிரிசாமியும் இன்றும் வாசிக்கப்படுகிறார்கள். அவர்களது சமகாலத்தவர் பலர் வரலாற்று மதிப்புக்காக மட்டுமே படிக்கப்படுகின்றனர். இன்றும் வாசகனிடம் தத்தளிப்பையும் உணர்வுக் கொந்தளிப்பையும் எழுப்பும் கேள்விகளை அவர்கள் எழுப்புகின்றனர் என்பதே காரணம் என்றார். டால்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கி போன்றோர் இதனாலேயே செவ்வியல் நிலையை அடைகின்றனர். பதினாறு வயதில் வில்லனாகத் தெரியும் தந்தையைத் தானே ஒரு மகனுக்குத் தந்தையாகும்போதுதான் புரிந்துகொள்கிறோம். அதுபோலச் செவ்வியல் படைப்பு பத்து, இருபது ஆண்டுகள் கழித்து வேறு ஒளியில் வேறு பொருள் தருகிறது.
கவிதை எப்போது பழையதாகிறது?
கவிதைகள் சில நாளில் பழையதாகிவிடுகின்றன என்ற பொதுவான குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு மோகனரங்கனின் பதில் கவிதையியலின் சுருக்கமாக அமைந்தது. கவிதையை “புதிர் வடிவம்” (Puzzle) போன்றது என்று வரையறுத்தார், மொழியில் உறைந்துவைக்கப்பட்ட ஓர் அனுபவம் அல்லது உணர்வு, வாசிக்கும் ஒவ்வொரு முறையும் வாசகன் அந்த உணர்வுக்கு ஆட்படுகிறான். ஒரு கவிதை பழையதாவதற்கான காரணங்கள் மூன்று:
1. வாசகனின் புரிதலோ கவிஞனின் வெளிப்பாடோ தவறுவது: சமயங்களில் எழுதுபவனால் சரியாக வெளிப்படுத்த முடியாததும் வாசகனால் புரிந்துகொள்ள முடியாததும் ஒரு கவிதையைத் தோல்வியடையச் செய்கிறது.
2. கருத்தியல் வழக்கொழிவது: கருத்தியல் அடிப்படையில் எழுதப்பட்ட கவிதைகள் அக்கருத்து இயல்பாகிவிட்ட பின் தம் தேவையை இழக்கின்றன. கவிஞர் இதற்கு “எழுத்து” இயக்கத்தின் சில விமர்சனக் கருதுகோள்களை எடுத்துக்காட்டாகச் சொன்னார். அவை முன்வைத்த வடிவ நெறிகள் இன்று இயல்பாக நடைமுறையில் உள்ளதால், புதிதாக எழுத வரும் கவிஞருக்கு அவை தேவையற்றுப்போய்விட்டன.
3. கவித்துவக் குறைவு: சங்கக் கவிதையிலும் குறளிலும் கம்பராமாயணத்திலும் எல்லாம் கவித்துவம் நிறைந்தவை அல்ல. வெறும் கருத்தாக நிற்பவை உண்டு. இன்றும் உணர்வு ரீதியாகத் தொடக்கூடியவை மட்டுமே கவிதையாகத் தொடர்கின்றன. கவித்துவத்தில் குறைவிருந்தால் கால ஓட்டத்தில் அது மறைந்துவிடும்.
ஆத்மாநாமை இதற்கு எதிர்மறை எடுத்துக்காட்டாகச் சொன்னார். அகவயக் கவிதையையும் புறவயக் கவிதையையும் இணைக்கும் சந்தியில் நின்று எழுதிய முக்கியக் கவிஞர். ஆனால் புதுமைப்பித்தனைப்போல அவசரம் கொண்ட வேகம் அவர் நடையில் தெரிகிறது என்பதையும், இன்று வாசிக்கச் சில சிரமங்கள் உண்டு என்பதையும் குறிப்பிட்டார். இது ஆத்மாநாமின் மேல் தீர்ப்பாக அல்ல, கவிதையின் தாங்குதிறன் எவ்வாறு அதன் பாடுபொருள், மொழி, பார்வையைச் சார்ந்தது என்பதற்கான எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
கவியரசு சொன்னதுபோல், வாசகன், பிரதி என்ற மூவரும் சந்திக்கும் புள்ளியை, எழுதுபவன் இந்தக் கரையில், வாசிப்பவன் அந்தக் கரையில், பாலத்தின் நடுவில் இருவரும் சந்திக்கிறார்கள். சந்திப்பு நிகழ்வதற்கு ஏதுவாக இருப்பது பிரதிதான். அது தவறினால் சந்திப்பு நிகழாது.
மொழிபெயர்ப்பும் சுய எழுத்தும்
உலகக் கவிதைகளைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பதால் அவற்றின் தாக்கம் சொந்தக் கவிதைகளில் தானாக வந்துவிடுவதில்லையா என்ற கேள்விக்கு, கவிஞர் தம் கல்விப் பின்னணியிலிருந்து பதிலளித்தார். பள்ளிப் படிப்புத் தமிழ் வழி. கல்லூரியில் ஆங்கிலத்தில் கவிதைகள் படிக்க வேண்டியதாயிற்று. தாம் எழுதும் கவிதைகள் குறிப்பிட்ட வகைமைக்குள்தான் இருக்கும் என்ற உணர்வு இருந்ததால், உலகம் முழுவதும் என்ன எழுதப்படுகிறது, எப்படி எழுதப்படுகிறது என்று அறிவதற்காகவே கவிதைகளை வாசிக்கத் தொடங்கினார். பணிநிமித்தம் தினமும் மூன்று மணி நேரப் பேருந்துப் பயணத்தில் இணையத்தில் தேடி வாசிக்க முடிந்தது. முதல் அல்லது இரண்டாம் வாசிப்பில் உணர்வுபூர்வமாகத் தாக்கும் கவிதைகளைத் தனியாக எடுத்து, “இது ஏன் என்னை ஈர்க்கிறது? எதைச் சொல்கிறது, எப்படிச் சொல்கிறது, எதைச் சொல்லாமல் விடுகிறது?” என்று நெருக்கமாக அறிவதற்கே மொழிபெயர்க்கிறார். எனவே மொழிபெயர்ப்பு அவருக்கு ஒருவகைப் பயிற்சி, கற்றல் செயல்முறை. தாக்கம் அறியாமலே, மாற்றுவடிவில், சொந்தக் கவிதையில் வெளிப்பட்டிருக்கலாம். அதை வாசகர்களே சொல்ல வேண்டும். ஆனால் உணர்வுபூர்வமாகத் தனது கவிதைகளை மொழிபெயர்ப்புக் கவிதைபோல எழுத முயன்றதில்லை என்றார்.
எளிமை என்னும் கடினம்
கருணாகரன், மோகனரங்கனின் ஒரு குறுங்கவிதையை எடுத்துக்காட்டி, எளிய வரிகளில் ஓடிவந்து முடிவில் வியப்பை ஏற்படுத்தும் நுட்பத்தை எப்படி அடைந்தீர்கள் என்று கேட்டார்.
கவிஞரின் பதில் எளிமையானதாக இல்லை, ஆனால் மிக நேர்மையானது. எழுதுவதற்கு முன் தாம் ஒரு வாசகன். தாம் வாசிக்கும் உயரத்துக்கும் ஆழத்துக்கும் தம் எழுத்து உயர வேண்டும் என்பதே சவால். தமக்குள் இருக்கும் வாசகன், எழுதுபவனைவிடப் பத்தடி முன்னால் இருக்கிறான். அவனை எட்டிப்பிடிக்கும் ஆற்றாமையே எழுதுவதன் இயங்குசக்தி. சிக்கலான மொழியில் எழுதுவதே நல்ல கவிதை என்று தாம் சொல்லவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். பிரமிள், மௌனி போல ஒரு சில வரிகளை முயன்று எழுதலாம், ஆனால் பஷீர்போல எளிமையாக எழுதுவதுதான் உண்மையில் கடினம். எளிமை இயல்பாக வர வேண்டும். வலிந்து எளிமையாக எழுதினால் அது பொய்யாகிவிடும். விக்ரமாதித்யனின் கவிதையின் எளிமையை யாரும் பின்பற்றி எழுத முடியும், ஆனால் அதிலுள்ள உண்மையின் ஒளி செயற்கையாக வராது. கைவினையை நகலெடுக்கலாம், ஒளியை நகலெடுக்க முடியாது. ஐந்து நிமிடத்தில் வரைந்த கேலிச்சித்திரத்துக்கு ஐம்பதாண்டு உழைப்பின் விலையைச் சொன்ன பிக்காசோவின் கதையை நினைவுபடுத்தி, மனரீதியாகவும் மொழிரீதியாகவும் ஒருவர் நீண்ட தூரம் கடந்து வந்த பின்பே எளிமை சாத்தியம் என்று முடித்தார்.
தமிழ்க் கவிதையின் இடம்
எம். கோபாலகிருஷ்ணன் தாம் உலகக் கவிதைகளை அதிகம் மொழிபெயர்த்த அனுபவத்தில், தமிழ்க் கவிதையின் இடம் என்ன என்று கேட்டார்.
கவிஞர் பயணக் காட்சியை நினைவுகூர்ந்து பதில்தந்தார். நண்பர்கள் ஒரு சமணக் கோவில் பயணத்தில் உயரமான ஸ்தூபியைப் படம் பிடிக்கையில், வசந்தகுமார் தன்னைஅதன் அருகில் நிற்கச் சொன்னார். ஒரு மனிதனோ மாடோ அருகில் நின்றால்தான் பார்ப்பவருக்கு உயரத்தின் அளவு புரியும். மொழிபெயர்ப்பும் அப்படியொரு அளவுகோல். இரண்டாயிரம் ஆண்டு மரபோடு ஒப்பிட்டால் தமிழ் நவீனக் கவிதைக்கு வெறும் தொண்ணூறு ஆண்டுகள்தான். உலகக் கவிதையோடு ஒப்பிடுகையில் அது ஒரு சிறிய கேன்வாஸ். தொட வேண்டிய இடங்கள், பயணிக்க வேண்டிய திசைகள், பாடுபொருள் முதல் வடிவம் வரை சாத்தியங்கள் இன்னும் நிறைய. இணையத்தால் இன்றைய இளம் எழுத்தாளர்கள் பெருமளவு உரைகளையும் பிரதிகளையும் எளிதில் அணுக முடிவதால், முன்னோடிகளின் தோள்மீது ஏறி அவர்கள் காணும் காட்சி வேறாக இருக்கும். எழுதப்பட்டது குறைவு, எழுதப்படவேண்டியது அதிகம் என்றார்.
நெடுங்கவிதை
மோகனரங்கனின் கவிதைகள் பெரும்பாலும் சிறியவை. “உறங்காப் பத்து” மட்டும் நீண்ட கவிதை என்பதைச் சுட்டிக் கேட்கப்பட்டபோது, அது “நதிமூலம் ரிஷிமூலம் போன்றது, விளக்குவது கடினம்” என்றார். சிறு கவிதைகளையே எழுதிவந்தபோது, நீண்ட கவிதை எழுத முடியுமா என்ற கேள்வி எழுந்தது. சில முயற்சிகள் நிறைவு பெறவில்லை. ஓர் அகத்தூண்டலில் தொடங்கி அது நீண்ட கவிதையாக அமைந்தது. கலாப்ரியா போன்ற வேறு கவிஞர்களின் நீள்கவிதைகள் உத்வேகம் தந்தன. அத்தகைய முயற்சியைத் தொடர முடியவில்லை என்பதற்கான காரணம் தமக்கே தெரியவில்லை என்றார். மீண்டும் முயல வாய்ப்பிருக்கலாம் என்றார்.
கவிதை பிறக்கும் முறை
நிகழ்வின் இறுதியில் ஒரு நண்பர், கவிதை எழுதுவதில் உள்ளுணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான சமன் குறித்தும், ஒரே மூச்சில் ஓடி முடியும் கவிதைகளில் ஒரு சொல் நடுவில் பாலமாக நிற்கும் உத்தி குறித்தும் கேட்டார். அத்தகைய உத்திகளில் தவறுவதற்கான ஆபத்தையும் அவர் சுட்டினார்.
கவிஞர் தம் எழுத்து முறையைத் தெளிவாக விவரித்தார்: கவிதையும் உரைநடையும் எழுதுவது ஒரே முறை. ஐஸ்கட்டியின் அல்லது பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே முதலில் கையில் கிடைக்கிறது, ஒரு தூண்டலில் ஒரு வரி அல்லது ஒரு படிமம். வாசகனைப்போலவே எழுதுபவனும் எழுதி முடித்த பின்புதான் அதை முழுமையாகக் கண்டுபிடிக்கிறான். சில சமயம் நான்கு அல்லது ஐந்து வரிக் கவிதை அப்படியே முழுமையாக வந்துவிடும். மற்றவற்றை எழுதிக் கண்டடைய வேண்டும். வேடிக்கையாகப் பிள்ளையார் பிடிக்கப்போய்க் குரங்கு வருவதும், குரங்கு பிடிக்கப்போய்ப் பிள்ளையார் வருவதும் எழுத்தின் இயல்பு. ஆனால் பிள்ளையார் பிடிக்க நினைத்துப் பிள்ளையாரே வந்துவிட்டால் அது சரியான எழுத்தல்ல என்றும் சொன்னார். எழுதுவதற்கு முன் முடிவு தெரிந்திருப்பது படைப்பூக்கத்துக்கு எதிரானது என்ற கவிதையியல் நம்பிக்கையை நகைச்சுவையாகச் சொல்கிறது.
சில கவிதைகள் பாதிக் கிணறு தாண்டி நின்றுவிடுகின்றன. எவ்வளவு முயன்றும் தொடங்கிய உயிர்ப்போடு மீதம் ஒட்டுவதில்லை. அவற்றை ஒதுக்கி வைத்துவிடுவதே நல்லது. பின்னொரு காலத்தில் திடீரென முழுமையான வடிவம் மனத்தில் தோன்றும்போது அதே கவிதை முடிந்துவிடுவதும் உண்டு. சில சமயம் தலைப்பும் மாறும். கவிதை எழுதுவதும் வாசிப்பதும் அடிப்படையில் அகவயச் செயல், புறவயமாகக் கவிதையைப் பிரித்து விளக்க முடியும் என்றாலும், அது உடலும் உயிரும் ஒன்றான முழுமை. எதுவும் தாமதமாக வருமென்றால் காத்திருக்க வேண்டும். வராதபோது கைவிடவும் வேண்டும் என்றார்.
கவிதையியல் நோக்கில்
இந்த நீண்ட உரையாடலிலிருந்து கவிதையியல் நோக்கில் சில பார்வைகளைச் சொல்லலாம்.
இசையும் மௌனமும் எதிரிகளல்ல. நவீனக் கவிதை இசையை உதிர்த்தே மௌனத்தை அடைந்தது என்ற பார்வையை ஆனந்த்குமார் முன்வைத்தார். அதற்கு மாற்றாக, இசை வழியாகவே மௌனம் சாத்தியம் என்று மோகனரங்கனின் கவிதைகள் காட்டுகின்றன. சந்தமும் சொல்லழகும் ஒரு முதல் வாசிப்பில் இன்பத்தைத் தருகின்றன. மௌனமும் இடைவெளியும் மறுவாசிப்பில் ஆழத்தைத் தருகின்றன.
மரபு சுமையல்ல, ஊற்று. புதுக்கவிதை இலக்கணத்தை உதறியது வரலாற்றுத் தேவை. ஆனால் அந்த உதறல் முழுமையான துண்டிப்பாக ஆக வேண்டியதில்லை. சங்கச் சொல்லோ குறளின் வரியோ நவீன மொழிக்குள் வரும்போது காலமற்ற தன்மையைச் சேர்க்கிறது என்பது கவிஞரின் அனுபவம்.
எளிமை ஒரு தவம். எளிமை என்பது உத்தி அல்ல, நீண்ட பயிற்சியின் பின் வரும் இயல்பு. கைவினையை நகலெடுக்கலாம், உண்மையின் ஒளியை நகலெடுக்க முடியாது.
மொழிபெயர்ப்புப் படைப்பின் இன்னொரு வடிவம். மூலத்தின் வரம்பையும் தன் மொழியின் வரம்பையும் ஒருசேரக் காட்டுவதால் கவிதை நீரோட்டத்தையே மாற்றும் வல்லமை அதற்கு உண்டு.
விமர்சனம் வழிகாட்டும் செயல். நல்ல விமர்சனம் வாசகனை அச்சத்திலிருந்து விடுவித்துக் கவிதைக்குள் அழைக்கிறது. முடிவு சொல்வதைவிட, இப்படி வாசித்துப் பாருங்கள்- என்று கைகாட்டுவது அதன் பணியாக இருக்க வேண்டும்.
கவிதை உண்மையால் நிற்கிறது. கவிதை பழையதாவதும் புதியதாக நிற்பதும் வடிவத்தால் அல்ல, அதன் கவித்துவ உண்மையாலேயே. கருத்தியல் கடந்துபோகும், உணர்வின் உண்மை நிலைக்கும்.
நிகழ்வின் முடிவில் உமேஷ், மோகனரங்கனின் தோற்ற மயக்கம் என்ற குறுங்கவிதையை வாசித்தார். துள்ளும் மீனுக்கும் தூண்டில் முள்ளுக்கும் இடையிலான கைசுடுக்கும் நேரத்தில் ஒரு நதி ஓடுவதும், ஓர் ஏரி நிறைவதும், ஒரு கடல் தோன்றி மறைவதும், இறுதியில் ஒரு கனவு வாழ்வென மயங்குவதும் சொல்லும் அக்கவிதை, நீண்ட உரைகளுக்குப் பின் ஒரு சில வரிகளில் மௌனத்தை நிறுத்தியது. இந்த முடிவே நிகழ்வின் சாரம், உரையாடல் நீண்டாலும் இறுதியில் கவிதையே பேசியது.
மூன்று பேச்சாளர்கள் மூன்று வெவ்வேறு கோணங்களை எடுத்துக்கொண்டனர். கவியரசு கட்டுரையாளரைக் கண்டார், ஆனந்த்குமார் கவிதைக்குள்ளிருக்கும் இசையையும், அமைதியையும் கண்டார், சூரஜ் மொழிபெயர்ப்பாளரைக் கண்டார். ஆனால் மூவரும் சுட்டியது ஒரே ஆளுமையின் பண்புகளை, நிதானம், உண்மை, மொழியின் மீதான தவம். கவிஞர் சொன்ன திருப்தியில்லாததை எழுதமாட்டேன் என்ற நெறியில் இவை மூன்றும் சேர்கின்றன.
தொகுப்பு : இன்பா
திணைகள் கவிதையியல் அமர்வு 04.10.2026
உரைகள்
இரா.கவியரசு
ஆனந்த்குமார்
சூரஜ்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: பூவிதழ் உமேஷ்
க.மோகனரங்கன்
கவிதை மொழிபெயர்ப்பில் தொடர்ந்து இயங்கிவருகிறார். ஐந்து கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்புடன் ஐந்து மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
படங்கள் : AI




