
கனவுப்பூச்சிகள் மொய்க்க
கொசுக்கள் சுதந்திரமாய்
உலவும் பின்னிரவில்
வலைக்குள் கிடக்கிறது உடல்.
நீரில் மூழ்கி
பிண்டமிட்டுத் திரும்பிய நாளில்
கோடாங்கி சப்தம்
கொலுசொலி
கூகையுருவம்
பைரவ உறுமலென
உடல் உதறி உதறி கெலிக்க
கூத்தனின் நடனம்
சாந்தமாக்குகிறது.
கிடை உடலைக் கண்ணுற்று
ஒளியிலிருந்து இறங்கி வரும்
அப்பா கண்ணீர் வழிய
கால் அமுக்குகிறார்.
அம்மா சிரித்தபடி
தலை கோருகிறாள்.
அகஸ்தியர் அருவியோ
குதித்துக் குதித்து விளையாடுகிறது உடலெங்கும்.
2.
வழக்கமான பதாகை வைக்குமிடத்தில்
தினம் தினம் முகங்கள் மாறிக்கொண்டேயிருக்கும்
யாரென்று அறியாமலே
சிரித்துக் கடக்கும்
முகமொருநாள்.
தோளோடு தோள் சேர்த்து
சுற்றிய முகமொருநாள்.
இரத்த சொந்த முகமொருநாள்.
இந்த மழை நாளில்
திடீர் திடீரென
உதித்த முகங்கள்
உலுக்கியது காலங்களை.
தெற்றுப் பல் தெரிய
சிரிக்கிறான் அச்சிறுவன்.
இன்றைய பதாகை
எள்ளலவும் பொருந்தவில்லை
இவ்வுலகிற்கு.
3.
தாழப்பறக்கும் பட்டாம்பூச்சியைத்
தாவித் தாவி பிடிக்கிறது
குட்டி நாய்.
சிக்கியபாடில்லை.
மேலும் கீழும் குதித்துக்
களைத்து
கண்களை அசைத்து
பட்டாம்பூச்சியின் திசையை
அளக்கிறது.
கண்களின்
நீள்வட்டப்பாதைக்குள்ளே
வானில் சித்திரங்கள்
வரைந்தபின்
எதுவும் நடவாததுபோல்
சோர்வின் மேல் அமர்கின்றன
வண்ணங்கள்.
4.
சூரியன் வராத நாட்களில்
ஒளிந்திருந்த உயிரிகள்
மழைப் போர்வையை
சாலைகள் உதறியதும்
வெளிப்படுகின்றன.
சிறு சிறு உயிரிகளின்
குறுநடையில்
திகைக்கும் சாலைகள்
சில நேரம்
சிகப்பை பூசிக்கொண்டு
பயமுறுத்துகின்றன.
நிராதரவான சாலைகளில்
உறைந்திருக்கும் திட்டுக்கள்
யாரிடமும் கேளாமல்
இந்நாளின் மேல்
கூடுதல் பாரத்தை வைக்கின்றன.
5.
கடற்கரையில் குழி தோண்டி முட்டைகளைப் புதைத்து விட்டு
தனிஅலைவரிசையால் பொறிக்கும்
நீர் நில உயிரிக்கு
தூரம் ஒரு பொருட்டல்ல.
நீர் உடைத்து
வெளியேறிய குஞ்சினை
தூர தேசத்தில் இருந்தபடி
காணக் கிடைக்காது
வெவ்வேறு அலை வரிசையில் வாழும் ஆன்மாவுக்கு
கண்களால்
கண்களைச் சந்திக்கையில்
புதிய அலை வரிசைகள் கிட்டாமலா போய்விடும்.
6.
டம்ளரில்
ததும்பத் ததும்ப நீரை எடுத்தபடி
படியேறி வருகிறாள் மகள்
தோற்றப்பிழையாய்
நிலைவாசல் நிதானம் தவற
தடுமாறிக் குப்புற விழுகிறாள்
எதையும் செய்ய இயலாத
கையறு நிலையில்
மூளையில் ரசாயனம் சுரந்து
ஓர் உலுக்கு உலுக்குகிறது.
தானே எழுந்த மகள்
ஒன்னுமில்லப்பா
ஒன்னுமில்லப்பா
என்கிறாள்
ஒன்னுமில்லை தான்
ஆனாலும்
கணநேரம்
உடலின் உள்ளிருந்து
ஏதேதோ சுழன்று
எழுந்து நின்றதே
அதை என் சொல்வேன்.

