1.
மிக கவனமாக ஒவ்வொரு பந்தாக தரையில் வீசி
அதன் இசையைக் கேட்பதில் உற்சாகம் இயலுக்கு
சில பொழுதுகளில் இவளின் வீசுதலுக்கு இடையே
தரையில் அதன்போக்கில் அசையும் பந்துகளுக்கு
அவளே ஒலி எழுப்புவாள்
பிறிதொரு நாளில் மழைக்குளத்தில் பந்துகளை வீசிய
அவள்
தன்னில் தெரிக்கும் நீர்த்துளிகளைக் கோர்த்து
இசையொன்றை மீட்டுகிறாள்
அடங்காமல் ஆடிக் கொண்டிருந்தன பந்துகள்
ஒரு பெருங் கூத்தின் காட்சியென அது
2.
பெயர் தெரியா பச்சைப் பறவை அன்று
அவளைப் பார்க்க வந்திருந்தது
பால்கனி கைப்பிடியில் அது அமர்ந்திருந்ததை
அவள்தான் முதலில் கண்டுபிடித்தாள்
அதன் விநோத ஒலியொன்றை தொடர்ந்து
அவளது இருப்பை
பறவைக்கு அறிவிக்க அவளும் ஒலியெழுப்பினாள்
பார்வையைத் தாண்டி
அது பறந்தபோது
தன்னைப் போல் ஏன் அது நடக்கவில்லை என்று மட்டும்
கேட்டாள்
3.
வாசல் வரை வந்தவள் நின்று
முன்வீட்டு பூனைகள்
சாப்பிடுவதை பார்க்கிறாள்
பூனைக்காரியிடம் தன் மொழியில் ஏதோ சொன்னவள்
வரவேற்பறையில் நாளிதழ்களைப் பிரித்து
படம் பார்த்து கொண்டிருந்தாள்
பெரியப்பாவின் பையைக் கவிழ்த்து பேனாக்கள்
தேடியவள்
பின் பால்கனியில் இன்று
வானம் பார்க்கிறாள்
விளக்குக்கு பயந்து பூசையறையில் நுழைய முயன்றவளை
தடுத்தப்பின்
அடுத்த அறைக்குள் நுழைக்கிறாள்
தூங்கும் பெரியப்பாவை அடித்து எழுப்பி
பொம்மைகளை அடுக்கி விளையாட்டு காட்டுகிறாள்
மீண்டும் அவள் வரும்வரை
வீடு முழுக்க நிறைந்திருந்தன சிரிப்பொலிகள்…