விரைவில் வெளியாகவிருக்கும் ‘தலையில் பிறைசூடிய பெண்கள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்)
1
வார்த்தைகளை
மலர்த்தண்டுகளாய் வழவழப்பாக்கத்
தெரிந்தவர்களுக்குத்தான்
இந்தச் சாகசம் கைவரும் –
ஒரு கொத்து வார்த்தைகளை
அடியில் சிவப்பு நிற ரிப்பன் கட்டியும்
நீர்க்கோலங்களாய் ஒரு தாளைச்
சுற்றியும் நீட்டுவது,
என்னவோ சுலபம்தான்.
மலர்த்தண்டுகளை
மேலிருந்து கீழாய்
குறுக்க வெட்டியதால் ஏற்பட்ட
தழும்பின் சொரசொரப்பு
இன்னமும் கைகளில்
ஒட்டிக் கொண்டிருப்பதால்
கேட்கிறேன்:
தவறாகப் போனது
வெட்கத்தில் தலைகுனிய
ஆரம்பித்திருக்கும் தண்டா,
ஒரு துண்டுச் சதைபோன்ற
சிவந்த ரிப்பனா
அல்லது
கவனமாகச் சுற்றியும்
சரியாக மடங்காத
நீர்க்கலங்கலாய்
இந்தக் காகிதமா?
2.
சன்னலுக்கு வெளியே
குருவி அமர்ந்து
தன்னை ஆசுவாசப்படுத்திக்
கொள்கிறது.
சன்னலுக்கும் எனக்கும்
இடையில் கறுப்பாய்க்
குருவியைப் பார்க்கும்
எனது நிழல்.
தனக்குள் மூழ்கியபடியே
சிறகுகளை ஒருமுறை
சிலிர்த்துவிட்டுச்
சட்டென்று பறந்துபோகப்
போகும் குருவிக்குத் தெரியுமா,
உற்றுப் பார்க்கும் இந்தக் கறுப்பு
முழுவதும் என்னுடையதென்று?
3.
இந்தக் கவிதையை
நீ வாசிக்க ஆரம்பிக்கும்போதோ
அதன் இடையிலோ
அல்லது இதன் முற்றுப்புள்ளிக்கு
அந்தப் பக்கமாய்
உனது ஒரு மெல்லிய
பெருமூச்சுக்குப் பிறகோ
நான் மௌனமாகி விட்டதாக
உனக்குச் செய்தி வரும்.
அப்போது நீ
இந்தக் கவிதையை
மீண்டும் ஒருமுறை
வேறொரு குரலில்
வாசித்துப் பார்ப்பாய்.
அந்தக் குரலில் வாசிக்கும்போது
இந்தக் கவிதை உனக்கு முற்றிலும்
வேறொரு பொருளைத் தரும்.
அதே நேரத்தில்
இது நான் எழுதிய கவிதை என்பதும்
என் குரல் எப்படி இருக்கும் என்பதும்
உனக்கு மறந்து போயிருக்கும்.
இது மாயக் கவிதை.
அப்போதும் நீ
கொடியிலிருந்து உலுக்கிச்
சரித்த பூவாய்
ஒரு பெருமூச்சு விடுவாய்.
அந்த பெருமூச்சு மாத்திரம்
இந்தக் கவிதையில் நான் வைத்திருக்கும்
இந்த எல்லாப் பெருமூச்சுகளையும்
ஒத்திருக்கும்.
4.
பேருந்து நிறுத்தத்தில்
வரிசையாய்
வந்து நிற்கும் பேருந்துகள்
அனைத்தும்
நான் ஏற வேண்டியவை
அல்ல என்பதை
அறிந்ததும்
மற்ற பயணிகளுக்கு
வழிவிட்டு
பதற்றத்தோடு
பின்னால் நகர்ந்து
கொள்வதைப் போல்
உன்னை விட்டு
விலகிப் போகிறேன்.
விபத்துக்கள்
நடந்திருக்கின்றன
என்பது உனக்கும் தெரியும்.
எதற்கும் முந்தாமல்
கூட்டத்தோடு கூட்டமாய்
நின்று கொள்வது
இப்போது சுகமாக இருக்கிறது.
இந்த எனது
பயணச் சீட்டை
திரும்பப் பெற்றுக்
கொள்கிறாயா?
கொஞ்சம் சில்லறை
தேவைப்படுகிறது.
5.
சமுத்திரத்தில்
இறங்குவதைப் போலத்தான்
உனக்கான
காதல் வசனங்களை
எழுதத் தொடங்கினேன்.
பலர் ஆனந்தமாய்
நீச்சலடிக்கிறார்கள்.
ஒருவன் நீரில்
மல்லாக்கப் படுத்துக் கொண்டு
சுருங்கிய கண்களால்
வெயிலைப் பார்க்கிறான்.
ஒருத்தி தனது நீச்சல் உடையையும்
மார்பகங்களையும்
மாற்றி மாற்றிச்
சரிசெய்து கொள்கிறாள்.
சில பேர்
அடுத்த நாடே தெரிகிறது
என்று விரலை நீட்டுகிறார்கள்.
நான் நிற்பது
இவர்களிடமிருந்தெல்லாம்
வேறு கடல் போலும்.
இங்கு மொத்தமும்
உப்பும் அலையுமாகவுமே
இருக்கிறது