கவிஞர் கலாப்ரியாவின் கவிதை ஆளுமையும் அவரது கவிதை உலகமும் படைப்புலகம் அறிந்ததாக இருந்தாலும், சக கவிஞர்களின் கவிதைகளின் மீதான பார்வையையும், அவரது ரசனையையும் அறிந்துகொள்வதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதைகள் உதவுகின்றன. கலாப்ரியா ரசித்த கவிதைகளை திணைகளில் பகிர்ந்துகொள்கிறார். உள்ளடக்கம், வெளியீடு, கருத்தியல் என எந்தச் சார்புமில்லாமல் தான் ரசித்த கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்துள்ளார். இக்கவிதைகள் கலாப்ரியாவின் சிந்தனைப் பிரதியாக வந்துள்ளது. அவரது தேர்வு பொதுவானதாகவே இருக்கிறது, தனது கண்ணோட்டத்தில் ரசித்தவற்றில் சிறந்தவையாகக் கருதுபவையாக ஒரு சிலவற்றை மட்டும் இங்கு பகிர்ந்துள்ளார். இது கலாப்ரியாவின் ரசனை சார்ந்த பதிவாக மட்டுமே வருகிறது. இதில் வேறு எந்த வரிசையும் இல்லை. இக்கவிதைகள் ‘கால் நனைத்த அலைகள்’ என்ற தலைப்பில் திணைகள் தளத்தில் பதிவேற்றம் காண்கிறது
சுவடுகள்
போன வருஷச் சாரலுக்கு
குற்றாலம் போய்
கை(ப்)பேனா மறந்து
கால்(ச்) செருப்பு தொலைத்து
வரும்வழியில்
கண்டெடுத்த
கல் வெள்ளிக் கொலுசு ஒண்ணு
கற்பனையில் வரைந்த
பொற்பாத சித்திரத்தை
கலைக்க முடியலியே இன்னும்.
-விக்ரமாதித்யன்
யாரும்
திறந்துகிடக்கும் ஃபைலின் மேல்
பேனாவை மூடிவைத்தாள்.
மேஜையின் இடது பக்கம் உயர்ந்து நிற்கும்
கோப்புகளின் தூசிகளைப் பார்த்தபடி நினைத்தாள்
என்னிடம் யாரும் அன்பு செலுத்துவதில்லை.
எதிர் பெஞ்சில் அமந்திருந்தார் பெரியவர். அவள்
கையெழுத்திட்டுத் தரப்போகும்
சான்றிதழுக்ககாக் காத்திருந்தார்.
ஜன்னல்வழித்தெரியும் மலர்களற்ற அசோக மரத்திலிருந்து
வௌவாலொன்று கிரீச்சிட்டு வெளியேறுவதைப் பார்த்தபடி
நினைத்துக் கொண்டார்
என்னிடம் யாரும் அன்பு செலுத்துவதில்லை
ஒவ்வொரு மேஜையிலும் தேநீரை வைத்து விட்டுச்
செல்கிறான் பையன். ஒவ்வொரு கண்ணாடி டம்ளரும்
வெவ்வேறு அளவுகளில் காலியாவதைப் பார்த்தபடி
நினைத்துக் கொள்கிறான்
யாரும் அன்பு செலுத்துவதில்லை என்னிடம்
-தேவதச்சன்
நிழல் பற்றிய கவிதைகள்
Poetry is an echo, asking a shadow to dance- Carl Sandburg
கவிதை என்பது ஒரு நிழலை ஆடச் சொல்லிக் கெஞ்சும் எதிரொலி.
உச்சி வெயிலுக்குப் பயந்து
அஸ்திவாரத்திற்குள்
பதுங்குது
கோபுர நிழல்
ஒரு தலைக்காதல்
என்ன செய்தும்
இவன் காலடியில்
தலைவைத்துப் பணியமறுக்கிறது
நிழல்
இவனின் நிழல்
-கலாப்ரியா
சொற்களைத் தின்னும் பூதம்
வெற்றுக் காகிதங்களை
உறையிலிட்டு அனுப்பும் பழக்கமுள்ள பெண்
தன் சொற்களைத் தின்னும் பூதத்திடம்
ஒரு நாள் கண்ணீர் மல்கக்கேட்டாள்
வெற்றுக் காகிதங்களை
படித்துக் கொண்டிருக்கும் மனிதனை
ஒரு நாள்
தின்று வர முடியுமா
உன்னால்.
-மனுஷ்ய புத்திரன்
தகுதி
ஒரு பறவையிட்ட
எச்சத்தின் நிழலில்
அயர்கிறோம்
நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிற படியால்
-ராஜ சுந்தர் ராஜன்
எனக்கு
ஏழுகழுதை வயசாகியும்
கண்ணாடியை நான்
பார்த்ததில்லை. ஒவ்வொரு
முறையும்
எதிரில் நிற்கையில்
என் முகரக்கட்டைதான் தெரிகிறது
கண்ணாடியைக் காணோம்
உடைத்தும் பார்த்தேன்
உடைந்த ஒவ்வொரு
துண்டிலும் ஒரு
உடையாத கண்ணாடி
லேசான வெட்கம் எனக்கு
பார்க்க முடியாத
கண்னாடியைத்தான்
பார்க்க முடிகிறது
-தேவதச்சன்
தூக்கத்திற்கும்
கண்களுக்கும்
என்ன தொடர்பு
இந்த உடம்பை
திறந்து காட்டுவதும்
மூடி வைப்பதும்
கண்கள் என்கிற போது
கண்களின் வழியே
இந்த இரவில் இந்த நகரம்
தூங்கிக்கொண்டிருக்கிறது.
-ரமேஷ் பிரேம்
இடைத்தூரம்
என்
தோட்டத்தில்
உட்காந்திருந்த
பெயரறியாப் பறவையை
உனக்காக
காகிதத்தில் பிடித்து வைக்க
முயன்றேன்
சொல்ல வந்ததற்கும்
சொல்லில் வந்ததற்கும்
நடுவில்
பறந்து போயிருந்தது
பறவை
-க.மோகனரங்கன்
*
எங்கோ மலைப்பிரதேசத்தில்
ஒரு தோட்டக் காரனிடம்
கெஞ்சி வாங்கி வந்த
திராட்சைக்கொடி
பூக்கவுமில்லை
காய்க்கவும் இல்லை
மாறாக
படரவிட்டிருக்கிறது
மலையடிவாரத்தை
என் பால்கனியில்
–தென்றல்
காரல் கமறும் வேளை
“அவனும் நண்பன்தான்
இந்த இடத்திற்கு
இப்போது வருவான்`என
எதிர்பார்க்கவில்லை
என்னை விரும்பியவளை
பிறகு விரும்பியவன்
திரையரங்க இடைவேளையில்
பக்கத்துப் பக்கத்து தடுப்பில்
சிறுநீர் கழிக்கும் வேளையில்
முகமன் கூறும் சங்கடம் போல்
வணக்கம் சொல்லிக் கொண்டோம்..
இந்த விஸ்கி
இப்போது
மேலும் கசக்க ஆரம்பித்துவிட்டது.”
-ரவி சுப்ரமணியன்
அம்மா நீங்கிய அறையில்
முதல் முறை
குழந்தை தன்முகம் ஸ்பரிசிக்கிறது
கண்ணாடியில்
மற்றொரு குழந்தையின் முகமென
பாப்பா எனக் குதூகலத்துடன்
முத்தமிடுகிறது
தன் கைவளைகள் ஆடியில்தெரிய
கொலுசுக் கால்களை
உயர்த்திப் பிடித்து சந்தோஷிக்கிறது
குழந்தை
எச்சில் வழிய கடவுளைத் தீண்டுகிறது
முதலும் முடிவுமாய்.
–-ஷங்கர்ராம சுப்ரமணியன்
துக்கம்
குப்பை வண்டி சேகரித்துச் செலவதற்காக
வீதியோரத்தில்
வைக்கப்பட்டுள்ளது
ஷூ ஜோடி.
கிழிந்து நைந்து
தோல் சிதைந்து
நெகிழ்ந்திருக்கிறது
கருணை பணிவு
பிரார்த்தனை மரணம்
காதல் நிச்சயமின்மை
அனைத்தையும் சுமந்திருக்கும்
முதியவனின் பழுது பட்ட கண்களுடன்
அவை இன்று
வீதியை வெறிக்கின்றன
-ஷங்கர்ராம சுப்ரமணியன்
பதட்டம்
தோற்றத்தில் இனம் பிரித்துக்
காட்டாத குழந்தையின்
நனைந்த உள்ளாடை விலக்க யத்தனிக்கையில்
கூசிச் சிரித்துக் கை பொத்தித்
திகிலூட்டும் குழந்தை
-சல்மா
புறக்கணிப்பு
கூடு தேடிச் செல்லும்
பறவைக் கூட்டம்
பொருட்படுத்துவதே இல்லை
எனது வீட்டுத் தோட்டத்தின்
ஒற்றை மரத்தினை
-சல்மா
அம்மாவின் இசை
இரவில் செவி மடுக்கிறேன்
தாழ்ந்த குரலில்
முணுமுணுக்கிற வரிகளை
அது ஒரு பாடலல்ல
விதிகளுக்கு உட்பட்ட
இசையுமல்ல
அது தன்
நெடிய மௌனத்தை
உடைக்கிற முயற்சி
சுமைகளை அகற்றுமொரு சாதுர்யம்
தற்காலிகமாய்
மூச்சு விடுவதற்கான
ஒரு போராட்டம்
-ரவி உதயன்
நளினக்கிளி
அந்த சிமெண்ட் லாரிக்கு வழி வேண்டும்
டிரைவரின் கீழ்ப் படியும் ’கிளி’
தன் ஒற்றைக் கையை வெளியே நீட்டுகிறது
விரைத்து நீண்ட இரு உலக்கையைப் போல் அல்ல
ஐயா…. அவசரம்…என்று கெஞ்சுகிற பாவனையில்ல்ல…
அது கையை நீட்டியதும்
அதன் மணிக்கட்டில் உதித்த
சாம்பல் நிறப்பறவை
அலையலையாய் நீந்துகிறது
நான் காண்கிறேன்
இம் மீப்பெருஞ் சாலையின் அந்தரத்தில்
ஒரு அற்புத நடன முத்திரை
இதன் நளினத்தின் முன்னே
உலகே நீ வழி விட்டு ஒதுங்கு
–இசை
நீ தேடும் ஆணும்
நான் தேடும் பெண்ணும்
நாம் அல்ல
அவர்கள் வேறெங்கோ இருக்கிறார்கள்
மலைஉச்சியில்
பாறைப்பிளவில்
பெருங்காற்றில்
ஆடியாடி நிற்கும்
சிறுமலர் போல
ஆனால்
நாம் இருவரும் சேர்ந்து
அவர்களைத் தேடிப் போகலாம்
யார்கண்டது ?
பயணம் நீள்கையில்
அந்த அரிய மலராய்
நீயும்
நானுமே கூட
ஆகி விடலாம்.
-போகன் சங்கர்
உங்கா மரத்தின் கனி
நூல் கிளைகளின்
நுனிகளில்
கொத்துக் கொத்தாய்
கனிந்திருந்த மார்புகளைப் பார்த்து
ஏங்கி அழுகிறது குழந்தை
ஐந்து ரூபாய்கொடுத்து
அதில் ஒன்றைக்
கொய்து தந்த உடன்
அம்மாவைக் கட்டிக் கொள்வது மாதிரி
அதனைக் கட்டிக்கொள்கிறது குழந்தை
இது அம்மாதான்….இது அவளேதான்
கண்ணாடிக் கரைசலாய்
வாயிலிருந்து ஒழுகும் அன்பில்
அபிஷேகம் செய்யப் படுகிறது
வாயு லிங்கம்
எச்சில் சாலைகளில்
காம்பைத் தேடும் நெடும் பயணம்
ஈறுகளால் நடந்தே இந்த உலகத்தை
சுற்று வந்தாயிற்று ஓரிருமுறை
தொப்புள் முடிச்சைக் கண்டதும் அத்தனை சிரிப்பு
இது அம்மாதான்….. இது அவளேதான்
’உங்கா’ என குழந்தை வீரிடக் கேட்டு
முகம் சுண்டி விட்ட பலூனுக்கு
மெது மெதுவாய்…மெது மெதுவாய்
முளைக்கத் துவங்குகிறது
ஒற்றைக் காம்பு
இப்போது …. நிஜமாகவே
இது அம்மாதான்….இது அவளேதான்
-ஜான் சுந்தர்
அரக்கனும் கதைகளும்
விடுகதைகளாலான அவளது சுருக்குப் பை
அவ்வளவு எளிதில் அவிழ்வது இல்லை
இரண்டு வெற்றிலையோ ஒற்றை மண் பாக்கோ
குழந்தையின் கள்ளமற்ற சிரிப்போ
ஏதேனும் வேண்டும் ஒரு புதிரவிழ
அவளது கதைகளில்
இளவரசியைக் கடத்திப் போகும் அரக்கனின்
உயிர் எதிலிருக்குமென்று
அவளுக்கு மட்டுமே தெரியும்
ஒருமுறை அது கிளியிலிருந்தது
ஒருமுறை வண்டிலிருந்தது
ஒருமுறை சமுத்திரத்தின் அடியாழத்தில்
கடல்குதிரைகளால் பாதுகாக்கப் படும்
எலுமிச்சம் பழத்திலிருந்தது
ஒருமுறை தேடிச்செல்பவனின் கனவிலிருந்தது
ஒருமுறை அது வரை அவிழ்க்கப்படாத
புதிரொன்றில் இருந்தது
ஒருமுறை என் மேசை மீது வைக்கப்பட்ட
தேநீர்க் கோப்பையில் இருந்தது
இளவரசியை மீட்கப் போகும்
குதிரை வீரர்களால்நிறைந்த எனது தெருவில்
நேற்றைய தினம் அரக்கன் வந்து போனான்
இந்த முறை அவன் கடத்திப் போனது
இளவரசியை அல்ல
இளவரசியைப் பற்றிய கதைகளை
விடியலில் எரிப்பார்களோ புதைப்பார்களோ
கதைகளைத் தொலைத்த பின்னிரவில்
அரக்கனைக் கொல்லும் சூட்சுமம் மறந்து
வெளி வாசலில் உறங்குகிறாள்
ஆயிரம் கதைகளாலான அந்தப் பாட்டி
– மனோ மோகன்
நிறை மஞ்சள்கோதுமை
வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கச் சொல்லி உபதேசிக்கிறீரா
உபதேசியாரே….
போத்தல் ஒயினை திராட்சைக் கொடிகளாக
வட்ட வட்ட சப்பாத்திகளை நிறை மஞ்சள்கோதுமை வயல்களாக
இவ் விகாரக் குழந்தையை நேற்று அணுக்கழிவாகக் கூடத்தான்
கண்டேன்
இனிப்புப் பாலைத்தான் இன்று தயிராய் அருந்தினீர்.
புளிப்பு மனிதரே
போபாலில் ஓராயிரம் மண்டை ஓட்டை அடுக்கி வைத்தீரே
விரைந்து ஓடும்.. தென் கோடிக் கடற்கரைக்கு சாக்குப் பையோடு
எங்கே? பின் நோக்கி உம் பிருஷ்டத்தைப் பாரும்
கண்ணாடி காட்டாமல்
-நரன்
கலாதிபதி
என் மிதவையை யாரோ தொந்தரவு செய்கிறார்கள்
மேல் நோக்கி எழும் அதன் ஆன்ம வேட்கை
அமிழ்த்தி ஆழத்தில் வைக்கவும் யத்தனம் நடக்கிறது
அலைகளின் இயல்புக்கு ஏற்ப
இறந்தகாலத்தில் தாழ்ந்து எதிர் காலத்தில் உயர்ந்து
நிகழ் காலத்தில் மிதப்பதைப் பகடி செய்வதாக
தங்கள் பத்தட்டத்தை மறைக்கப் பார்க்கிறார்கள்.
கிலியேற்படத்தான் செய்யும்
அடி வயிற்றில் கார்காலத்தை அடை காக்கும்
முதுகுப் புறத்தில் வெயில் சுமக்கும் அதன் மேல்
குறுக்குவாட்டாகக் கிடப்பேன் எப்போதும்
காலாதிபதியாக
– கதிர் பாரதி
விடுபடல்
இளமையில் வசப்படாத ஒன்றை
ஞாபகமூட்டிப் போகும் பெண்கள்
இனிப்புக்கடையின் புறவாசலில்
சூடாகும் பதர்த்தத்தின் நெய்வாசம்
கய்ய்த்து மலடு தட்டிப் போன
சாலைப் புளிய விருட்சம்
பல்வேறு வானங்களென
கண்ணில் ஊடாடும் புற யதார்த்தம்
தூரத்து மனையில் படுக்கையில்
வரவேற்க இயலாத கோபத்துடன்
மனைவி இருக்கக் கூடும்
போதையில் இலக்கியம் பேசும்
நடுத்தர வயது நண்பரின் அழுகை
ஒரு கண்ணீர்த் துளியில் ஆரம்பிக்க
இறுகப் பற்றியிருக்கும்
விரல் விடுவிக்க முடியாத சிக்கலில்
மார்க்கஸ் ஜென்னிக்கு எழுதிய
கவிதை கேட்டேன்
மீண்டும் ஏங்கல்ஸ் இறப்பதற்கு
காத்துக் கொண்டிருந்தேன்
ஒருவாறாய்
லெனினின் அழுகை நிற்கவும்
விரல்கள் விடுபடலாயிற்று.
-யவனிகா ஸ்ரீராம்
“தொட்டி மண்ணிற்குள்
இட்டவிதையின் மௌனம்
கூடவருகிறது என்னோடு.
சமையலறையின் வெம்மையில்
குளீயலறையின் அவசர நிர்வாணத்தில்
படுக்கையறையின் புழுக்க மோகத்தில்
அலைகிறது அதன் அமைதி
என்னுடன்
தன் வீர்யத்தால்
என் பசுமை தழைக்கட்டுமென்று”
-உமா மகேஸ்வரி
இமயவரம்பன்
பனையோலையில் நீ எழுதிய
காதல் கடிதம் தனது
மெய்யெழுத்துக்களின் மீது புள்ளிகொண்டு
அச்சேறுகிறது செவ்விய கவிதையாய்
யோனிப் பிளவை
சரிசமமாக அரிந்த ஆப்பிளின்
உட்பகுதிக்கு உவமை கூறியிருந்தாய்
சங்கம் மருவிய காதலனே
உன் காலத்தில்
காஷ்மீரத்து ஆப்பிள்
தமிழ் மண்ணில் கிடைத்ததா
-ரமேஷ் பிரேம்