கரிச்சான் அடங்கிக் கோழிகள் கூவுகின்றன
கனவிலிருந்து மீண்டெழுந்து மீந்ததை மெல்லும்
காரிருட்டு எருமைகள்
தண்ணீர் சேந்தி சாணம் தெளிக்கும் வாசல் ஓசைகள்
விடியலில் விடியலை விடியலால் இசைக்கும் பறவைகள்
போர் உதற களத்துக்கு வம்பளந்து செல்லும்
போர்வை உதறா அம்மையர்
வைக்கோல் பரப்பி
கோணிப்படுதா கட்டிய திண்ணைப் படுகை
பக்கத்தில் சயனித்திருந்த தாத்தா
என்னை விலக்கி
பீடி கொளுத்திக் கனைத்தவாறு கறவைக்குக் கிளம்புகிறார்
இடைவெளியில் உள்நுழைந்த பனிநங்கை
எனையணைக்க நடுக்குகிறது
சாவிகொடுத்து ஐம்பதாண்டுகளான சுவர்க்கடிகாரம்
நடையில் ஐந்துமணி அடிக்கிறது
இவளாலும் எழுந்திருக்க ஆகாது
ஏசியை அணைக்க வேண்டும்
சன்னலைத் திறக்க வேண்டும்.