1.
என் நாட்குறிப்பைக்
கொட்டி வைத்திருந்த
கடற்பேழையில்
உடைந்த இதயத்தை நுழைத்து
எதையெதையோ தேடுகிறது
என் நதி
ஆவேசத்தோடு
என் உயிரின் இரகசியக் குறியீட்டை கண்டுபிடித்து விடுமோ
என்ற பயத்தோடு
பனி சூழ்ந்த கரையில்
நான் காவலிருக்கிறேன்
சின்ன தைரியம்
கடற்பறவைகளின்
சிறகுகளில் மறைத்துவைத்த
என் சிம்பொனியின்
அழகிய வரிகள்
அதற்குக் கிடைக்கப்போவதில்லை
இறுதிவரை
அது போதும்
2.
கடலின் முதல் அலையை
நான் வரைவதாகத்தான்
இருந்தேன்
அதற்கான வண்ணங்களை
இரவுக்கு மகுடஞ்சூட்டிய
மின்மினிகளிடம்
இரவல் வாங்கி வந்தேன்
பளிச்சிடும் நீல வண்ணத்தை மட்டும்
உன் கனவிலிருந்து
களவாடி வந்திருந்தேன்
தூரங்களைக் கடந்து
கரையை அடைந்தால்
முழுக்கடலையும் அலையவிட்டு
கண்சிமிட்டுகிறாய்
நேற்றைப்போலவே