எங்கள்_குடும்பம்
ஆண்டுக்கொரு முறை வரவு செலவு போடும்போது
மூத்த பிள்ளைகளைப் பத்திரமாய்
பார்த்துக் கொள்வாய் அப்பா
ஆடைகளிலிருந்து அரைஞாண்கயிறுகள்வரை
அதில் தங்க இழைகள் மின்ன வேண்டும்
உண்ண மறுக்கும் … ம்ம்ம் ..
சோம்பல்படும் அவர்களுக்கு ஊட்டிவிட
கரண்டியொன்று கக்கத்திலேயே இருக்கும்
அண்ணன்களும் அக்காள்களும்
குழந்தைக் குட்டிகளோடு கும்மாளமிடும்போதும்
ஊன்றுகோலொன்றை வருடா வருடம்
புதுப்பித்துக் கொடுப்பார் அப்பா
அறைகளில் குளிரூட்டிகளில் அவர்கள் களிக்க
குட்டிச் சுவரோரம் ஒண்டிக் கொள்வோம் நாங்கள்
அண்ணன்களுக்கும் அக்காள்களுக்கும்
நாங்களென்னவோ இன்னும் போட்டியாகவேதான் இருக்கிறோம்
நாங்களும் பள்ளிக்குத்தான் போகிறோம்
பல்கலைக்கழகங்களுக்கு அல்ல
பணத்தை நாங்கள் அதிகமாக வைத்திருப்பதாய்
அண்ணன்களின் வலதும் இடதும்
ஓதிக் கொண்டே இருக்கின்றன
தனியார்களாய் தள்ளப்பட்டு தடுமாறிக் கொண்டிருந்தும்
அண்ணன்களும் அக்காள்களும்
போவதெங்கே என்றே புலம்புகிறார்களாம்
இளைத்த எங்களுக்குள்ளும்
ஊடுருவிப் போயிருக்கின்றன அட்டைகள்
அப்பாக்கள் அளிக்கும் ஒன்றிரண்டையும்
உறிஞ்சிக் குடித்துவிட்டு ஏப்பமிடுகின்றன
எங்கள் குடும்பம்
கொஞ்சம் வியப்பானதுதான்
அதனால்தான் என்னவோ
வியர்த்துக் கொண்டே இருக்கிறது எப்போதும்