குடும்பத்திலிருந்த
குஞ்சுப் புறா—
சின்னஞ் சிறிய ரத்தச் சிவப்பு வாய் அதற்கு—
என்னைப் பிடிக்காத என்னை நினைவுபடுத்தியது
அது தன் அம்மாவைச் சுற்றிச் சுற்றி நடந்தது
தன் அம்மாவின் குண்டு உடம்பின்மீது
ஒட்டிக்கொண்டு தூங்கியது
தன் அம்மாவின் வாயிலிருந்து ஹூம் ஹூம் சத்தத்துக்கு
தானும் பதில் சத்தம் தந்தது
அந்தக் குஞ்சின் மாற்ற முடியாத இயலாமை
எனக்குத் துக்கத்தைத் தந்தது
ஒரு தோட்டாவால் உடனடியாக
முடித்து வைக்க வேண்டிய அளவு துக்கம்
அந்தக் குஞ்சின் குழந்தைக்கான வெகுளித்தனம்
எனக்கு அச்சத்தைத் தந்தது
கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போதெல்லாம்
நான் மறுத்து வெளியே தள்ளும் வெகுளித்தனம்
ஏன் அம்மாக்கள் குழந்தைகளைப் பெறுகிறார்கள்
ஏன் புறாக்கள் குஞ்சுப் புறாக்களை ஈனுகின்றன
அந்தக் குஞ்சுப் புறாவின் உடலிலிருந்து
அதன் அம்மா உண்ணிகளை எடுத்து உண்டது
குஞ்சுப் புறாவும் தன் அம்மாவின் உடலைப்
பதிலுக்குக் கொத்தியது
என் அம்மாவும் நானும்
ஒருவரிடமிருந்து மற்றொருவர்
ரகசியங்களைக் கொத்திக் கொத்தி
நெருக்கமானதும் இப்படித்தான்.
புறாக் குடும்பத்தைத் துரத்திவிட்டபின்
சமையலறைக்குச் சென்றேன்
ஃப்ரிஜ்ஜின் கதவைத் திறக்கும்முன்
ஒரு கல்லறையில் முகம்புதைப்பதாக
அதன் கதவில் முகம் புதைத்தேன்
பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்தினேன்
என் நெஞ்சில் புறப்பட்டு
தொண்டைக்கு வந்து நிற்கப்போகும்
மலையை அதனால் ஒன்றும் செய்ய முடியாது
மலையின் உச்சி
என் தொண்டையைக் கிழிக்கும்போது
இந்நகரம் மொத்தமும் கிடுகிடுக்க
நான் அலறுவேன்