எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
எல்லாம் என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை.
- – நகுலன் ( எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை )
1980, மே மாதம், திருவனந்தபுரம், கவடியாரிலுள்ள அவரது வீட்டில் நகுலனைச் சந்தித்தேன். அது முதல் சந்திப்பு. அன்றிலிருந்து 2007 மார்ச் வரையான கால அளவில் வெவ்வேறு இடைவேளைகளில் ஏழு முறை அவரைச் சந்தித்தும் பார்த்துப் பேசியும் இருக்கிறேன். பின்னர் யோசிக்கும் போது மறந்து விடமுடியாதவையான உரையாடல் தெறிப்புகளோ உணர்வுகளோ நகைச்சுவையோ சம்பவங்களோ நினைவில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. எனவே எண்ணிக்கையும் துல்லியமாகக் கணக்கிலிருக் கிறது. இந்த ஏழு சந்திப்புகளில் ஆறின்போது அவருடன் உரையாடவும் பேசியதைக் கேட்கவும் முடிந்திருக்கிறது. ஏழாவது முறை பார்த்தபோது மரணம் தன்னை திக்கித் திக்கி அழைப்பதை விழிகூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்த நாள் அந்த விழிகள் மூடிக்கொண்டன.
நகுலனைச் சந்திக்கக் காரணமாக இருந்தவர் நண்பர் ப. கிருஷ்ணசாமி. திருவனந்தபுரத்திலுள்ள கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ஆய்வு மாணவராக அப்போது இருந்தார்.. அவருடன் சில நாட்களைச் செலவிடுவ தற்காகச் சென்றதுதான் எனது முதல் திருவனந்தபுரப் பயணம். உடன் தங்கியிருந்த நாட்களில் கிருஷ்ணசாமி என்னைச் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார். சில இடங்களுக்கு வழிசொல்லி அனுப்பினார். சில எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தினார். அவர்களில் பெரும்பான்மையினரும் மலையாளிகள். விமர்சகர் வி.ராஜகிருஷ்ணன், கவிஞர் ஏ.அய்யப்பன், இயக்குநர்கள் அரவிந்தன், கே.பி.குமாரன், மொழி பெயர்ப்பாளர் வி.கே. உண்ணிக் கிருஷ்ணன், பயண எழுத்தாளரான ‘சிந்தா’ ரவீந்திரன், பத்திரிகையாளர்கள் கே.என்.ஷாஜி, பிரியதாஸ் மங்கலத்து ஆகியவர்கள் இன்றும் ஞாபகத்தில் இருக்கிறார்கள். சிலர் இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள். பல்கலைக்கழகக் கல்லூரியை ஒட்டி அப்போது இருந்த அசோகா லாட்ஜ் கலைஞர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் தாவளமாக இருந்தது. குறிப்பிட்ட எல்லாரையும் அங்கேதான் சந்தித்தேன்.
எனது முதல் திருவனந்தபுர நாட்களில் கிருஷ்ணசாமி அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திய ஒரே தமிழ் எழுத்தாளர் நகுலன் மட்டுமே. அன்றாடமோ அல்லது வாரத்தில் அதிக நாட்களுமோ பார்த்து உரையாடி வந்ததும் நகுலனுடன்தான். நகுலன் மீதிருந்த அன்பால் தனது அவதாரப் பெயரை மாற்றி சகதேவன் என்ற கௌரவப் பெயரை வைத்துக் கொண்டிருந்தார். ப.சகதேவன் என்ற பெயரில்தான் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதி யிருக்கிறார்.
அந்த வார சனிக்கிழமை முற்பகலில் கவடியார் கால்ஃப் லிங்க்ஸ் சாலையில் உள்ள நகுலன் வீட்டுக்கு கிருஷ்ணசாமி அழைத்துச் சென்றார். என்னை அறிமுகப்படுத்தினார். ‘இவரும் நம்மை மாதிரியான ரோகிதான். இலக்கிய ரோகி. ஆனால் இப்போதுதான் ரோகம் தொடங்கியிருக்கிறது. கவிதைகள் எழுதுகிறார்’ என்ற அறிமுக வாசகங்களைக் கேட்டு நகுலன் தோள்குலுங்கச் சிரித்தார். நினைவுகள் மெல்ல மெல்ல மங்கிக் கொண்டிருந்த இறுதி நாட்கள் வரையும் அந்தச் சிரிப்பு மறையாமலிருந்தது நினைவுக்கு வருகிறது.
அன்றைய சந்திப்பில் நான் வேடிக்கை பார்ப்பவனாக மட்டுமே இருந்தேன். நகுலனுக்கும் சகதேவனுக்கும் நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் பல்கலைக் கழக மண்டத்தரங்கள் பற்றியவையும் சில நிகழ்ச்சித் துணுக்குகளும் இடையிடையே இலக்கிய விசாரங்களும் இருந்தன. இடையில் கிருஷ்ணசாமி உதிர்க்கும் பகடிகளுக்கு நகுலன் கண்களை இறுக்கி வாய்விட்டுச் சிரிக்கும் சிரிப்பும் இருந்தது. என் பக்கம் திரும்பிச் சிரிக்கும்போது வலிந்து புன்னகைப்பதைத் தவிர நகுலனுக்கு வேறு எதிர்வினை காட்ட என்னால் முடியவில்லை. அதைக் கவனித்தவர் கிருஷ்ணசாமியிடம் சொன்னார்.
‘’ ரோகம் நன்னாத்தான் பிடிகூடியிருக்கு. கவிதை எழுதினா சிரிக்கக் கூடாதில்லையா?’’.
பகலுணவு வேளை நெருங்கியதும் உரையாடல் முடிவுக்கு வந்தது. நகுலன் உரையாடலைத் தொடரவே விரும்பினார். பேசிக் கொண்டிருக்கலாம். சாப்பாட்டுக்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாம் என்றார். அவர் வீட்டில் உதவிக்கு இருந்த பெண்மணியிடம் சொல்ல அழைத்தார். அதற்குள் கிருஷ்ணசாமி இடைமறித்துச் சொன்னார். ‘’ உங்களைப்போல இலை தழையைச் சாப்பிட எங்களால் ஆகாது. நாங்கள் எம்.எல்.ஏ.ஹாஸ்டலுக்குப் போய்க் காரசாரமாக சோறு தின்னப் போகிறோம்’’. சிரித்துக் கொண்டே வழியனுப்ப எழுந்தார் நகுலன். படியிறங்கியதும் யாரிடம் என்றில்லாமல் ‘’ ‘’நாளைக்கு வர்றேளா?’’ என்று கேட்டார்.
தனக்குச் சில அலுவல்கள் இருப்பதால் வரமுடியாது என்றும் நான் வருவேன் என்றும் கிருஷ்ணசாமி உறுதியளித்தார். புன்னகையுடன் தலையசைத்த நகுலன் என்னைப் பார்த்து ‘’ உங்க கவிதையும் கொண்டாருங்கோ. புதுசா எழுதறவா என்ன எழுதறான்னு பாக்கலாமில்லியா?’’ என்றார். மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒப்புக் கொண்டேன்.
மறுநாள் காலையில் கிருஷ்ணசாமி புறப்படுவதற்கு முன்பே தயாரானேன். மறக்காமல் கவிதைகள் எழுதி வைத்திருக்கும் டயரியை எடுத்துக் கொண்டேன்.
‘’மத்தியானச் சாப்பாட்டை வெளியில் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். சாவியை இங்கே வைத்துவிட்டுப் போகிறேன். சீக்கிரம் திரும்பி வந்தால் எடுத்துத் திறந்து கொள்ளலாம். ‘’ என்றார் கிருஷ்ணசாமி.
நண்பகல் வரை நகுலன் வீட்டில் இருப்பது. பின்பு கோவளம் போவது என்று முந்தின நாளே திட்டமிட்டிருந்தேன். அதைச் சொன்னதும் கோவளம் செல்ல எங்கிருந்து பேருந்து பிடிப்பது, கவடியாரிலிருந்து எப்படி வருவது என்ற தகவல்களை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு படியேறினேன். பட்டம் லோயர் ரோடில் அவர் தங்கியிருந்த பழைய வீடு பிரதான சாலையின் மட்டத்துக்குக் கீழே இருந்தது.
முன் தினம் நண்பருடன் சென்ற வழிகள் கவனத்தில் பதிந்திருந்தன. ஆகவே சிரமம் இல்லாமல் நகுலன் வீட்டை அடைந்தேன். ‘’ பரவால்லியே, நெறய பேர் இங்க வந்து சேர்றதுக்குக் கஷ்டப்படுவா. பாஷை தெரியாம இந்த ஊர்ல இடத்தைக் கண்டுபிடிக்கறது கஷ்டம்’’ என்று பாராட்டாகச் சொன்னார்.
மெல்லிய குரலில் ‘’ எனக்கு பாஷை தெரியும்’’ என்றேன்.
நகுலன் கண்கள் விரியப் பார்த்து ‘’ அப்ப நீங்க தமிழில்லையா?’’ என்றார்.
‘’தமிழும்தான், மலையாளமும்தான்’’ என்றேன்.
‘’அப்ப கசேரயில உட்காருங்கோ’’ என்று நகுலன் சிரித்தார். தடித்த கண்ணாடிக்குப் பின்னால் உருண்ட விழிகளும் சிரித்தன. தானே ரசித்துச் சிரிக்கும் அளவுக்கு என்ன சொல்லி விட்டார் என்ற சந்தேக வியப்புடன் வராந்தாவிலிருந்தநாற்காலியில் உட்கார்ந்தேன். இன்னொரு நாற்காலியும் அதற்கு முன்னால் ஸ்டூலும் இருந்தன. அதன் மேல் தண்ணீர்ச் செம்பும் முறுக்கான் பொதியும் தாள்கள் செருகப்பட்ட டயரியும் இருந்தன. அவற்றைப் பார்த்தபடி அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். கவிதைகளைப் பார்ப்பதாகச் சொன்னாரே அதைப் பற்றிப் பேச்சே இல்லையே என்ற தவிப்புடன் இருந்தேன். படிப்பைப் பற்றிக் கேட்டார். பதில் சொன்னேன். ஊரைப்பற்றி வீட்டைப்பற்றி சொல்லச் சொன்னார். ஒப்பித்தேன். எப்போதிருந்து கவிதை எழுதத் தொடங்கினேன் என்று விசாரித்தார். சொன்னேன்.
‘’ சின்ன வயசுதான். அந்த வயசில கவிதைன்னா என்னான்னு கூட புரிஞ்சிருக்காது இல்லையா? ஆனா புரிஞ்சுண்டா கவிதை எழுத முடியாது. கவிதை எழுதறதே புரிஞ்சுக்கறதுக்காகத் தானே, ஆனா அப்பவும் புரியாது. நான் நாப்பது வயசிலதான் கவிதை எழுதினேன். புரிஞ்சுண்டதா நெனச்சுத்த் தான் எழுத ஆரம்பிச்சேன். படிக்கிறவங்க புரியல்லேன்னு சொல்றா. வல்லிக் கண்ணனெல்லாம் நான் புரிஞ்சுக்க முடியாத மாதிரி எழுதறேன்னு சொல்றார். நீங்க படிச்சிருக்கீங்களா, உங்களுக்கு புரிஞ்சிருக்கா?’’
அன்றைய உரையாடலில் நகுலன் கோர்வையாகவும் நீளமாகச் பேசியது அப்போது மட்டுமே.
‘புதுக் குரல்கள்’ தொகுப்பில் இடம் பெற்றிருந்த அவரது கவிதைகளில் ‘கொல்லிப்பாவை’ என்னைக் கவர்ந்திருந்தது. கவிதை முழுவதும் புரிந்திருக்கவில்லை. எனினும் ‘திரௌபதி அவள் வந்து போகும் அர்ஜுனன் நான்’ என்ற வரிகள் இனம்புரியாத ஈர்ப்பைக் கொண்டிருந்தன. அதைச் சொன்னதும் உற்சாகமாகி விட்டார்.
‘’கவிதை முழுசாப் புரியணும்னு இல்லே. புரிஞ்சவரைக்கும் கவிதைதான்’’ என்றார். சற்று இடைவெளி விட்டு ‘’ உங்க கவிதை கொண்டு வந்தேளா?’’ என்று கேட்டார்.
காத்திருந்த தருணம். டயரியை எடுத்து நீட்டினேன். கவிதைகள் இருந்த பக்கங்களைக் கண்கள் இடுங்க வாசிப்பதைக் குறுகுறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். டயரித் தாள்களில் எழுதியிருந்த கவிதைகளில் சில இதழ்களில் வெளியானவை. அவற்றின் அடியில் சிவப்பு மையால் வெளிவந்த இதழ்களின் பெயரையும் எழுதி வைத்திருந்தேன். ‘’ இது என்ன, ‘கஙய’ ன்னு. அந்தப் பெயரிலேயும் பத்திரிகை வர்றதா? ‘’ என்று கேட்டு விட்டு அந்தக் கவிதையை வாசித்தார். பிறகு டயரியைத் திருப்பிக் கொடுத்தார். ஏமாற்றமும் பதற்றமுமாக இருந்தது. இன்னும் சில கவிதைகள் இருக்கின்றன. அதை மனிதர் வாசித்துப் பார்க்காமல் திருப்பிக் கொடுத்து விட்டாரே என்று குமைச்சலாக இருந்தது. அதைச் சொல்லவும் தயக்கமாக இருந்தது. அவரே தொடர்ந்தார்.
‘’ கவிதை எழுத வர்றது. எழுதுங்கோ. கண்ணாடி முன் நின்றால் கழுத்துக்கு மேலே வெறும் பெயர்’ . அந்த வரி பொயட்டிக். ஆனா அது என்ன தலைப்பு நிகழ்னு.’’ என்றார்.
‘’நிகழ் காலத்தைத்தான் அப்படிச் சுருக்கியிருக்கேன்’’ என்றதும் சிரித்துக் கொண்டே ‘’ சரி, நிகழ் காலத்த நிகழ்னு சுருக்கலாம். எதிர் காலத்தை எதிர்னு சுருக்கலாமா? சுருக்கினாலும் மீனிங்க் இருக்கும். ஆனா கடந்த காலம், இறந்த காலம் எல்லாத்தையும் சுருக்கி என்னான்னு எழுதுவீங்க?’’ என்று கேட்டார்,
அன்று நகுலனிடம் விடைபெற்றுக் கொண்டு கோவளம் போனேன். கடலையும் அலைகளையும் கண்டு கண்குளிர்ந்துகொண்டிருந்தபோதும் அவர் கேட்ட கேள்வியும் உள்ளே அலைமோதிக் கொண்டிருந்தது. இப்போதும் கோவளத்துக்குப் போகும்போதெல்லாம் அவருடைய கவிதை நினைவில் புரளும். அந்தக் கவிதையை வாசிக்கும்போது கோவளத்தின் கடல் அலைவீசி முன்னே வரும். அந்தக் கவிதை இது:
அலைகளைச் சொல்லி
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.
2
இரண்டாவது முறையாகத் திருவனந்தபுரம் சென்றதும் இரண்டாவது முறையாக நகுலனைச் சந்தித்ததும் 1985 இல். அன்று ஜவுளி ஆலையொன்றின் விற்பனைப் பிரதிநிதி வேலையில் இருந்தேன். தமிழ்நாடு. கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களில் விற்பனைப் பணி என்னைச் சேர்ந்தது. அது கொடுத்த ஊர்சுற்றும் வாய்ப்பில் வெவ்வேறு ஊர்களில் எழுத்தாளர்கள் பலரையும் நேரில் சந்திக்க முடிந்தது. அதை விடவும் முக்கியம் என்னுடைய முதலாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்து கவனம் பெற்றிருந்தது. அது சற்றுத் தன்னம்பிக்கையைக் கூட்டியிருந்தது. சுபாவத்தில் இருந்த கூச்சத்தை வேலை ஓரளவுக்குக் குறைத்திருந்தது. எனவே ஆட்களைச் சந்திப்பது உற்சாகமூட்டும் நடவடிக்கையாக ஆகியிருந்தது.
திருவனந்தபுரத்துக்கு வந்து இறங்கிய அன்று மாலையே நகுலனைச் சந்திக்கப் போனேன். மறக்காமல் கவிதைத் தொகுப்பின் பிரதியையும் கைவசம் வைத்திருந்தேன். எனக்குக் கவிதை வந்திருக்கிறது என்று காட்டி விட நிரூபணம்.
கவடியாரிலுள்ள நகுலன் வீடு ஆட்களால் நிரம்பிய மாலைப் பொழுதுகளைக் கொண்டிருந்த காலம் அது. மாணவர்கள், மலையாள, தமிழ் இலக்கியவாதிகள் பலரும் அன்றாட வருகையாளர்களாக இருந்தார்கள். நெருக்கமான சிலருக்கு மதுச் சாலையாகவும் இருந்தது. நான் போன அந்த மாலை அபூர்வமாக ஆளற்ற பொழுதாக இருந்தது. வாசலில் நின்று அழைத்ததும் வீட்டின் இருளிலிருந்து நகுலன் வந்தார். உடனடியாக அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய சந்திப்பை நினைவூட்டினேன். கிருஷ்ணசாமியுடன் வந்தததைச் சொன்னேன். அவ்வளவு துப்புரவாக நினைவுகூர முடியவில்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது. எனினும் உள்ளே அழைத்தார். அதே பழைய வராந்தாவில் அமர்ந்தோம்.
‘’ பெயர் என்ன சொன்னேள், கிருஷ்ணசாமியா?’’ என்று கேட்டார். ‘’இல்லை’’ என்று என் பெயரைச் சொன்னேன். உரையாடல் தொடங்கும்வரைதான் அந்த நினைவுக் குழப்பம் அவரிடம் தென்பட்டது. உரையாடல் முன்னே செல்லச் செல்ல ஞாபகங்கள் துலங்கியிருக்க வேண்டும். உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். அவருடன் நிகழ்ந்தவற்றில் அன்றை உரையாடல்தான் நீண்டது.
எங்களுக்கு முன்னாலிருந்த ஸ்டூலில் வைத்திருந்த ஆங்கிலத் தட்டச்சுப் பிரதியிலிருந்துதான் உரையாடல் தொடங்கியது என்பதை இன்றும் நினைவு கூர முடிகிறது.
நகுலனின் நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான நீதிமன்ற நடுவர் ( ஓய்வு ) எம்.எஸ். ராமசாமி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ்க் கவிதைகளின் தட்டெழுத்துப் பிரதி அது. 80 களில் எழுதிக் கொண்டிருந்த பெரும்பாலான வர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த் திருந்தார். அவை அன்று சில ஆங்கிலச் சிற்றிதழ்களிலும் வெளியாயின. அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிடவும் அவர் முயன்று வந்தார். பாரதி முதல் எம்.வி.சத்யன் வரையிலான முப்பத்து ஆறு கவிஞர்களின் கவிதைகள். அந்தப் பிரதியை மேற்பார்வையிட்டு செம்மைப் படுத்தும் பொறுப்பை நண்பர் நகுலனிடம் ஒப்படைத்திருந்தார். அன்று நான் பார்த்தது அந்தப் பிரதியைத் தான்.
( அந்த ஆங்கில மொழியாக்கம் நான் பார்த்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘மாடர்ன் தமிழ் பொயட்ரி’ என்ற தலைப்பில் 1988 இல் வெளியானது. கல்கத்தா, ரைட்டர்ஸ் ஒர்க் ஷாப் வெளியிட்டது. புத்தகத்தில் ஒரு கவிஞரின் புனைபெயர் அச்சுப் பிழையால் விநோதமாக மாறியிருந்தது. பாதசாரி தாதசாரியாக மாறியிருக்கிறார். இரண்டாம் தொகுதி 1995 இல் வெளிவந்தது ).
‘’இதிலே உங்க கவிதை இருக்கா?’’ என்று அந்தத் தட்டச்சுப் பிரதியை எடுத்துக் கொடுத்தார் நகுலன். மெல்லிய தாளில் அச்சிடப்பட்டிருந்த கவிதைகளுக்கிடையில் என் கவிதையைக் கண்டு பிடித்து அந்தப் பக்கங்களை அடையாளம் வைத்துத் திரும்பக் கொடுத்தேன். வாங்கி வாசித்தார், அதில் என்னுடைய ஒன்பது கவிதைகள் இருந்தன. ஒவ்வொன்றையும் வாசித்தார். ‘ மலை நகரத்தில் நாள்’ என்ற கவிதையை ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்த பின்பு ‘ ட்ரான்ஸ்லேஷன் சரியா வரல்லயே?’ என்று முகத்தைச் சுருக்கினார்.
‘’ இல்லையே சார், சரியாகத்தானே இருக்கு. காவ்ய பாரதியிலும் அப்படித் தான் வந்திருக்கு’’ என்று தயக்கத்துடன் மறுத்தேன்.
‘’இங்க்லீஷ்ல சரியா இல்லாத மாதிரித் தோணுது. கவிதை உங்களுக்கு ஞாபகம் இருக்கா. இருந்தா சொல்லுங்கோ?’’ என்றார்.
அதுதான் வாய்ப்பு என்று புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன். வியப்பில் கண்கள் மலர வாங்கிக் கடைசிப் பக்கம்வரை புரட்டினார். பிறகு குறிப்பிட்ட கவிதையைத் தேடிப் பிடித்தார். வரிகளை வாசித்தார். மறுபடியும் ஆங்கில வரிகளை வாசித்தார். ‘’ தமிழ்ல சரியா இருக்கு. ஆனா இங்க்லீஷ்ல அன் சவுண்டிங்கா இருக்கு. தமிழ்ல படீங்கோ’’ என்றார். படித்தேன்.
நான் போகுமிடங்களில்
மலைகள் காத்திருக்கின்றன – அல்லது
மலைகள் இருக்கும் இடங்களுக்கே
நான் போகிறேன்
நகுலன் நிறுத்தச் சொன்னார். ‘’ தமிழ்ல சரி. ட்ரான்ஸ்லேஷன்லயும் அப்படியே வேணும்னு இல்ல. மலைகள் காத்திருக்கும் இடங்களுக்கே நான் போகிறேன்னே இருந்தா இன்னும் பொயட்டிக்காக இருக்கும்’’.
பதில் சொல்லத் தெரியாமல் உட்கார்ந்திருந்தேன். ஆனால் மனதுக்குள் கவிதை ஒரு பிரக்ஞைபூர்வமான செயல் என்ற எண்ணம் ஆழப்பதிந்தது. கவிதையாக்கத்தின் பாடங்களில் ஒன்றைக் கற்றுக் கொண்டேன்.
கவிதைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்த நகுலன் ‘’இது நல்ல கவிதை’’ என்று விரலை அடையாளம் வைத்துப் புத்தகத்தை என் பக்கம் காட்டினார். எந்தக் கவிதை என்று தலையை நீட்டிப் பார்த்தேன். ‘சாகத் தவறிய மறுநாள்’ என்ற கவிதை. உள்ளே தொம்மென்று ஒலிப்பதை உணர்ந்தேன். ‘’ எதனாலே இந்தக் கவிதை எழுதினீங்க?’’ என்று கேட்டார். எதனால்? ‘’ எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை எழுதணும்னு தோணிச்சு. எழுதினேன். வேறு சொல்லத் தெரியவில்லை’’ என்று பதில் சொன்னேன்.
மறுபடியும் அதை வாசித்தார். சற்று நிறுத்திவிட்டு ஒரு விதூஷகச் சிரிப்புடன் ‘’ நான் கூட சூயிசைட் அட்டெம்ப்ட் பண்ணியிருக்கேன்’’ என்றார்.
நான் விழிப்பதைப் பொருட்படுத்தாமல் ‘’ இங்க கவடியார் ஜங்ஷன் பஸ் ஸ்டாப் ….நீங்க பஸ்ல தானே வந்தேள். பஸ் ஸ்டாப்ல சிமெண்ட் பென்ச் ஒண்ணு போட்டிருப்பா. அதில உட்கார்ந்திருந்தேன். நல்ல டிராஃபிக். எனக்கு எழுந்து போய் டிரான்ஸ்போர்ட் பஸ் முன்னால விழுந்துடணும்னு தோணித்து. எல்லாருக்கும் இந்த மாதிரி தோணும். விழுந்துட்டா போலிஸ் வரும். எஃப் ஐ ஆர் எழுதுவாங்கன்னு நெனச்சேன். நெனச்சுட்டிருக்கிறப்பவே பஸ் போயிடுச்சு’’ என்று சொல்லி முடித்தார். அப்போதுதான் அந்தக் காட்சியிலிருந்து மீண்டவர்போல தலையை உலுக்கிக் கொண்டார்.
அந்த இடத்திலிருந்து ஏனோ சிறிது நேரம் விலகி நிற்கத் தோன்றியது எனக்கு. வெளியில் சென்று வருவதாக நகுலனிடம் சொன்னேன். ‘’ சிகரெட் பிடிக்கணுமானா இங்கேயே பிடிக்கலாம். இல்ல டீ எதாவது வேணும்னாலும் போடச் சொல்லலாம். கட்டன் தான். நீங்க கட்டன் குடிப்பீங்க இல்லையா? அதுக்காக வெளியே போகணும்னு இல்ல’’ என்றவரிடம் ஏதோ சமாதானம் சொல்லிப் படியிறங்கினேன். சற்று நடந்து கவடியார் நுழைவு வாயிலை யொட்டி இருந்த தட்டு கடையில் டீ அருந்தினேன். புகைத்தேன். வெளியில் இறங்கி நடந்ததில் அகம் கொஞ்சம் தணிந்ததுபோல இருந்தது.
திரும்பப் படியேறிபோது உள்ளிருந்து நகுலன் குரல் வந்தது. ‘’அப்படியே போயிட்டீங்கன்னு நெனச்சுட்டேன். உட்காருங்க”’.
மறுபடியும் வராந்தாவில் அமர்ந்தேன். ஸ்டூலின் மீது இப்போது எவர் சில்வர் தம்ளர் ஒன்று உட்கார்ந்திருந்தது. நகுலனும் உள்ளேயிருந்து வந்து அமர்ந்தார். மீண்டும் கவிதைத் தொகுப்பை எடுத்து விரித்தார். ‘’கவிதைகள் நல்லா இருக்கு. ஆனா அதில ஸ்ட்ரக்சரிங் இல்லை. வரியை நீளமா நீட்டாம இருந்தா கவிதைக்கு எஃபெக்ட் கிடைக்கும்.’’ என்று அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை. அவரே தன்னுடைய கவிதையை எடுத்துக்காட்டி விளக்கினார்.
‘’ எனக்கு யாரும் இல்லை
நான்
கூட
– இதை இரண்டு வரியாகவும் எழுதலாம். நான் கூட ங்கறதை ரெண்டு வரியா எழுதினதுல கவிதைக்கு இன்னொரு டைமன்ஷன் வந்துடுது. ஒவ்வொரு வரிக்கும் அர்த்தமிருக்கிற மாதிரி எழுதறதுதான் ஸ்டரக்சரிங்.’’
சொல்லி விட்டுப் புரிந்ததா என்று வாத்தியார் பார்வை பார்த்தார். உண்மையில் அப்போது அவர் சொன்னது புரியவில்லை. பின்பு தொடர்ந்து கவிதைகள் எழுதிய தருணங்களில் அந்தப் பாடம் உறுதுணையாக இருந்தது.
பாடம் நடத்திய அலுப்பைத் தீர்க்கப் போவதுபோல எழுந்து ஸ்டூல் மேலிருந்த தம்ளரை எடுத்துக்கொண்டு உள்ளே போனார். சில வினாடிகளுக்குப் பிறகு அதனுடனேயே வந்து உட்கார்ந்து செம்பிலிருந்த நீரை அதில் விட்டுக் கலந்தார். என்னை உற்றுப் பார்த்தபடியே சின்ன மிடறாக விழுங்கினார்.
‘’ மது நமக்கு மது நமக்குன்னு பாரதி சொல்லியிருக்கான். நீங்க வேண்டாம்னு சொல்றேள். பாரதின்னதும் ஞாபகம் வர்றது. சங்கீதம் பத்தி. மீட்சியில எம்.டி.ஆர். பத்தி நீங்க எழுதின கட்டுரையை இங்கே என்னோட சிநேகிதர் ஒருத்தர்கிட்ட குடுத்தேன். நல்ல அபிப்பிராயம் சொன்னார். தினமும் இங்க வருவார். கேரள கௌமுதிலே வேலை பார்க்கிறார். வந்தா பரிச்சயப் படுத்தறேன். அவரைப் பார்த்தா சந்தோஷப்படுவீங்க’’ என்றார். அவர் சொன்ன சிநேகிதர் அன்று வரவில்லை. ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சிநேகிதரைச் சந்தித்ததும் அவர் சொன்ன முதல் வார்த்தை ‘’நகுலன் சார் உங்களைப் பர்றிச் சொல்லியிருக்கிறார்’’ என்பதுதான்.
இரண்டாவது மிடறுக்குப் பிறகு எங்கள் உரையாடல் திசை திரும்பியது. இலக்கியம் தொடர்பான விஷயங்களை விட்டுவிட்டு லௌகீகமான செய்திகளைப் பேச ஆரம்பித்தார். வேலை பிடித்திருக்கிறதா? நல்ல சம்பளம் கிடைக்கிறதா? என்ன வாசிக்கிறேன்? என்று விசாரித்துக் கொண்டிருந்தார். சட்டென்று ‘’ எழுத்தாளனா இருக்கணும்னு ஆசைப்பட்டா கல்யாணம் பண்ணிக்கப் படாது’’ என்றார். கேட்டதும் அதிர்ச்சியாகவும் சிரிப்பாகவும் இருந்தது. ஆனால் சில நிமிட இடைவேளைக்குப் பிறகு ‘உண்மைதான்’ என்று மனம் ஒப்புக் கொண்டது.
‘’சார், நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பயலாஜிகலான தேவைகள் எழுதுகிறவனுக்கும் இருக்குமே, அதற்குக் கல்யாணம் அவசியமில்லையா?’’ என்று கேட்டேன்.
நகுலன் தன்னுடைய பதிலால் இரண்டாம் முறையாக அன்று என்னை அதிர வைத்தார். ‘’ அதுக்கு சில்லறை விபச்சாரம் செஞ்சுண்டாப் போச்சு’’ என்று சொல்லி விட்டு அதிர்ந்து சிரித்தார். எனக்கும் சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது. இருவரும் எதற்காக அப்படி கும்மாளம் போடுகிறோம் என்று அவருடைய உதவியாளர் பெண்மணி பொருத்து ( சரியான பெயர் – கோமதியம்மா ) உள்ளே இருந்து வந்து பார்க்கும்வரை சிரிப்பு நீடித்தது. மிக அபூர்வமான சந்தர்ப்பங்களில் நகுலனின் அந்த உபதேசத்தைக் கடைப் பிடித்திருக்கலாமோ என்று தோன்றியதும் உண்டு.
3
சன் தொலைக்காட்சி 1998 இல் தென்னிந்திய மொழிகளில் அலைவரிசைகளைத் தொடங்கியது. மலையாளத் தொலைக் காட்சியின் செய்திப் பிரிவுக்கு நான் தலைமை ஆசிரியனாகப் பணியமர்த்தப்பட்டேன். திருவனந்தபுரத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டது. தொலைக்காட்சியின் ஆரம்பக் கட்டப் பணிகளில் எனக்கும் கணிசமான பங்கு இருந்தது. அதையொட்டிப் பலமுறை திருவனந்தபுரத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறை செல்லும் போதும் நகுலனையும் ஆ.மாதவனையும் நீல பத்மநாபனையும் சந்திக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் நடைமுறையில் அது நிறைவேறவே இல்லை. ஒரு ஜூன் மாதத் தங்கலில் அலுவலகத் தொந்தரவு இல்லாமல் கிடைத்த மாலையில் நகுலனைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போனேன். அது மூன்றாவது சந்திப்பு.
அந்தச் சந்திப்பு முந்தையவைபோல அமையவில்லை. நினைவிழப்பு அவரைப் பீடிக்கத் தொடங்கியிருந்த நாட்கள் அவை. திரும்பத் திரும்ப நினைவூட்டியும் அவருக்கு என்னை அடையாளம் காண முடியவில்லை. வருத்தமாக இருந்தது. ஆனால் எழுதுகிறவன் என்பதையும் அவரைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன் என்பதையும் தெளிவாக உணர்ந்திருந்தார். மலையாளத் தொலைக் காட்சியில் பணியாற்றுகிறேன் என்பதை வைத்து மலையாள எழுத்தாளன் என்றே புரிந்துகொண்டார். அந்த நினைவிலேயே உரையாடவும் செய்தார்.
‘’உங்களுக்குக் குஞ்ஞுண்ணியைத் தெரியுமா? அவர் நல்ல கவிஞர், முக்கிய மான கவிஞர் இல்லையா?’’ என்று உரையாடலின் இடையே கேட்டார். அப்பட்டமான பதிலைச் சொல்ல எனக்கு நா எழவில்லை. மழுங்கலான பதிலைச் சொன்னேன்.
‘’ கவிஞர்தான். ஆனால் எனக்கு முக்கியமான கவிஞராகப் படவில்லை’’ என்றேன்.
அந்த பதில் அவருக்குப் பிடிக்கவில்லை என்பது முகத்தில் தெரிந்தது. ‘குஞ்ஞுண்ணி கவிதையைக் கூர்மையாகச் சொல்கிறார். குறைந்த வார்த்தைகளில் மனதில் பதிவதுபோலச் சொல்ல அவரால் முடிகிறது. பெரிய விஷயங்களைப் பற்றி அநாயாசமாக எழுதிப் பெரிய காரியங்களைக் காட்டுகிறார். அவரை எப்படி முக்கியமான கவிஞரல்ல என்று சொல்லப் போயிற்று?’ என்று குறைப்பட்டுக் கொண்டார்.
‘அதெல்லாம் சரிதான். ஆனால் அவருடைய பெரும்பான்மையான கவிதைகள் வார்த்தை விளையாட்டுக்கள். சிலதுதான் கவிதையாகத் தேறக்கூடியவை. மற்றவை எல்லாம் துணுக்குகள், சிலேடைகள், சமத்காரமான வாசகங்கள். தமிழில் உங்கள் காலத்தில் சண்முக சுப்பையா எழுதியவற்றையும் கசடதபற இதழில் நீலமணி எழுதியவற்றையும் யாரும் இப்போது கவிதைகளாக மதிப்பது இல்லை. குஞ்ஞுண்ணி மாஷின் கவிதைகளும் அதுமாதிரியானவைதான்’. என்ற என் தரப்பை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
அன்றைய உரையாடல் மிகக் குறுகிய நேரத்திலேயே முடிந்து போனதற்கு இந்த விவாதம் மட்டும் காரணமில்லை. இப்போது யோசித்தால் அப்படி நடந்து கொண்டது தவறு என்று குற்ற உணர்வை ஏற்படுத்தும் என்னுடைய அன்றைய மனநிலைதான் காரணமாக உறுத்துகிறது. உரையாடலின் போது சொல்லும் ஒவ்வொன்றுக்கும் விளக்கமோ குறிப்போ கொடுக்க வேண்டியிருந்தது. அவரே குறிப்பிட்டுச் சொன்ன எழுத்தாளர்களைப் பற்றியும் படைப்புகள் பற்றியும் அவருடைய கவிதைகளைப் பற்றியுமே நினைவூட்ட வேண்டியிருந்தது. அது அலுப்பைக் கொடுத்தது. சீக்கிரமாக விடை பெற்றுக் கொண்டேன். திரும்பிச் செல்லும் வழியில் நினைவுப் பாதைகள் தூர்ந்து கொண்டிருக்கும் ஒருவரிடம் சலிப்புக் கொண்டது பற்றி அங்கலாயத்துக் கொண்டே வந்தேன். அவருடனான கடைசி சந்திப்பு அதுதான். அதன் பின்னர் இரு முறை நகுலனைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். இரண்டும் பொது நிகழ்ச்சிகள். அந்தக் காலங்களில் நான் திருவனந்தபுரத்தில் குடியேறி யிருந்தேன்.
புதிய நூற்றாண்டை வரவேற்பதற்காகக் கேரள அரசு 2000 ஆம் ஆண்டு டிசம்பரில் மானவீயம் என்ற பண்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக தென்னிந்தியக் கவிஞர்களின் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியும் இருந்தது. மலையாளத்தின் முக்கியக் கவிஞர்களான அய்யப்ப பணிக்கர், சச்சிதானந்தன், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், ஓ.என்.வி.குரூப் ஆகியோரும் இளங் கவிஞர்களும் பங்கேற்றனர். தமிழிலிருந்து ஞானக்கூத்தனும் நான் உட்படச் சிலரும் கலந்து கொண்டோம். நகுலனும் அழைக்கப்பட்டிருந்தார். சிறகு முறிந்த கருடனைப்போல மேடையில் ஒடுங்கி அமர்ந்திருந்த காட்சி இன்றும் மனதில் மங்காமல் இருக்கிறது. கவிதை வாசிக்க அழைத்தபோது மறுத்தார். கவிதை உரக்க வாசிப்பதற்கானதல்ல; மனதால் வாசிப்பதகானது என்று ஒலிபெருக்கியில் அறிவித்து விட்டு உட்கார்ந்து விட்டார். நெருங்கிய நண்பரான அய்யப்பப் பணிக்கர் வற்புறுத்தியும் இசையவில்லை.
நிகழ்ச்சியின் இடைவேளையில் நகுலனை நெருங்கினேன். மறு அறிமுகம் செய்து கொண்டேன். ஆனால் அது பலனளிக்கவில்லை. முன்பு சந்தித்ததை நினைவுபடுத்தியும் பயனில்லாமல் போனது. ‘’ வயசாயிடுச்சில்லையா, ஞாபகமிருக்கறதில்ல. நிறைய பேர் வர்றா, போறா. யாரையும் ஞாபகம் வெச்சுக்க முடியல. அடிக்கடி வர்ற விக்ரமாதிதியன், கோணங்கி மாதிரி சில பேர்தான் ஞாபகத்துக்கு வர்றா’’ என்றார்.
இதே நிலைமையில்தான் அவரைக் கடைசியாகவும் சந்திக்க நேர்ந்தது. அன்று அவர் உற்சாகமாக இருந்தார் என்பதுதான் நினைவில் பதிந்திருக்கிறது. அது அவருடைய எண்பதாம் பிறந்த நாள் விழா திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் அய்யப்ப பணிக்கர் தலைமையில் நடைபெற்றது. அவருடைய மொத்தக் கவிதைகள் தொகுப்பும் ( காவ்யா வெளியீடு ) அன்று வெளியிடப் பட்டது. தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த அவருடைய இரண்டு கவிதைகளை – கொல்லிப் பாவை, மழை மரம் காற்றின் ஒரு பகுதி – வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வாசித்து முடித்ததும் ‘’ நன்னா வாசிச்சீங்க. மலையாள வாடையே இல்ல’’ என்று பாராட்டினார்.
‘’ சார், நான் தமிழ்க் கவிஞன். உங்களுக்கு என்னைத் தெரியும்’’ என்றேன்.
‘’என்ன பெயரில் எழுதுறீங்க?’’ என்று கேட்டார்.
‘’சுகுமாரன் என்ற பெயரில்தான். சொந்தப் பெயரில்தான்’’ என்றேன்.
‘’அது உங்க சொந்தப் பேர்னு யாரு சொன்னா?’’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். என்னிடம் அதற்குப் பதில் இல்லை. மாறாக அவருடைய கவிதைதான் அந்த நொடியில் அகத்தில் ஓடியது.
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை.
4
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நகுலனைச் சந்திக்கவில்லை. அவரும் வெளி உலகிலிருந்து விலகிச் சென்றிருந்தார். எழுத்துப் பணியும் அநேகமாக நின்று விட்டிருந்தது. சந்திக்க வரும் நண்பர்களின் எண்ணிக்கையும் சொற்பமாகி யிருந்தது. மிகச் சிலரே அவரைச் சந்தித்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் பி.ரவிகுமார். நகுலன் எனக்கு அறிமுகப்படுத்துவதாகச் சொன்னது அவரைத் தான். முதல் சந்திப்பில் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முயன்றதும் ரவிகுமார் ‘’ உங்களைப் பற்றி நகுலன் சொல்லி எனக்குத் தெரியும். அவர் தான் எம்.டி.ராமநாதன் பற்றிய உங்கள் கட்டுரையைப் படிக்கக் கொடுத்தவர்’’ என்றார்.
எங்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலில் அவ்வப்போது நகுலன் வருவார். அவ்வாறான ஒன்றில் ரவிகுமார் சொன்ன நிகழ்ச்சி, நான் அறிந்திராத நகுலனைக் காண்பித்தது. ரவிகுமார் மலையாள நாளிதழான கேரள கௌமுதியில் பணியாற்றி வந்தார். பணி நேரம் முடிந்ததும் கவடியார் வரை போய் நகுலனைப் பார்ப்பது வழக்கம். சில நாட்களில் அது முடியாமல் போவதும் உண்டு. அந்த நாட்களில் நகுலனிடமிருந்து அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு வரும்.
‘’ரவிகுமார் இரண்டு நாளாக வரவில்லையே?’’ என்ற கேள்விக்கு ரவிகுமாரின் பதில் ‘’ வேலை அதிகம் முடியவில்லை’’ என்பதாக இருக்கும். ‘’ அப்படி யென்றால் நாளைக்கு வருகிறீர்களா” என்று கேட்பார். ‘’இல்லை, இன்றே வருகிறேன். வீட்டில்தானே இருக்கிறீர்கள்?’’ என்று பதில் சொல்லப்படும். ரவிகுமார் இதைச் சொன்னபோது நகுலனின் ‘அங்கு’ கவிதை நினைவுக்கு வந்தது.
நண்பர் பாண்டியராஜூ நகுலனைப் பற்றிய ஆவணப் படம் தயாரிக்கும் திட்டத்துடன் 2003 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்துக்கு வந்தார். நகுலனுடன் உரையாடுபவராக விக்ரமாதித்தியனும் வந்திருந்தார். அவர்கள் தங்குவதற்கும் படப்பிடிப்பு நடத்துவதற்கும் சிறு உதவிகளைச் செய்தேன். படப்பிடிப்பு நகுலனின் கவடியார் வீட்டில்தான் நடந்தது. படப்பிடிப்பின் தொடக்கத்தில் சில மணி நேரங்கள் அங்கே இருந்தேன். விக்ரமாதித்தியன் கேள்விகள் கேட்க நகுலன் பதில் சொல்ல பதிவாகிக் கொண்டிருந்தது. கேள்விக்குப் பதிலாக இல்லாமல் தனி மொழியாக நகுலன் சொன்னவையும் பதிவாகிக் கொண்டிருந்தன. அதில் ஓர் இடத்தில் நகுலன் பேசியதைக் கேட்டதும் வியப்பு ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உரையாடலில் அவர் என்னிடம் சொன்ன செய்தியைத்தான் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். தான் தற்கொலைக்கு முயன்ற கதையை ஏறத்தாழ தகவல்கள் விடுபடாமல் சொன்னார். நினைவுகள் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் அந்த மனதில் சில நினைவுகள் மட்டும் அப்போதும் சுடர் குன்றாமல் மின்னுவதை ஊகிக்க முடிந்தது. ‘இந்த மனதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்வதற்கு இல்லை’ என்பது அவருடைய வாக்கு மூலம்.
அன்று அவரைப் பார்த்ததுதான் கடைசி. அவருடைய நினைவில் நான் இல்லாமல் இருந்தேன். அண்ணாச்சி நினைவுபடுத்திச் சொன்னதும் புதிய ஆளைப் பார்ப்பதுபோல மலங்க மலங்கப் பார்த்த அவருடைய பார்வை கொஞ்சம் கலங்கச் செய்தது.
2007 மார்ச். கவலைக்கிடமான நிலையில் நகுலன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்ற தகவலை நண்பர் கண்ணன் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார். விவரமறிந்து கொள்வதற்காக அம்பலமுக்கிலுள்ள சாந்த்வனம் மருத்துவமனைக்குப் போனேன். நகுலன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் இருந்த அவரது சகோதரர் மணியிடம் விசாரித்தேன். மருத்துவமனைப் படுக்கையில் சுவாச முகமூடியணிந்து கிடந்தவரைப் பார்த்தேன். யாரோ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பாவனையில் கண்கள் கூர்ந்து விழித்துக் கிடந்தார். வீடு திரும்பிய சிறிது நேரத்தில் மணி தொலைபேசியில் அழைத்து அவர் மறைந்த செய்தியைத் தெரிவித்தார். உடனடியாக எமிலி டிக்கின்ஸன் எழுதியதாக நகுலன் தன்னுடைய கவிதை ‘கண்ணாடி’யில் எடுத்தாண்ட வரி நினைவுக்கு வந்தது. ‘கண்கள் ஒரு தடவை கண்ணாடியாகின்றன. இது சாவு’. கூடவே பழைய சந்திப்பில் அவர் என்னுடைய ஆரம்பக் காலக் கவிதை வரியான ;கண்ணாடி முன் நின்றால் கழுத்துக்கு மேலே வெறும் பெயரை ஏன் சிலாகித்தார் என்பதற்கான விளக்கமும் கிடைத்தது.
5
இது நகுலனைப் பற்றிய என்னுடைய மதிப்பீடோ அவரது படைப்புகள் பற்றிய பார்வையோ அல்ல. முன் தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளி ஒருவருடன் அவருக்கு இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னால் வந்த இலக்கிய ஆர்வலன் கொண்டிருந்த தொடர்பின் பதிவு மட்டுமே.
நகுலனைப் பற்றித் தமிழில் ( மஹாராஜாவின் பக்கத்து வீட்டுக்காரர், பின் தொடர முடியாத முன் நிழல் – இழந்த பின்னும் இருக்கும் உலகம் – கட்டுரைத் தொகுப்பு ) இரண்டும் ஆங்கிலத்தில் ( நகுலன் – ஆன் எனிக்மா – இண்டியன் லிட்டரேச்சர் ) ஒன்றும் மலையாளத்தில் ( டி.கே.துரைஸ்வாமி எந்ந நகுலன் – மாத்யமம் வாரமலர்ப் பகுதி ) ஒன்றுமாக நான்கு கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அவை அவரது ஆளுமையைப் பற்றிய பதிவுகள். அவரது நாவல்,சிறுகதைகள், விமர்சனங்கள் குறித்து எழுதத் தயக்கமிருக்கிறது. அவை என்னை ஈர்க்கவில்லையோ என்ற சந்தேகமும் தொடர்கிறது. ஆனால் அவரது கவிதைகள் என்னைப் பாதித்தவை. உருவம் சார்ந்தும் உள்ளுறை சார்ந்தும் கவிதையாக்கத்துக்கு உதவும் மறைமுகமான நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தவை. நண்பர் யுவன் சந்திரசேகர் தொகுத்த நகுலன் – தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பின் பின்னிணைப்பு உரையாடலில் கவிதைகள் பற்றி விரிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.
ஏறத்தாழ வாழ்வின் பெரும் பகுதியை நகுலன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்து முடித்தார். தனிப் பயிற்சிக் கல்லூரியிலும் பின்னர் மார் இவானியோஸ் கல்லூரியிலும் ஆங்கிலப் பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். மலையாளம், தமிழ், ஆங்கில எழுத்தாளர்களும் வாசகர்களும் கல்விப் புலத்தினரும் வந்து சந்திக்கும் இடமாக டி.சி 25 / 21 கவடியார் கால்ஃப் லிங்க்ஸ் சாலை என்ற முகவரி இருந்தது. எனினும் ஓர் எழுத்தாளராக அவருக்குரிய இடம் அளிக்கப்பட்டதா என்ற சந்தேகம் வாசகனாக எனக்கு இருக்கிறது. அவருடைய படைப்பு முறையின் தனித்துவம் பொது வாசகர்களுக்கானது அல்ல. தீவிர வாசகர்களுக்கும் சீரிய படைப்பாளர் களுக்கும் மட்டுமே அனுமதி அளிப்பது. எனவே வெகு எளிதாக நகுலன் எழுத்தாளர்களின் எழுத்தாளராக ஆனார். அவரது தன்னிச்சையான வாழ்க்கை விலகி நின்று பார்க்கச் சுவாரசியமானது; சாகசமானது. ஆனால் பிறரால் வரித்துக்கொள்ள இயலாதது. எனவே அவர் திருவுருவாகக் கட்டமைக்கப் பட்டார் என்பது என் அனுமானம். ஆனால் இதே இயல்புள்ள படைப்பாளிகள் விமரிசையாகப் பேசப்படும் மலையாளச் சூழலில் நகுலன் போதுமான அளவு கவனம் பெறாதது வாசகனாக என்னை ஆதங்கப்படுத்துகிறது. அவரது இறுதிச் சடங்கின்போது அதைக் கண்கூடாகக் காணவும் முடிந்தது.
நகுலனின் இறுதிச் சடங்குகள் தைக்காடு பொது மயானத்தில் நடைபெறும் என்று சொல்லப்பட்டது. அங்கே சென்று காத்திருந்தேன். நகுலனின் நண்பரும் மலையாள எழுத்தாளருமான ஜி.என்.பணிக்கரும் உடனிருந்தார். மறைந்த ஆத்மாவை எழுத்தாளராக அறிந்தவர்கள் நாங்கள் மட்டுமாக இருந்தோம். மற்றவர்களுக்கு அவர் துரைசாமி சாராக மட்டும் அறிமுகமாகியிருந்தார். யாருக்கான இறுதிச் சடங்கு என்று என்னிடம் கேட்டவரிடம் ‘நகுலன் சாருக்கானது’ என்றேன். ‘’ மன்னிக்க வேண்டும். இது டி,கே,துரைஸ்வாமி சாருக்கென்று நினைத்தேன்’’ என்றார். இருவரும் ஒருவரே என்று அரும் பாடுபட்டு நிரூபிக்க வேண்டியதாயிற்று. ஆனால் இறுதிச் சடங்கு கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டு கரமனை துளு பிராமண மயானத்தில் நடத்தப்பட்டது. உயிருடன் இருந்திருந்தால் நகுலன் அதற்கு இசைந்திருக்க மாட்டார் என்று தோன்றியது.
இரண்டாவது சந்திப்பில் நகுலனிடம் கேட்ட கேள்வி எப்போதும் நினைவில் இருக்கும். ‘’ சார், திரிசடை உங்கள் சகோதரி. அவருடைய இயற் பெயர் சாந்தா. கே. சாந்தா. ஆனால் உங்களுக்கு மட்டும் எப்படி இரட்டை இனிஷியல் வந்தது. டி.கே.யின் விரிவாக்கம் என்ன?’’
என் கேள்விக்கு நகைச்சுவைத் துணுக்கைக் கேட்டதுபோல நகுலன் பெரும் சிரிப்புச் சிரித்தார். பிறகு பேசினார். ‘’ சிலரையெல்லாம் பேரைச் சொல்லாம இனிஷியலைச் சொல்லிக் கூப்பிடுவோமில்லையா? க.நா.சுப்ரமணியத்த கே.என்.எஸ்னுதான் சொல்லுவோம். அந்த மாதிரி என்னை எப்படிக் கூப்பிடுவா? என் பெயர் கே.துரைஸ்வாமி. அப்பா பேரு கிருஷ்ணன். அதனால கே. அப்ப என்னைக் கே.டி.ம்பா இல்லையா? அதனாலதான் டி.யை மொதல்ல போட்டேன். அப்பாவோட ஊரு. திருவனந்தபுரம். இந்த ஊருதான் நான் கேடியாகாமக் காப்பாத்திச்சு’’ என்று மீண்டும் சிரித்தார். இதை ஆவணப் படத்திலும் சொல்லியிருக்கிறார்.
இப்போதும் புதிய இலக்கிய நண்பர்களிடம் நகுலனைப் பற்றிப் பேசும்போது அவருடைய இயற் பெயரைச் சொல்ல நேர்ந்தால் ‘’திருவனந்தபுரம் கிருஷ்ணன் துரைசாமி… டி.கே.துரைசாமி’’ என்று நீளமாகவே சொல்வேன். ஒரு நகரம் எழுத்தாளனால் நினைக்கப்படுகிறது என்பதைப் பாராட்டவே அதைச் செய்கிறேனா? இல்லை, பின்வரும் அவரது கவிதையை நினைவுகூர்கிறேனா?
இப்பொழுதும்
அங்குதான் இருக்கிறீர்களா
என்று
கேட்டார்
எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்
என்றார்.
நகுலன் 100 அருவம் உருவம் நூலில் வெளிவந்த கட்டுரை.