1.
நூறு முறை உன்
கோபத்தை அனுபவித்திருக்கிறேன்
ஒரு முறை தான்
உன் மீது கோபம் கொள்ள முடிந்தது
நூறு முறை உன் வெறுப்பைக் காட்டியிருக்கிறாய்
ஒரு முறைதான் உன்னை வெறுக்க முடிந்தது
எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்
முதல் முறை பார்த்தது போலில்லை
ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்க்கிறேன்
இதுவரை யாரையும் பார்த்ததேயில்லை
2.
உன் மீது கோபத்தைக் காட்ட
நான் அதிகமாய்ப் பயன்படுத்தியது
எரும, மாடு, பேய், பிசாசு, குரங்கு,
அதிகபட்சமாக
பன்றி, சாத்தான்
கணக்கற்ற உன் சொல் முனையிலிருந்து
ஆவேசமாய் ஓடிவந்த
ஒற்றை வார்த்தை
என்னைக் குத்தியது
ஒரு முறை உன்னை நான்
கொலை செய்துகொள்கிறேன்
3.
எனக்கு யாரையும்
கொன்று பழக்கமில்லை
அதிலும்
உன்னைக் கொல்வது
இயலாத காரியம்
கவிதையை எந்தக் கத்தியால்
கொல்லமுடியும்
4
என் கூந்தலைப் போல்
நீளமானது இருட்டு
பேசிக்கொண்டே இருக்கிறேன்
இன்னும் பேச எவ்வளவு இருக்கிறது
நான் மை பூசுவதில்லை
கூந்தலுக்கும்
எழுத்துக்கும்
5.
என்னைச் சீண்ட
நினைப்பவர்களுக்கு
என்னைக்
கொல்ல நினைப்பவர்களுக்கு
ஒரு துப்பாக்கி வாங்கிக் கொடுக்கிறேன்
சுட்டுப் பார்க்கட்டும்
எனக்கான பசிக்கு
நான்தான் சாப்பிடுகிறேன்
என்னைக் கொல்வது
நீ இல்லை
நான் மட்டுமே
6.
நான் வாளோடு வந்திருக்கிறேன்
நீ அட்டைக் கத்தியை
வைத்துக்கொண்டு மிரட்டுகிறாய்
நாமென்ன டெடி பொம்மையை
வைத்துக்கொண்டா விளையாடுகிறோம்
7.
அன்பினால்
உன்னை நான் மட்டும்
குத்த வேண்டும்
உன்னை
நான் மட்டுமே
கீறிப்பார்க்க வேண்டும்
உன்னிடம்
நான் மட்டுமே
பேசவேண்டும்
உன்னை நான் மட்டுமே
கொல்ல வேண்டும்
8.
நல்ல போதையில்
வீடு திரும்புகின்றன
நானே ஊற்றிக்கொடுக்கிறேன்
தள்ளாடுகிறது
மயங்குகிறது
நீ வாங்கித் தந்த வைன் தான்
நீ கொடுத்த ஒற்றை முத்தம்தான்
எங்கும் நீதான்
மனதை சுண்டுவிரலால்
தொட்டுப்பார்க்கிறேன்
உள்ளே பல்லாயிரம் பிசாசுக்கள்
ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன
இதோ இன்னும் கொஞ்சமென
போதையை ஏற்றிவிட்டாய்
மொழி ஓட்காவைக் குடித்துவிட்டு
போதையில் வீடு திரும்புகின்றன சொற்கள்
இந்த முறையாவது
வாந்தியெடுக்காமல் இருக்கவேண்டும்
9.
தேவதையின்
இரட்டைச் சிறகுகள்
என்னிடம் இருக்கின்றன
ஒற்றை வானவில்லாய்
நீ வானில் தெரிகிறாய், மறைகிறாய்
இன்னும் கொஞ்சம் மழை
இன்னும் கொஞ்சம் வெயில்
இன்னும் அதிகமாய் மோதிக்கொள்ளட்டும்
இன்னும் நன்றாகப் பார்க்கவேண்டும்
ஆகாயப் பருந்துகளுடன் வானில்
வசித்துக்கொண்டிருக்கிறேன்
10.
சின்னஞ்சிறு நாய்க்குட்டியாய்ப்
பின்னாலேயே ஓடிவருகிறாய்
அதன் காதைப் பிடித்துத் தூக்கி நிறுத்தியது
நினைவுக்கு வருகிறது
உன்னுடைய அன்பும்
நாய்க்குட்டி தான்
வாலாட்டுகிறது
குலாவுகிறது
குரைக்கிறது
எழுத்து ருசி கண்ட
பூனையைத் துரத்துகிறது
திமிறும் மொழி வாலைப்
பிடித்து நிமிர்த்துகிறேன்
இறுகிக்கிடக்கும் எழுத்துக்கயிற்றின்
ஒற்றை முனையைப் பிடித்து இழுக்கிறேன்
சொற்கள் தீர தீர
நானும் பின்னாலேயே சென்றுவிட்டேன்
உன்னோடு பேசும்போது மட்டும்
கொஞ்ச நேரம்
நாய்க்குட்டியாய் மாறிக்கொள்கிறேன்
11
நட்சத்திரங்களெல்லாம் எழுத்துகளாய் மாறி
பூமிக்கு வந்துகொண்டிருக்கின்றன
மௌனமான நேரத்தில்
மனத்தின் ஓசைகளைக்
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
பௌர்ணமியை ரசிக்கத் தெரிந்தவன்
கவிதைகளை ரசிக்கத் தெரிந்தவன்
கரடு முரடான அன்புக்காரன்
உன்னை ஒரு கவிஞன் தான்
வடிவமைத்திருக்க வேண்டும்
உன்னை ஒரு கவிதை வயிறுதான்
பெற்றிருக்க முடியும்
13
வெளிச்சம்
ஒரு நீண்ட சால்வை
போர்த்திக்கொள்ளவே விரும்புகிறார்கள்
வெளிச்சம்
முத்துக்கள் பதித்த
யானையின் தந்தம்
வெளிச்சம்
வெள்ளை எலும்புகள்
சூடிய மலர்மாலை
வெளிச்சம்
பந்தயக் குதிரையின்
கழுத்தில் கட்டிய தீப்பந்தம்
வெளிச்சம்
மினுக்க முலாம் பூசிய
நட்சத்திர மாலை
வெளிச்சம்
ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமல்
இறங்கிப்போய் விடுகிறது