1. என் நாட்குறிப்பைக் கொட்டி வைத்திருந்த கடற்பேழையில் உடைந்த இதயத்தை நுழைத்து எதையெதையோ தேடுகிறது என் நதி ஆவேசத்தோடு என் உயிரின் இரகசியக் குறியீட்டை கண்டுபிடித்து விடுமோ என்ற பயத்தோடு பனி சூழ்ந்த கரையில் நான் காவலிருக்கிறேன் சின்ன தைரியம் கடற்பறவைகளின் சிறகுகளில் மறைத்துவைத்த என் சிம்பொனியின் அழகிய வரிகள் அதற்குக் கிடைக்கப்போவதில்லை இறுதிவரை அது போதும் 2. கடலின் முதல் அலையைநான் வரைவதாகத்தான்இருந்தேன் அதற்கான வண்ணங்களைஇரவுக்கு மகுடஞ்சூட்டியமின்மினிகளிடம்இரவல் வாங்கி வந்தேன் பளிச்சிடும் நீல வண்ணத்தை மட்டும்உன் கனவிலிருந்துகளவாடி…
என் தாத்தா முழு நேர விவசாயி அப்பா பகுதி நேர விவசாயி நானும் என் இளமையில் அரைகுறை விவசாயிதான் என் மகன்களுக்கோ ஒரு மடைமாற்றவும் தெரியாது இன்று உழவின் சுவாசம் முனகிக் கொண்டிருக்கிறது பூனையை அஞ்சி சுண்டெலிகள் ஆகாரம் தேடி பீக்காடுகளில் அலைகின்றன மாமழைப் போற்றிய மண்ணில் கிணறுகளை வற்றக் குடித்தும் தாகம் தீரா ஆழ்துளை கிணறுகள் உழவாளி கடனாளி யாகிவிட்ட ஏமாளி கனவுகளில் கூலிப்படைகளின் ஜப்திப் படையெடுப்பு தவிடுபொடியான தவிடும் பிண்ணாக்கும் பணத்தைக் கரக்கும் தீவன மூட்டைகள் தரகனது இருசக்கர வாகனப் பின்புறத்தில் கசாப்புக்கடையன் மடியினில் பால்குடிக் கன்றுகள் குட்டிச்சுவராய் மாட்டுக் கொட்டகை தூர்ந்துபோன எருக்குழிகள் உயிரை உறிஞ்சும் உரப்பூச்சிக்கொல்லிகள் மலடாக்கப்பட்ட வயல்வெளிகளில் அடுக்கப்பட்ட வீட்டுமனை…
இன்றைய பிறந்தநாளில் சந்திப்பதாய் நேற்று மாலை விடைபெற்றிருந்தோம் இரவு ஒரு கனவு கண்டோம் நாளை விடியலில் இறந்திருப்பதாக இருந்தும் கவலை அற்றிரு நண்பா நேற்று முன்தினம்வரை நாம் வாழ்ந்திருந்ததேபோல் நாளை மறுநாளில் பிறந்தும் இருக்கலாம்.
உயிரற்ற பொருள்களிடம் கருணைகொண்ட கடவுள் உயிர்ப்பைத் தந்து விரும்பும் வரத்தையும் தருவதாய் அவ்வவற்றின் விருப்பத்தைக் கேட்டார் மொத்தக் குரலும் தம் ஆதியிடம் செல்வதையே அழுத்தமாய் சொல்லின ஆகட்டும் என ஆண்டவன் அருள அடுத்த கணம் மனிதன் அகழ்ந்தெடுத்த உலோகங்கள் அனைத்தும் பூமியின் ஆழத்துக்குள் சென்று புதைந்தன வெட்டப்பட்ட கிரைனைட் உடைக்கப்பட்ட ஜல்லிகள் மலைகளைச் சென்று சேர்ந்தன அள்ளப்பட்ட எல்லா மணலும் ஆறுகளுக்குத் திரும்பின மரப்பொருள் மொத்தமும் அடர்வனம் அடைந்தன ஆடை முதலான துணிமணியெல்லாம் அவ்வவ ஆரம்பத்துக்கு அணிவகுத்தன…
இந்தக் கணத்தில் இவ்வுலகையே தலைகீழாக்கிடும் வல்லமையைப் பெற்றவன் யாராம் எனக் கேட்ட கிருஷ்ணனிடம் வல்லமையைப் பெற்றவன் யாராம் என திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தான் தெருக்கூத்தில் கட்டியக்காரன் எங்கோ தூர தூரத்தில் பார்வையாளர்கள் நகைப்பதை தலை குப்புற பார்த்துக்கொண்டு வலையில் வீழ்ந்து கொண்டிருக்கிறான் சர்க்கஸ் கோமாளி.
நெகிழியே நள்ளிரவு நிசப்தத்தில் வீசிய சிறு காற்றுக்கு தார்ச்சாலையில் ஒலியெழுப்பி உருண்டு வந்த குவளையே கவிஞரின் அக்காலத்திலிருந்து கவிதையின் இக்காலத்துக்குள் புரண்டு வந்த படிமமே ஆரடித்ததாலே அரவமற்ற சாலையில் ஆதரிக்க ஆளின்றி அரற்றி வந்தாய் குழந்தையே உலகம் வெறுத்தொதுக்கும் உனக்கபயம் அளிக்க குப்பையாகத் தொட்டியாக நிற்பேன் தயங்காது என் மடிக்குத் தாவி வா என் செல்லமே. (நன்றி:தேவதச்சன்)
கரிச்சான் அடங்கிக் கோழிகள் கூவுகின்றன கனவிலிருந்து மீண்டெழுந்து மீந்ததை மெல்லும் காரிருட்டு எருமைகள் தண்ணீர் சேந்தி சாணம் தெளிக்கும் வாசல் ஓசைகள் விடியலில் விடியலை விடியலால் இசைக்கும் பறவைகள் போர் உதற களத்துக்கு வம்பளந்து செல்லும் போர்வை உதறா அம்மையர் வைக்கோல் பரப்பி கோணிப்படுதா கட்டிய திண்ணைப் படுகை பக்கத்தில் சயனித்திருந்த தாத்தா என்னை விலக்கி பீடி கொளுத்திக் கனைத்தவாறு கறவைக்குக் கிளம்புகிறார் இடைவெளியில் உள்நுழைந்த பனிநங்கை எனையணைக்க நடுக்குகிறது சாவிகொடுத்து ஐம்பதாண்டுகளான சுவர்க்கடிகாரம் நடையில் ஐந்துமணி அடிக்கிறது இவளாலும் எழுந்திருக்க ஆகாது ஏசியை அணைக்க வேண்டும் சன்னலைத் திறக்க வேண்டும்.
அவள் ஒரு கொடுமைக்கார தாய் பழம் பறித்து மடியில் வைத்துக்கொண்டு ஊட்டிவிடாமல் காட்டுக்குள் ஓடுடா என்று முதுகில் அடித்து விரட்டுவாள் தூக்கி மரக்கிளையில் ஏற்றிவிட்டு காவலுக்கு நிற்காமல் போய்விடுவாள் புதர்களில் பிடித்துத் தள்ளிவிடுவாள் முழு நீரோட்டமிருக்கும்போது ஆற்றுக்கு மறுபக்கமிருக்கும் மருந்துச் செடியைப் பறிக்க அனுப்புவாள் அவளொரு கண்டிப்பான முதல் ஆசிரியர்.
குப்பையில் பூத்த சாமந்தியின் மேல்
கொல்லையில் வளர்ந்த வாழை நாருக்கு
மனம் கொள்ளா காமம்
மலர்ச்சரம் ஆகலாமா என்றான்.
அவளுக்கும் மையல்தான்
இருந்தாலும் அச்சம்
புஞ்சைக்கு உரமாக்கிவிடுவார்கள்
என்றாள். உள்ளூற பயம் ஊறினாலும்
நெஞ்சிரண்டிலும்
கள்ளூறியது.
இரவுக்குறியில் சந்திப்பு,
இதழ் தொட்டுப் பயின்ற காதல்
சரம் தொடுத்து ஆடியது. நெருப்பே வைக்காமல்
எள்ளுக்கட்டு புகையும் என்பதை
அவள் அறிவாள்.
ஆயினும் அவர்கள்
அறுவடையை நிறுத்தவில்லை.
எள்ளுப்போர் உயர்ந்த நாளொன்றில்
தன் சங்குக் கழுத்துக்கு
கத்தித் தீட்டப்படுகிறதென்று சொன்னாள். குப்பைக்குத் தீ வைத்த பிறகும்
சாமந்தி மலர்ந்தாடியது
வாழையில் கத்தி வைத்தாலும்
நாருக்கு காமம் தீரவில்லை
கண் காணா இடத்துக்கு
ஊரைவிட்டு ஓடிப்போனார்கள். எங்கிருந்து பாம்பு வரும்
எப்பொழுது தேளு வரும் என்று
செத்துப் பிழைத்து
கற்பில் நுழைந்தார்கள்
ஓடுகிறது பிழைப்பு .
ஆனால்,
ஊரில் அவர்கள்
விட்டு…
மக்காச்சோளம் ஒடிப்பதை
நிறுத்திவிட்டு
காடைகள் ஓடி மறைவதைப்
பார்த்துக்கொண்டிருந்தாள்,
பால் கள்ளிக்குள் பதுங்கியவை
வெளியேறவில்லை. சோளத் தோகைகள்
உடம்பை உரசும் ஒலி குறைத்து
மெதுவாய்
ஒரு காட்டுப்பூனையைப்போல்
காடைகள் பதுங்கிய வேலியை
நெருங்கினாள். "புகுபுகு புகுபுகு" என்றொரு குரல்.
கருஞ்சிவப்பு உதடுகளைக் குவித்து
பறவைகள் அஞ்சிடாத விசில் கொடுத்து
அவனை அழைத்தாள். ஒரு கைத்தடியைத் தூக்கிக்கொண்டு
மெல்ல
இன்னொரு பூனையைப்போல்
சோளத்தட்டைக்குள் நகர்ந்தான்
அவனுடைய உருமா கட்டையும்
பதுங்கி வந்த தோரணையையும்
கண்டவள்
தன் எள்ளுப்பூ மூக்கைச் சுருக்கி
சிணுங்கலாய்
ஒரு கவிச்சை வார்த்தையைச் சொன்னாள். காது வழியே
ஒரு கேலி மொழி போவதுபோல்
உணர்ந்தவன்
தலை தூக்கிக் கண்ணடித்தான். வாய்க்கு வெளியே சொல் வராதவாறு
"கட்டை எதற்கு" என்றாள்.
அவனும் அதுபோலவே
"காடை அடிக்கத்தான்"என்றான். கண்களை ஆந்தையைப்போல் சுழட்டியவள்
"மொவறக்கட்டை" என்றுவிட்டு
அதைப் போட்டுவிட்டு
அருகே வாவென்று அழைத்தாள். "சிறுக்கி…