எம்.யுவன் கவிதைகள் குறித்த உரையாடல்
கவிதைகள் பொதுவாக விடையைத் தேடாமல் கேள்விகளின் அருகில் நம்மை அமைதியாக அமரவைக்கும் பயிற்சியாக இருக்கின்றன. இந்த எண்ணத்தை மையமாகக் கொண்டு, திணைகள் நடத்திய கவிதை அமர்வு – இணையவழிக் கூடுகையில், தமிழ் நவீன கவிதையின் முக்கியமான குரல்களில் ஒருவரான எம்.யுவன் அவர்களின் கவிதை உலகைப் பற்றிய உரையாடல் நடைபெற்றது.
திறந்து வைத்திருக்கும் பல்வேறு வாசிப்புப் பாதைகளுக்குள் நுழைந்து, அவற்றின் வெளிச்சத்தையும் இருளையும் ஒரே நேரத்தில் கவனிப்பது போன்று யுவனின் கவிதைகளைப் பேசிய போது உணரமுடிந்தது. யுவனின் கவிதைகள் ஒரு பொருளைச் சொல்லிவிட்டு விலகிச் செல்லாமல், ஒரு பொருளில் தொடங்கி அதிலிருந்து இன்னொரு பொருளை உருவாக்கி, இறுதியில் வாசிப்பவரைக் கேள்வியின் அருகே நிறுத்திவைக்கும் கவிதைகளாக இருக்கின்றன.
யுவன் கவிதைகள் குறித்த இந்தக் கலந்துரையாடலுக்கு ஷாஅ கொடுத்த ‘தீரா இருள்’ என்ற தலைப்பு மிகுந்த பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. தீராப் பகல் என்றுமே தனித்து இருக்கமுடியாது. ஒரு பொருளின் வடிவம் தெரிந்துகொள்ள அதற்குப் பின்னால் நிழலும் இருளும் தேவை. வெளிச்சமும் இருளும் ஒன்றையொன்று நிராகரிப்பவை அல்ல, ஒன்றின் இருப்பை இன்னொன்று சாத்தியமாக்குகின்றன. யுவனின் கவிதைகளும் அப்படித்தான் செயல்படுகின்றன. அவை முழுமையான வெளிச்சத்தை வழங்குவதில்லை. பார்க்க முடிவதற்குத் தேவையான அளவு வெளிச்சத்தையும், இன்னும் பார்க்க முடியாததை உணர்த்துவதற்குத் தேவையான அளவு இருளையும் வைத்திருக்கின்றன.
இரவும் பகலும் சுழற்சி தானே? இரவின்றிப் பகல் மட்டும் எப்படியிருக்க முடியுமென்ற அவரது விளக்கமும் சரியானதாகத் தான் தோன்றுகிறது. வெளிச்சம் என்பது அறிவின் அடையாளமாகவும், இருள் அறியாமையின் அடையாளமாகவும் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படும் நிலையில், இந்த உரையாடல் அந்த எளிய இருமையைத் தகர்க்கிறது. முழுமையான வெளிச்சத்தில் எந்தப் பொருளுக்கும் வடிவம் தெரியாது.
இந்த நிகழ்வில், கார்த்திக் திலகன் கட்டுரையைச் சிவா வாசித்தார், சாகிப் மற்றும் ஷாஅ ஆகிய மூன்று முக்கியமான குரல்கள் தத்தம் கோணங்களிலிருந்து யுவனின் கவிதைகளை அணுகின. அதைத் தொடர்ந்து, அவரே நேரடியாக வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஒரு நீண்ட, வளமான உரையாடலும் நிகழ்ந்தது.
இரண்டரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த நிகழ்வு, கவிஞனின் படைப்புலகை வெறும் கல்விச்சார் விமர்சன வகைப்பாடுகளுக்குள் அடைக்காமல், அவரது சொந்தக் குரலிலேயே திறந்துவிட்ட முயற்சி என்று சொல்லலாம். இந்தக் கட்டுரை, அந்த உரையாடலின் முக்கியப் பரிமாணங்களை, கவிதைக் கோட்பாடு, தத்துவம், மொழிபெயர்ப்பு, படைப்பு செயல்பாடு, வாசிப்பு முறை எனப் பல தளங்களில் தொகுத்து முன்வைக்கும் முயற்சியோடு யுவனின் கவிதைகள், அவற்றின் மொழி எவ்வாறு இயங்குகிறது, அனுபவம் கவிதைக்குள் எந்த வடிவத்தை அடைகிறது என்பவற்றைச் சுற்றிய சிந்தனையாக விரிந்தது. கவிஞரின் படைப்புகளைப் புரிந்துகொள்வதற்காக அவருடைய வாழ்க்கை அல்லது படைப்புப் பட்டியல் மட்டுமே போதாது, கவிதை உருவாக்கும் கேள்விகளுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. அந்த முயற்சிதான் இந்த உரையாடலின் அடிப்படைச் சிறப்பாக அமைந்தது.
யுவனின் கவிதையை அணுகுவதற்கான முதன்மையான ஒன்று, கவிதை முடிவடைவதில்லை என்ற எண்ணம். ஒரு கவிதை எழுதப்பட்டு அச்சாகி வாசகனிடம் சென்றுவிட்ட பிறகும் அதன் இயக்கம் நிற்கவில்லை. கவிஞன் ஒரு வடிவத்தை உருவாக்குகிறான், வாசகன் அதைத் தன்னுடைய அனுபவத்தின் வழியாக மறுபடியும் மறு உருவாக்கம் செய்கிறான். ஆகவே கவிதையின் இறுதிநிலை என்று ஒன்று இருக்க முடியாது. ஒவ்வொரு வாசிப்பும் அதற்கு ஒரு புதிய நிகழ்காலத்தைத் தருகிறது.
யுவனின் கவிதைப் பயணம் நீண்டது. அவரது முதல் கவிதைத் தொகுப்பான ஒற்றை உலகம் 1996-ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்தத் தொகுப்பிலிருந்து சுமார் முப்பது ஆண்டுகளுக்குச் செல்லும் ஒரு கவிதைப் பயணம் அவருடையது. மொத்தக் கவிதைகளின் தொகுப்பாகத் தீராப்பகல் வெளிவந்ததையும், அதன் பின்னர் 2023-இல் இதுவும் அதுவும்தான் என்ற தொகுப்பு வெளியானதையும் உரையாடல் நினைவூட்டியது. இவ்வளவு நீண்ட காலப் பயணத்திற்குப் பிறகும் அவரது கவிதை, தன்னையே மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது.
நிகழ்வை வழிநடத்திய உமேஷ், யுவன் அவர்களின் கவிதைப் பார்வையை ஓர் அழகான உருவகத்துடன் அறிமுகப்படுத்தினார். ஒரு காலணிக்குள் ஒரு மணல் துகள் இருந்தால் எப்படித் தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருக்குமோ, அதே போல ஒரு கவிதைக்குள் தேவைக்கு அதிகமான ஒரு சொல் இருந்தாலும் அது தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருக்கும் என்று சொல் சிக்கனம் பேணும் ஒரு கவிஞராக யுவனை அடையாளப்படுத்தினார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை எழுதி வரும் யுவனின் படைப்புகள், இன்றளவும் புதுமையாகவே தென்படுவதன் ரகசியமும் இந்தக் கச்சிதத்தன்மையிலேயே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஓர் உயரமான கோபுரத்தைச் சீட்டுகளால் அடுக்கும்போது, எந்த இடத்திலிருந்து ஒரு சீட்டை எடுத்தாலும் அந்தக் கோபுரம் கலைந்துவிடுமோ, அந்த அளவுக்கு ஒவ்வொரு சீட்டும் முக்கியமானது என்பது போல, யுவனின் கவிதைகளில் இருக்கும் ஒரு சொல்லைக்கூட நீக்கிவிட முடியாது என்ற ஒப்புமையை முன்வைத்தார். வங்கிப் பணியில் இருப்பவர்கள் எண்களைக் கையாள்வதில் மிகக் கவனமாக இருப்பதைப் போல, ஒரு டிஜிட் மாறினாலும் மொத்தக் கணக்கும் மாறிவிடும் என்பது போல, யுவனின் கவிதைகள் ஓர் எண் வரிசை போலவே செதுக்கப்பட்டவை என்று அவதானித்தார்.
இங்கு முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான ஒன்று கவிதை என்பது எழுதி முடிந்த பிறகும் ஓய்ந்துவிடுவதில்லை, அணுவினுள் நிகழும் நுண்ணியச் சலனங்கள் போலத் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பதே. ஒரு கவிதையை நிலையான, முடிவுற்ற பிரதி என்று பார்க்காமல், வாசகனுடன் தொடர்ந்து உரையாடும் உயிருள்ள, சலனமான புள்ளியாகப் பார்க்கும் இந்தப் பார்வை, முழு நிகழ்வின் தொனியையும் நிர்ணயித்தது எனலாம்.
கார்த்திக் திலகனின் கட்டுரை: உலக மரபுடன் இணைத்தல்
முதலில் வாசிக்கப்பட்டது கார்த்திக் திலகனின் கட்டுரை, அவருடைய நண்பர் சிவா வாசித்தார். கடைசி நேரத்தில் அவரால் கலந்துகொள்ள இயலாமல் போனதால் இந்த ஏற்பாடு. யுவனை உலக இலக்கிய மரபுடன் இணைத்துப் பார்க்கும் விரிவான, ஆழமான முயற்சியாக அமைந்தது. மேற்கத்திய கவிதை மரபு தாந்தேவிலிருந்து தொடங்கி மில்டன், வோர்ட்ஸ்வொர்த், எமர்சன், போர்ஹேஸ் என வளர்ந்து இன்று ஆன் கார்சன், ஜோரி கிரகாம் வரை நீள்வதைப் போல, தமிழிலும் வள்ளுவர், கம்பன், இளங்கோ, சிவவாக்கியர், திருமூலர் வழியாகப் பாரதி, பாரதிதாசன் என வளர்ந்து யுவன் சந்திரசேகர், வே.நி சூர்யா என்ற சமகாலப் பரப்புக்குள் வந்து நிற்கும் ஓர் அறிவுசார் கவிதை மரபு மாறி வந்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட இந்த வரிசையில் ஒவ்வொருவரின் பார்வையில் மாறுபடக்கூடும். யுவனை அந்த மரபின் தொடர்ச்சி என்று மட்டும் சொல்லிவிடாமல், அந்த மரபின் மீறல் என்றும் வலியுறுத்தினார். ஏனெனில், மொழிக்கும் அர்த்தத்திற்குமான தொடர்பு எந்த அளவுக்கு நெகிழ்வானதாக இருக்கிறதோ, அந்த நெகிழ்வுத் தன்மையிலிருந்து யுவன் மேலும் மேலும் விலகி, ஒரு பாகுத்தன்மையை வார்த்தைகளை இணைக்கும் பசையில் தேனின் ருசி இருப்பது போன்ற ஒரு நிலையை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டார்.
இக்கட்டுரையில் மையமாக நின்ற கரு மதமற்ற ஆன்மீகம் Secular spirituality என்பது. அமெரிக்க இறையியலாளர் ஒருவர் கவிதையையே ஒரு மதமாகவும் கவிஞர்களை அதன் தீர்க்கதரிசிகளாகவும் சொன்னதை மேற்கோள் காட்டி, மதமற்ற கவிதைகளும் சாத்தியமே என்றும், தமிழில் அதற்கு நேரடி உதாரணமாக யுவனின் கவிதைகளை முன்வைக்கலாம் என்றும் கார்த்திக் திலகன் கருதுகிறார். மதக் கோட்பாடுகளையும் சடங்குகளையும் கடந்து, இயற்கையின் மர்மங்களோடு நம்மைப் பிணைக்கும், நமது அகந்தையைத் தளர்த்தும் அனுபவமே அவர் இதைச் சொல்லும்போது தோன்றுகிறது.
புலிட்சர் பரிசு பெற்ற மேரி ஆலிவரின் இயற்கை தரிசனத்துடன் யுவனின் பாதையை ஒப்பிட்டு, இருவரும் மதமற்ற ஆன்மீகம் என்ற ஒரே கண்ணாடி வழியாக இயற்கையைத் தரிசிக்கிறார்கள் என்றாலும், அவர்களின் பாதைகள் வேறு என்று விளக்கினார். மேரி ஆலிவர் பல ஆண்டுகள் இயற்கையைத் தேடி அலைந்து, அதன் முன்னால் வியந்து நின்று, தற்பெருமை அறிந்த நிலையை அடைந்து, அந்த உணர்வை மற்றவர்களுக்கும் கடத்துபவர். யுவனின் பாதை சற்றே வேறானது. இயற்கையைக் கண்டு வியப்பு, அந்த வியப்பிலிருந்து கேள்வி, கேள்வியிலிருந்து மர்மம், மர்மத்திலிருந்து ஆன்மீகத்திற்குத் திரும்புதல் என்ற ஒரு தொடர்ச்சியான இயக்கம் அது. மேரி ஆலிவர் தன் கவிதையை எங்கே முடித்தாரோ, அங்கிருந்து யுவன் தன் கவிதையைத் தொடங்குவது போலத் தெரிகிறது என்பது கார்த்திக் திலகனின் அவதானிப்புகளில் ஒன்று.
வால்ட் விட்மனுடன் ஒப்பிடும்போது இன்னும் நுட்பமான வேறுபாட்டையும் சுட்டிக்காட்டினார். பிரபஞ்ச ஒருமைப்பாடு (Universal Oneness) என்ற தரிசனத்தை முன்னெடுத்த விட்மனுக்கு, மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், மின்மினிகள் என அனைத்துமே ஒரே பிரபஞ்ச சக்தியின் பல வடிவங்கள். இது ஒரு கொண்டாட்டத்தின் ஆன்மீகம். ஆனால் யுவனுடையது மௌனத்தின் ஆன்மீகம் spirituality of silence, வாழ்வின் அமைதியைத் தொடர்ந்து கவனித்து, கவிதையில் ஆவணப்படுத்துபவர் யுவன். விட்மனிடம் இயற்கையும், தனிமனிதனும், பிரபஞ்சமும் பிரிக்க முடியாதவையாக இணைந்திருந்தால், யுவனிடம் ‘தான்’ என்ற உலகம் தொடர்ந்து சீரிய இடைவெளியுடன் இயங்குகிறது. அந்த இடைவெளியே அவரது கவிதையின் தனிச் சிறப்பு எனவும் விளக்கினார்.
இந்த இடைவெளி, இந்திய தத்துவப் பரப்புடன் இணைத்து, உபநிடதங்களுடன் யுவனுக்கு ஆழமான தொடர்பு இருப்பதையும் கார்த்திக் திலகன் கட்டுரை விவரித்தது. அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் இருக்கிறது, பிண்டத்தில் இருப்பதே அண்டத்தில் இருக்கிறது என்ற சித்தர் மரபின் அடிப்படைத் தரிசனத்திற்கும், பிரகதாரண்யக உபநிடதத்தின் “நேதி நேதி” (இதுவல்ல, இதுவல்ல) அணுகுமுறைக்கும் யுவனின் கவிதைகளுக்கும் இடையேயான தொடர்பையும் விளக்கினார். ஒருவன் தன் மீது ஏற்றப்பட்ட தற்காலிக முகமூடிகளைக் கழட்டும்போது, பெயரிட முடியாத தூய விழிப்புணர்வு மட்டுமே எஞ்சுகிறது என்ற இந்தத் தேடல், யுவனின் பல கவிதைகளில் அடிநாதமாக ஓடுவதாக கருதுகிறார்.
வெளியே காற்று வீசும் போது மரம் மட்டும் அசைவதில்லை. என் நரம்புக்குள் ஏதோ ஒரு நதி திசைமாறிப் பாய்கிறது. நான் இந்த உடலா அல்ல, இந்த மனமா அல்ல, இந்த அடையாளங்களா அல்ல என்று மனிதன் தன் மீது ஏற்றப்பட்ட தற்காலிக முகமுடிகளைக் கழட்டும் போது பெயரிட முடியாத தூய விழிப்புணர்வே எஞ்சுகிறது. அதைக் கவிதையாகச் சொல்றார். கண்ணாடியில் தெரிவது என் முகம் அல்ல அதில் படிந்திருப்பது நான் சூடிக்கொண்ட நிழல்களின் வரிசை பெயரைப் போக்கிவிட்டால் திரும்புவது நான் அல்ல அந்தப் பெயருக்கு பழகிப் போன ஒரு மிருகம் நானோ யுவற்றுக்கு அப்பால் எவரும் பெயரிட முடியாது, தனிமையில் காத்துக் கொண்டிருக்கும் மதங்கள் சொற்களாலும் போதனைகளாலும் புனித நூல்களாலும் ஆனவை. ஆனால் உண்மையான ஆன்மீகம் சொற்களைக் கடந்தது என்பதை உபநிடதங்களும் யுவனும் ஒரே சேர நினைவூட்டுகின்றன என்றார்.
புத்தரின் நச்சு அம்பு உவமையையும் இதனுடன் இணைத்து, விடைகளைத் தேடித் தேடி ஆயுளைத் தொலைப்பவர்களே கேள்விகளின் சுமையைக் கீழே இறக்கி வையுங்கள் என்று யுவன் ஒரு கவிதையில் சொல்வதை மேற்கோள்காட்டினார். ஆனால் புத்தருக்கும் யுவனுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதையும் சுட்டிக்காட்டினார். புத்தர் சில கேள்விகளையே பயனற்றவை என்று ஒதுக்கினார், யுவன் கேள்விகள் வழியே தன் அறியாமையை உணரமுடியும் என்று நம்புகிறார். தெரியும் என்ற நம்பிக்கை அல்ல, தெரியாது என்ற பணிவே யுவனுடைய ஆன்மீகம் என்பது இந்தப் பகுதியின் மிக முக்கியமான முடிவுரையாக அமைந்தது. ஜே. கிருஷ்ணமூர்த்தியின் “தீர்ப்பின்றிக் கவனித்தல்” என்ற அணுகுமுறையையும், ரமணரின் “நான் யார்” என்ற சுயவிசாரணையையும் இணைத்து, யுவனின் கேள்வி முறை அத்வைதத்தை நோக்கிச் செல்லாமல், இயற்கையின் மர்மத்தின் முன்னால் திகைத்து நின்று, இலக்கற்ற ஆன்மீக பாதைக்குத் திரும்புகிறது என்பதையும் கட்டுரை குறிப்பிட்டது.
இக்கட்டுரையின் இன்னொரு பரிமாணம் இசைத்தன்மை. இந்துஸ்தானி இசையில் ஆழமான ஈடுபாடு கொண்ட யுவன், “கட்டடக்கலை என்பது உறைந்த இசை” என்ற புகழ்பெற்ற சொல்லாடலைப் போல, தன் கவிதைகளைச் சொல்லாக உறைந்த இசையாக மாற்றுபவர். அமெரிக்கக் கவிஞர் வாலஸ் ஸ்டீவன்ஸின் “த மேன் வித் த ப்ளூ கிட்டார்” கவிதையையும், டி.எஸ். எலியட்டின் “ஃபோர் குவார்ட்டர்ஸ்” கவிதைகள் பீத்தோவனின் ஸ்ட்ரிங் குவார்ட்டெட் இசையைத் தத்துவ இசையாக எதிரொலித்ததையும் மேற்கோள் காட்டி, அதே போல யுவனும் இந்துஸ்தானி இசையின் சுர ஒலிகளைத் தன் கவிதைகளுக்குள் மிதக்கவிடுகிறார் என்று கார்த்திக் திலகன் விவரித்தார். ஒரு பகுதியை வேகமாகவும் அலைச்சலோடும் நகர்த்தி, மற்றொரு பகுதியை ஆழமாகவும் மெதுவாகவும் நகர்த்தும் இயக்கமே கவிதைக்குள் இசையாக உருவாகிறது என்ற இந்த அவதானிப்பு, “தட்டையாய் இருந்த வரிகள் உதிர்த்து நடனமாட தொடங்கின” போன்ற வரிகளின் ஓசை இயக்கத்தை விளக்குவதாக அமைந்தது.
நீட்சேவின் “இசையில்லாமல் வாழ்க்கை ஒரு பிழையாகும்” என்ற வாக்கியத்தையும், யுவன் “இசை கேட்காமல் ஒரு காதும் இருக்கக்கூடாது” என்று சொல்வதையும் இணைத்து, இசையை அலங்காரமாக அல்லாமல் வாழ்வைத் தாங்கும் அடிப்படை அனுபவமாகப் பார்க்கும் இந்தப் பொது நிலைப்பாட்டையும் விவரித்தார். இறுதியில், யுவனின் கவிதைகளை இரண்டு விதமாக வாசிக்கலாம் என்ற முடிவை கார்த்திக் திலகன் முன்வைத்தார். அர்த்தம் தேடும் மனதால், அல்லது இசை கேட்கும் மௌனத்தால். இந்த இரண்டும் சந்திக்கும் இடத்திலேயே அவரது கவிதையின் தனித்த ஒளி பிறக்கிறது என்பது அவரது கட்டுரையின் இறுதி வரி.
சாகிப்கிரானின் நுண்பார்வை: கிளியின் அடுக்குகள்
தத்துவார்த்த கவிஞராக அறியப்படும் சாகிப், யுவனின் கவிதைகளைச் சொற்களின் சிக்கனம் என்ற கோணத்தில் அணுகினார். சாகிப் “கிளி” பற்றிய கவிதையை விவரித்தார். “கிளி என்று சொன்னால் பறவையைக் குறிக்கலாம், பச்சையைக் குறிக்கலாம், மூக்கைக் குறிக்கலாம், பெண்ணைக் குறிக்கலாம், கூண்டு சிறையைக் குறிக்கலாம், சமயத்தில் அது கிளியையும் குறிக்கலாம்” என்ற வரிகளை மேற்கோள்காட்டி, ஒரு கவிதை வாசிக்கும்போதே புரிய வேண்டிய அவசியமில்லை, புரிவதற்கு எந்த ஒரு கணத்தையும் எவ்வளவு காலமும் எடுத்துக்கொள்ளலாம் என்ற யுவனின் கருத்தையும் இணைத்துச் சொன்னார். இந்தக் கவிதையின் ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் நமக்கு வேறு வேறு அர்த்தத்தை உணர்த்தும் வல்லமை கொண்டது என்பதே சாகிப்கிரானின் மிக முக்கியமான அவதானிப்பு.
யுவனின் குறுங்கவிதைகள் தமிழ் தெரிந்த யார் ஒருவருக்கும் படித்துக் காட்டினால், அவருடைய தோலில் கை போட்டுக்கொள்வது போல அந்தக் கவிதை உணர்வை உருவாக்கிக் கொடுக்கும் என்று சாகிப் விவரித்தார். “முட்டை ஓட்டின் விரிசல் வழி நீளும் பிஞ்சி அழகுக்கு முதல் உணவாய்க் கிடைக்கிறது ஒரு துளி ஆகாயம்” போன்ற கவிதைகள், ஆரம்பத்தில் எளிமையாகத் தோன்றி, முடியும்போது ஒரு பிரம்மாண்டத்தை உருவாக்கும் திறன் கொண்டவை. பிஞ்சு அழகுக்கு ஓர் இன்ச் மேல் ஆகாயத்தைக் கீழிறக்கும் ஒரு பெரிய மாயத்தை அந்தக் கவிதை செய்கிறது என்பது அவரது விளக்கம். இதற்கு நேர்மாறாக, “என் நரம்புகள் அதிக நீளமில்லை, ஓரங்குலம் தான், பூமிப் பந்தின் விட்டத்திற்கு வெளியே ஓரங்குலம்” போன்ற கவிதைகள், சிறியதிலிருந்து பெரியதற்கும், பெரியதிலிருந்து சிறியதற்கும் சில வினாடிகளில் பிணைப்பை உருவாக்கும் மாயங்களைச் செய்பவை என்று விவரித்தார்.
நெடுங்கவிதைகள் இதற்கு நேர் மாறாக, ஒரு தனி மாய உலகத்தையே திறக்கிறது என்றும், அது ஒரு நாவலுக்குள் நுழையும்போது அந்த உலகத்திற்கு நாம் ஆட்படுவதைப் போலவே, யுவனின் நெடுங்கவிதைகளும் அந்தக் கவிதை உலகத்திற்குள் நம்மை ஈர்க்கும் மாயத்தைச் செய்கின்றன என்று ஒப்பிட்டார். இப்படி இரு வேறுபட்ட முகங்களையும் ஒரே சமயத்தில் கொண்டிருக்கும் ஒரு பன்முக இலக்கிய ஆளுமையாக யுவனை அடையாளப்படுத்திச் சாகிப் தன் உரையை நிறைவு செய்தார்.
ஷாஅ வின் தொகுப்பு வாசிப்பு: இமேஜ்இயக்கம்
ஷாஅ தன் உரையை இன்னும் தனிப்பட்ட, உரையாடல் தன்மையுடன் அணுகினார். யுவனின் கவிதைத் தொகுப்பை முழுமையாக வாசிக்கும்போது, “இமேஜ்”(சாயல்) உருவாக்கச் செயல்பாட்டைத் தான் அடையாளம் கண்டதாக விவரித்தார். ஒரு மூலப் பிம்பத்திலிருந்து இன்னொரு பிம்பம் தொடர்ந்து பிறப்பது போன்ற இயக்கம் யுவனின் கவிதைகளில் தொடர்ந்து நிகழ்வதாகவும், யுவனுக்கு அடையாள ரீதியாக முன்வைக்கப்படும் ஒரு படிமம் உள்ளுக்குள்ளிருந்து அசைந்துகொண்டே இருக்கும் (விசில் அடிக்கும்போது உள்ளே அல்லாடும் ஃபிப்பிள் பால் போல) யுவனின் இமேஜ்கள் அனைத்தும் நம்மோடு இரு தனித்தனி முனைகளுக்கு இடைவெளியில் செயல்படுகின்றன, என்றார்.
எம். யுவனின் தீராப் பகல் தொகுப்பில் கவிதை ஒன்றின் கடைசி வரி, யுவன் கவிதைகளின் மையமாக இருக்கும் ஒரு கேள்வியாக ஷாஅ முன்வைத்தார். “அந்த ஆப்பிள் கடிபடும்முன் நாம் எங்கிருந்தோம்?” என்ற கேள்வி. ஈவ் ஆப்பிள் கடித்த கதையை மையமாகக் கொண்டு, அதற்கு முன்பே பெரிய உயிர்த்திரள் உருவாகியிருந்தது என்று சொல்ல வரும்போது, “கடிபடுவதற்கு முன்பு நாம் எங்கே இருந்தோம்?” என்ற இந்தக் கேள்வி அதிர்ச்சி தரக்கூடிய கேள்வியாக இருப்பதாக ஷாஅ குறிப்பிட்டார். இந்தக் கேள்வியை மீட் பண்ணியே ஆகவேண்டும், சும்மா போகிற போக்கில் ஒதுக்கிச் செல்ல முடியாத ஒன்று அது என்பது அவரது கருத்து. இதற்கு அடுத்தபடியாக அந்தத் தொகுப்பில் மற்றொரு கவிதையில் ”கடைசியாய் நானும் என்ன ஆவோம்?” என்ற இன்னொரு கேள்விக்கும் இடைவெளியில் பெயர்களும் அடையாளங்களும் சூட்டியவர்களின் வழி தோன்றல்களும் கடைசியில் என்ன ஆகும் என்ற கேள்வியையும் இணைத்து, வாழ்க்கை ஒரு நூல் (thread) போல இருப்பதாகவும், அந்த நூலில்தான் யுவன் எல்லா இமேஜ்களையும் கொண்டு வந்து வைப்பதாகவும் ஷாஅ விவரித்தார். இங்கு என்னவாக இருந்தோம், என்ன ஆவோம் என்பதை அறிவியலும் மெய்யியலும் ஏற்கனவே இருப்பதினை அறியும் ஆய்வும் விழைவும் ஒன்றிணையும் புதிய ஒளியில் காணக் கிடைக்கலாம் என்றும் சொல்லி வைத்தார்.
ஒவ்வொரு கவிதையிலும் ஏராளமான காட்சிகளைக் கொண்டு வந்து, ஒவ்வொரு காட்சியும் ஒன்றுக்கொன்று பின்னலிட்டு, “இதுவா அதுவா?” என்ற கேள்விகள் மூலமாக இமேஜ்களை வைத்து அடுக்கிக்கொண்டே செல்வதன் மூலம் நமக்குப் புதிய சாத்தியங்களை உருவாக்கிக் கொடுக்கிறார் யுவன் என்று ஷாஅ கூறினார். இருப்பினும், இந்த அலைச்சலுக்கு (restlessness) பின்புலத்தில், ஓர் அமைதி நெடிய வாழ்வில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். ஏதோ ஒரு டீப் சீ போல, அமைதி உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. பல உட்பிரிவுகள் வைத்துள்ள ’நான், நீ மற்றும் நாம்’ என்ற நெடுங்கவிதை எழுதியபொழுது கவிஞன் பித்து நிலையில் மட்டுமே எழுதி இருக்க முடியும் என வியந்தார்.
இறுதியாக, ஆரம்பகாலக் கவிதைகளில் இருந்த “நான்” உணர்வு, பிற்காலக் கவிதைகளில் இருக்கிறதா என்பதில் தனக்குச் சந்தேகம் இருப்பதாக ஷாஅ குறிப்பிட்டார். தீவிரமான இலக்கிய வடிவத்தில் இருக்கும் ஒருவர் இன்னொரு வடிவத்திற்குச் செல்லும்போது ஏதோ ஒரு தர்க்கம் அதன் பின்னால் இருக்கும். யுவனின் தர்க்கமே அவரது எல்லாக் கவிதைகளையும் இயக்குகிறது என்றும், அந்தத் தர்க்கம் சில கணங்களில் கவிதையைத் தாண்டி விலகிச் சென்று, உரைநடையை நோக்கி நகர்கிறது என்றும் அவரது கருதுகோளை முன்வைத்தார். இதை யுவனிடமே கேட்டுத் தீர்க்குமாறு விட்டுவைத்தார்.
யுவனின் குரல்: வரையறைகளை மறுத்தல்
நிகழ்வின் இரண்டாம் பாதி யுவனுடன் நேரடியாக உரையாடிய அமர்வு. இது கருத்தியல் விவாதத்தை விட, படைப்பு செயல்பாட்டின் அன்றாட யதார்த்தத்தைப் பகிர்ந்துகொள்ளும் நேர்மையான, நகைச்சுவை கலந்த உரையாடலாக அமைந்தது.
கவிதை என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு அளித்த பதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. கவிதை என்பது எழுதுபவனுக்கும் வாசிப்பவனுக்கும் இடையே ஒரு “மின்முனை” தொடும் தருணம் என்று விவரித்தார். எழுதுபவன் அனுபவம் என்ற ஒரு முனையிலும், வாசிப்பவன் இன்னொரு முனையிலும் இருந்து, அந்தச் சர்க்யூட் நிறைவடையும் இடத்திலேயே கவிதையின் இருப்பு (presence) தீர்மானிக்கப்படுகிறது என்றார். இதை வெற்றி, தோல்வி என்ற வகைப்பாட்டால் அளக்க முடியாது, மாறாக அதன் “பிரசன்ஸ்” (Presence) மட்டுமே முக்கியம் என்பது அவரது கருத்து. நவீனத்துவம், பின்நவீனத்துவம், செவ்வியல் என வகைப்படுத்துவதெல்லாம் விமர்சகர்களின் வேலை என்றும், எழுதுபவனுக்கும் வாசிப்பவனுக்கும் அந்தக் கவலை தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
தத்துவமும் கவிதையும்
தத்துவம் கவிதையில் “அவுட்டேட்” ஆகிவிட்டது என்ற பொதுவான வாதத்தைச் சாகிப்கிரான் முன்வைத்த கருத்தை யுவன் மறுத்தார். தத்துவம் வாழ்க்கையின் எந்த முனைக்கும் உபயோகப்படாது என்று தூக்கியெறியப்பட்ட விஷயம், அது கவிதையிலிருந்தும் தூக்கியெறியப்பட வேண்டும் என்று சொல்ல முடியாது என்றார். வாழ்க்கையில் என்னென்ன அவசியப்படுகிறதோ, அவ்வளவுக்கும் கவிதைக்குள் இடம் உண்டு ஆனால் அது ஒரு தத்துவப் பிரசாரமாகவோ, ஒரு கட்டுரைத் துண்டாகவோ இல்லாமல் கவிதார்த்தமாக இடம்பெறுவதே ஒரே நிபந்தனை என்றார். கவிதைக்குள் தன்னியல்பாக ஒரு தத்துவப் பார்வை எழுந்து வருமானால் அதை எதிர்க்க யாருக்கு உரிமையிருக்கிறதென்றக் கேள்வியை எழுப்பினார்.
இந்தப் பொது நோக்கை விரிவுபடுத்தி, எதார்த்தவாதம் இறந்துவிட்டது என்று 1980களில் சொல்லப்பட்டது, ஆனால் இன்று வரை உலகம் முழுவதும் எதார்த்தவாத எழுத்துகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன என்பதை உதாரணமாக முன்வைத்தார். ரேமண்ட் கார்வரின் எழுத்து மாஜிக்கல் ரியலிசம் அல்ல, எதார்த்தவாத எழுத்தே என்றும், புதிய வகைமை ஒன்று வந்த உடனே பழைய வகைமை மறைந்துபோவதில்லை, மாறாக அது தன்னை இன்னும் கூர்மைப்படுத்திக் கொள்கிறது என்றும் சொன்னார்.
செய்யுளும் கவிதையும்
சங்க இலக்கியத்தில் உள்ள செய்யுள்களை எல்லாம் கவிதை என ஏற்காததற்கான காரணத்தையும் விரிவாக விளக்கினார். உரைநடை இல்லாத காலத்தில் யாப்பின் வழியாக மனையடி சாஸ்திரம் முதல் மாட்டு வாகனம் வரை எல்லாமே எழுதப்பட்டிருக்கின்றன என்றும், அதனால் தமிழில் எது கவிதை, எது கவிதை அல்லாதது என்பதற்கான ஒரு தெளிவான கூறுவரையறை தேவை என்றும் வலியுறுத்தினார். “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” போன்ற வரிகளில் புத்திசாற்றுவது இருக்கிறதே தவிர, தனக்குத் தெரியாத புதிய நுண்ணுணர்வைத் தன்னிடம் கடத்தும் எந்த ஒரு விஷயமும் இல்லை என்றார். கவிதை என்பது ஒரே நேரத்தில் மொழியும் பொருளும் உருவமும் இணைந்த ஒரு முழுமை என்றும், இந்த மூன்றில் எது காம்ப்ரமைஸ் ஆனாலும் அது தன் “கவிதை ஸ்டேட்டஸ்” -லிருந்து இறங்குகிறது. இருப்பினும், ஔவையாரின் “எறும்புக்கும் தன்னுடம்பு எஞ்சான்” போன்ற வரிகளை உதாரணமாகக் காட்டி, செய்யுள் வடிவத்தில் எழுதப்பட்டவை என்றாலும் அவை ஒரு பெரிய “ரெவெலூஷனை” முன்வைத்தால் அவை கவிதையே என்று ஒப்புக்கொண்டார். காட்சி சித்தரிப்பு மட்டுமே இருந்தால் போதாது, உணர்வும் சேர்ந்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கும், அது ஒரு பொதுவான போக்கிலிருந்து விலகிச் செல்லும் ஒரு தனித்துவப் புள்ளியில்தான் தங்கியிருக்கிறது என்றார்.
மொழிபெயர்ப்பு அனுபவங்கள்
ஜிம் கார்பெட் நூலை மொழிபெயர்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். ஒரு பாத்திரத்தை “அங்கிள்” என்று ஆசிரியர் அழைக்கும்போது, அதை “அவன்” என்று மொழிபெயர்க்க முடியாது என்பதும், அப்படி ஒரு சொல் மாறும்போது மொத்தத் தொனியும் மாறிவிடும் என்பது ஒரு சிக்கல். ஆங்கிலத்திற்கு இயல்பான செயப்பாட்டு வினை (passive voice), தமிழுக்கு இயல்பான ஒன்றல்ல, முழுக்க முழுக்கச் செயப்பாட்டு வினையை உபயோகப்படுத்த வேண்டியதில்லை. செயப்பாட்டு வினையை மாற்றியவுடன் தொனி மாறி, தமிழ் மொழிக்கு நெருங்கி வந்துவிடுகிறது. மூல மொழியின் அழகை அப்படியே இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்ல முடியாது என்றாலும், அது மொழிபெயர்ப்பாளரின் வேலையும் இல்லை என்றும், தமிழுக்குப் புதுவிதமான சொல்முறையை அறிமுகப்படுத்துகிறோம் என்று யாரும் கிளைம் பண்ண வேண்டியதில்லை, தமிழில் இருக்கும் சொல்முறையை நல்லபடியாகப் பயன்படுத்தினாலே போதும் என்று தெளிவுபடுத்தினார்.
“லெமன்” (lemon) என்ற அமெரிக்க ஸ்லாங் சொல்லை “உதவாக்கரை” என்று மொழிபெயர்த்த அனுபவத்தையும் விவரித்தார். இந்த மொழிபெயர்ப்பு நேரடியாக அகராதியில் கிடைப்பதல்ல, மாறாக அமெரிக்க ஸ்லாங் அகராதிகளில் தேடித் தேடி கண்டறிந்த ஒரு பொருள் என்றும், சாய்ஸ் ஆப் வேர்ட்ஸ் (choice of words) மொழிபெயர்ப்பாளரின் தனிப்பட்ட முடிவு என்றும், ஆனால் ஒரு ஸ்லாங்கை மொழிபெயர்க்கும்போது இலக்கு மொழியிலும் அது ஒரு ஸ்லாங்காகவே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உரைநடைக் கவிதை
சார்லஸ் சிமிக் போன்ற கவிஞர்களின் உரைநடைக் கவிதைகள் தன்னைப் பாதித்ததையும், தமிழில் இந்த வடிவம் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே இருப்பதையும் பகிர்ந்துகொண்டார். இலக்கணத்தை விட்டு வெளியில் வந்து, தொடர்ந்து அந்த இலக்கணத்தையும் விட்டு, சாராம்சம் மட்டும் போதும் என்று மனம் நினைக்கும்போது உரைநடைக் கவிதை உருவாகிறது என்றார். இது ஒரு கதை மாதிரி தோன்றினாலும், முற்று வாக்கியங்களால் ஆனாலும் கவிதையாக மட்டுமே பொருள்படக்கூடிய ஒன்று என்பது அவரது வரையறை. கவிதைக்கு ஓசை நயம் அவசியமா என்ற கேள்விக்கு, மனசுக்கு அது தேவை என்றும் காதுக்கு அல்ல என்றும் ஒற்றை வரியில் தன் பதிலைச் சுருக்கினார். “மியூசிக்காலிட்டி” என்பது கவிதைக்குள் செயல்படும் ஹார்மனி (harmony), ஒத்திசைவு சார்ந்தது என்றும், அதுவே கவிதையாக நமக்கு ஒலிக்க வைக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.
அனுபவத்தை உருவாக்குவதா, பதிவு செய்வதா?
இந்தக் கேள்விக்கு நுட்பமான பதிலை அளித்தார். இலக்கியமே ஒரு “யூகஅனுபவம்” (imagined experience) தான் என்றும், அதை நிகழ்த்திப் பார்த்துக்கொள்ள வேண்டியது வாசகனின் வேலை. அனுபவம் என்பதே மோனோலித்திக்கானது (monolithic) அல்ல என்றும், ஒரு நிகழ்வை நாம் எந்த அளவுக்கு உள்ளுக்குள் அனுமதிக்கிறோமோ, அந்த அளவுக்கே அனுபவமாக மாறுகிறது. ஒரு கெட்டிலில் இருந்து தண்ணீர் ஊற்றும்போது, அதன் சத்தமா, கையின் எடை உணர்வா, அல்லது கால்களில் தெறிக்கும் நீரா எது அனுபவம் என்று வரையறுக்க முடியாது அனுபவம் என்பது நிகழும் போதே தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு கணம் என்றார்.
கவிதையிலிருந்து புனைவுக்கு
கடந்த முப்பது ஆண்டுகளில் அதிக அளவு கவிதைகள் எழுதாததற்கான காரணத்தை விளக்கும்போது, தான் திட்டமிட்டு கவிதை எழுதுவதில்லை என்றும், ஒரு கனவு வருவதைப் போலவே கவிதையும் தானாக வர வேண்டும் என்று காத்திருப்பதாக நேர்மையாகப் பகிர்ந்துகொண்டார். தன் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாதியில் புனைவுக்கு அதிக முனைப்பு கொடுத்ததால் இயல்பாகவே கவிதைக்கான வெளி குறைந்ததாகவும் சொன்னார். இருப்பினும், தனக்கு மிக நெருக்கமான, இன்றளவும் சவாலாகவே தென்படும் வடிவம் கவிதை தான் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
எழுதும்போதே குழப்பம்
கவிதை எழுத எழுத தனக்குக் குழப்பம் அதிகரிக்கிறது என்று யுவன் ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு படைப்பையும் தொடர்ச்சியாக ஒர்க் பண்ணும்போது, தான் நினைத்த “பெர்பெக்ஷனை” (perfection) நோக்கி நகர நகர, அந்தப் பெர்பெக்ஷனும் அதே தூரத்தில் நகர்ந்துகொண்டே இருக்கிறது. நவீனத்துவம் கற்றுத் தந்த “கச்சிதம்” ஒரு பக்கம், பின்நவீனத்துவம் முன்வைக்கும் “மையம் அழிந்த, சிதறலான எழுத்து” இன்னொரு பக்கம் என, படைப்பாளி தன் காலத்திலேயே பல முனைகளுக்கிடையே இயங்குவதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்று விளக்கினார். இந்த “அதிருப்தி” இருக்க இருக்கத்தான் தொடர்ந்து ரீரைட் செய்யவும், எடிட் செய்யவும் முடிகிறது என்றும், அந்த அதிருப்தியே படைப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
தொகுத்துக்கொள்வதா, சிதறவிடுவதா?
வாசிப்பு முறை குறித்த ஒரு கேள்விக்கு, தான் தொகுத்துக்கொள்வதில்லை, எழுதும் போது தொகுத்துக்கொள்ள முடியாது என்றும், அது ஒரு ட்ரான்ஸ் (trance) செயல்பாடு போலவே நடந்துகொண்டே இருக்கும். வாசகர்கள் தொகுத்துக்கொள்வதும் தொகுக்காமல் விடுவதும் ஒவ்வொருவரின் வாசிப்புத்தேர்வு என்றார். தொகுப்பது வரலாற்றோடு ஒப்பீடு செய்வதற்கான அடிப்படையைத் தரும், தொகுக்காமல் இருப்பது ஒவ்வொரு தருணத்தையும் புதிதாக அனுபவிக்கும் சுதந்திரத்தைத் தரும், இதில் சரி, தவறு என்றில்லை, அவரவர் விருப்பம் சார்ந்தது. எதிலும் பொருந்தாமல் சுழலக்கூடிய தன்மையும் பித்துநிலைதான் என்று விவரித்த வகையில், ஒரு புராணிக இமேஜும் ஒரு கான்டெம்பரரி (contemporary) இமேஜும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் அருகருகே வைக்கப்படுவது தொகுப்பதற்கு நேர்மாறான ஒரு படைப்பு முறை என்று விளக்கினார்.
நிகழ்வின் இறுதிப் பகுதியில், உலக அளவில் இன்று பெண்கள் ஆண்களை விட அதிகமாகக் கவிதையும் புனைவும் எழுதி வருவதை ஒரு முக்கியமான மாற்றமாகச் சுட்டிக்காட்டினார். ஆண்களுக்கு “ஐடியாஸ்” மீதான ஆர்வம் அதிகரித்து, “ஆர்ட்” மீதான ஈடுபாடு குறைந்திருப்பதை ஒரு சாத்தியமான காரணமாக முன்வைத்தார். இது அவதானிப்பு மட்டுமே என்பதாகச் சொன்னார்.
இங்குப் புரிதல் என்ற சொல்லே மறுபரிசீலனைக்கு உட்படுகிறது. ஒரு கவிதையைப் புரிந்துகொள்வது அதன் பொருளைத் தெரிந்துகொள்வது மட்டுமல்ல. ஒரு காட்சி நம்முள் தங்குவது, ஒரு வரி எதிர்பாராத வேளையில் நினைவுக்கு வருவது, ஒரு சொல் நம் சொந்த அனுபவத்துடன் இணைந்து புதிய அர்த்தம் பெறுவது ஆகியவையும் கவிதையைப் புரிந்துகொள்ளும் முறைகள்தான். சில நேரங்களில் புரிதலுக்கு முன்னால் உணர்வு வருகிறது, சில நேரங்களில் உணர்வுக்குப் பின்னால் சிந்தனை வருகிறது. கவிதை இந்த இரண்டுக்கும் இடையே இடத்தை உருவாக்குகிறது.
இதனால்தான் யுவன், கவிதை வாசிக்கும் போதே முழுமையாகப் புரிந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்காத கவிஞராக வெளிப்படுகிறார். ஒரு கவிதையைப் புரிந்துகொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட கணமே போதுமானதாக இருக்கலாம், சில சமயங்களில் அது நீண்ட காலத்துக்குப் பிறகே வாசகருக்குள் திறக்கலாம் என்ற அவரது கருத்து உரையாடலில் வெளிப்பட்டது.
இன்றைய வேகமான வாசிப்பு உலகில் இந்தக் கவிதைப் பார்வை இன்னும் முக்கியமானதாகிறது. உடனடியாகப் புரிந்துகொள்ள வேண்டும், உடனடியாகத் தீர்மானிக்க வேண்டும், உடனடியாகப் பொருளைச் சொல்ல வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு எதிராக யுவனின் கவிதை நம்மைச் சிறிது நேரம் நிறுத்துகிறது. அந்த நிறுத்தத்தில்தான் வாசிப்பு நிகழ்கிறது. அந்த வாசிப்பில்தான் கவிதை மீண்டும் பிறக்கிறது.
ஒரு கவிதையைப் படித்து முடித்த பிறகும் அது நம்முள் தொடர்ந்து இயங்கினால், உண்மையில் முடிந்த கவிதையா? யுவனின் கவிதைகள் இந்தக் கேள்வியை நம்மிடம் விட்டுச் செல்கின்றன. அதற்கான பதிலை அவை தருவதில்லை. அந்தப் பதில் தேடப்பட வேண்டிய இடத்தையும் அவை காட்டுவதில்லை. நம்முடன் சேர்ந்து அவையும் காத்திருக்கின்றன. அந்தக் காத்திருப்பே அந்தத் தீராத இருளே யுவனின் கவிதையின் தனித்துவமான வெளிச்சமாக இருக்கிறது.
இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடல், கவிஞரின் படைப்புலகை வெறும் விமர்சன வகைப்பாடுகளால் அடைக்காமல், கவிதையியல் குறித்த பகிர்வால் நிறைந்தது . மூன்று வெவ்வேறு உரையாசிரியர்களின் கார்த்திக் திலகனின் உலக மரபு சார்ந்த ஒப்பீட்டு அணுகுமுறை, சாகிப்கிரானின் நுண்ணியச் சொல் பகுப்பாய்வு, ஷாஅ வின் தனிப்பட்ட, தொகுப்பு வாசிப்பு அணுகுமுறை முக்கோணத்தில் யுவனின் கவிதைகள் பலவிதமான டார்ச் ஒளிகளால் மறுஉருவாக்கம் பெற்றன.
ஆனால் நிகழ்வின் மிகப் பெரிய பலம், யுவன் தானே தன் படைப்பு நிலைகளை வெளிப்படையாக, எந்தத் தயக்கமும் இல்லாமல் விளக்கிய விதத்தில்தான் இருந்தது. வரையறைகளை மறுத்தல், தத்துவத்தைக் கவிதைக்குள் அனுமதிக்கும் தன்னிச்சையான தேர்வு, மொழிபெயர்ப்பின் நுட்பமான சவால்கள், படைப்பு செயல்பாட்டின் தவிர்க்க முடியாத குழப்பங்கள் இவை அனைத்தும் ஒரு கவிஞனின் அகவெளியை நேரடியாக நமக்கு அறிமுகப்படுத்தின.
தீரா இருள் என்று சொன்னதைப் போல, யுவனின் கவிதைகள் நமக்கு விடைகளைத் தராமல், கேள்விகளின் அருகில் நம்மை ஊசலில் அமரவைப்பவை. ஒளியும் இருளும் ஒன்றுக்கொன்று தேவைப்படுவதைப் போலவே, தெரிந்ததும் தெரியாததும் ஒன்றையொன்று வரையறுக்கின்றன என்பதே இந்த முழுக் கவிதை உலகின் அடிப்படைத் தத்துவம் எனலாம். இந்த நிகழ்வு, அந்தத் தீரா இருளின் நடுவே நமக்கு இன்னும் சில கேள்விகளைத் திறந்துவிட்டிருக்கிறது. அதுவே ஒருவேளை இலக்கியம் நமக்குச் செய்யக்கூடிய மிகப் பெரிய பணியாகவும் இருக்கலாம்.
தொகுப்பு : இன்பா
________________________________________
நிகழ்வைத் தொகுத்து வழிநடத்தியவர்: பூவிதழ் உமேஷ் | கட்டுரை வாசிப்பு: சிவா (கார்த்திக் திலகன் சார்பாக) | உரையாற்றியவர்கள்: சாகிப், ஷாஅ | ஏற்பாடு: திணைகள்.காம் | நாள்: 05.09.2026 மாலை 6 மணி
எம்.யுவன்:
யுவன் சந்திரசேகர் (1961) இயற்பெயர் சந்திரசேகரன். மதுரை மாவட்டம் சோழ வந்தானுக்கு அருகிலுள்ள கரட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கிறார். பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். 2023ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுபெற்றவர்.




