1) காளி பூஜை
எழுத்தின் ரீங்காரம்
படியுமிடத்தில்
காளி நர்த்தனமிடுவாள்
எழுத்துருவாக்கமென்பது
மூளைக்குள்
நியூரான்கள் விளக்கேற்ற
கபாலத்துக்குள் நடக்கும்
காளி பூஜை
2) அச்சுக்காரனே அச்சுக்காரனே
எழுத்துக் கூட்டிப் படிக்க முடியாத
பச்சை வாசகங்கள் இந்த மரங்கள்
கூட்டும் போது இருக்கும்
அர்த்தங்கள்
படிக்கும்போது காற்றில்
கலைந்து விடுகின்றன
பூமி மீது இவற்றை ஆசையாக
அச்சடிக்கும் அச்சுக்காரனே
ஏன் இவ்வளவு சிரமப்படுகிறாய்
என்னிடம் சொல்ல நினைப்பவற்றை
கனிகளில் எழுதி வையேன்
நானதைச் சுவைத்துச் சுவைத்துப்
புரிந்து கொள்கிறேன்
3) நாங்கள்
போக்குவரத்துச் சமிக்ஞைகளில்
பழுக்கும்
மஞ்சள் பச்சை ஆரஞ்சு வண்ண
காலப் பழங்களின் ருசி அறியாமல்
வளர்ந்தவர்கள்
நிழல் வேகும் வெய்யிலில்
மஞ்சள் வண்ண உப்பு நீர்
சித்திரங்களை ஒன்றுடன் ஒன்று
மோத விட்டு ரசித்த கலை ஞானிகள்
கைபேசி கடலின்
ஆபாச அலைகளில் சிக்காத
கருப்பு வெள்ளை
தலைமுறை பிள்ளைகள்
மழையின் விரல்களை
இறுக பற்றிய படி
வீதிகளில் அலைந்த
விசித்திரச் சித்தர்கள்
பழைய சோற்றின்
வெங்காய வதக்கலை
ஈயக் கிண்ணிகளில் உண்டு
உடல் வளர்த்த
ஏரிக்கரை வாசிகள்
4) குழந்தை அழும்போது
எனக்குள் ஒரு குழந்தை
குழந்தை அழும்போது
கூடவே என் கண்களும்
குழந்தைகளாகி அழுகின்றன
அத்தனை மயிர்பீலிகள் தாலாட்டியும்
அழுகை நிற்கவில்லை
மாயா இப்போது
உன் வேலையைத் தொடங்கு
இமைகளை மூடி
அதற்கு முலைப்பாலூட்டு
காட்சிகளைக் காற்று மணிகளாக
இசைத்துச் சிரிப்புக்காட்டு
இதயத்துக்குள் இருக்கும்
வானத்தில்
அன்பின் துடிப்பை விரித்து விரித்து
உயிரின் பேரிசையை
துவக்கி வை
வா மாயா வந்து
என் கண்களைத் தத்தெடுத்துக் கொள்
5) வெளிச்சத்தை மகிழ்ச்சியாக
மாற்றும் மேஜிக்
அந்த வினோத மகிழ்ச்சி
என்னுள் நிகழ்வதைப் பற்றி
நான் எப்படிச் சொல்வேன்
மூளையின் செல்கள்
பலூன்களாய் ஒன்றுடன் ஒன்று உரசி
பாடல்களை எழுப்புகின்றன
கண்ணாடி அணில்கள்
நரம்புகளெங்கும்
முடிச்சுகளுக்கு இடையே
குறுகுறுவென்று ஓடுகின்றன
ஒளியிலா நிழலிலா இசையிலா
எதில் மூழ்குவது என்று
கண்கள் மயங்குகின்றன
அதிகாலையை
சிறு சிறு துண்டுகளாக்கி
கடற்கரையில்
ஒரு கட்டிடத்தை எழுப்புகிறேன்
அதன் ஜன்னலில் நுழைந்த
சூரியக் கதிர்களின் மேல்
பனித்துளிகள் அமர்ந்து கொண்டு
வெளிச்சத்தை
மகிழ்ச்சியாக மாற்றும் மேஜிக்கைச் செய்து பார்க்கின்றன
தெப்பலாக நனைந்த உடலோடு
வாசலில் நின்று
கதவைத் தட்டுகிறேன்
உள்ளிருந்து நானே
கதவைத் திறக்கிறேன்
வெளியில் இருக்கும் நான்
தலையைச் சிலுப்புகிறேன்
உள்ளிருந்து கதவைத் திறக்கும்
என் முகத்தின் மீது
பூத்துளிகளாய்த் தெறிக்கின்றன நிமிடங்கள்
இருவரும் சிரிப்பை நீட்டி
அணைத்துக் கொள்கிறோம்
பிறகு சிரிப்புக்குள் மூழ்கி
ஒன்றாகி விடுகிறோம்
எங்களுக்கிடையே இருந்த
இடைவெளி தூணாகக் குறைந்து
கோடாகக் குறுகி
பாம்பாகத் தரையில்
நழுவி செல்லுகிறது
அதன் உடலெங்கும்
மகிழ்ச்சியின் வழுவழுப்பு
6) நொடி நேர அரசாங்கம்
கம்பீரமாக எழுந்து நிற்கும்
காற்றின் முன்பு தவிர
நான் யாரிடமும் மண்டியிட
விரும்புவதில்லை
காதலியை விட
தீர்க்கமாகத் தழுவுகிற நீரிடம் தவிர
யாரிடமும் என்னை ஒப்படைக்க
விரும்புவதில்லை
காற்றாலான கத்தி
நீராலான கோடாரி
இவற்றைக் கைக்கொண்டு
களமாடுவேன்
நீர்க்குமிழிகளின்
நொடி நேர அரசாங்கத்தில்
ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிவேன்
நீரும் ஒளியும் கட்டித் தழுவி
காதலிப்பதை
நொடி நேர மின்னல் பிளவில்
ஒரு நூற்றாண்டை
நுழைக்கும் வித்தையை
விரைவில் கற்றுக் கொள்வேன்
மனிதக் கரங்களை மலை உச்சியில்
பயிர் செய்வேன்
காற்றின் நடனத்தை
மலைகள் கைதட்டி ரசிப்பதையும்
கண்ணாரக் காண்பேன்
7) வலுவான புன்னகை
சிலைகளின்
விசித்திரமான நடவடிக்கைகளைக் கவனத்திருக்கிறேன்
இயங்காமலே
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்
அதன் இதயம்
ஒளி ஊடுருவாமலே
மலர்ந்திருக்கும் அந்த விழிகள்
கூடவோ குறையாமலோ இருக்கும்
ஒரு வலுவான புன்னகை
இன்னும் நடக்கப் பழகாத
உறுதியான கால்கள்
தியான நிலையில் இருக்குமதன்
பிறப்புறுப்பு என்று அதன் மர்மமான
உடலமைப்புகளைப் பற்றி
யோசித்தபடி
சிலைகள் நிறைந்த பூங்காவின்
சிமெண்ட் சாலையில்
நடந்து செல்கிறேன்
அருகில் மலை அடிவாரத்தின்
குட்டைப் புதற்காட்டில் இருந்து
சிலீரென்று வெடித்துக் கிளம்புகிறது
விசித்திரமான
ஒரு பறவையின் குரல்
– கார்த்திக் திலகன்
