ஒரு கவிதை
தொட்டுணரக்கூடியதாகவும்,
மௌனமாகவும்
உருண்டு திரண்ட
ஒரு கனியைப் போல்
இருக்க வேண்டும்
ஊமையாக,
பெருவிரலின் வருடலால்
தேய்ந்து மழுங்கிய
பழைய பதக்கங்களைப் போல்
இருக்க வேண்டும்
மௌனமாக,
பாசி படர்ந்த சன்னல் விளிம்புகளில்
கைமுறிந்த கல்லைப் போல்
இருக்க வேண்டும்
ஒரு கவிதை
பறவைகளின்
பறத்தலைப் போல
சொற்களற்றதாக இருக்க வேண்டும்
*
ஒரு கவிதை
காலத்தால் அழியாததாக இருக்கவேண்டும்
நிலவு
மேலேறிச் செல்வதுபோல்.
இரவில் பிணைந்திருக்கும் மரங்களை
கிளை கிளையாக நிலவு
விடுவிப்பதைப் போல.
குளிர்கால இலைகளின் பின்னால்
நிலவு நகர்வதுபோல் மனம்
நினைவு நினைவுகளாகத்
தன்னைத் தானே
அவிழ்த்துக்கொள்ளவேண்டும்
ஒரு கவிதை
காலத்தால் அழியாததாக இருக்கவேண்டும்
நிலவு
மேலேறிச் செல்வதுபோல்.
*
ஒரு கவிதை சமமாக இருக்க வேண்டும்:
உண்மையை அல்ல.
துயரத்தின்
ஒட்டுமொத்த வரலாற்றிற்கு
ஒரு வெற்று வாசலும்,
ஒரு மேப்பிள் இலையும் போதும்.
காதலுக்கு
சாய்ந்து நிற்கும் புற்களும்,
கடலுக்கு மேலே
ஒளிரும்
இரு விளக்குகளும் போதும்
ஒரு கவிதை
பொருளுரைக்க வேண்டியதல்ல,
அதுவாக இருக்க வேண்டும்
ஆர்ச்சிபால்ட் மக்லீஷ் எழுதிய Ars Poetica என்ற ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு
ஆர்ச்சிபால்ட் மக்லீஷ் (1892–1982) இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான அமெரிக்கக் கவிஞர், கட்டுரையாளர் மற்றும் நாடக ஆசிரியர்.
கவிதை என்பது கருத்தை விளக்குவதற்கல்ல; அனுபவமாக நிகழ வேண்டியது என்ற நவீன அழகியல் கோட்பாட்டை வலியுறுத்தியவர்.
“Ars Poetica” என்ற அவரது கவிதை, உலகக் கவிதையியலில் மிகவும் செல்வாக்கு மிக்க படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

