எரியும் பிணங்களின்
அதீத வெப்பத்தில் கனன்ற சிதைகள்
கங்கையின் முகத்தை
என் பார்வையிலிருந்து
ஓரளவு மறைத்தன.
வேகமாகச் சேறு சுமந்து சுழலும் நீர்
மிதக்கும் தீபங்களையும்,
நீராடும் உடல்களையும்,
சிதைந்த பிணங்களின் எச்சங்களையும்,
சதை, எலும்பு, சாம்பல் ஆகியவற்றையும்
தன்னோடு சுழற்றிச் செல்கிறது.
மணிகர்ணிகா படித்துரையில்
புனிதமும் துர்நாற்றமும் கலந்த வாசனை
வண்டல் மண்ணிலிருந்தும்
மரச் சட்டங்களிலிருந்தும்
மேலெழுந்து வருகின்றன.
எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில்
மனித உடல்கள்
மெல்லச் சிதைவடைகின்றன.
அவற்றின் எச்சங்களை
அலைந்து திரியும் விலங்குகள்
வேகமாகக் கவ்விச் செல்கின்றன.
சடைமுடியணிந்த
ஒல்லியான சாது ஒருவன்
ஆற்றங்கரையில் மூங்கில் சட்டத்தின்
நுனியின்மீது அமர்ந்திருக்கிறான்
இந்த நள்ளிரவிலும் எவரேனும்
தானம் செய்ய வரக்கூடுமெனும்
கனவுகளோடு .
புரோகிதர்கள் சடங்குகளைச் செய்து
எரியும் மரங்களுக்கும்
இறந்த உடல்களுக்கும்
நெய் வார்க்கிறார்கள்
அந்தத் தீம்பிழம்புகள்
பெரும் ஒளிக்கற்றைகளாக வெடித்து,
பொன்னிறத் தீப்பொறிகளை
அலைகளாய்ச் சிதறவிட்டு,
சுழன்றெழும் நெருப்புச் சுழல்களில்
உயிருடன் ஒரு நாடகம்
சுடுகாட்டில்.
ஒரு சிறுவன் புதிதாக மழித்த
தலையைச் சொறிகிறான்
தொந்தியுடன் ஒருவன்
ஆற்றில் மூழ்குகிறான்
தெருநாய்கள் குரைக்கின்றன
பசுக்கள் முனகுகின்றன
ஒலிபெருக்கிகள் அலறுகின்றன
படித்துறைச் சுவர்களில்
ஒட்டப்பட்ட காந்தியின் சுவரொட்டிகள்
அமைதியையும் அகிம்சையையும் போதிக்கின்றன.
காவியுடையணிந்தவர்கள்
படித்துறையின் படிக்கட்டுகளில்
யோகாசனத்தில் அமர்ந்து
பிரார்த்திக்கிறார்கள்
இத்தனை இரைச்சலிலும்
இத்தனை வணிகத்திலும்
அமைதியைத்தேடும் பிரார்த்தனை
இறுதியில்
உனக்கென்ன தருகிறது?
மணியொலி, சங்கு
மந்திரங்களின் உச்சரிப்பு
நெருப்பு, நீர், படகுகள்
மக்கள் அனைத்தும் கலவையாக
சில மணி நேரங்களுக்குப் பிறகு
அனைத்தும் ஓசையின்றிப் போகிறது.
பல்வேறு டெசிபல் ஒலிகள் ஒன்றிணைந்த
ரீங்காரம் தியான மயக்கத்திற்குள் இழுக்கின்றன
அங்கே இருக்கும் சமநிலை
மனத்தை அசைக்கின்றது.
மழித்த தலையுடன்
மேலாடையின்றி இளையர்கள்
தூயப் பருத்தித் துணியைப்
போர்த்திக்கொண்டு,
சந்தனமும் குங்குமமும்
நெற்றியில் பூசிக்கொண்டு,
சாம்பல் நிரம்பிய
மண் கலயங்களைச் சுமந்தபடி
என்னைக் கடந்து
ஆற்றங்கரையை நோக்கி நடக்கிறார்கள்
எந்தச் சலனமுமின்றி.
இறந்துபோன தந்தைக்கான
இறுதிச்சடங்கை நிறைவேற்றும்
மூத்த மகன்கள் அவர்கள்.
வெள்ளை உடையணிந்த குருமார்கள்
பெரிய வட்ட மூங்கில் குடைகளின் கீழ்
கால் மடக்கி அமர்ந்தபடி
உபநிசத்துகளையும் வேதங்களையும்
இளம் புரோகிதர்களுக்குக் கற்பிக்கின்றார்கள்
வானத்தை நோக்கி வளைந்த
நீண்ட மூங்கில் கம்பங்களில்
ஒளிமயமான விளக்குகள்
பிரம்புகளில் தொங்குகின்றன.
நீத்தார் நினைவஞ்சலிக்காக
கார்த்திகை மாதத்தில்
காசியில் நீராட இறங்கும்
தேவ அப்சரஸ்களுக்கு
வழிகாட்டும் விளக்காக
ரோஜா இதழ்களில் மிதக்கும்
எண்ணெயில் தோய்த்த திரிகள் அசைந்தாட
அலைகளின் மனநிலைக்கேற்ப
தீபங்களை அசைத்தபடி
மிதக்கின்றன
கடும் வெப்பம் தகிக்கும் சிதையில்
மற்றொரு மண்கலயம் உடைகிறது,
மற்றொரு மண்டையோடு வெடிக்கிறது,
மற்றொரு ஆன்மா பறந்துசெல்கிறது.
கரையோரக் கோயில்கள் சில
விழுங்கிக்கொண்டிருக்கும் ஆற்றுக்குள்
மெல்லச் சரிகின்றன
கணிக்க முடியாத பேரலைகள்
காலநிலை மாற்றத்தின் விளைவுகளால்
அழியக்கூடியதையும் அழியாதவற்றையும்
ஒருசேர எடுத்துச்செல்கின்றன.
ஹோலோசீனின் கார்பன் தடம்
தன் முடிவில்லா மரணக் குறிப்பைத்
தொடர்ந்து
எழுதிக்கொண்டிருக்கிறது
சாம்பல் சாம்பலுக்கு
தூசி தூசிக்கு
நீர் கனமான நீருக்கு
வாழ்வு மறுபிறவிக்கு
Burning Ghats, Varanasi என்ற ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு
சுதீப் சென் (Sudeep Sen) ஒரு புகழ்பெற்ற இந்திய ஆங்கிலக் கவிஞர், இலக்கிய ஆசிரியர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆவார். இவர் உலக இலக்கியத்தில் முன்னணி நவீன தலைமுறை குரல்களில் ஒருவராக அறியப்படுகிறார். இரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசு (2021) பெற்றவர்.


