துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்
கொள்கலன் கப்பல்களைப் பார்த்து
கடலில் மேயும்
இரும்பு யானைகள் இவை என்கிறேன்.
உலகம் தின்று முடிக்க முடியாமல்
கரையெங்கும் சிதறிக்கிடக்கும
பேராசைகளின
செவ்வக எலும்புகள் இவை என்கிறான்.
ரயில் நிலையத்தின்
நகரும் படிக்கட்டில் ஏறியபடி
இந்த நகரம்
எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்கிறேன்.
நேற்றைய மனிதர்களின்
தோல்களை உரித்துத் தைத்து
தன்னையே இழுத்துச் செல்லும்
நெடிய பாம்பு என்கிறான்.
அடுக்குமாடிகளின்
ஒளிரும் சன்னல்களைப் பார்த்து
தரையில் குடியேறிய
விண்மீன்கள் இவை என்கிறேன்.
ஒவ்வொரு சன்னலுக்குள்ளும்
ஒரு மீன்தொட்டி
அத்தண்ணீரில் நீந்தும்
மீன்களுக்கு
மனிதர்களென்று பெயர்
என்கிறான் நகரத் துறவி.
மெர்லயன் வாயிலிருந்து
இடைவிடாது கொட்டும் நீரைப் பார்த்து
இந்நகரம்
எப்போதும் தாகமற்றது என்கிறேன்.
தன் கண்ணீரைக்
கடலில் மறைத்துக்கொள்கிறது
என்கிறான் நகரத் துறவி.
காகிதக் கோப்பையில்
அவன் ஊற்றிக் கொடுத்த காப்பியைச் சுவைத்தபடி
இந்தத் தீவின்
மிகப் பழைய மது எது என்கிறேன்.
அதிகாலை நான்கு மணிக்கு
துடைப்பத்தைச் சுவரில் சாய்த்துவிட்டு
யாருமற்ற இருக்கையில்
நிலவைக் கலக்கிக் குடித்துவிட்டு
அமர்ந்திருக்கும் கூன்முதுகுப் பாட்டியின்
மீதிக்கோப்பைதான் என்கிறான்.
பேச்சற்று நிற்கும் என்னை
மறந்தவனைப் போல
கிழக்குக் கடற்கரையில்
கரையொதுங்கிய
ஒரு வெள்ளை ஜெல்லிமீனை
குழந்தையைப் போல்
கைகளில் ஏந்திக்கொள்கிறான்.
வானத்தில்
ஒன்றன்பின் ஒன்றாக
விமானங்கள் பறந்து செல்கின்றன.
அண்ணாந்து பார்த்துவிட்டு
இதில்தான்
உடல்களை மாற்றிக்கொள்கிறோம்
என்கிறான் நகரத் துறவி.
-இன்பா

