1. அன்புமலர்
என் அம்மாவிற்கு
இரண்டு கைகள் இருந்தன
அவை,
அடுப்பில் கொதிக்கும்
எதையோ கிளறின
முறத்தை ஆட்டியாட்டி
பயிர்களைப் புடைத்தன
தேங்காய் நாரினால்
கிண்ணங்களைக் கழுவின
ஊதா நிறத்துச் சோப்பினால்
துணிகளைத் துவைத்தன
மாவில் நீரூற்றிப் பிசைந்து
உருண்டைகளாய் உருட்டின.
என் அம்மாவிற்கு
இரண்டு கால்கள் இருந்தன
அவை வாசலுக்கும் கொல்லைக்குமாய்
நடந்து நடந்து களைத்தன
பித்தளைக் குடங்களை இடுப்பில்
ஏற்றி ஏற்றி இறக்கின
அவித்த நெல்லைக் கொட்டி
சுற்றிச் சுற்றிச் சிலிப்பின
அக்கம்பக்கத் துக்கங்களுக்கு ஓடியோடி
யார் யாரையோ
கட்டிக்கொண்டு அழுதன
என் அம்மாவிற்கு
ஒரு வாய் இருந்தது
அது மூடியே இருந்தது.
2. தொலைந்துபோகும் ரப்பர்பேண்ட்கள்
தேசியமலரின் பெயரைக்
கொண்ட சாலையில்
மயங்கிடாத அந்திப்பொழுது
மலர்ந்து சொரிய
குறுக்காக நின்றுகொண்டிருந்த
போக்குவரத்து விளக்கிற்கிடையே நுழைந்து
‘ஐஸ்க்ரீம்’ வாங்கி வருகிறேனென்று
கடைவாசலில் மகனை
அமரவைத்துவிட்டுச்சென்றேன்.
நீள்வரிசையில் நின்று
தாமதமாகத் திரும்பியபின்
கூட்ட நெரிசலில்
அவனைத்தொலைத்துவிட இருந்தேன்
இதைப் போலவே பலமுறை
கூந்தலிலிருந்து ரப்பர்பேண்ட்கள் என்னையறியாமலே
கழண்டு விழுந்து காணாமல் போயின
இப்படித்தான் பிரியங்களும்
ஒவ்வொன்றாய்த் தொலைந்துகொண்டிருக்கின்றன.
– இன்பா
படங்கள் : AI



