சென்ற மே 21-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்ற இன்பாவின் ‘லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்’ கவிதைநூல் வெளியீடு மற்றும் திணைகள் இணைய இதழ் தொடக்க விழாவில் கவிஞர் பெருந்தேவி முன்வைத்த ஒரு கருத்தாடல் கவனம் பெற்றது. சிங்கப்பூர் தமிழ் படைப்பாளர்கள் தங்களது படைப்புகளுக்கான அங்கீகாரத்துக்கு தமிழக இலக்கியங்களை ஒப்புநோக்கும் மனப்போக்கிலிருந்து வெளிவரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இது மிகச்சரியானதொரு பார்வை என்றே கருதலாம். போலச்செய்யும் போக்கு இலக்கிய படைப்புக்களின் தனித்துவத்திற்கு உலைவைக்கும் போக்கு. உலகெங்கிலும் இன்று தமிழ் இலக்கிய படைப்பாளர்கள் தொழில்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களிலும் பயணிக்கிறார்கள். ஆயினும் இந்தப்படைப்புக்கள் குறித்த பொதுப்பார்வை இவை நேரடியாகவோ சுற்றி வளைத்தோ படைப்பாளர்களின் பூர்வீக மண்சார்ந்தும் மனிதர்கள் சார்ந்தும் வாழ்வியல் நடைமுறைகள் சார்ந்தும் பதிவுசெய்யப்படும் படைப்புக்களாக அமைகின்ற போக்கு காணலாகிறது என்று பேசப்படுகிறது. இலக்கியக் கருத்தாக்கங்களின் தனித்துவம் அவை உருவாகும் மண்ணையும் மனிதர்களையும் வாழ்வியல் அனுபவங்களையும் சிக்கல்களையும் சிறப்புகளையும் பிரதிபலிக்கக்கூடியவையாக அமையும்போது அவை அந்த மண்சார்ந்த இலக்கியமாக மதிக்கப்படுகிறது.
1965-இல் தனிநாடாக உருவான சிங்கப்பூரின் பல இனம் பல மொழிகள் பேசும் பல சமயங்கள் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டு வழமைகள் பின்பற்றப்படும் மக்களின் கூட்டுச்சமூகமாக தனித்தும் ஒன்றித்தும் இலங்கும் இந்நாட்டின் தனித்தன்மையைப் பிரதிபலிக்கும் இலக்கியப்பதிவுகளை உருவாக்குவதும் கட்டிவளர்ப்பதும் இங்கு தொழிற்படும் படைப்பாளர்களின் பொறுப்பும் கடமையுமாகும்.
இவ்வகையில் கவிஞர் இன்பா சிங்கப்பூர் கவிதை வெளியில் ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் படைப்பாளியாகத் தென்படுகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு , வலையுரைகள் என்று தொடர்ந்து எழுத்துவெளியில் இயங்கும் தொழில்முறை தொழில்நுட்பத் திட்ட மேலாளராகப் பணிபுரியும் இன்பா நீண்டநெடிய தமிழ்ப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை உள்வாங்கிய வார்ப்பு . சிங்கப்பூரில் தனது இருப்பைத் தகவமைத்துக்கொண்டிருக்கும் இன்பா கலவைப் பண்பாட்டின் பூங்காவாய்த் திகழும் சிங்கப்பூரின் மனிதர்களையும் சமூகச் சூழல்களையும் இதன் பொருளியல் செழிப்பையும், சிக்கல்களையும் தனது தீட்சண்யப் பார்வையால் கண்டு உள்வாங்கி அதன் அழகியலையும், சந்தோஷங்களையும், சங்கடங்களையும் தனித்துவம் மிளிரும் மண்சார்ந்த கவிதைகளாய்ப் பதிவுசெய்கிறார்.
லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள் தொகுப்பில் வலசைத் திணையின் கீச்சொலிகள் , யாய் திணையின் எச்சங்கள், திணையற மொழிதல், அகத்திணை சொற்களின் சலனங்கள் என்று நான்கு பகுப்புகளில் 72 கவிதைகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு கவிதையிலும் ஊடாடுவது சிங்கை மண் ததும்பும் கவிமனத்தின் நர்த்தனம். இன்பாவின் கண்ணும் கருத்தும் நேர்கோட்டில் இணையும் வரிகளில் பளிச்சிடும் தீட்சணியம் பல கவிதைகளில் தீயெனத் தீண்டுவதையும் தென்றலாய் வருடுவதையும் உணர்வின் கலவையாய் வாசகனின் மனவெளியில் அனுபவிக்க முடிகிறது.
கவிதை வெளியில் அம்மாதான் அன்பும், கனிவும், தியாகமும் நிரம்பியவளாக மரியாதைக்கும் இரக்கத்துக்கும் உரியவள் என்னும் புனிதப் புனைவுத் தொன்மம் வலுவாக இடம்பெற்று அம்மாக்கள் எழுதப்படுவது பெருவழக்கு. அப்பாக்களில் இந்தப் புனிதம் சற்று விலகியே நிற்கிறது. அதிகாரம், பலம், பாதுகாப்பு, கவுரவம் என்பன அப்பாக்கள்மீது ஒட்டிக்கொள்கின்றன. ஆனால் இன்பா அப்பாவைப் பற்றி இத்தொகுப்பின் இரண்டு கவிதைகளில் பேசுகிறார். ‘என் தந்தை என்னைப் பெண்ணாக்கினார்’ என்னும் கவிதை வரிகளில் அப்பாவைக் கொண்டாடுகிறார்.
ஊர் என்னை மண்ணாக்க நினைத்தது
என் தந்தை என்னைப் பெண்ணாக்கினார்
கண்களுக்குக் குறுக்கே கட்டியிருந்த
கடிவாளத்தைக் கழட்டிவீசி
நெற்றிக் கண்ணைப் பதித்தவர்
கழுத்தை நெரிக்கும்
பழமைத் தளையை அறுத்தெறிந்து
என் தந்தை
என்னைப் பெண்ணாக்கினார்
என்பன இன்பாவின் அப்பா பெருமிதம் பேசும் வரிகள்.
‘யார் தந்த சட்டை’ என்னும் இவரது இன்னொரு கவிதையிலும் ஒரு எள்ளல் சிரிப்புடன் அப்பா எட்டிப் பார்க்கிறார்.
வளரும் பிள்ளைதானென
பிறந்த நாளுக்குப் பெரிய சட்டையை
அப்பா எடுத்துக்கொடுக்க
கோபத்தில் கடாசிவிட்டு
வாரக்கணக்கில் பேசாமலிருந்தது
இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது
புகைப்படத்தில் சிரிக்கிறார் அப்பா.
மெய்நிகர் சந்தையில் வாங்கிய பொருத்தமில்லாத சட்டையைக் கண்டு செய்வதறியாது ஏமாந்து நிற்கும் தருணத்தில் அப்பாவின் கரிசனம் இனிய மகளின் இதயத்தில் வருடும் தென்றலாய் நினைவில்.
அம்மாவை இவர் எண்ணிப் பெருமிதம்கொள்ளும் வரிகள் பூடகமானவை. பண்பாட்டுப் பாரம்பரியத்தை ஊட்டிவளர்த்த நல்லாள் அம்மா. அதையே தானும் தன் மக்களுக்கு இங்கு செய்வதாகச் சோறு என்னும் படிமப் பிரதியில் வடித்துக்காட்டுகிறார். ‘சொல்லேர் உழவு’ என்னும் கவிதையில் இவர் காட்டும் பண்பாட்டுக்கண்ணியின் தொடர்ச்சிகுறித்த பதிவு கவனம் பெறுகிறது.
என் பரம்பரை நிலத்தில்
விளைந்த அரிசிதான்
இந்த உலையில்தான்
வரலாறும்
பண்பாடும்
கலாச்சாரமும்
வாழ்வியலும் காய்ச்சப்பட்டன
இந்தச் சோற்றுக்கஞ்சியை
உரிமையோடு எடுத்துவந்து
என் தாய்
எனக்கு ஊட்டினாள்
நான் என் பிள்ளைகளுக்கு ஊட்டுகிறேன்
இந்தச் சோறுதான்
உரமூட்டியது
காதலிக்கத் தூண்டியது
மீண்டுவர வைத்தது
எங்கு சென்றாலும்
நமக்குச் சோறு முக்கியம்
பொருளியல் வளர்ச்சியில் புதுமைகளை நிகழ்த்திக்காட்டி உச்சங்களைத் தொட்டுவரும் சிங்கப்பூரின் அடித்தட்டு மக்கள் பற்றிய கவனம் இன்பாவின் வரிகளில் உணர்வுபூர்வமாகப் பதிவாகிறது.
‘பசிக்காட்டில் திரியும் செங்கிழவி’ என்னும் கவிதை.
இறுகிப்பிழிந்த ஈரத் துணியால்
மேசையைத் துடைத்துச் செல்கிறாள்
கூன் விழுந்த செங்கிழவி
மிச்சம் வைத்ததைத் தட்டில்
பொறுக்கிப்போட்டுக்கொண்டே
அடுத்த மேசைக்கு நகர்கிறாள்
தோல் சுருங்கிய கைகளை
அத்தனைபேரும் துரத்துகிறார்கள்
அவளின் முதுகுத் தகடுகள்
ஒன்றையொன்று மோதிக்கொள்கின்றன
உணவுச்சந்தையில் உழைத்துப் பிழைக்கும் ஒற்றை முதுமகள் படும்பாடு படம்பிடித்துக்காட்டப்படுகிறது.
பகட்டும் படாடோபமும் தெரியும் பளிங்கு மாளிகைகள், வணிக வளாகங்கள், பட்டுக்கம்பளம் விரித்தாற்போல் பாதைகள், சாலைகள், பூங்காக்கள், தோட்டங்கள், இராணுவ அணிவகுப்புபோல் நட்டுநிறுத்தி வளர்ந்து நிற்கும் சாலையோர மரங்கள் என்று ஒரு சுந்தர பூமியைக் கட்டிச்சமைப்பதில் கைகொடுக்கும் அடித்தட்டு உழைக்கும் மக்கள் திரள். இவர்கள் பற்றி குறிப்பிடும் இன்பாவின் வரிகள் இறுக்கமானவை. இந்த ஆண்களும் பெண்களும் சந்திக்கும் தனிமையும், சோக தருணங்களும், பிறழ்வுகளும் குறித்தது பேசும் வரிகள் உயிரோட்டமானவை.
புலம்பெயர்ந்த கர்ணன் என்றொரு கவிதை .
நேற்று பேசும்போது கூட அம்மா நன்றாகத்தான் பேசினார் என்றான்
அந்தி சாய்ந்தபின்தான்
எடுக்கிறோம் என்றாராம் அப்பா
முனகிக்கொண்டே பின்னால் வந்து நிற்கிறது
கடும் இருட்டு
கண்ணீரைக் கசியவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டே
யாருக்கும் கேட்காமல்
மியூட் பொத்தானில்
விம்மல்களை அழுத்திக் கொள்கிறான்
புலம்பெயர்ந்த கர்ணன்
இந்தவரிகளில் கர்ணன் என்னும் தொன்மக் குறியீடு இங்கு பணியாற்றும் விருந்தினர் தொழிலாளியின் மீது ஏற்றியும் இரங்கியும் அழுத்தப்படும் சோகத்தின் சித்திரமாய்ப் பதிவிடப்படுகிறது.
புத்தனின் வயிராற்றுப்படை இன்னொரு கவிதை
அடுக்கு மாட்டி வீட்டின்
சுரங்கக் கிணற்றில்
வீசியெறியும்
நுனி முடிந்த நெகிழிப்பைகள்
தொப்பென விழுகின்றன
கூடி நிற்கும் கரப்பான்கள்
தலைதெறித்தோட
வெளிப்புறமாகக் கதவைத் திறக்கிறான்
உலராத குப்பையின் ஈரம்
மக்காத பொட்டலங்கள்
கிழிந்து தொங்கும் நெகிழிகள்
வீட்டின் நாற்றம்
உடலைப் பூசிக்கொள்கிறது
காக்கித்தாளில் கட்டிய பொட்டலச் சோற்றைப் பிரிக்கையில்
குப்பைப் படிமங்கள் நிழலாடுகின்றன
வாய்க்குள் சென்ற வெள்ளைச்சோறு
பச்சை நாவியாக இருக்கிறது.
பசிமுடையப்பட்ட கூடையில் அமர்ந்து குப்பையோடு தவமிருக்கிறான் புத்தன்
இக்கவிதையில் புத்தன் என்னும் சொற்குறியீடு புறவெளிச் சூழல் கடந்த நிர்வாண மனநிலை இருப்பின் குறியீடாகப் பார்க்க முடிகிறது. வெளிச்சப் பாய்ச்சலில் பதுங்கிடக்கும் இருட்டைக் காட்டிக் கடக்கிறார் கவிஞர்.
ஓற்றைச் சொல்லில் அதிர்வுகளை ஏற்படுத்தும் திடீர் சுழற்சி வரிகளையும் பதிவில் காணமுடிகிறது.
‘கடகம் திரியும் நிலம்’ என்றொரு கவிதை. ஒரு பெண் சிறு பருவம் முதல் பேணி வளர்க்கும் கூந்தலைப் பேசுகிறது. அன்னையின் அன்பும் கரிசனமும் உரமென ஊட்டி வளர்த்தெடுக்கும் கூந்தல் அவளது எழிலின் அடையாளம். கூந்தலால் வசீகரமாகும் வாலிபத் தேனீக்கள் .இப்படிச்செல்லும் கவிதையின் கடைசிச்சொல் ‘ நாளை கீமோ ஆறாவது கோர்ஸ் ‘ அதிர்வலைகளைத் திடீர் சுழற்சியாய் வாசக மனதில் ஏற்படுத்தும் திருப்பத்தை உண்டாக்குகிறார் கவிஞர்.
பெண்மையின் பரிவு மற்றொரு கவிதை. பார்த்துப் பார்த்து தன்னைக் கவனித்துக்கொள்கிறார் மாமியார். பெருமையாகப் பேசிச்செல்லும் கவிதையின் கடைசிச் சொல்லில் ஒரு திடீர் முடிச்சு.
‘பெண்மையின் பரிவுடன் அபூர்வமாக இருக்கிறார்கள் எட்டியிருப்பதால்’
என்று முடித்துள்ளது நகை முரண்.சிங்கப்பூரின் இடங்களையும் இனங்களையும் இங்கு பேசப்படும் கலவையான கூட்டுமொழியையும் பதிவுசெய்வதால் மட்டுமே ஒருபடைப்பு உள்ளூர் படைப்பாகக் கருத்தப்படவேண்டியதில்லைதான். இங்குள்ள மனிதர்களை, அவர்கள் கடந்துசெல்லும் வாழ்க்கைச் சிக்கல்களை, வெற்றித்தருணங்களின் பெருமிதங்களை, இன்னும் குறை நிறைகள்மீது குவியும் படைப்பாளியின் பார்வையே அவரது படைப்பின் தளத்தை அடையாளப்படுத்துகிறது. அந்த வகையில் சிங்கைச் சமூகத்தின் அடித்தட்டு மேல்தட்டு என்று எல்லா இண்டு இடுக்குகளிலும் பரக்கத் பறந்து பதிவிட்டுள்ள லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள் கவிதைத் தொகுப்பு இன்பா என்னும் கவிப்பறவையின் பறத்தலல்ல பாய்ச்சல்.