1
ஆடுகள் வலசை போகையில்
குட்டிகளை ஈன்றுவிட்டால்
இடையனுக்குச் சுமை தெரியாது
மாடுகள் காளைக் கன்றுகளை ஈன்றுவிட்டாலும்
சுமையாகத் தெரியாது
இதோ இந்தக் கராமறையாடு
வலசை போகையில் ஈன்றது என்றும்
இதோ இந்தக் கிளிக்கொம்பாடு
அந்தி மறைகையில் ஈன்றுது என்றும்!
இதோ இந்தக் காரிக்காளை
ஒரு மதிய நேரத்தில் உச்சிவெயிலில் பிறந்ததென்றும்
நினைவில் வைத்துக்கொள்வான்
சுமை யெல்லாம்
நீரின்றி வறண்டு கிடக்கும்
இந்தக் குளத்திலும்
வாடிக் கிடக்கும் அந்த
நிலத்திலும் தான்
2
இடைச்சியே வா…!
வந்த பாதையை நோக்கித் திரும்பப் போவோம்.
நாம் போக வேண்டிய பாதை இதுவல்ல.
வழியில் எங்காவது ஆலமரமோ
ஐயனாரோ இருந்தால்
காட்டுப்பேச்சி சாட்சியாக
மீண்டும் திருமணம் செய்து கொள்வோம்
மை போலிருக்கும் கருவிளம் பூக்களை ஆய்ந்து
மாலை தொடுத்து உன் வெள்ளாட்டங் கழுத்துக்கு அணியத்தருகிறேன்.
பனையேறி இளவோலை வெட்டிக் கூடு பின்னித்தருகிறேன்.
மூங்கில் கம்பெடுத்துப் பரணி ஒன்று செய்து தருகிறேன்
வழியில் மீன்முள் செடிகள் இருக்கும்.
அதன் பூப்பறித்துச் உனக்கு முடி சூடி,
என் சிறுகூட்டுக்கு ராணி ஆக்குகிறேன்.
வன்னி மர மத்தெடுத்து
காராப் பசுவின் பாலெடுத்துத் தயிராக்கி
வெண்ணெய் எடுத்துத் தருகிறேன்.
திரியும் ஆநிரைகளை
எப்படிக் கொம்பூதி அடக்கி
நம் வசமாக்குவது என்ற வித்தையைக் காட்டுகிறேன்
இதோடு இரவின் மடியில்
நிலவின் ஒளியில்
வெள்ளியின் மினுமினுப்பில்
மின்மினியாக மின்னும்
ஆடுகளின் கண்களைச் சாட்சியாக வைத்து
பரந்து விரிந்த இம்மருத நிலப்பரப்பில்
சங்கக் காதலை இன்னொரு முறை செய்வோம்.
இந்தா… என் கைபிடி…
வா முல்லைக்குத் திரும்புவோம்…
நான் கம்பெடுக்கிறேன்…
நீ வலசை காத்திரு…
நான் காடு போய்த் திரும்புகிறேன்…!
3
உன் வலசையும்
என் வலசையும் தூரமில்லை
உன் கிடையாடும்
என் கிடையாடும்
ஒரே இடத்தில்தான் கிடை அடைகிறது
நம்மிரு மனம் போல்
உன் ஆசை மறியும்
என் ஆசை வெள்ளாடும்
அருகேகருகே படுத்துறங்குகின்றன
நான் கிடையிலும்
நீ வலசையிலும்
தூங்குவதில் நியாயமில்லை
நிலவை ரசிக்க நீ வந்தால்
நிலத்தை நாம் ரசிக்கலாம்