Harlem-இல் லோர்கா
ஒரு கறுப்பனின் மரணத்திற்கு
ஃப்ளெமெங்கோ பாணி பாடல்..
இந்த நகரம் என்னும்
கைத்துப்பாக்கி
உன்னையும் என்னையும்
நிரந்தரமாய்க்
குறிபார்த்தபடி
இருக்கிறது.
நல்லதொரு கைத்துப்பாக்கி
அமைவதைப் போலவே
கைக்கு வாகாய்
ஒரு நகரமும் எல்லோருக்கும்
அமைவது
அவசியம்,
ஒரு நாத்திகனுக்கு
எதிர்ப்பதற்கு வாகாய்
ஒரு கடவுள்
அமைவதுபோல் –
என்னைக் கொலை
செய்யப்போகும் ஓர் ஆயுதத்தை
நேசிப்பதைப் போலவே
இந்த நகரத்தை நேசிக்கிறேன்.
அதனோடு என்னை
எனது கர்ப்பத்திலிருக்கும் குழந்தையாய்
பரிச்சயப்படுத்திக் கொள்கிறேன்.
மிக நீண்ட
மாலை நேரங்களின்
சிவப்பில்
மூத்திர வாசனையாய்
மனிதர்களின் ஏகாந்த
வசவுகளும் அந்தரங்க
குறி விறைப்புக்களும்
நாறும் இதன்
நடைபாதைகளில்
கைகளையும் கால்களையும்
பரப்பி நிர்வாணமாய்ச்
செத்துக் கிடப்பதாய்
அடிக்கடி
கனவு காண்கிறேன்,
எந்த ஒரு சலனத்துக்கும்
மாறாத முதிய முகமுடைய
ஒரு பல்லியாய் மாறுவதைத் தவிர
சுயமழிந்து கிடத்தலைத் தவிர
நம்மையே குறிபார்த்திருக்கும்
கைத்துப்பாக்கியின்
அந்த சன்னமான விசிலுக்கு
நாய்க்குட்டியாய்
உடம்பு அதிர
தாவிக் குதித்துச்
சாவதைத் தவிர
ஒரு நகரத்துக்கு
நீயும் நானும்
செய்யக் கடிய
ஆராதனை ஏதுமில்லை.
அப்படித்தான்
கரும்புத் தோட்டங்களின்
கொதிக்கும் நிழல்போன்ற இனிப்புப் போதை
கண்களைக் கிறங்கச் செய்ய
நம் முதியவர்கள்
இத்தனை ஆராதனைப்
பாடல்களுக்கு மத்தியிலும்
கைகளை உயர்த்தி
தெய்வ பக்தியில் அசைந்தபடி
கைத்துப்பாக்கியால்
சுடப்பட்டவர்களைப்போல்
தலையைச் சுற்றி
நட்சத்திரங்கள் குலுங்க
நாத்திகர்களாகவே
செத்துப் போனார்கள்.