கோப்பத்தை
நான் விசர் பிடித்து உழத்துகிறேன்
பாலியத்தின் மையத்தில்
மோதுண்டு எழும் பேய்க்காற்று
என்னை
உசுப்பி உசுப்பி
என் கமுகிலிருந்து
பாக்கும், கோப்பத்தையும்
கொட்டுகின்றன
சாமத்தியக் குடத்திலும்
கண்ணகியின் மடையிலும்
விரிந்திருந்த கமுகம் பாளைகள்
மின்னி மின்னி பூச்சியாய்
பறக்கின்றன
ஓம்
என் சூத்து தேயுமட்டும்
கிறவல் றோட்டில்
இழுபடும் கோப்பத்தை
எனக்குள்
விரிந்து விரிந்து
மண்டைக்குள் உராய்ந்து
என் காதோரமாய்
கிணுகிணுக்கின்றன
எங்கள் ரயில் வண்டியில்
பின்பக்கமிருந்த
குமாரி குடைசாய
என் காலில்
குதிரைமுகம் ரத்தம் சொட்ட சொட்ட
கோப்பத்தை இழுப்பவன்
வாலறுந்த பல்லிபோல்
குப்பறச்சாய்கிறான்
உணர்வுக்குள்
குந்தியிருக்கும் கோப்பத்தைகள்
இப்போது யாரும் கேட்பாரற்று
கையறுந்து கிணற்றடி தொம்பலில்
ஊறிக்கிடக்கின்றன
மண்டைக்குள் வெடித்துச் சிதறி
என்னில் விசர் காத்து
100 Km வீசித்தானிருக்கிறது
ஓலைகள் விழத்தான் செய்யும்
என் விசரை வாருகலால் கூட்டுங்கள்
எனக்கு விசர் புடிக்கும்
நேரம் எல்லாம்
யாரோ ஒருவன் கோப்பத்தையை
இழுத்துக் கொண்டிருக்கிறான்
தில்லை:
கிழக்கிலங்கையை சேர்ந்த தில்லை 2006 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர். . பெண்ணிய செயற்பாட்டாளரான இவர், பெண்கள் அமைப்புக்கள், நூலகத்துறை, அச்சகம், பதிப்பகத்துறை, பத்திரிகைதுறை போன்றவற்றில் அனுபவம் மிக்கவர். . ஊடகவியலாளர், ஓவியர், சமூக செயற்பாட்டாளர்,கவிஞர், அரங்கச் செயற்ப்பாட்டாளர், பதிப்பாளர் என்று பல்வேறுபட்ட ஆளுமைகளைக் கொண்டவர்.