இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது லி சிங்சோவ் (Li QingZhou) பற்றிய தகவல்களைப் படிக்க நேர்ந்தது. சமீபத்தில் தேசிய நூலகத்திற்குச் சென்றபோது எதார்த்தமாகக் கண்ணில் பட்ட பண்டைய சீனக் கவிஞரான லி சிங்சோவ் பற்றிய நூல் வாசிப்பதற்குச் சுவாரசியமாக இருக்க உடனே எடுத்துவந்தேன். கடந்த ஆயிரமாண்டுகளில் சீனாவின் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக அறியப்படுகிறார்.
பண்டைய காலச் சீனாவில் டாங் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீனா தொடர்ச்சியாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிணைத்துச் சொங் வம்சம் நிறுவப்பட்டது. சீனாவின் வர்த்தகம் செழித்து மக்கள் ஓரளவு மகிழ்வாக இருந்தபோதும் நாட்டிற்கு அச்சுறுத்தல்கள் அதன் அண்டை நாடுகளிலிருந்து வரத்தொடங்கின. ஒவ்வொரு அரச மரபும் நாட்டின் அரசியல், கலாச்சார வளர்ச்சியை வலியுறுத்தி அண்டை நாடுகளுடன் சமாதானத்தை நாடினர். அப்போது மிங் டைனாசிடி, சொங் டைனாசிடி, தாங் டைனாசிடி, ஷாங் டைனாசிடி எனப் பல முக்கிய அரச வம்சங்கள் பிரிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அரசியல் அமைப்பினை உருவாக்கின. சீன அரச வம்சங்கள் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என நாட்டைப் பராமரிப்பதை நோக்கமாகக்கொண்டு நாட்டின் எல்லைகள் பிரிக்கப்பட்டன. அதில் ஆயிரமாண்டுகளில் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக இவர் அறியப்படுகிறார்.
லி சிங்சோவ் கி.பி 1084 ஆம் ஆண்டில் பிறந்தவர். அவரது தாய் வசதியான மற்றும் இலக்கிய ஆர்வம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவள். சிங்சோவ் பலவகையான புத்தகங்களையும் படிக்கத்தொடங்குகிறாள். தன் குடும்பத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிக் கல்வியைக் கற்கும்படி லியை ஊக்குவிக்கிறார். ஒரு நாள், டாங் வம்சத்தின் நூலொன்றில் வேடிக்கையான கதை ஒன்றைப் படிக்க நேர்கிறது. அதில் விருந்தினர்களுக்கு இரவு உணவிற்கான அழைப்பிதழ்களை அனுப்பிவிட்டு விருந்திற்காக ஒரு பிரபலப் பாடகரைப் பாட அழைக்கிறார்கள். ஆனால் அதை வேடிக்கையாகச் செய்ய வேண்டுமெனத் திட்டமிடுகிறார்கள். ஒரு வேலைக்காரனைப் போலப் பாடகரை உடை அணியச் செய்து, அவர் அறைக்குள் நுழைந்தபோது யாரும் அவரைக் கவனிக்கவில்லை கீழ் வகுப்பைச் சேர்ந்தவரென நினைத்து உதாசீனப்படுத்துகிறார்கள். அவர் அறையின் பின்புறத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறார். விருந்தின் இறுதியில் தொகுப்பாளர் மேடையில் ஏறி, நகைச்சுவையாக “எனது நண்பர்களில் ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவர் நமக்காக விருந்தில் பாடல்களைப் பாடுவார் என்றவுடன் எல்லோரும் அமைதியாக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர், பாடகர் யார் என்று பார்க்கிறார்கள். அனைவரும் வியக்கும் வகையில், மோசமான ஆடை அணிந்த வேலைக்காரர் முன்னே வருகிறார்.
மேடையில் ஏறியவுடன் பாடலுக்கு இசையமைத்து, பார்வையாளர்களைப் பார்த்து உரக்கப் பாடத் தொடங்குகிறார். அந்த அறை அலறத் தொடங்கியது, காந்தக் குரலில் பாடல் ஒலிக்க, முதலில் அவர்கள் நகைச்சுவை நினைத்துச் சிரித்தனர். விரைவில் அவர்கள் பாடல் ஆழமாகத் தொட்டதால் அமைதியாகி, பாடல் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டல் பலமாக ஒலிக்கிறது. வேலைக்காரன் போல் உடையணிந்தவர் உண்மையில் டாங் வம்சத்தின் சிறந்த ஆண் பாடகர் வாங் பாயோஷன் என்று அறிந்து பலத்தக் கைத்தட்டலில் அறை அதிர்ந்தது. இக்கதையைப் படித்து முடித்ததும் அவள் வெடித்துச் சிரித்தாள். உலகம் எவ்வளவு பாசாங்குத்தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதைப் புத்தகத்தின் அட்டையைப் போல மனிதர்களை மதிப்பதாக எண்ணி வருந்துகிறாள்.
அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த அறிஞர்களால் ஈர்க்கப்பட்ட சிங்சோவ் கவிதைகளை எழுத ஆசைப்பட்டாள். ஏற்கனவே பலவிதக் கவிதைகள் புழக்கத்தில் இருந்தாலும், பெரும்பாலானவை மோசமாக எழுதப்பட்டவை, குறிப்பாக அவை ஆண்களால் எழுதப்பட்டவை. கவிதையின் நடை மிகவும் ஆடம்பரமாகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. போரைப் பற்றியோ அவர்களின் தனிப்பட்ட லட்சியங்கள் பற்றியோ மட்டுமே இருந்தது. சிங்சோவ் தன்னால் கவிதைகளை எழுத முடியுமா, ஒரு புதிய வகைக் கவிதை நடையை உருவாக்க முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தாள். கவிதைகள் புத்துணர்ச்சியாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்றும் உணர்ந்தாள். தன் பார்வைகளை வெளிப்படுத்த ஆடம்பர வார்த்தைகளைப் பயன்படுத்துவது அவளுக்குப் பிடிக்கவில்லை.
பிரபல அறிஞரும் சொங் வம்சத்தின் பிதாமகனாகவும் விளங்கிய வாங் அன்ஷியுடன் செல்வத்தின் மீது பேராசை கொண்ட பழங்குடியினரின் அச்சுறுத்தலையும், குறுக்கே உருண்ட கருமேகம் போல் வன்மம் திரண்டிருக்கிறதெனவும் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தபோது தன் தந்தையிடம் கவிதை எழுதுவதைப் பற்றிக் கேட்க விரும்பினாள். அவள் அறைக்குள் நுழைந்து அவர்களின் உரையாடலைத் துண்டித்து,
“அப்பா, நான் எழுத விரும்புகிறேன்.” என்கிறாள், அவளது தந்தை லி கெஃபி அமைதியாகச் சிரித்தார். இருப்பினும், சிங்சோவ்வின் லட்சியத்தைக் கேட்டு வாங் அன்ஷி வியந்தார். அவளின் புத்திசாலித்தனத்தை மெச்சினாலும் மனரீதியாகப் பழமைவாத கொள்கைகளை ஏற்றிருந்தவர்.
“ஓ, சிங்சோவ் நீ எழுத விரும்புகிறாயா?” என ஆச்சரியத்துடன் கேட்டார். அவரது குரலில் சிறிய மறுப்பு இருந்தது.
“நான் விரும்பும் போது எழுதுகிறேன்.” என வாங் அன்ஷியின் கேள்விக்குச் சிங்சோவ் நேரடியாக அவரது கண்களைப் பார்த்து புத்திசாலித்தனமாகவும் தைரியமாகவும் பதில் சொன்னாள்.
“எனக்குப் புரிகிறது, நீ அப்படிப்பட்ட சரியான குடும்பத்தில்தான் பிறந்திருக்கிறாய்.” என வாங் அன்ஷி அவளது தந்தையைப் பார்த்து வெடித்துச் சிரித்தார். அவளது தந்தை வெட்கப்பட்டதோடு அவர்களது பேச்சுத் தொனியில் இருந்த முரண்பாட்டை உணர்ந்து முகத்தைச் சுழித்தபடிச் சென்றுவிட்டாள்.
அவளுடைய தாயார் எப்போதும் புத்திசாலித்தனமான கருத்துகளைக் குடும்பத்தினரிடம் கூறும்போது தாத்தா பரிதாபமாகப் பார்ப்பார், நீ ஆண் குழந்தையாக இருந்தால் மட்டும்தான் இதெல்லாம் சொல்ல முடியுமெனச அலட்சியப்படுத்திச் சென்றுவிடுவார். தாயாரின் திருமணத்திற்குப் பிறகும் சுவரில் ஒரு சுருளைத் தொங்கவிட்டு இங்கேயே படித்து மகிழ்ச்சியாயிரு என்று சொல்லி அவள் எழுதுவதற்கு யாரும் ஆதரவளிக்கவில்லை.
“நான் தனியாக இல்லை! படிக்க விரும்பும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். கவிதைகள் எழுத வேண்டும் என்ற என் விருப்பத்தை இப்போதே தொடங்குகிறேன்.” என்று சொல்ல, ஏளனச் சிரிப்பில் வாங் அன்ஷி வெடித்தார். அவளது வார்த்தைகளைச் சிறு பெண்ணின் ஆசை, ஏதோ உளறுகிறாள் எனத் தவறாக உணர்ந்து, அறையை விட்டு வெளியேறிச் செல்கிறார்.
சிங்சோவ் வீட்டை விட்டு வெளியில் சென்று இயற்கையை ரசிப்பதையே பெரிதும் விரும்பினாள் குடும்பத்திற்கு இளையவள் என்பதால் பெரிதாகக் கட்டுப்பாடுகளின்றிச் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தாள். தனக்கு விருப்பமானவர்களுடன் நட்பு கொள்ளும் சுதந்திரத்திடன் இருந்தாள்.
கோடைக்காலம் தொடங்கியபின் பூக்கத் தொடங்கிய பூக்களைப் பார்க்க விரும்பினாள். மலைகள், மலர்களால் மூடப்பட்டிருந்தன, தூரத்திலிருந்த பனியின் புகை பிடித்தது அவளுக்கு. சிங்சோவ் காற்றின் இனிமையான நறுமணத்தை விரும்பினார். வளைந்து நெளிந்த பாதையில் வெகுநேரம் தவித்தவள், மணிக்கணக்கில் தங்கியிருக்க ஆசைப்பட்டாள். அவள் சிறுவயதில், தன் தோழிகளுடன் தாமரை மலர்களுக்கு நடுவே ஒளிந்து விளையாடுவதும் ஆற்றங்கரைக்குச் செல்வதும் அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
அவள் பெற்றோருடன் அடிக்கடி ஒரு கோப்பை வைன் அருந்துவாள். ஒரு நாள், அவள் தந்தை அரசவைக்குச் சென்றபின் சமையலறையிலிருந்த மது போத்தலை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். பல வருடங்களாக நெருங்கிய நண்பன் ஜாவோ மிங்செங்கைச் சந்திக்க, அருகில் இருந்த மேற்குப்புற மண்டபத்திற்குச் செல்கிறாள்.
சிறிது நேரம் கழித்து, உயரமான, அழகான இளைஞன் அங்கு வருகிறான். சிங்சோவ் சிரித்துக்கொண்டே அவனுக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொடுக்கிறாள். அதை வேகமாகக் குடித்துவிட்டு நீண்ட சிரிப்புக்குப் பிறகு, அவர்கள் கவிதை எழுதுவதைப் பற்றிப் பேசுகிறார்கள். உங்களுக்குப் பிடித்த கவிஞர் யாரெனக் சிங்சோவ் அவனிடம் கேட்கிறாள். மிங்செங் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “நிச்சயமாக, அது உன் தந்தையின் குருவான சு ஷியாக இருக்க வேண்டும். அவருடைய பாணி பிரமாண்டமானது. “சு ஷியின் சகோதரியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என ஆர்வத்துடன் கேட்கிறாள். “அவள் திறமையானவள். அந்தக் குடும்பத்தில் அவளால் நல்ல கல்வியைப் பெற முடிந்ததில் ஆச்சரியமில்லை என்கிறான். இவளுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியவள்.
ஒரு பலகையில் படுத்துக்கொண்டே சிங்சோவ், “நான் அவளைப் போல அல்லது அவளை விட நன்றாகவே இருக்க விரும்புகிறேன்” என்று தளர்வான குரலில் கூறினாள். மிங்செங் அவளிடம் சவால் விடுகிறான், வரலாற்றில் பல பிரபலமான மற்றும் திறமையான பெண்கள் உள்ளனர், அவர்களைப் போலவே நீயும் நன்றாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன் என்கிறான்.
மிங்செங் அரச வம்சத்தில் பிறந்தவன். தனது வயதிற்கு ஏற்றவாறு உயரமாக, அழகான அடர்ந்த கருமையான கூந்தலுடன் இருந்தான். எல்லாவற்றையும் தீவிரமாக எடுத்துக் கொண்டான். வரலாற்றுப் புத்தகங்களைப் படிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தான். அவனுக்குக் கற்கள் மீது ஈர்ப்பு இருந்தது. முன்பு ஆற்றங்கரையில் இருந்து சேகரித்த ஒன்றைத் தன் பைக்குள் வைத்து எடுத்துவந்தான். அதைச் சிங்சோவ்விடம் காட்டினான். “அதன் வடிவத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றாள். சிங்சோவ் அதைக் கவனமாகப் பார்த்துவிட்டு ஆர்வமில்லாமல், “இது வெறும் கல்” என்றான். ” கற்பனை செய்து சொல்லுங்கள் என்கிறாள். சிங்சோவ் கல்லை அவள் கைகளில் பிடித்துக் கொண்டு, “ஒரு முத்தைப் போல இருக்கிறதா? அதுதான் கற்களைப் பற்றிய ஆச்சரியமான விஷயம். கலை இயற்கையில் இருந்து உருவானது. கற்களின் வெவ்வேறு வடிவங்கள் வெவ்வேறு தொனிகளைக் கொண்டுள்ளன. எனது பரம்பரையில் கற்கள், ரத்தினங்கள் அதனுடைய அழகிய வண்ணங்களுக்காகவும், வடிவங்களுக்காகவும் சேகரிப்பதை விரும்புகிறார்கள். கற்களின் பின்னால் உள்ள படைப்பாற்றலை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று சொல்கிறாள்.
“ஆனால் அது இன்னும் ஒரு கல்தானா?” என்று சிரிக்கிறாள். அவன் எரிச்சலாகி வேகமாகக் கல்லைப் பையில் போட்டுக் கொண்டு, “பெண்கள் எப்பொழுதும் குறுகிய பார்வை கொண்டவர்கள். உங்களுக்குக் கலை, அழகு பற்றி எதுவும் தெரியாது. கல்லில் நீங்கள் நினைப்பதை விட அதிகம் இருக்கிறது. கல்லை உன்னிப்பாகக் கவனித்தால் ஜென் தத்துவம் பொதிந்திருப்பதைக் காணலாம். கல்லையோ ரத்தினத்தையோ கையில் எடுத்தால் இயற்கையின் காலநிலையில் வெவ்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்ட பருவ நிலைகள் புரியும், என்கிறான்
சிங்சோவ் ஆர்வம் காட்டுவது போல் தலையை ஆட்டினாள். அவள் கண்கள் பாதிச் சிரித்துப் பாதி ஏளனம் செய்தன. அவளுக்கு எரிச்சல் வரக்கூடாது என்பதற்காக ஆற்றில் படகில் செல்வோம் என்று கிளம்பிச் செல்கிறார்கள். சிங்சோவ்வைப்போல உற்சாகமாக இல்லாவிட்டாலும் படகில் செல்வதில் மிங்செங் மகிழ்ச்சியடைகிறான். ஏரியின் ஓரத்தில் ஒரு படகைக் கண்டுபிடித்து அதை வெளியே எடுத்தார்கள். பூக்கள் வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற வண்ணங்களில் மலர்ந்திருந்தன. பசுமையான ஏரி நேர்த்தியான கம்பளம் போல் இருக்கிறது, என்கிறாள்.
மதுவின் நெடியில் தூண்டப்பட்ட சிரிப்பு ஆற்றில் எதிரொலித்தது, நைட்டிங்கேல்களின் சிரிப்புடன் மிங்செங் படகை ஓட்டினான். தண்ணீரில் கைகளை நனைத்து மகிழ்கிறாள். மிங்செங் அவளை முட்டாள்தனமாகப் பார்ப்பதைக் கண்டு, அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள். அவள் கண்களில் குறும்பு தெரிந்தது.
தாமரை மலர்கள் நிறைந்த கால்வாயில் படகை வேகமாக ஓட்டினான். அவன் படகோட்டியை நிறுத்தி, துடுப்புகளை இழுத்துப் படகை அதன் விருப்பப்படி நகர்த்த அனுமதித்தான். தாழ்வான படகில் அமர்ந்து செல்ல மலர்கள் அவர்கள் மீது உரசின. ஒரு பெரிய தாமரை மலருக்குள் தன் முகத்தைப் புதைத்துச் சிரித்தாள். அவர்கள் படகில் படுத்து, வானத்தின் குறுகிய வில்லை அமைதியாகப் பார்த்தார்கள். வளிமண்டலம் வசீகரமாக இருந்தது, இயற்கையின் போதையில் மிதந்தனர்.
அந்தி சாயும் நேரத்தில் வானம் ஒருபுறமாகச் சரிந்தது. திரும்பிச்செல்லும் நேரம் வந்துவிட்டதென எழுந்து அமர்ந்து படகை மீண்டும் மேற்கு மண்டபத்திற்குத் தள்ளத் தொடங்கினான். இருப்பினும் அதிகமாக மது அருந்திவிட்டு மங்கலான வெளிச்சத்தில் தாமரைப் பூக்களைப் பார்க்கிறாள்.
தாமரை மலர்கள் ஆற்றில் நடனமாடுகின்றன
அந்தி வெளிச்சம் நிலத்தைச் சிவப்பாகக் குளிப்பாட்டுகிறது
இது டாங் டைனாசிட்டியின் கவிதை என்று சொல்கிறான் மிங்.
நான் சொந்தமாகக் கவிதை எழுதுவேன் என்கிறாள். பெண்களால் கவிதை எழுத முடியுமென நான் நம்பவில்லை என்கிறான்.
படகை இழுத்துத் தள்ளிக் கோபமாக இறங்கி வெளியில் வருகிறாள். வீட்டிற்கு வந்தவுடன் எதிரில் தன் தந்தை வருகிறார். எனக்கொரு கோப்பை வைன் வேண்டுமென்கிறாள். உடைகள் ஏன் நனைந்திருக்கின்றன என்கிறார். நான் மதியம் வெளியில் சென்றேன். அதைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேனெனத் தனது முதல் கவிதையை வாசிக்கிறாள்.
நான் எப்போதும்
மேற்கு மண்டபத்திற்குப்
படகில் சென்றதை நினைவில் வைத்திருப்பேன்
மகிழ்ச்சியாய்க் குடித்தோம்
தடங்கள் தொலைந்துபோய்
எங்கே செல்வது? எங்கே செல்வது?
கடல் சிணுங்கியபடி நீரைத் தெளித்தது,
இன்னும்…
தந்தை கவனமாக இக்கவிதையைப் படித்துவிட்டு வித்தியாசமாக எழுதியிருப்பதைப் பார்க்கிறார். சில வரிகளால் தனது மகிழ்வான மதியப் பொழுதை அவளால் சித்திரம் போல் வரைய முடிந்ததை எண்ணி ஆச்சரியப்படுகிறார். கடலையும், அந்தி மறைவதையும் பார்த்து கடல் சிணுங்குவதையும் அழகாகச் சொல்லமுடிகிறது. எளிமையான வரிகள் புதிய பார்வையுடன் அவளுக்குள் இயற்கையாகவே ஏற்படுத்திய மாற்றத்தைக் கண்டு மெச்சுகிறார்.
அவருடைய பதிலுக்காகக் காத்திருந்தவளுக்கு இதை வெளியிட வேண்டுமெனச் சொன்னதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்கிறாள். தன்னுடைய சகோதரனைவிட நன்றாக எழுதி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென நம்புகிறாள்.
அக்காலத்தில் சொங் டைனசிட்டி அச்சுத் தொழிலில் வளர்ந்திருந்தது, இலக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அவளுடைய முதல் கவிதை வெளியானவுடன் உண்மையிலேயே உன் மகள் எழுதிய கவிதைதானா எனப் பலரும் அவரிடம் கேட்டார்கள். பொதுமக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை சிறுமி வயதுக்கேற்ப ஏதோ எழுதியிருக்கிறாள் என விட்டுவிட்டார்கள்.
வருத்தத்துடன் வெளியிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து வேகமாக ஆடுகிறாள். அவசரமாக இறங்கி அறைக்குள் ஓடிவந்து ஒரு கவிதை எழுதுகிறாள்.
நான் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தேன்
விருந்தினர் வந்திருப்பதாகச் சொன்னார்கள்
சோவ் மிங் செங்கின் தந்தைதான்
கைகளைக் கழுவ நேரமில்லை
நெற்றியில் இன்னும் வியர்த்திருந்தது
காலில் காலணியின்றி அவசரமாக ஓடினேன்
என் கூந்தலிலிருந்து தங்க ஊசி தரையில் விழுந்தது
நான் வெட்கத்துடன் வேகமாகச் சென்றேன்
திடீரென என் மனத்தை மாற்றிக்கொண்டு
திரும்பிப் பார்க்கிறேன்
பசுமை நிற பிளம்ஸின் நறுமணம்
என் முதத்தில் தெளித்தது…
தாளை முகத்தில் வைத்து மறைத்துக்கொண்டு திரும்பிப் பார்க்கிறாள். அவளுடைய மனத்தில் மிங்செங்கின் முகம் நினைவுக்கு வருகிறது. அவன் தந்தையைச் சந்தித்த பிறகு, சிங்சோவ் உணர்ச்சிவசப்பட்டுப் படுக்கையில் படுத்தபடி அவனுடைய நினைவில் மூழ்குகிறாள். அவளால் காதலைப் பற்றிப் பெற்றோரிடம் வெளிப்படையாகப் பேச முடியவில்லை. இயற்கையின் அழகையும் ரகசியக் காதலையும் எண்ணியபடியே தூங்கிவிடுகிறாள்.
அன்றிரவு அவளுக்குக் கனவு வருகிறது. அதில் அவள் சென்றுகொண்டிருந்த வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் அடர்ந்த மூடுபனியில் நடந்துசெல்கிறாள். இறுதியாக மூடுபனியிலிருந்த ஒரு வழியைக் கண்டடைகிறாள். அதன் திசையில் நடக்கிறாள், மக்கள் நிறைந்த இடத்திற்கு வருகிறாள். சாலை வெள்ளை நிற எலும்புகளைப்போல் பனியால் மூடப்பட்டிருந்தது. திகிலுடன் திரும்பி ஓடி வருகையில் திடீரென ஓர் இளைஞன் அவள் கனவில் தோன்றுகிறான். அவன் மிங்செங்கைப் போலவே இருக்கிறான்.
அவள் கைகளை நீட்டி, அவனது கைகளைப் பிடிக்க முயல்கிறாள். ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு அவர்களைப் பிரித்துவிடுகிறார்கள். . கனவிலிருந்து எழுந்து , “தயவுசெய்து, என்னைக் காப்பாற்றுங்கள்!” சட்டெனக் கத்துகிறாள். அது வெறும் கனவாகவே இருந்தது. கோப்பையில் வைனை ஊற்றிக் குடித்துவிட்டு, அந்தக் கனவு எவ்வளவு தீர்க்கதரிசனமாக இருக்கப் போகிறது எனத் தெரியாமல் எழுந்து வந்து, வெளியே எட்டிப் பார்க்க கதவைத் திறக்கிறாள். பலத்த மழைக்குப் பிறகு நிலம் ஈரமாக இருந்தது. நேற்று புத்துணர்ச்சியோடும், உயர்ந்தும் இருந்த பூக்கள் இப்போது மௌனமாக வாடி, சேதமடைந்து தரையில் கிடந்தன. தரை சிவப்பு கம்பளம்போல் மூடப்பட்டிருந்தது. எல்லா இடங்களிலும் புயலின் சீற்றம், பூக்கள் வாடியது, மஞ்சள் நிறக் கிளைகள் உயரம் குறைந்து காற்றில் ஊசலாடின.
நேற்றிரவு சூறைக்காற்றுப் பலமாக வீசியது.
அதிகாலை குளிர்காற்று என்னைத் தீண்டவில்லை
இரவு நான் அதிகமாகக் குடித்திருந்ததால்
என்னுடைய பணிப்பெண்ணிடம் கேட்டேன்
கதவை யார் மூடியது?
தோட்டமெல்லாம் சோகமாகக் காட்சியளிக்கிறது
சீன கிராப் ஆப்பிள் மலர்கள்
இன்னும் பூத்துக்கொண்டிருக்கின்றன
யாருக்குத் தெரியும்? யாருக்குத் தெரியும்?
இலைகள் பசுமையாக இருந்திருக்க வேண்டும்
பூவிதழ்கள் சிவப்பு நிறத்தில் இருந்திருக்க வேண்டும்.
மீண்டும் இக்கவிதையைத் தன் தந்தையிடம் காட்டுகிறாள். அவர் தனது மகளைப் பற்றி ரகசியமாகப் பெருமிதமடைகிறார், அவளிடம் சொல்லாமல், அவளுடைய சமீபத்திய இரண்டு கவிதைகளையும் அச்சிட உத்தரவிடுகிறார். பதினேழு வயதிலேயே திறமையான இளம் பெண்ணை அனைவரும் பாராட்டினர். இந்த இரண்டு கவிதைகளும் திருமணமாகாத ஓர் இளம் பெண்ணின் துயரங்களை வெளிப்படுத்தின. அவள் இயற்கையிலும் காதலிலும் உணர்வுபூர்வமாக இருந்தாள். வாங் அன்ஷி கவிதைகளைப் படித்துவிட்டு தனது கருத்தை மாற்றிக் கொண்டு சிங்சோவ்வின் தந்தையிடம், “லி சிங்சோவ் ஒரு புதிய நடையை உருவாக்குகிறார். நம் வம்சத்தில் திறமையான ஓரிருவரால் மட்டுமே இவ்வளவு சுத்தமாகப் புதிய நடையில் எழுத முடிகிறது. இது போன்ற கவிதைகள் ஓர் இளம் பெண் எழுதியது என்று நம்புவது மிகவும் கடினம்.” என்கிறார்.
சிங்சோவ்வின் வயதைப் பொருட்படுத்தாமல் அவரது திறமையைப் பொதுமக்கள் அங்கீகரிக்கத் தொடங்கினர். அன்றைய கவிதைச் சமூகம் முரண்பாடுகள் நிறைந்த சமூகமாக இருந்தது. பெண்கள் கல்வி கற்பது சரியல்ல என்ற நெறிமுறைகளை விதித்தாலும், அரிய திறமை கொண்ட பெண் எப்போதும் ஆண்களால் மிகவும் மதிக்கப்பட்டாள். சிங்சோவ் நன்கு அறியப்பட்டதிலிருந்து, இலக்கியம், தத்துவம் மற்றும் சில சமயங்களில் அரசியல் பற்றி விவாதிப்பதற்காக, பல எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் அவளை நேரில் வந்து சந்தித்தனர்.
விருந்தினர்களை அன்புடன் வரவேற்று இலக்கியம், அரசியல் பற்றிப் பேசுகிறாள்.
சில ஆண்டுகளுக்குப் பின் மிங்செங்கையே மணந்து கொள்கிறாள். அவளுடைய கவிதைகளைக் கணவனிடம் காட்டுகிறாள். அவளைக் கண்டு ஏளனமாகச் சிரிக்கிறான். பிறகு அவளது ஆர்வத்தைப் பாராட்டி இருவரும் கவிதைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள். சில சமயம் உறங்கச் செல்வது முதல் விடியற்காலை வானம் ஒளிரும் வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வரலாற்றை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறாள். இந்த உத்வேகம் அவளது கவிதைகளுக்கான தனித்துவமான பாணியை வளர்க்க உதவியது என்பதை உணர்ந்தாள். நாள்தோறும் மிங்செங் அவளுக்குக் கதைகள் சொல்கிறான். கிழக்கு மலைப் பகுதியில் உள்ள ஓர் அழகான கல்லைப் பற்றிய கதை ஒன்றைச் சொல்கிறான். ஒரு நாள், இரண்டு கடவுள்கள் ஆட்சி அதிகாரங்களுக்குச் சண்டையிட்டு வானத்தில் ஒரு துளையைப் போட்டதால் வானம் அதிர்ந்தது. ராணி கிழக்கு மலையில் உள்ள கல்லை எடுக்க முயற்சி செய்தார். அந்தக் கல் திமிர் பிடித்து வர மறுத்தது ராணியை மதிக்கவில்லையெனக் கோபமாகச் சென்றுவிட்டாள். பல ஆண்டுகளாகப் பாழடைந்த மண்டபத்தில் பரிதாபமாகக் கிடந்த அந்தக் கல் அந்த ராணியிடம் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டது. இன்னொரு கடவுள் கல்லின் நிலையை உணர்ந்து அந்தக் கல்லை ஓர் அழகிய பெண்ணாக மாற்றினார். அவள் தான் எனக்கருகில் படுத்திருக்கிறாள் என்று சொன்னதும் அவள் மகிழ்ந்து அவர்களது காதல் மேலும் தீவிரமாக வளர்ந்தது, இன்னும் கூடுதல் அன்போடு காதலித்தனர்.
ஆனால் திருமணவாழ்வில் அவர்களுக்கு மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பத்து வருடங்கள் கடந்தும், அவளுக்குக் குழந்தையில்லை போன்ற குற்றங்களைச் சுமத்தி ஒவ்வொரு நாளும் சின்னஞ்சிறு தேவைகளுக்காகத் தகராறுகள் செய்ய ஆரம்பித்தனர். ஆனாலும், அவள் மீதான காதல் குறையவில்லை. புத்திசாலித்தனமான மனைவியைப் பெற்றதற்கான அழுத்தத்தை மிங்செங் உணர்ந்தான். மக்கள் அவரை சிங்சோவ்வின் கணவர் என்றே அறிந்திருந்தனர். அவனைப் பெரிதாக யாரும் மதிக்கவில்லை. அதையெல்லாம் மறைத்துக்கொண்டு பண்டைய வெண்கலப் பொருட்களையும், கல்வெட்டுகளின் மறு உருவாக்கங்களையும் சேகரித்தனர். உலோகம் மற்றும் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வுகளைச் செய்தான்.
மிங்செங்கின் தாயார் இறந்தபோது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நான்ஜிங்கிற்குத் தனியாகச் சென்றாள். பதினைந்து வண்டிகள் நிறையப் புத்தகங்களைத் தன்னுடன் எடுத்துச் சென்றாள். அதனால் வேறு எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. அங்கிருந்து திரும்பிச் சென்றபோது பத்து அறைகள் கொண்ட புத்தகங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவளுடைய உலகம் அழிந்து போவதையும், முன்னால் நிறைய வலியும் மகிழ்ச்சியின்மையும் இருப்பதையும் அவளால் பார்க்க முடிந்தது. மிங்செங் மனைவியை உதாசீணப்படுத்தினான், அவளைச் சந்திப்பதைத் தவிர்க்கத் தொடங்கினான். அவளால் பொறுக்க முடியாமல் கடிதம் ஒன்றை எழுதுகிறாள்.
மிங்செங்கின் தந்தை தனது மேஜையில் இருந்த கடிதத்தைப் பார்த்தார். அக்கடிதம் அவரது மருமகளால் எழுதப்பட்டது, ஆனால் அவரது மகன் அனுப்பிவைக்கிறார். கடிதத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தார். “அன்புள்ள மாமனார் எனத் தொடங்கும் கடிதம், உங்கள் மகள் என்ற முறையில், அரசியல் விவகாரங்களில், குறிப்பாக ஒரு பெண்ணாக நான் உங்களிடம் கருத்துத் தெரிவிப்பது முறையற்றது என்று எனக்குத் தெரியும். ஆனால் என் தந்தை சம்பந்தப்பட்டதால், நான் என்னுடைய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுமெனத் தொடங்கித் தனது பிரச்சனைகளைக் கடிதமாக எழுதுகிறார். ஒரு பெண் எப்படி என்னுடைய அரசாட்சியைப் பற்றிக் கருத்துச் சொல்லமுடியுமெனக் கடிதத்தைக் கிழித்து விட்டு, தன் குடும்பத்திற்கும் அவளுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லையென அவருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துவிதமான சலுகைகளையும் தடைசெய்கிறார்.
பிறகு மிங் நலம் குன்றிப் படுத்த படுக்கையாக இருக்கிறான். அவனைச் சந்தித்து அப்படியொரு கடிதம் எழுதியதற்காக வருந்துகிறாள். நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னனியைக் கொண்ட அரசியலைப் பற்றிக் கருத்தினைச் சொன்னதற்கு மிங்கிடம் தனது வருத்தத்தைத் தெரிவிக்கிறாள். மிங் கடைசியில் தான் இறந்தபின் அவளை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வலியுறுத்து, ஒரு பெண் எவ்வளவு பிரபலமடைந்திருக்கிறாள் என இந்த உலகம் அறிய வேண்டுமெனச் சொல்கிறான். அவளது மடியில் தலையைச் சாய்த்தபடி கடைசியில் இறந்து போகிறான்.
அவன் கேட்டுக்கொண்டது போல் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு தொடர்ந்து எழுதினாள். இரண்டாவது திருமண வாழ்வு சரியாக அமையாமல் அதிலிருந்து விவாகரத்து பெற்று நாடு திரும்புகிறாள். அவளது கவிதைகள் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருந்தன. ஒரு வயதான பெண்மணியாக இருந்தாலும் தொடர்ந்து சமூகத் தாக்கங்களைப் பெருமிதத்துடனும் ஆணவத்துடனும் எழுதினாள். மறையும் சூரியனின் மகிமையையும் உருகும் தங்கம் போன்ற மலையில் விழும் கதிர்களையும் மாலையில் மேகங்கள் தைரியமாக உலா வருவதையும் வசந்தத்தின் நறுமணத்தையும். விளக்குத் திருவிழாவின் அழகிய பருவ நிலையைப் பற்றியும் எழுதுகிறாள்.
பெண் குழந்தையாக அறையில் இருந்தோம்.
நாங்கள் நகைகளை அணிந்தோம்,
எங்கள் கூந்தலில் வைரங்களை அணிந்தோம்,
எங்கள் கழுத்தில் தங்க நெக்லஸை அணிந்தோம்,
ஒவ்வொரு பெண்ணையும் கவனமாக உருவாக்கினோம்.
இப்போது வயதாகிச் சோர்வாக இருக்கிறேன்.
என் கூந்தலை அலங்கரிப்பதில் அக்கறை இல்லை.
நான் திரைச்சீலைக்குப் பின்னால்
சன்னலுக்கருகில் ஒளிந்துகொண்டு
கடந்து செல்லும் மற்றவர்களின் சிரிப்பை
என் காதுகளில் எதிரொலிப்பதைக்
கேட்கவே விரும்புகிறேன்.
என்று எழுதி தா வயதாகிவிட்டதாக உணர்ந்தாள். கவிதைகளுக்காகச் செலவிட்ட பொழுதுகளை எண்ணி முதுமையில் நிம்மதி கண்டாள். அவள் தன் கடந்தகாலப் புகழ், திருமணம், துரோகம், காதல் என அனைத்தையும் எண்ணிப்பார்த்தாலும் அவள் தனது செயல்களில் தவறிழைத்திருக்கிறாளா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். முதுமையில் மனம் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக உணர்ந்தாள்
கி.பி 1155 இல் அவள் இறந்தபோது அவளுக்குச் சுமார் எழுபது வயது. மரணத்திற்குப் பிறகு, அவரது கவிதைகள் பிற்கால நூற்றாண்டுகளில் அறிஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பெண் என்ற காரணத்தில் முறையான கல்வி கற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டவளுக்கு ‘ஆயிரம் ஆண்டுகளில் முதல் பெண் கவிஞர்’ என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். பிறகு அவருடைய கவிதைகளைத் தொகுத்தனர், அதில் பல கவிதைகள் காணாமல் போயின, கிடைத்தவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டனர். லி சிங்சோவ் சுமார் நூறு கவிதைகளை மட்டுமே விட்டுச் சென்றுள்ளார். எல்லா வகையிலும் சிறந்த எழுத்தாளர், இருப்பினும், குறிப்பாக இலக்கணம் படித்த ஆண்கள் மட்டுமே நாள்தோறும் வேலையின் ஒரு பகுதியாகக் கவிதை எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் லி சிங்சோவ் எழுதினார் என்பது பெருமைக்குரியது.
கவிதையை நேர்மையாக அணுகியவர். லி சிங்சோவ் பெண்ணாக இருந்து, மாறுபட்ட வாழ்வியல் முறையில் அரச வம்சத்தைச் சார்ந்த பணக்கார, படித்த குடும்பத்தில் பிறந்தாலும் கவிதையில் நேர்மையையும் அதன் தரநிலைகளில் எந்தவிதச் சலுகையுமின்றிச் சிறந்த கவிஞராக வலம் வந்தவர்.