1
ஏற்பதுதான்
விடுதலையெனச்
சொல்லிக்கொடுக்கப்பட்ட
அனைத்து இரவுகளிலும்
குட்டியின் கால்களைப்
பிடித்துக் கொள்கிறேன்.
இன்னும் மலராத
ஓர் இளம் பருவத்திற்குள் நின்றிருந்த
அவளுடைய சிறிய கால்களிலிருந்து
இன்னொரு துருவத்திற்குச்
சென்றுவிடலாமென
என்னை விதையாக்கிக்
கொண்டிருக்கிறேன்.
குறுகியும் சிறுத்தும்
உள்சென்று அமிழ்ந்தேன்.
இனி எங்காவது
மலரக்கூடும்.
இப்போதைக்குக் குட்டியின்
சின்னஞ்சிறிய காலிடுக்குகளில்
ஒளிந்து கொள்கிறேன்.
2
ஆர்ப்பரித்து எட்டி உதைத்து
மார்பில் குதித்து
அல்லல்பட்டு விழிக்கும்
ஒவ்வொரு காலையும்
குட்டியின் கால்களினால்தான்
என்றறிருந்ததும்
மனம் சமாதானம் கொள்கிறது.
3
பாறைகளின் முடிவில்
நதி அழுவதாகச் சொல்கிறாள்.
அதன் வளவளப்பான முதுகில்
தட்டிக் கொடுத்து
தன் இரு கால்களை
உள்நுழைக்கிறாள்.
இதோ மீன்கள் வந்துவிட்டன
நதியே மகிழ்ச்சிக் கொள்
எனக் கத்துகிறாள்.
4
மகள் இருக்கிறாளா?
என்கிற கேள்விக்கு
ஒரே மாதிரி
பதில் சொல்வதில்
அசதியாக இருக்கிறது.
இம்முறை
குட்டியின் கால்கள்
வீட்டில்தான் இருக்கிறதெனச் சொன்னேன்.
அதை விட்டுவிட்டு அவள் எங்கே சென்றாளெனக்
கொஞ்சமும் கூச்சமில்லாமல் கேட்கிறார்கள்.
இதற்குதான்
நம்மை முழுவதுமாய் அறிந்தவர்கள்
மத்தியில் வாழக்கூடாதென
நினைக்கிறேன்.
5
கனவில்
குட்டியின் கால்களில்
பூக்கள் முளைத்திருக்கின்றன.
அதற்கான மழையைத் தேடி
பகலில் அலைகிறேன்.
பின்னாளில்
அவை நகங்கள்
என அவள் சொல்கிறாள்.
அவளின் இரு கால்களையும்
வசதியாக ஒரு ஜாடிக்குள்
வைத்துப் பூட்டுகிறேன்.
அவளுடைய கால்கள் மலரட்டும்.
6
பாவங்கள் நிகழும்போது
கால்கள்தான்
முதலில் அவமானம் கொள்கின்றன.
கண்ணாடி குடுவையை உடைத்த நாளில்
குட்டியின் கால்கள்
வீட்டு மூலையில்
முகம் புதைத்துக் கொண்டன.
சேற்றைத் தன் முகத்தில்
பூசிக் கொண்டு
வீடு திரும்பிய நாளில்
குட்டியின் கால்கள்
வெகுநேரம் வெளியில் காத்திருந்தன.
சேட்டை செய்வாயா
என்று சொல்லி
எல்லோரும் குட்டியின்
கால்களைத்தான் அடித்தார்கள்.
குட்டி
உறங்கிய பின்னர்
இரவெல்லாம்
கால்கள் அழுதிருந்தன.
– கே.பாலமுருகன்