கடல் நாகங்கள் பொன்னி நூலுக்கு கவிஞர் கலாப்ரியா வழங்கிய அணிந்துரை.
“சிங்களத்தீவின் கடற்கரையை எங்கள்
செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார்
எகிப்திய நாட்டின் நதிக்கரையில் எங்கள்
இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்..”
இந்த வரிகளை உள்ளடக்கிய
கண்ணதாசனின் பிரபலமான திரைப்படப் பாடலை ஒலிக்காமல் 1950 களின் திராவிட இயக்க மேடைகளின் பொதுக் கூட்டங்கள் துவங்கியிருக்காது. அப்படிச் செந்தமிழ்த் தோழர்கள் அழகு செய்த கடற்கரைகள் ஒன்றா இரண்டா? கங்கை கொண்ட புகழும் கடாரம் கொண்ட புகழும் ஒன்றா இரண்டா. இன்று அவர்கள் படும் பாடுகளும் ஒன்றா இரண்டா..
புலம் பெயர்ந்து வாழ்ந்து தாம் புகுந்த மண்ணை வளப்படுத்தி, சில நாடுகளில் தங்கள் சுய சார்புத் தேவைகளைப் பூர்த்தி செய்து ஓரளவு நன்றாக வாழ்ந்தாலும் தங்கள் தாயகக் கனவுகளை, தாபங்களை தொப்புள் கொடி உறவுகளை அவர்கள் தலைமுறை தாண்டியும் நினைக்காமல் இருப்பதில்லை. அப்படி நினைக்க வைக்க அந்த மண்ணின் வலிமையான பெருவாரிக் குடியினர் தங்களால் இயன்ற அதிகாரத்தைச் செலுத்தாமல் எப்போதும் இருந்ததில்லை.
நவீன வாழ்க்கையின் அத்தனை சௌகரியங்களையும் அழகுகளையும் கண்டுகளிக்க, அனுபவிக்க வேண்டுமென்று நினைத்தால் அமெரிக்காவுக்கோ ஜப்பானுக்கோ போக வேண்டிய அவசியமில்லை சிங்கப்பூர் போய் வந்தால் போதும் என்பார்கள். அப்படிப் போகிறவர்களுக்கு ஒரு குட்டி சொர்க்கம்தான் சிங்கப்பூர். ஆனால் அதற்குள்ளும் ஒரு துயர வாழக்கை ஒளிந்து கொண்டே இருப்பதைப் படம் பிடிக்கிற கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. முதன்மையாக “தேசம் தாண்டிய பொன்னி” என்கிற நீள் கவிதை.
இன்பாவின் கவிதைகளைக் குறித்துப் பேசுகையில் அவர் எழுதியுள்ள நீள் கவிதையை முக்கியமானதாகக் குறிப்பிட வேண்டும், என்னுடைய `எட்டயபுரம்’ குறுங்காவியத்தைப் படித்து விட்டு கா.நா.சு சொன்னார் இனி காவியங்கள் துண்டு துண்டுக் கவிதைகளாகவே எழுதப்படும். அதை உறுதிசெய்வது போல இன்பாவின் `தேசம் தாண்டிய பொன்னி’ நீள் கவிதை 13 பாடல்களால் ஒரு அந்தாதி வடிவமைப்பில் நவீனமாகச் சொல்லப்பட்டுள்ளது.
“ஞாயிற்றுக்கிழமையை லிட்டில் இந்தியா
புதிய ஆடையென அணிந்துகொள்கிறது
நேற்றைய பசியை வேட்டையாட வந்த
குச்சி மனிதர்கள் திறந்தவெளியில் அமர்ந்து
தேக்கா மரத்தின் கிளைகளை உலுக்குகிறார்கள்”
லிட்டில் இந்தியாவின் ஞாயிற்றுக்கிழமை மனிதர்களை, அவர்கள் கண்களில் ஒளி நாட்டம் கொள்ளும் இலைகள் போல, நீர் நாட்டம் தேடும் வேர்கள் போலத் தெரியும் தாய் நிலக்கனவுகளை நான் நேரில் பார்த்து அனுபவித்தவன். என்னை அங்கே பார்த்த என் ஓரிரு ஊர்க்காரர்கள் மற்ற ஊர்க்கார்களுக்குச் சொல்ல எல்லோரும் என்னை சூழ்ந்து நலம் விசாரித்தார்கள். என்னை நலம் விசாரிக்கிறேன் என்கிற பேரில் தங்கள் குடும்பம் பற்றி விசாரித்தார்கள். அவர்களில் சிலரது குடும்பம் தவிர பலரது குடும்பம் பற்றி எதுவும் தெரியாது என்ற போதும் என்னிடம் ஏனோ விசாரித்தார்கள். அவர்கள் கண்களில் கடல் கடந்த ஏக்கத்தைக் கண்ணீரின் உப்பை நான் கண்டு கொள்ள முடிந்தது, எனக்கு. அந்த சோக ஞாயிற்றுக்கிழமையை மறுபடி என்னில் நிகழ்த்திக் காட்டியது இன்பாவின் நீள் கவிதை. அதில் பொன்னி, நாகம் என்பதெல்லாம் குறியீடுகள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு கவிதை, வாசிக்கிறவனின் உணர்வைக் கிளர்ந்தெழச் செய்யுமானால் அதில் படிம குறியீட்டு இடையீட்டுக்கு எந்த வேலையுமில்லை. அவை கவிதையின் அழகியலைக் கூட்டிக் காண்பிக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த நகரின் அடிவயிற்றில் புதைந்திருக்கிறது
எங்களது இரைப்பைக் கனவு
அகழ்ந்து அகழ்ந்து
அதை எம் வாய்க்குக் கொண்டுவருகிறோம்
நாங்கள் ஊர்க்காரர்கள்
அப்படித்தான் சொல்கிறார்கள்
இந்த வரிகளும் அந்தப் புலம் பெயர் வாழ்வின் கவலையைத் தான் சொல்கிறது.
கிலிங் கோயிலில் சீனத்துப் புத்தன் – என்றொரு கவிதை. இவனை நானும் சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் சந்தித்திருக்கிறேன். என் கவிதையில் வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இன்பா கவிதையில் வந்திருக்கிறான்.
இவரது கவிதைகளின் படிமங்கள் மரபார்ந்த மொழிக்கும் நவீனத்துக்கும் காலங்களால் பாலங்கள் அமைக்கின்றன
பொந்துக்குள் நுழைந்த கிளிக்குஞ்சுகளாய்
அதிகாலைத் தொடரியில்
முகக்கூட்டங்கள் நிரம்பி வழிகின்றன
இந்த வரிகள் வருகிற கவிதை, தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. நவீன யுகத்தின் வேகத்திற்கு, கண்டுபிடிப்புகளின் மாய ஆணைகளுக்கு அடிமையாகிப் போன மனிதர்கள் மனுஷிகள ஆகிய
எல்லோருடைய கைகளிலும் திறன்பேசிகள் இருக்கின்றன
எல்லோருடைய காதுகளும் அடைபட்டிருக்கின்றன
எல்லோருடைய தலைகளும் குனிந்திருக்கின்றன
நிமிடச் சேலையைப் பிடித்திழுக்கின்றன
செந்நிலத்துக் கிளிகள்
இந்தக் கடைசி வரிகளில் அவலத் தெறிப்பாக விழுகிற வார்த்தைகள் இன்பாவை ஒரு நல்ல கவிஞராக நிறுவுகின்றன.
சொர்க்கபூமியின் சோக மனிதர்களைப் பற்றி மட்டும் பாடவில்லை அதை சொர்க்கபுரியாக்கிய அதிபர் ‘லீ ‘ யைப் பற்றியும் எழுதுகிறார். அந்நாட்டுக் கொடியில் இல்லாத ஆறாவது நட்சத்திரமான அவர் கையைப் பிடித்து அழைத்து வருகிறது ஒரு கவிதை.
மாம்பழச்சாறு பருகும் சாலை என்றொரு கவிதை- அதில் தார்ச்சாலையை யானையின் துதிக்கையாய் உருவகித்திருக்கிறார்.
இப்படித் தொகுதியெங்கும் புலம் பெயர் வாழ்வின் சங்கடங்களும் அதைச் சொற் சாதுர்யத்தால் சிதற விட்டு விடாத பொறுப்புணர்வு மிக்க வரிகளும் இயல்பான படிம அழகும் நிரவிக்கிடக்கின்றன. ஆரம்ப கவிதைகளைக் காட்டிலும் பின்னால் வருகிற பல கவிதைகள் நம்பிக்கையையும் கவிதைகளின் பால் அவருக்கிருக்கிற மரியாதையையும் தெளிவாக உணர்த்துகின்றன.
ஒரு நல்ல கவிதை தன்னை வெவ்வெறு சூழ்நிலைகளில் வெவ்வேறாக வெளிப்படுத்திப் பொருள் கொள்ள வைக்கும்
`ஊர் திரும்பும் பறவைகள்’ என்கிற கவிதையில் பணியின் பாதியில், “இருப்பதெற்கென்று வந்து இல்லாமல் போகிற,” ஊர் திரும்ப நேர்கிறவளின் துயரும் வலியும் அவமானமும் அருமையான வார்த்தைகளால் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே நகுலனின் ஒரு நல்ல கவிதை மேற்கோளாக இல்லாமல், கவிதையின் வரிகள் போலவே வந்து சூழ்நிலையின் உக்கிரத்தை சிறப்பாக வெளிக்கொணர்வதைக் காண முடிகிறது.
இதே போல இன்பாவின் கவிதைகளும் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு பொருள் தரத்தக்க கவிதைகளாக, கால காலத்திற்கும் தன்னை இனம் காட்டிக் கொண்டிருக்கும் என்று நம்பிக்கை தருகிறது.
வாழ்த்துகள் இன்பா.
அன்புடன்
கலாப்ரியா
10.11.2023
வெளியீடு: சால்ட் பதிப்பகம்