கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ எனக்கு நேரடியாக அறிமுகமாகும் முன்னர் அவரைப் புனைவு வழியேதான் கண்டடைந்தேன். நேரடியாகப் பார்த்து நட்பு பாராட்டுவதற்கான அடிநாதமாய் இருப்பது ஒருவரின் படைப்புதானே. ஒருவரின் படைப்புகள்தானே அவரை அணுகவைக்கிறது. ஆனால் அவரின் நட்பைவிட அழுத்தமாய்த் தன்னை முன்னிறுத்திக்கொள்வது படைப்பு நயம்தான்.
“வெளிச்ச தேவதை’ சிறு காவியத்தைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் , கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கூடுகையின் போது என் கையில் கொடுத்தார் பிச்சினிக்காடு இளங்கோ. கொடுக்கும்போது ஒரு வார்த்தை சொன்னார் . இது ஒரு வீட்டுப்பணியாள் துயரக் காவியம்’ என்றார். நவீன இலக்கியம் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் பாடுகளையே முன்வைக்கிறது. அந்த வகை மக்களின் கதைகள் சொல்லித் தீர்வதே இல்லை. ஏனெனில் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் காலம் தன் கணக்கில் வரவுவைத்துக்கொண்டே இருக்கிறது. அதனைப் புனைவாளர்களன்றி வேறு யாரும் செய்துவிடமுடியாது!. நகரமயமாதல், உலகமயமாதல், நவீனமயமாதல் என்று பல்வேறு அடைமொழிகளை முன்னேற்றத்துக்கான சொற்களாய் குவிந்து மிரட்டி, ஒரு கனவுலகைச் ஸ்தாபித்தாலும் இந்த வீட்டுப் பணியாட்களின் அவலத்துக்கு எந்த மாற்றத்தையும் அந்த மாயச்சொற்களால் அல்லது கோட்பாடுகளால் கொண்டுவந்துவிடமுடியாது. மாறாக இந்த வேலைப்பெண்கள்தான் அந்தக் கோட்பாடுகளை நிஜமாக்கும் கருவிகளாக நிறுவப்பட்டிருக்கிறார்கள் என்பதே ஊழ். உழைப்பு சுரண்டப்பட்டு, வாழ்க்கைச் சூறையாடப்பட்டு மேலும் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிடப்படுபவர்கள் அவர்கள். உலகமயமாதலின் முதல் பலி வீட்டுப் பணிப்பெண்கள்தான் என்று சொன்னாலும் தவறிருக்காது. தன் வாழ்ந்த நாட்டிலிருந்து கண்காணா புதிய தேசத்துக்கு வயிற்றுப்பிழைப்புக்காக வரும், அந்தப் பெருந்திரள் பெண்களின் ஒரு ‘துளி’ போராட்டத்தைத்தான் பிச்சினிக்காடு இளங்கோ ஒரு குறுங்காவியமாக நம் முன் வைக்கிறார்.
எக்குறையுமில்லாமல் வாழ்ந்த ஒரு குடும்பம் எவ்வாறு வரிய நிலைக்கு ஆளாகிறது என்பதைத் தொடக்கமாகச் சொல்லிச் செல்லும்போது,
இவர்களின் வாழ்க்கையில்
எதும் வரவில்லை
வருவது ஏதும்
வரவாகவும் இல்லை.
பிள்ளைப் பேறுகள்
பஞ்சமில்லை
பஞ்சமில்லாப் பேறுகள்
ஏதுமில்லை
ஒரு குடும்பத்தின் ஏழ்மையை, கையறு நிலையை இவ்வாறான வார்த்தை மாயங்களால் சொல்லிப் பார்க்கிறார். கவித்துவத்துக்குக் கவித்துவமாகவும் இருக்கிறது, பாடுபொருளைக் கடத்துவதற்கான பொருள்நிறைச் சொல்லாகவும் சாலப் பொருந்தி வருகிறது இந்த வரிகள்.
வேறு வழியற்று, கிராமத்தில் வாழும் தன் குடும்பத்தின் வறுமை விரட்ட அவள் வீட்டுப்பணிபெண்ணாகப் போகலாம் என்று முடிவெடுக்கிறாள். வீட்டுக் கடன்கள் துரத்த குடும்பக் கடமை முன்வந்து நிற்கிறது. அதற்குப் பொறுப்பற்ற தந்தை ஒரு காரணமென்றும் சொல்லும்போது எள்ளல் தொனிக்கு மிக அண்மையில் மகளின் எரிச்சல் தொனியையும் உணரமுடிகிறது. பெற்ற மகள் வாய்வழியே இவ்வாறான சொற்கள் நெஞ்சினின்றும் குமைந்து குமைந்து சூடாக வெளிப்படலாமா? வெளிப்படலாம்! இதைத்தானே நாம் நவீனம் என்கிறோம்.. யாரையெல்லாம் புனித பிம்பத்துக்குள் வைத்து வெகுசன இலக்கியம் பூசை செய்ததோ அதையெல்லாம் உடைத்துக் காட்டுவதுதானே அதன் மைய நோக்கம்.
மக்கட்செல்வமாய்
விளைச்சல் கண்டவர்
நிலத்தில்
மகசூல் காண
மறந்துபோனவர்.
குடும்பக் கடனை தீர்த்து அப்பா விற்ற சொத்துகளை மீட்டெடுக்க வேண்டி சிங்கப்பூருக்குப் பணிபெண்ணாக வரும் அவள் சிங்கப்பூரின் வனப்பைப் பார்த்து மலைத்துப்போகிறாள். அவள் சொன்ன ஒரு சில வார்த்தைகள் நகரத்தின் வனப்பை காட்சிபடுத்திவிடுகிறது
கடல்நுரை
கொலுசணிந்த
கன்னி
கட்டடக் கவிதைகளின்
தொகுப்பு.
கட்டடங்கள் கற்குவியலாக வர்ணித்ததையே நான் வாசித்திருக்கிறேன். அவருக்கு அவை கவிதையாகத் தெரிந்திருக்கிறது. சிங்கை நகரின் புறக்காட்சிக்கு முரணாகவே இருக்கிறது அங்கு வாழும் சிலரின் பொக்குகள் என்று அடுத்தடுத்துச் சோர்வு தட்டாமல் சொல்லிச்செல்கிறார் இளங்கோ.
சிங்கப்பூர் அழகாகத்தான் இருக்கிறது. அதில் என்ன சந்தேகம். புறக்காட்சிகள் பெரும்பாலும் மனதைக் கொள்ளைகொள்ளும்தான். ஆனால் அந்நிலத்து மனிதர்கள் எல்லாரும் மனதளவில் அப்படியா இருக்கிறார்கள். சிங்கையில் மட்டுமல்ல, மனதில் மாசு படிந்த மனிதர் அங்கிங்கெனாதபடி எங்கேகேயும் இருப்பார்கள். அவர்களை அனுபவ ரீதியாக சந்திக்கும் இப்பெண் இவர்கள் ஒப்பீட்டளவில் சிங்கப்பூர் தரும் அழகிய காட்சிக்குச் சற்றே முரணானவர்கள் என்று காட்டும் சிதறல்கள் நம்மையும் பாதிக்கின்றன.
கார் நன்றாய்க் கழுவினாலும்
ஒவ்வொரு நாளும்
கண்களைக் கழுவியதே
மிச்சம்.
என்னதான் குறைவக்காமல் வேலைகள் செய்தாலும் அவை சம்பளம் கொடுத்து வேலை வாங்குபவர்களுக்கு நிறைவாக இருப்பதில்லை. கொடுத்த சம்பளத்தைவிடவும் கூடுதலாக சுரண்டுவதே முதலாளிகளின் கீழ்மை குணம் அன்று தொட்டு இன்றுவரை இயல்பல்லவா? இது நிலப்பிரபுத்துவக் காலந்தொட்டே, எளிய மக்கள் மீது செலுத்தப்படும் வன்மம் அல்லவா?
விழுப்புண்பட்ட
வீரப்பரம்பரையில்
வந்த என் முகத்திலும்
விழுப்புண்
ஒரு பணிப்பெண் அடிமைபோல நடத்தப்படும்போது, அவள் அடிவாங்காமல் இருக்க வாய்ப்புண்டா?
‘மனைவிக்குப் பிடித்தவராக
இருக்கிறோமோ இல்லையோ
கணவருக்குப் பிடித்தவராக
இருந்துவிடக்கூடாது’
அந்தப் பணிப்பேண் அடிவாங்கினாலும் வடு மறைந்துவிடும் ஆனால் சொல்லடியின் வடு வாழ்நாள் முழுதும் விரட்டிவரும் அல்லவா?
வேலைக்காரப் பெண்ணாகப் போனவளுக்கு எப்படி இவ்வளவு பணம் சேர்ந்தது? அவள் தூய்மையானவளாக வீடு திரும்ப வாய்ப்பே இல்லை என்றுதானே கறைபடிந்த பொதுச் சமூகம் பார்க்கும். அவளோ இளம் பெண். எல்லாவித ஆசைகளையும் கொண்டவள். ஒரு வேற்று தேசத்தில் வாழும்போது அவளுக்கான சுதந்திரம் கட்டற்றது. எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவள் தன் புனிதத்தை. இழந்துவிட்டுத்தான் வந்திருக்க வேண்டும் என்று தாய்மாமனே சுட்டெரிக்கும் போது கவிஞருக்கு உண்டான கற்பனையை இச்சொற்களால் எழுதுகிறார்.
காந்தமாய் உலவும்
இளமைத் துணையோடு
எப்படிக் கழிப்பால்
என்பதாக அல்லவா
இருந்திருக்கும்
கேள்வி!
இந்த ஈனச் சொற்களால் அவள் தன்னை இப்படித் தேற்றிக்கொள்கிறாள்.
எனக்கென்றே
பகல்கள்
இருளாமலில்லை
எனக்கென்றே
மேகங்கள்
பொழியாமலில்லை.
இக்குறுங்காவியத்தில் கவிஞர் ஓர் அபலைப் பெண்ணின் இருப்பு குறித்த வினாவை எழுப்பிக்கொண்டே இருக்கிறார். ஒரு கிராமத்திலிருந்து ஒரு பெரு நகரத்துக்குப் பிழைப்புத் தேடி புலம்பெயரும் பெண் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களை முன்வைத்து அப்பெண்னின் மீதான கழிவிரக்கத்தைக் கோருக்கிறார். கவிஞருக்கே உள்ள கரிசனப் பார்வையின் பிரதிபலிப்பாக இருக்கிறது காவியம். அவள் சந்திக்கும் பல்வேறு மனிதர்கள் எவ்வாறு அவளைப் பாதித்தார்கள் அல்லது பக்குவப்படுத்தினார்கள், அரிதாய் சில மனிதர்கள் தாயுமானவர்களாக இருந்தார்கள் என்பதைக் கவிதைத்தனம் குறையாமல் எழுதிச் சென்றிருக்கிறார். தட்டிக் கேட்க ஆள் துணையில்லாத பெண் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறாள் என்பதை புனைவு வழியே நன்றாகக் காட்சிப்படுத்திக்கொண்டு போகிறார். ஒரு தனியளாகப் கப்பலேறும் பெண் தான் சந்தித்த இடர்களையெல்லாம் கடந்து தன்னை எவ்வாறு ஸ்தாபித்துக்கொண்டாள் என்ற பெண்ணியச் சித்தாந்தம் குறையாமல் வந்திருக்கிறது ‘வெளிச்ச தேவதை’ நூலில். ராமன் போன்ற தூய்மையானவர்கள் வாழும் காலத்தில் இராவணன் போன்றவர்களும் வாழ்ந்தார்கள் என்ற தொன்மத்தின் தொடர்ச்சியாக இன்றைய வாழ்க்கையும் அதன் மனிதர்களையும் ஆழ்ந்தாராய்ந்து காட்டிவிடுகிறார்.
வெளிச்ச தேவைதைகளை எளிதில படித்துமுடித்துவிடலாம் என்றே எடுத்தேன் அது என்னை எளிதில் விடவில்லை