காலாவதியான கடவுச்சொல்
சமீபத்தில் பிரிந்த
காதலியின் பிறந்தநாளை
கடப்பது குறித்து நள்ளிரவு கவிஞனின் கையேடுகள்
ஏதேனும் கிடைக்கிறதா?
அடுத்த வருடத்திற்குள்
நேற்றிலிருந்து நாளைக்குத்
தாவுவதற்கு
மந்திரம் கற்க வேண்டும்.
வலியோடு முறியும் மின்னலை
இணைக்க வழியேதும் உண்டாவன
பிரான்சிஸ் கிருபாவிடம் கேட்டிருக்க வேண்டும்
தனித்துக் கிடப்பது குறித்தெல்லாம்
ஏகப்பட்ட குறிப்புகள் பெருகிக் கிடக்கின்றன.
முதல் கலவியின் பின்னணியில்
ஒலித்த பாடல் கேட்க நேரும்
தருணங்களைக்
கடக்க உதவும் கடவுச்சொல்
காலாவதியானதொரு நாளில் கிடைக்கிறது.
வளரும் புத்தர்
வரவேற்பறையில்
கையளவு சட்டகத்தில்
இமைகள் மூடி புன்னகைக் குமிழ
ஒளி வட்டம் பொருந்திய புத்தர்.
ஐந்து வயது வரை பேச்சு வராமல்
முடி முளைக்காத தலையுடன்
புத்தனைப் பார்த்தபடியே
அமர்ந்திருப்பேன் என்று அக்காமார்கள் சொல்லுவார்கள்.
சத்தமாக நான்கைந்துமுறை அழைத்த பின்னர்
மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன் என்று
அண்ணன்மார்கள் சொல்லுவார்கள்.
முதல்முறை சொன்னதுடன்
திரும்பிப் பார்த்திருக்கிறேன்
“புத்தம்.. சரணம்.. கச்சாமி”
என்றோ செல்லும் சுபகாரியங்களுக்கும்
அடிக்கடி வட்டிக்குப் பணம் கேட்கச் செல்லும் போது
சில நொடிகள் புத்தரைப் பார்த்தபடியே முணுமுணுப்பார் அம்மா
“புத்தம்.. சரணம்.. கச்சாமி”
குலச்சாமிக் கொடைக்குச் செல்லும் போது
தவறாமல் அனைவரையும் கும்பிட்டு வரச் சொல்லுவார் அப்பா
“புத்தம்.. சரணம்.. கச்சாமி”
அக்காவைப் பொண்ணு பார்க்க வந்தவர்களின்
பொதுவான கேள்வி :”எதுக்கு மாட்டி வச்சு இருக்கீங்க?”
இலவசமாகத் தந்தார்கள் “கழட்டிடுங்க”
தனது திருமணத்திற்கு முதல்நாள் அன்று
மூன்றாம் அக்கா ஓடிப்போன
சில நாட்களில் தூக்கிட்டு இறந்தார்
மூத்த அக்கா.
வீடு மாற்றுகையில்
காணாமல் போனார் புத்தர்
இன்றும் என்னுள் ஒலிக்கிறது
“புத்தம்.. சரணம்.. கச்சாமி”