கவிஞர் விக்ரமாதித்யன் ஒருமுறை ’மாயத்தைக் கட்டுவதே கவிதை’ என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். எனக்கு அந்தச் சொற்கள் மனதுக்குள் உருண்டுகொண்டேயிருக்கின்றன. அதன் உள்ளார்ந்த பொருள் என்னவாய் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். விக்ரமாதித்யன் சொன்ன சூழலலமைவைக் கடந்தும் அந்தச் சொற்கள் ஒரு தத்துவார்த்த தளத்துக்குள் பயணிக்கின்றன எனக் கருதுகிறேன்.
கவிதைகளில் மாயம் எப்படிக் கட்டப்படுகிறது. மாயம் என்பதைப் புரியாமை, பூடகத்தன்மை, சூட்சுமப் பொருள் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். ஒரு கவிதையில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு, தனித் தனிச் சொல் சொல்லாய் பார்க்கும்போது தூலமாகத் துலங்கும் அர்த்தம், அவை கவிதைக் கட்டுமானத்துக்குள் வரும்போது மாயத்தன்மை கொண்டுவிடுவதேன். கவிதை என்ற அறிதல் நிலை, அர்த்தம் போலவே அர்த்தம் கடந்தும் செல்கிறதா? அர்த்தம் கடந்தும் செல்லுதல் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? அர்த்தம் கடந்து செல்ல மொழியில் சாத்தியம் உள்ளதா? ’எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று தொல்காப்பியன் வரையறுத்த அறிவியங்கியல் நிலம் இது. ஒரு சொல் அதன் பொருள் கடந்து செல்லுகிறது என்போம் எனில் அது, இலக்கண வழூஉ என்றாகிவிடும் அல்லவா?
முகநூலில் நண்பர் பிரதாபருத்திரன் ஒரு பதிவு போட்டிருந்தார். கவிஞர் ஆத்மாநாமை, கவிஞர் பிரம்மராஜன் எடுத்திருந்த நேர்காணலின் ஒரு பகுதி அது. அதில் நாம் மேலே பேசிய விஷயங்கள் தொடர்பாய் சில அவதானங்கள் இருக்கின்றன.
—
பிரம்மராஜன்: கவிதைகள் சில சமயம் அரூபத்தன்மை பெறுகின்றன. எடுத்துக்காட்டாக abstract paintings போல, நம் ராகங்களின் வடிவைப் போல, Symphoniesஐ போல, இந்த மாதிரியா இருப்பதற்கு வேறுபட்ட அர்த்தங்களைக் கொடுக்கறாங்க. அதாவது கவிஞர் intend பண்ணாத அர்த்தங்களை வேற கொடுக்க வேண்டியிருக்கு. அப்படிக் கொடுக்கும்போது கவிஞனின் கவித்துவக் கருத்துருவத்துக்குப் பாதகம் விளையாதா? அவன் என்ன நினைச்சான்கறதுக்கு?
ஆத்மாநாம்: எந்த விதமான பாதகமும் விளையாது.
பிரம்மராஜன்: எப்படி?
ஆத்மாநாம்: ஒரு கவிதைக்கு நாலு பேர் நாலு விதமான பொருள் கொடுக்கறாங்கன்னு வச்சுப்போம். இவன் இவனுக்கு intuitiveஆகப் புரியற போதுதான் அந்தக் கவிதைக்கு ஒரு பொருளைக் கொடுக்க முடியும். அதுவரைக்கும் அந்த நாலு பேர் கொடுக்கறதையும் இவன் ஒரு listener எப்படி respond பண்றாங்கிற levelல அதை observe பண்ணுவானே ஒழிய இவன் அதை interpret பண்ணலை. நாலு பேர் நாலு பொருளைக் கொடுக்கறாங்க. நாலு பேரும் நாலு different persons ஆக இருக்கறதால அவங்கவங்க தங்கள் life styleக்கு ஏத்தபடி அதுக்குப் பொருளைக் கொடுக்க முடியும். So அந்த நாலு interpretationsம் அவங்கவங்க அளவிலே சரி, தப்புன்னு கணிக்க முடியாது. இந்தப் புரியாத தன்மைங்கறது ஒரு மனுஷனுக்கு ஆதிகாலத்துல இருந்து இன்னிவரைக்கும் இருந்திண்டுருக்கற விஷயம். இந்த வாழ்க்கையே எனக்கு விளங்கலை, இதுக்குப் பொருளே இல்லை, அப்படின்னு சொல்ற தன்மை பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே இருந்திட்டிருக்கு. இந்த வாழ்க்கைக்கான அர்த்தத்துக்குத்தான் பல சமயங்களும், பல புத்தங்களும், பல இலக்கியங்களும் முயற்சி செய்யறது. அதனால இந்த வாழ்க்கைக்கான முழுப்பொருளை… அவன் எந்த அளவுக்குத் தன்னோட வாழ்க்கைக்கு நேர்மையானவனா இருக்கான்கறதை வச்சுதான்கணிக்க முடியும். மத்தபடி எந்த விதமான அளவுகோலும் இருக்கவே முடியாது. So நாலு பேர்நாலு விதமா பொருள் கொடுத்தாலும்கூட அந்தக் கவிதைக்கு என்னிக்காவது ஒரு நாள் சரியானபொருள் கிடைக்கும்னே நான் நினைக்கிறேன்.
பிரம்மராஜன்: அதாவது அந்தக் கவிஞர் intend பண்ணின அளவுக்கு அந்த meaning இருக்குமா? இல்லை அதைவிடவும் அழகாகூடக் கொடுக்க முடியுமா?
ஆத்மாநாம்: ம்ம் அதைவிட அழகாகக்கூடக் கொடுக்க முடியும்…
(14.04.1983 அன்று பிரம்மராஜன்-ஆத்மாநாம் இருவருக்குமிடையிலான கவிதைகள் பற்றிய உரையாடல்களிலிருந்து ஒரு பகுதி)
—-
இனி இது தொடர்பான என் பார்வை…
இந்தக் கேள்வி இத்தனை வருடங்களில் வேறு வேறு சொற்களில் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பிரம்மராஜன் இதனை மிக சரியான பொருளில் கேட்கிறார். அதாவது கவிதை உருவாக்கும் புரியாமை அல்லது புதிர்தன்மை எப்படி இசையின் பண்புக்கு அல்லது ஓவியத்தின் பண்புக்கு இணையானதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுக் கேட்கிறார். கேள்வியாகவே இது ஒரு முக்கியமான அவதானம். இசை குறிப்புணர்த்தும் உணர்வுநிலையின் பண்பு ஒரே சமயத்தில் துல்லியமானதாகவும் பன்முகமமானதாகவும் இருக்கிறது. அதனால்தான் அதனை மனிதர் முதல் விலங்குகள் வரை (இவ்விடம் மிருகம் என்ற சொல் அந்நியமாய் உள்ளது) அனைத்துமே இசையில் மயங்கி நிற்கின்றன. இசை குறிப்புணர்த்தும் அல்லது சென்று தைக்கும் உணர்வு என்று ஏதும் உள்ளதா என்று கேட்டால் ஆமாம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
கவிதை போன்ற கலைவடிவத்தில் இயங்கும் சொற்கள் எனும் குறியியக்கங்கள் குறிப்புணர்த்துவதைவிடவும் மேலதிகத் துல்லியமாகவும் நுட்பமாகவுமே ஒரு மனதை இசை தொடுகிறது. அதனால்தான் அதன் கிளர்ச்சியும் ஒப்பீட்டளவில் கவிதையைவிட அதிகமானதாக உள்ளது. அதே சமயத்தில் இசை அவ்வளவு துல்லியமாக ஒற்றை உணர்வைத்தான் தொடுகிறதா என்று கேட்டால் அதற்குத் தெளிவான பதிலைச் சொல்வது கடினம். ஏனெனில் நாம் அடைகிற அதே பரவச நிலையை அல்லது அதைப் போன்ற ஒரு பரவச நிலையை, அதே இசையைக் கேட்கிற இன்னொரு மனமும் அடைய முடியும் என்ற இடத்தில் இசையின் துல்லியத்தன்மை எத்தகையது என்கிற புரிதலில் குழப்பம் வந்துவிடுகிறது.
அதனால்தான் இசை ஒரே சமயத்தில் துல்லியமாகவும் பன்முகமாகவும் உணர்வைத் தொடும் திறன் கொண்டுள்ளது என்கிறேன். ஜார்ஜ் தாம்சன் போன்ற சிந்தனையாளர்கள். இசையின் இந்த நுட்பமான பண்பை வியந்துதான், ’எல்லா கலைகளும் இசையின் பண்பை அடைய விழைகின்றன‘ என்கிறார்கள். பீத்தோவானின் தர்க்க கணிதம் ஒன்று கலையாக மாறும் மேஜிக் இசையில்தான் பிரமாதமாக நிகழ்கிறது. காட்சியை அல்லது ஓவியத்தை விடவுமேகூட அதில் மிகச் சிறப்பாக இந்த மாற்றம் நிகழ்கிறது. அதாவது தர்க்கம் ஒன்று கலையாக மாறும் அசாதாரண கனம்.
இசையின் அளவுக்கு இல்லாவிடினும் நவீன கவிதை சமயங்களில் இந்த எல்லையைத் தொடவே முயல்கிறது. அதாவது இசையின் துல்லியமும் பன்முகமும் இணைந்த ஒரு நிலை. இவ்விடத்தில் உருவாகும் புரியாமை அல்லது புதிர்தான் வாசகனைத் திகைக்க வைக்கிறது அல்லது குழப்புகிறது. இசை கேட்கும்போது, இது என்னுள் என்ன உணர்வைக் கிளறுகிறது. இதன் பொருள் என்ன? நான் எதைச் சிந்திக்கிறேன் என்று தர்க்கப்படுத்தாமல் அதன் உணர்வுப் பிரவாகத்தின் சரளத்தில் கசிந்துருகும் மனம்கூட நவீன கவிதை என்று வரும்போது தடுமாறுகிறது. இது ஏன் புரியவில்லை என்று கேட்கிறோம். புரியாவிட்டால் சரியில்லையே என்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரிப் புரிந்தால் அது எப்படி சரியாகும்? கவிஞனின் ஆதாரக் கவித்துவத்தை இழந்தால் அது அந்தக் கவிதைக்கு நட்டமில்லையா? கவிஞனுக்கு நட்டமில்லையா என்று குழம்புகிறோம்.
உண்மையில், இந்த அனர்த்தங்கள் எல்லாம் கவிதை சொற்களை நம்பி இயங்குவதால் வரும் கோளாறு. சொற்கள் இயல்பாக தர்க்கப்பண்பு கொண்டவை. காரண காரிய பண்புடையவை. சொற்களுக்கும் அதன் அர்த்தத்துகுமான உறவு பற்றி சசூர் விளக்கியதையே எடுத்துக்கொள்வோம். சசூர் சொல்லும் பொருளும் நேர்த் தொடர்பு அல்லது இயல்பான தொடர்பு கொண்டவை அல்ல என்கிறார். அவை இடுகுறிப் பண்பு கொண்டவை. ஒரு சொல்லுக்கான பொருள் இன்னதென விளக்க ஒட்டுமொத்த அகராதியையும் கொட்டிக் கவிழ்க்க வேண்டும் என்கிறார் தெரிதா. சொல் எனும் குறியியக்கம் அவ்வளவு தர்க்கமானது. ஆனால், இசையின் குறிகள் அத்தகையவை அல்ல. அவை ஆழமனதில் லிங்கூ எனப்படும் உள்மொழியோடு தொடர்பு கொள்பவை. அதனால், அதை நாம் தர்க்கப்படுத்திக்கொள்ள முயல்வதில்லை. வெறுமனே நம்முள் அந்த இசை கிளர்த்தும் உணர்வுகள் நிகழ அனுமதித்து பரவசமாய் அமர்ந்திருக்கிறோம்.
நவீன கவிதைகள் இதைச் செய்ய முயலும்போது நம் தர்க்க மனம் இடையீடு செய்கிறது. ஆத்மாநாம் இந்தக் கேள்வியை வேறொரு பக்கம் இருந்து அணுகுகிறார். வாழ்வின் புரிபடாத தன்மை என்ற தத்துவார்த்த தளத்திலிருந்து ஒருநாள் மனிதனுக்கு அது (வாழ்க்கை) புரியும் என்கிற நம்பிக்கைவாதமான பதிலைப் போல் சொல்கிறார். அப்படியாக கவிதையின் உள்ளார்ந்த பொருளை நோக்கி ஒரு வாசகர் என்றாவது சென்றுவிடுவார் என்கிறார். ஒரு குறிப்பிட்ட நவீன கவிதை பேசும் அகமொழியோடு மிகச் சிறப்பாகத் தொடர்புகொள்ள சாத்தியமான ஒரு மனம் உருவாகிவரும்போது அக்கவிதை தானாகவே தன் மாயங்களை கட்டவிழ்க்கும். அது ஒரு நிகழ்தகவு… சமயங்களில் அது நிகழாமலும் போகலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட முறையும் நிகழலாம். எல்லாம் கூட்டு நனவிலியின் அனந்த கோடி விளையாட்டுகள். அதன் மாயத்தைக் கட்டுவது மட்டுமல்ல கட்டவிழ்ப்பதும் கவிதைதான்.
நம்முடிய அறிதல் முறைகளில், புரிதல் மற்றும் புரியாமை என்பவை எப்படி தர்க்க அளவில் தூலமான இரு இருப்புகளோ அதுபோலத்தான் புரிந்தும் புரியாத நிலை அல்லது மங்கலாக உணர முடிந்த மற்றும் அறிய முடிந்த நிலை என்பதும் இன்னொரு தூலமான இருப்புதான். ஆனால், நாம் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இன்றைய பின்நவீன சிந்தனைகளில் இந்தப் புரிந்தும் புரியாத நிலைக்கான ஏற்பும் உள்ளது. புரிதல், புரியாமை, புரிந்தும் புரியாமை என நம் அறிதல்கள் மூன்று நிலைகளில் இருக்கின்றன. கவிதை சில சமயங்களில் புரிந்தும் புரியாத நிலை நோக்கி நகர்கிறது. இப்படி நகரும்போது வாசக மனத்துக்குக் குழப்பம் வந்துவிடுகிறது. புரியாமையை நாம் விளக்க வேண்டியதில்லை. ஏனெனில் அதில் புரிய ஒன்றுமேயில்லை. புரிதலையும் விளக்க வேண்டியதில்லை ஏனெனில் அதன் விளக்க வேண்டிய பாகங்கள் எதுவுமேயில்லை. ஆனால், இந்தப் புரிந்தும் புரியாத நிலை ஒரு சிக்கலான இருப்பு. அங்கு மங்கலாகவே அர்த்தங்கள் தொனிக்கின்றன. இதுவாய் இருக்குமோ என்பதைப் போன்ற ஐயம் மட்டுமே அங்கு உண்டு. அர்த்தங்கள் இப்படி பொருளோடு தைத்திருக்காமல் மிதக்கும் நிலையில் இருக்கும்போது ஒரு மாயத்தன்மை உருவாகிறது. கவிதை இப்படியான சிக்கலான மனவெளிகளில் பயணிக்கும்போது புரிதல் தொடர்பான அந்தக் கடினம் கவிதைக்குள்ளும் ஏறிவிடுகிறது. அப்போது புரியாத கவிதைகள் உருவாகின்றன. உண்மையில் அக்கவிதைகள் புரியாத கவிதைகள் அல்ல. புரிந்தும் புரியாத ஒரு மனவெளியிலிருந்து அவை வருகின்றன. புரிவதை ஏற்பதைப் போலவே இந்தப் புரிந்தும் புரியாத நிலையயும் நான் ஏற்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
இப்போது, தொல்காப்பியனுக்கு வருவோம். ’எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற வரிகளுக்கு நவீன புரிதலில் எந்த பங்கமும் வரவில்லை. நாம் தொல்காப்பியனை நம் காலத்துக்கு ஏற்ப இன்னும் விரித்தெடுத்துப் புரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவே.
சொல் என்பதை நாம் அறிதலின் கருவி எனக் கருதினால் தொல்காப்பியனை குறைத்து மதிப்பிட்டுவிடுவோம் அல்லது தொல்காப்பியர் சொன்னதில் நின்று நவீன அறிதலை மறுக்க வேண்டியவர்களாகிவிடுவோம். சொல் என்பது அறிதல் போலவே அறிதலின்மையின் கருவியும்தான். அது அறிதலாகும்போதும் அறியாமலே ஆகும்போதும் பாதி அறிந்தும் மீதி அறியமாலும் ஆகும் போதும் சொல் என்பது பொருள் குறித்ததுதான். பொருளற்ற சொற்கள் கிடையாது. ஆனால், நாம் ஆழ்மனவெளிகளில் பொருளோடு தூலமாய் ஒட்டாமல் மிதக்கும் சொற்கள் உள. அவையே சொற்களை அறிதல் போலவே அறிதலின்மையின் கருவியாகவும் மாற்றுகின்றன. இப்படித்தான் கவிதை மாயத்தைக் கட்டுகிறது. கட்டவிழ்க்கவும் செய்கிறது.
Leave a comment