- அந்தக் குகையில் தொடங்கி, இந்தக் குகையில் முடிகிறது எல்லாம். இடையில் நிகழும் கனவுகள் யாவும், பழுதுற்ற காலயந்திரக் குழப்பங்கள்.
- தந்தை தேவைப்படாத முட்டைகள் பாடிக்கொண்டிருக்கின்றன, உள்ளே.
- வேட்டைநாய்கள், பசிமயக்கக் கனவுகளில் எஜமானனைக் குதறித் தின்கின்றன.
- காமத்தில் பிசைந்த உணவு, ஞானச்சுரப்புக்கான பத்திய மருந்து.
- தோட்டாவை மென்று விழுங்குவதற்குப் பதிலாக, வயிற்றில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் வான்கா. பெரிதுபடுத்த ஒன்றுமில்லை. விடுமுறை நாளின் தனிமையில், சூரியகாந்திப் பூக்கள் நிகழ்த்திய சின்னக் குழப்பம்தான் அது.
- ரத்தவாடை மிகுந்த பரிணாமத்தின் பாதையை வெறித்துப் பார்க்கிற குரங்கு, கனிந்து வெடித்த பழத்திற்குள் குறி நுழைத்து, தன் நற்பேற்றில் ஆறுதல்கொள்கிறது.
- காலைப் பனிக்குளிரினூடே கறி வாங்கப்போகிற நிழல்கள், பனைகளின் மறைவில் தழுவிச் சூடேற்றி மாறி மாறிச் சுவைத்துக்கொள்கின்றன கொஞ்சம் உடலை.
- வரலாற்றின் தேநீர்க்கடையில் சந்தித்துக்கொண்டன சுத்தியலும் ஆணியும். ‘ஒரு கடவுளை உருவாக்கி எத்தனை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன’ எனப் பெருமூச்சு விட்டுக்கொண்டன.
- நான் உள்ளே புணர்ச்சியிலிருக்கிறேன். நிலையாமை என்கிற மெய்யியல், வெளிக்கதவில் தாளமிடுகிறது ஒயிலாய்.
- குரூரமான வாழ்வின் தலைவிரி கோலத்தை, வகிடெடுத்துச் சீவுகின்றன குற்றவுணர்வின் கரங்கள்.
- முதலாளியின் மண்டையோட்டோடு நெடுங்காலமாகப் பசியைக் குறித்து விவாதிக்கிற கூலியின் மனப்பிறழ்வுக்கு, டார்வின் வளர்த்த குரங்கின் ரத்தத்தைக் குடிக்கத் தருகிறார் தோழர்.
- துக்கத்தைக் கொண்டாட விழைந்தவன், மூங்கிலின் வெற்றிடத்தில் வெடிமருந்தை நிரப்பி தீயூட்டி ஆகாசத்தில் மலர்த்தினான். நெருப்பில் வண்ணம் கலந்து மகிழ்ச்சியின் சாயலில் அதைப் பாட வைத்தான்.
- ஒவ்வொரு துரோகத்துக்கு முன்பும், காகிதங்களை மடித்து மடித்து 99 ட்ராகன்களையும் ஒரு பட்டாம்பூச்சியையும் செய்கிறார்கள் அவர்கள்.
- ‘தமிழுக்குப் பன்றிக்கறிச் சுவை’ என்றான் முருகன். அந்திக்காட்டில் தன் 247 பன்றிகளையும் தொழுவத்திற்குப் பாடி அழைக்கிறாள் அவனின் அணங்கு.
- ஏ.டி.எம் வாசலில் ஒரு தலை. ரத்தக்கறையோடு ஐஸ்க்ரீம் வண்டியை மறிக்கிறது ஒரு கரம். அறமெனும் மணி நாவில் ‘டிங்… டிங்…’
- கடைசித் தோல்விக்குப் பிறகு, தன் மூளையின் கொழகொழப்பைக் கடுமையாய்ப் புணர்ந்து சிதைக்கிறான் உளவியலாளன்.
- மௌனம் எரிகிறது, ஞானம் அதில் குளிர்காய்கிறது.
- கார்ல் மார்க்ஸ் திட்டமிட்டிருந்த – எழுதிமுடிக்கப்படாத – அழகியல் குறித்த ஆய்வுக் கட்டுரையில், மனிதனை நெருப்பை நோக்கி அழைத்துச் சென்ற இறைச்சியைப் பற்றிய பகுதியில், வேகவைத்த அறிவைத் தின்றபடி நீயும் பச்சையான காமத்தை மென்றபடி நானும் குறிப்பிடப்பட்டிருக்கிறோம்.
- விஷம், கனவுகளுக்குப் பிறகே சாவைக் கொண்டுவருகிறது.
- ஒரு மனதை 22 பேர் உதைத்து விளையாடுகிறார்கள். வெற்று மைதானத்திலமர்ந்து அவன் தன் பீர் போத்தலைப் பற்களால் திறக்கிறான். எங்கும் அபத்தத்தின் கரகோஷம்!
Leave a comment