யாரும் சொல்லாத ஒன்றை
யாரும் எண்ணாத ஒன்றை
யாரிடத்திலும் இல்லாத ஒன்றை
யாராலும் தந்து விட முடியாத ஒன்றை
யாருக்குமே வாய்க்காத ஒன்றை
யாராலும் யாராருக்குமே அளிக்கப்படாத ஒன்றை
ஒரு போதுமே நிகழாத ஒன்றை
ஒரு போதுமே நிகழ முடியாத, நிகழ்த்தவியலாத ஒன்றை
அவனுடைய நிழலில் கண்டேன்
அந்த நிழல் அவனை விட்டுப் பெயர்ந்து
எங்கெல்லாமோ சென்றது.
———————————————
யாரென்றே தெரியாத ஒருவன்
தான் யாரென்றே புரியாதவன்
ஏது இதுவென்று அறியாதவன்
ஒளிரும் நிழலாகி நின்றான்
ஒளிரும் நிழலின் கீழே நின்றேன்
என்னுடைய நிழல் பெயர்ந்து போகிறது
ஏதோ திசைகளில்.
———————————————
நான் அங்கில்லை என்று சொன்னார்கள்
நான் இங்கும் இல்லை என்றனர்
அங்குமிங்குமாக நிற்கும் உன்னையும் அப்படித்தான் சொன்னார்கள்
நீ எங்குமில்லை என்று
அவர்கள் முதலில் அங்கிருந்தனர்
பிறகு எங்கோ சென்றனர்
பிறகு இங்கிருந்தனர்
பிறகு அங்குமிங்குமாக நின்றனர்.
பிறகு அங்குமிங்கும் இல்லை என்றனர்
எங்குமே யாருமில்லை என்றானது ஒரு நாள்
அந்த நாளில்
எங்கும் எதுவுமே இல்லை என்றானது.
———————————————
எல்லாம் அப்படித்தான்
எல்லோரும் அப்படித்தான்
என்றான ஒரு நாளில்
எதைக்குறித்தும்
யாரைக் குறித்தும் ஏதொன்றுமில்லை என்று
மகிழ்ந்திருந்தார் ஞானி.
திசையற்ற வழியில்
எல்லாம் அப்படித்தான்
எல்லோரும் அப்படித்தான்
ஏதொன்றும் அவ்வாறே
என்று துயருற்றிருந்தார் சூனி
ஞானிக்கும் சூனிக்கும் இடையில்
ஓடிக்கொண்டேயிருக்கிறது
அது வேறு
இது வேறு என்ற
பேராறு.
———————————————
நீ யார்
நான் யார் என்றறியாத வலையில்
சிக்கியது
நீ என்ற மீன்
நான் என்ற மீன்
யார் என்ற மீன்
அதோ தெரிகிறது
விண் மீன்
எங்குமே தெரியவில்லை
ஒரு மீன்
———————————————
சின்னஞ்சிறிய மலர் இந்த நாளை வாசமூட்டுகிறது
சின்னஞ்சிறிய மலர் இந்த உலகை அழகாக்குகிறது
சின்னஞ்சிறிய மலர் என்னை மகிழ்விக்கிறது
சின்னஞ்சிறிய மலரில் உன்னைச் சூட்டுகிறாய்
சின்னஞ்சிறிய மலரின்
பென்னம்பெரிய கனவே
உன் மகிழ்ச்சியும்
இந்த உலகின் அழகும்
இந்த நாளின் வாசனையும்
———————————————
எங்கே தொடங்கி
எங்கே முடிகிறது என்று தெரியாத தெருவில்
நடந்து கொண்டிருக்கிறோம்
எங்கே தொடங்கி
எங்கே முடிகிறது என்று தெரியாத பயணத்தில்
சென்று கொண்டிருக்கிறோம்
எங்கே தொடங்கி
எங்கே முடியும் என்று தெரியாத உறவில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறோம்
எங்கே தொடங்கி
எங்கே முடிகிறது இந்த வானமும்
இந்த நாளின் ஒளியும்
என்று தேடுகின்ற குழந்தையின் கைகளில் சிக்கும்
ஒரு விண் மீன்
ஒரு ஒளிமலர்
———————————————
அந்தத் திருநாளின் அப்பத்தை யாருக்குப் பகிர்ந்தளிப்பது?
தேவன் இன்னும் வரவில்லை
பகிரப்படாத அப்பம்
வைக்கப்பட்டிருக்கிறது உன் நாவில்
தேவன் இன்னும் வரவில்லை
நாவில் வைக்கப்பட்ட அப்பத்தில்
ஒரு துளி கண்ணீர்
தேவன் இன்னும் வரவில்லை
ஒரு துளி கண்ணீரில்
துளிர்த்தது அமிர்தம்
தேவன் இன்னும் வரவில்லை
துளிர்த்த அமிர்தத்தில் தேவன்.