1.முகவாதம்
நேற்றிலிருந்து
இடப்பக்க முகம் வலிக்கிறது
முகவாதம் பீடித்த
அப்பாவை மருத்துவமனைக்கு
தனியாக அனுப்பிய நாட்கள்
கடந்து பல வருடங்கள் ஆகின்றன
2.ஒவ்வொரு முறையும்
உன் வாசல் தேடி
பிச்சை கேட்டு வந்த போதும்
மறுத்த போதும்
கதவுகளை அறைந்து சாத்திவிட்டு
சென்ற போதும்
நிறைந்து போன எனக்கு
நீ காணாமல் சென்ற போது
பசித்தது
3.
உச்சியில் மலர்ந்த
பூவின் மீது
உனக்கு அலாதி பிரியம்
வாசத்தைக் கொய்ய
மலையேறத் துவங்கினேன்
ஏற ஏற
வெளிச்சம் பாய்ச்சுகிறது
உச்சியில்
எனக்கும்
வானத்தில் பூத்திருக்கும்
மலருக்குமிடையே
தூரம் பூத்திருந்தது
4.
நாமொன்றைத் தொடங்கினோம்
எவ்வளவு அழகாய் இருக்கிறது
பின் நடந்தவைகளைத் தவிர்க்கிறேன்
இது போதுமானது
“நாமொன்றைத் தொடங்கினோம்”
5. இந்திரியம்
தொலைந்து போன
பெரியண்ணன்
நீண்ட நாள் கழித்து வீடடைந்தான்
அறைக்குள் ஆடை களைந்தான்
அம்மணமாய்க் குளித்தான்
சேலைத் தலைப்பை வாயில் பொத்திக் கொண்டாள் அம்மா
பயந்து பக்கத்து வீட்டில் ஒளிந்தாள் சின்னத் தங்கை
ஈரத்துடன்
கால்களைப் பரப்பிய படி உறங்கியவன்
வலப்புறம் ஒருக்களித்தான்
இம்முறை படுக்கை விரிப்பை
துவைக்கும்போது
அம்மாவை துணைக்கு
கூப்பிடக் கூடாது