முல்லை நில மக்களின் வாழ்வியலைச் சொல்லும் முல்லைக்கலியில் எருமைகளை வளர்ப்பவர்களை ‘கோட்டினத்தார்’, பசுவை வளர்ப்பவர்களை ‘கோவினத்தார்’, ஆடுகளை வளர்ப்பவர்களை ‘ஆட்டினத்தார்’ என மூன்று வகையான ஆயர்ச் சமுதாயம் இருந்ததாகச் சங்க இலக்கியம் சொல்கிறது.
நீட்டுரமும் தேட்டுரமும் நெல்லுரமும்
ஆகையினால் ஆட்டுரமும் மாட்டுரமும்
வயலுரங் காண் ஆண்டே
என்ற பாடலில் ஆடு மாடுகளின் கழிவுகளை உழவு நிலத்திற்கு உரமாகப் பயன்படுத்தினார்கள் என்கிறது சங்கப் பாடல்.
கி.ராவின் மிகச்சிறந்த படைப்பான கிடை என்னும் குறு நாவல் இடையர் இனத்திற்கிடையே உள்ள சமூக உறவுகளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் நுட்பமாகப் படம்பிடித்துகாட்டியது. கிடை எழுப்பும் சத்தம் முதற்கொண்டு கிடைகள் முறையே குரா, சுணக்கி, குருட்டாடு, சொட்டை காது, ஓங்கோல்,புளியம்போர் என்றெல்லாம் பிரித்து எட்டு திசைகளுக்கும் கிளம்பும் கிடை ஆடுகளின் பாங்குகள் பற்றி நுட்பமான அவதானிப்பைப் பதிவுசெய்திருக்கும் கி.ராவின் படைப்புகளில் கிடைக்கு தனி இடம் உண்டு.
வெற்றிச்செல்வன் ராஜேந்திரன் இடையர் இனத்திலேயே பிறந்து வளர்ந்து கீதாரிகளின் வாழ்வியல் போராட்டங்களைத் தனது கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார் என்று சொல்லலாம். நெருக்கடி மிகுந்த சமகாலவெளியில் இப்படியான சின்னஞ்சிறு சமூகங்கள் சந்திக்கும் சவால்கள் அதிலும் விளிம்பு நிலையில் வாழும் சமூகத்தினர் தனக்கென எந்தவொரு நிலையான இருப்பிடமும் அடையாளமும் இல்லாமல் நாடோடிகளாக வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இடையர்கள் தங்களது குலத்தொழிலான கிடை போடுதலை விட்டு விடாமல் பழக்க வழக்கங்கள் மாறிவிடாமல் நிலத்தை நம்பி, செய்து வந்த தொழில்களெல்லாம் இன்று நலிவடைந்து விட்டது. சமூக, கலாச்சார மாற்றத்தினாலும் நாகரிக வளர்ச்சியினாலும் இயற்கை நிலங்களின் பராமரிப்பு முறை மாறிப்போயிருக்கிறது. இன்று மருத நிலம் முற்றிலுமாகக் காய்ந்து வரண்டுபோய் கிடக்கிறது. நீராதாரத்தினை ஏற்படுத்திக்கொள்ளும் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே நிலங்களை வைத்துக்கொள்ளமுடியுமென்ற நிலை உருவாகியிருக்கிறது. மழை பொய்த்துப் போய் வறண்டு கிடக்கும் நிலங்கள் பறிபோய் தனிமனிதனின் வாழ்வும் வலியும் உக்கிரமாகிக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில்தான் ஒவ்வொரு வயலிலும் குறைந்தது இருபத்தோரு நாட்களுக்கு வயலிலிலே தங்கியிருந்து கிடை அமர்த்தும் கீதாரிகள் அங்கு கிடைக்கும் கூலிகளைப் பெற்றுக்கொண்டு மேய்ச்சலுக்காகக் கிடைகளோடு இடம்விட்டு இடம் பெயர்கிறார்கள். வரப்பே தலையணை வயக்காடு பஞ்சுமெத்தை என்றொரு சொலவடையை சிறுவயதில் எங்கள் ஊர்ப்புறத்தில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோலவே கீதாரிகளின் வாழ்வியல் சூழலும் இருந்து வந்திருக்கிறது. இவர்களது வாழ்க்கை இறுக்கமானது. மண் வளத்திற்கான பாரம்பரிய இயற்கை உரமாகக் கிடை வைத்தல் என்னும் தொழில் புரிவதற்காகக் கிராமம் கிராமமாக ஆடுகளையும் மாடுகளையும் இழுத்துக்கொண்டு நிலம் நிலமாக நடந்தும் கடந்தும் திரியும் வாழ்க்கை. அப்படியான கிடை போடும் தொழிலைச் செய்து வந்த தலைமுறையிலிருந்து வந்தவர் தான் வெற்றிச்செல்வன் ராஜேந்திரன். தமிழகத்தின் பரமக்குடி கிராமத்தில் கிடை ஆடுகளுடன் திரிந்துகொண்டிருந்த இவரை சிங்கப்பூருக்கு எது துரத்தியது? பொருளாதாரத் தேவைக்கான இன்னல்கள் உருவாக அடிப்படைக் காரணமென்னவென்று யோசித்துப்பார்த்தால் துன்பமே மிஞ்சுகிறது.
என்னிடமிருப்பதிலேயே
பெரும் பிரச்னைக்குரிய உறுப்பென்றால் அது
எனது இரைப்பைதான்
என்று வெய்யில் கவிதை சொல்வது போல் இரைப்பை தான் எல்லோருக்கும் பிரச்சனையாக இருக்கிறது. சொந்த நிலம் கைவிடும்போது வயிற்றுப்பிழைப்புக்காக வெளி நாடுகளில் புலம்பெயர்ந்து கூலித்தொழிலாளர்களாக வாழ நேரிடுகிறது. ஆடுகளையும் மாடுகளையும் ஓட்டிக்கொண்டு சென்றவர்களின் வாழ்வு வலுவை இழந்து நிற்கிறது. இந்தச் சூழலிலிருந்து வெளியேறி வலசை வந்த தேசத்தில் இருந்துகொண்டு தனது சொந்த அனுபங்களைக் கவிதைகளாகப் பதிவு செய்திருக்கிறார் கவிதைச் சொல்லி.
தேக்கா பொம்மைகளென்ற கவிதையின் வழிதான் எனக்கு அறிமுகமானார் இவர். பின் கவிமாலைப் போட்டிகளுக்குக் கவிதை எழுதி பரிசுகள் பெறத்தொடங்கினார். இன்று அவரது கவிதைத் திரட்சி வியப்பாக இருக்கிறது. புலம்பெயர்ந்த நாட்டின் தொழிலாளராகக் காலத்தை ஓட்டுவது எளிமையானதல்ல, இருந்தாலும் அதற்குள் கவிதையின் மீதான தனது ஆர்வத்தை, தொடர்பை வலுப்படுத்திக்கொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டிருக்கிறார். தன்னைத்தானே உருக்கிக்கொண்டு தான் வாழ்ந்த வாழ்வியல் சூழலை, தனது அனுபவங்களை, தன்னைச் சூழ்ந்திருக்கும் வலிகளைக் கவிதையாக்கியிருக்கிறார்.
கறிக்குழம்பில் ஆட்டின் உயிரும் கொதித்து ஆவியாகிறதென்கிறார், கொடிக்கயிற்றில் தொங்கும் உப்புக்கண்டத்தில் ஆட்டின் வாசம் வீசுகிறதென்கிறார். இயற்கை சீற்றத்தினால் கொத்து கொத்தாய் ஆடுகளை பறிகொடுத்துவிட்டு அம்மா உப்புக்கண்டம்போல் வெயிலில் காய்கிறாள் என்கிறார். ஆடு ஊடாடாமல் காடு விளையாது என்று சொல்வார்கள், இவர்கள் ஆடுகளின் மீது காட்டும் நேசத்தின் சித்திரத்தை விளங்கிக்கொள்ளமுடிகிறது. நிலமாக வெடித்திருந்த அம்மாவின் பித்த வெடிப்புகளில் இவரது கரிசணம் தெரிகிறது.
நீங்களே எடுத்துக்கொண்டபின்
நான் சாலையில் காகிதம் பொறுக்குவதும்
என் மேய்ப்பன்
அரபு நாட்டில்
ஒட்டகம் மேய்ப்பது
ஞாயம்தானே
எல்லாவற்றையும் இழந்த பின் வாழ்வாதாரத்தைத் தேடி இடம்பெயர்ந்து ஆட்டை மேய்த்தவன் ஒட்டகத்தை மேய்க்கிறான் என்று வருத்ததுடன் பதிவு செய்கிறார்.
கிடை ஆடுகளே கதி என்று கிடக்கும்
அம்மாவும் அப்பாவும்
மாதம் மூன்றோ ஆறோ கழித்துதான்
யாரோ ஒருவர் வீடு திரும்புவார்கள்
பருவத்தின் வருகையைப் போல் தவணை முறையில் சேர்ந்து வாழும் வாழ்க்கையை வாழ்ந்துவரும் சமூகமாக இருந்து வந்திருக்கிறது.
ஒரு முறை வெள்ளத்தின்போது
இறந்துபோனது
ஒருமுறை இடியில் கொத்தாய்
இறந்துபோனது
ஒருமுறை கொல்லை
நோயில் இறந்துபோனது
ஒருமுறை கொத்தாய்
களவு போனது
இன்றைய மருத நிலம் இசையை மீட்ட மறந்துபோயிருக்கிறது. இயற்கைப் பேரழிவுகளும் இதற்கு துணை நிற்கின்றன. கொத்து கொத்தாக கிடையை இழந்து வாடுவது ஒருபுறம் இருந்தாலும் ஆடு மாடுகளின் நிலை இன்றைய சூழலில் மிகவும் பரிதாபத்துக்குறியது.
பின்பொரு அடைமழை நாளில்
வந்த வெள்ளப்பெருக்கில் எல்லா ஆடுகளும்
ஆற்று வெள்ளத்தோடு அடித்துப்போக
ராமு கீதாரி இளங்குட்டியோடு தரைபுரண்டு
கதறிக்கொண்டிருந்தார்.
காவேரிக்கரை அமைதியாக
நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது
ஆடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகும்போது தரைபுரண்டு கதறி அழ மட்டுமே முடிகிறது. இப்போது நிலைமை மாறி காவேரிக் கரை கண்ணீர் வடிப்பதற்குக் கூட நீரின்றி காய்ந்துகொண்டே போகிறது. இப்படியாகத் தனது இழப்பினை, சோகத்தினை, ஊர்த்தன்மையை, வீடுகளின் அன்றாட உரையாடல்களை இதற்கிடையே ஊடாடும் காதல் உணர்வுகளைக் கவிதைகளில் எழுதிப்பார்க்கிறார் கவிஞர். இந்த நூலை வாசிக்கும்போது வறுமை, நல்லது கெட்டது, நியாயம், அநியாயம், வாழ்வு, நோய், அச்சம், மரணம் ஆகியவற்றை மெல்லியதாகக் கோடிட்டுக் காட்டியது தெரிகிறது. பொதுவாகக் கவிதைக்கு வலிமை அதிகம். பெரும்பாலான கவிதைகளில் பூர்வீகத் தொழிலை விட்டுவிட்ட ஏக்கமும் மண்ணை விட்டு விட்டதன் இழப்பும் தெரிகிறது. இன்னும் வரிகளில் வலியை வலிமையாகக் கொண்டுவந்திருக்கலாமென எனக்குத் தோன்றுகிறது.
ஒரு கவிதைச் சொல்லியாகத் தனக்கான இடத்தையும் அடையாளத்தையும் தக்க வைத்துக்கொள்வது அவசியமானது. இழந்த நிலம் திரும்பி வராது என்றாலும் இழந்துவிட்ட நிலத்தைப் பற்றி, கைவிட்டுப்போன தொழிலைப் பற்றி, வாழவிடாத வாழ்க்கையைப் பற்றி பதிவு செய்தல் அதிலும் கவிதை வழி பதிவுசெய்தலை விருப்பப்பட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார் வெற்றிச்செல்வன்.
கீதாரியின் உப்புக்கண்டம் நூலிலுள்ள கவிதைகளில் அகம் சார்ந்த அவதானிப்புகள் நுட்பங்கள் என்பதைவிட தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களும் அவர்களின் மன ஓட்டங்களை, நிலங்களின் வலிகளாகச் சொல்லப்பட்டுள்ளது. கவிதை மனம் உச்சத்தில் இருக்கும்போது கவிதையைப் பற்றிச் சிந்திப்பதும் செயலாற்றுவதும் தெரிகிறது, அந்த உச்சநிலையில் இருக்கும்போது கவிதை ஏறுவதும் சோர்வடையும் போது இறங்குவதும் தெரிகிறது. கவிதைச் சொல்லி தான் நடத்த வந்த காரியத்தை இனிதே நடத்தியிருக்கிறார். அவரது கவிதையுடனான உறவு என்னவாய் இருக்கிறது என்பதை இந்த நூலில் வெளிக்காட்டியிருக்கிறார். முதல் நூலில் தனது ஆசையை விருப்பத்தைக் கைவிட்டுப்போனதைக் கவிதையாக்கியிருந்தாலும் இந்த முதல் முயற்சி கைகொடுத்திருக்கிறது. இன்னும் நிலமும் நிலம் சார்ந்த படைப்புகளை வெளிக்கொணர வேண்டுமென்ற விருப்பம்.