1
அன்னை உள்ளிருந்து என் விழிகள் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறாள்
தன்னை எவ்வாறு இவர்கள் நடத்துகிறார்கள்
என்று பார்க்கிறாள்
தன்னிடம் சொல்லப்பட்ட உத்திரவாதங்களின் பொய்களை உணர்கிறாள்
தன்னிடம் இவர்களின் பாசாங்கு
எவ்வளவு என அறிகிறாள்
எதன் பொருட்டும் வஞ்சம் நிகழாதபடி
காப்பது தவிர்த்து
நான் ஒன்றுமே செய்வதில்லை
அவள் தரும் ஆயுதங்களை இப்போது எடுப்பதில்லை
பதிலாக
அவளை சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன்
அவள் உள்ளிருந்து காண்பவற்றை
நானும் காண்கிறேன்
என் மூலமாக அவளது ரதமென
என்னில் ஏற்றி
ஏராளம் இடங்களுக்கு அவளை
அழைத்துச் செல்கிறேன்
இறந்துவிட்டதாக கருதப்படும்
என் அன்னை
மகிழட்டும் என்றே
இந்தக்
கவிதையை எழுதுகிறேன்
2
சொர்க்கத்துக்கும் நரகத்திற்கும்
ஒரே ரோடு தான்
இரண்டுமே
ஒரே தெருவில் இருக்கின்றன
ஒருவர் நரகத்திற்கு திறந்து செல்லும்
வாசல் வழியாக தான்
மற்றொருவர்
சொர்க்கத்துக்குள் நுழைகிறார்
அங்கே இரண்டு பேருக்கும்
ஒரே தேனீரே கொடுக்கப்படுகிறது
அதனை ஒருவர்
சொர்க்கத்தில் இருந்து பருகுகிறார்
மற்றொருவர்
நரகத்தில் அமர்ந்து
பருகுகிறார்
இரண்டுக்கும் ஒரே அஞ்சல் குறியீட்டு எண்
ஒரே முகவரி
ஒத்த சாயல்
ஒரேயொரு வித்தியாசம்
ஒருவர் சொர்க்கத்தில் இருக்கிறார்
மற்றொருவர் நரகத்தில் இருக்கிறார்
3
ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு விதமான லௌகீகம்
சிறந்த பெண் சிறந்த லௌகீகம்
கடினமான பெண் கடினமான லௌகீகம்
அவளுடைய விலங்கு
அவளுடைய புன்சிரியில் இல்லை
அழகில் இல்லை
இடைவளைவில் இல்லை
மார்பிலும் இல்லை
காட்டிலிருந்து வேட்டைக்கு புறப்பட்ட
முதல் நாளில்
இருக்கிறது
அது .
எவ்வளவு தூரம் பின்னர்
பழக்கப்பட்டிருக்கிறது
என்பதில் இருக்கிறது
காட்டிற்கு உன்னை எப்படி பழக்கப்போகிறது
என்பதில்
இருக்கிறது
சிலசமயம் காட்டிலிருந்து எவ்வாறு உன்னை
மீட்டெடுக்கிறது
என்பதிலும் இருக்கிறது
4
சாபமிடுகையில் சாமானியன் ஆகிவிடுகிறேன் மகா தேவரே
உயரத்தில் இருக்க வேண்டும் என்று கேட்கையில் சாமானியன் ஆகிவிடுகிறேன்
மகா தேவரே
உமதிருப்பை உணராதிருக்கையில்
சாமானியன்
ஆகிவிடுகிறேன் மகா தேவரே
கோபப்படுகையில் சிதறுகிறேன் மகா தேவரே
அடைய நினைக்கையில்
சாமானியன் ஆகிறேன்
மகா தேவரே
தாழ்ந்து தாழ்ந்து இருக்கையில்
உமதிடத்தில் இருக்கிறேன்
மகா தேவரே
உமது உயரத்தில் இருக்கிறேன் மகா தேவரே
5
எல்லா சராசரியும்
ஒன்றில் சராசரி
மற்றொன்றில்
மேதை
எல்லா மேதையும்
ஒன்றில் மேதை
மற்றெல்லாவற்றிலும்
சராசரி