புழுக்கள் தேடும் பறவைகள்
அது நீண்டகாலம் இருந்து வருகிறது
மற்றும் அதன் எளிமையைத் தவிர்த்து விடுவோம்
ஏனெனில் அது மீன் இறைச்சியின் மீது
கடலின் ஆற்றலைக் குறைத்து விடுகிறது
பன்றிகளுக்குக் கொட்டிலையும் பீட பூமிகளை ஆடுகளுக்கும்
தரித்திரனுக்கு உயிர்ப்பின் ஆன்மிகத்தையும் நிறைத்து
அடிகிழிந்த கருந்துளையில் எதிர்காலத்தைக் கொட்டுகிறது
சூரியனுக்கும் நிலத்திற்கும் கடலுக்கும் பேரண்டமாய்
நின்றாடும் அதற்கு ஆள்விழுங்கி என்று பெயர்
சிலருக்கு முதிர்ந்த மரத்தின் இலையளவுகூட
செல்வம் கிடையாது
மறுமையை மருந்திற்குக்கூட எறும்புகள் பாவிப்பதில்லை
நீங்கள் தனிமையில் இருந்தாலும்
அது அதிகாலையில் மெல்லிசையாய் எழுந்து விடுகிறது
மேகத்தை சாலைகளை அது முடுக்குகிறது
பரவசத்தில் இறந்துவிடும் குழந்தைகள்
அதன் பிடியில் தப்பி விடுகிறார்கள்
சுண்ணாம்பு மற்றும் கரையான்களின்
சகாப்தத்தில் அது தோன்றியது என்கிறார்கள்
அதைச் சொன்னவன் தனது நானூற்றி எண்பத்தெட்டாவது
வயதில் பிராயத்திலிருக்கும் சிவப்பியிடம்
மரத்தண்டுகளைக் கடைந்து நெருப்பு உண்டாக்கும்
கலையைப் போதிக்கிறான்
இறந்தவர்களின் உலகத்திற்குள் நம்மை எப்போதும்
தூக்கி வீசும் அது
தன் எளிமையில் மேடுகளின் உச்சிமீது பனியாய்ப் படர்கிறது
அங்கே இசைப்பவர்கள் மற்றும் பிறந்தமேனியர்
குழும
பிரபஞ்ச நாதம் எழுகின்றது
ஞானிகளுக்குத் தெரியும்தான்
கொஞ்சம் புழுக்களைத்தேடி பறவைகள் அங்கே
வந்த வண்ணம் இருக்கின்றன
துருவங்கள் உறைந்திருக்கின்றன
ஒரு புன்னகை
மழையின் சிறு துளிக்கு கடலேயானாலும் ஆர்ப்பரிக்கிறது
ஆடைகளைத் தோய்த்து வைக்கலாம்
கொடுமையான சம்பவங்களின் பின்பு கடந்தகாலம்
ஒரு மிருதுவான வாசனை மிக்க பணியாரம்
ஒருபுறம்
புல்லின் மீது முற்றங்களில் வந்திறங்கும்
பறவைகளிடம் தனக்கான வானச்செய்தி வேண்டுகிற
ஆர்வக்கோளாறு மேலிடுகிறது
முதிய பார்வையாளர்களைப் பூமி பலவகையில்
தடுமாற வைக்கிறது
நல்ல கைத்தடிகள் இருந்தால்
அவர்கள் பாடுவார்கள்
இளமையில் உபயோகிக்கப்பட்ட பண்டங்கள்
மிகச்சிறந்த பாதுகாக்கப்பட்ட சொற்கள்
யாவும் கை நழுவிப்போகட்டும்
அதனாலென்ன
பற்றற்ற பின்
மிகச் சிறந்ததாய் விளங்குவதன்
வர்ணணைகள் அதன் வண்ணங்கள் எங்கோ ஆறுதலாய்
மறைந்திருக்கிறது
இடையே மிகுந்த இனிப்பான பலாச்சுளை
ஒன்றை காலத்தில்
சவைப்பது நல்லதுதான்
இசைக்கார்வை
குளிர்காலக்கம்பிளி மற்றும்
காதலின் அந்திம நேர மௌனங்கள்
கொஞ்சம் சலிப்பு
இப்போது தோற்றங்கள் மாறிவிட்டன
ஆழ்ந்து சிந்திக்கையில் கடந்த காலத்தில்
நிறைவேறச்சாத்திய மிகுந்த ஒன்றில்
பங்கேற்க துணிவற்றோம் எனும்போது வரும்
கசங்கள்தான் தாளவில்லை
அதுவும் இல்லையெனில் ஆகா
கொடுப்பினைதான்
பூஞ்சை பிடித்த கட்டிடம்
குளிர்காலங்களின் உண்மையான
காதலைத் தூக்கி போட்டு விட்டேன்
கோடை காலம் அதன் இடர்களோடு
இன்பத்தின் குறுகிய வாய்ப்புகளை வழங்கும் வண்ணம்
நல்ல உஷ்ணத்தோடு வந்துவிட்டது
தூக்கி போட்டு விட்டேன் அந்த ஸ்வெட்டரையும்
இந்த நீதியற்ற செயலுக்கான வருந்தி என்ன பயன்
ஏனெனில் எப்போதும் சொந்தமற்ற நிலங்கள் நடமாடுவதில்லை
.
நீங்கள் சிரிக்க கூடாது ஒரு துண்டு தக்காளி மீது
உப்பு மிளகு தூள் தூவப்பட்டிருக்கிறது
என் கடவாயின் சுவை அரும்புகளுக்கு பல நூற்றாண்டு வயதாகிவிட்டது
அனைத்து உண்ணியான என்னை ஒரு பேய் புசித்து விட்டது
தற்செயலாக இருக்கலாம்
இடுகாட்டின் முன்பு ஒரு புகைப்படத்தை கண்டெடுத்தேன்
அந்தப் பெண்ணின் வாழ்ந்த அடையாளத்தை அல்லது
கடவுளின் நிருபணத்தைக் கூட என்னால் கேள்வி கேட்க இயலாது
யாரோ இப்போது முன்னிலையில் தன்னிலையாக நிற்கிறார்கள்
என்ன விதமாக இந்த உரையாடலை உண்மையில்
உங்களுக்கு புரியாது எனக்கும் தான் புரியவில்லை
நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டியிருக்கிறது
ஒரு பழைய பூஞ்சை பிடித்த கட்டிடம்
பல கேளிக்கைத்திடல்கள் நீதிமன்றங்களின் முன்பு
மக்கள் அமர இயலாமல் காத்திருக்கும் திண்ணைகள்
அல்லது ஒரு தேநீர் கடை
மேலும் எல்லா பெண்களும் குழந்தைகளை ஈன்ற கட்டிடம் பு
கையிலைக் கிடங்குகள்
இன்னும் இன்னும் காணாத் தனியறைகள்
எல்லாவற்றையும் இடித்து தள்ள என் தோள்கள்
ஒரு இயந்திரத்தை போல நடுங்குகிறது
நெல்வயலும் உப்புவயலும்
தெரு குப்பைக் காரர்களுக்கும்
புதிய கோடாங்கிகளுக்கும்
நீட்சேவிற்கும் சொந்த வீடு கிடையாது
ஒரு குதிரை ஓடிக்கொண்டிருக்கிறது
அதன் மேல் பயணித்தவர்களுக்கெல்லாம்
அதன் நீண்ட ஆண்குறி மீது பயம்
வாளைச் சுழற்றிய வீரர்களின் மனைவிகள்
குதிரைகளை நேசித்தார்கள்
கன்னி நிலம் தேடி நாவாய்கள் அலைந்த காலத்தில்
யோனி நிலமெல்லாம் முதிர்ந்த தீவுகளாயின
பெரும் யுத்தநாட்களில்
இனம் புரியாமல் குழந்தைகள் பெருக
பதினாறாயிரம் ஆண்டுகள் கடவுளைக்
காதலித்த பெண்கள் அந்தப் புரங்களில்
குனிந்த நிலையில் புணரப்பட்டதை
கதையாக்கியவன்
குகைகளில் இருந்தவாறே
இந்திரிய வேதனையில் இறந்து போனான்
செந்நெல் விளைந்து கால்நடைகள் மாமிசமாயின
ஒருவனுக்கும் பிள்ளைகள் இல்லை
அந்தப் புரத்திலோ தாசிகளுக்கும் அந்நியருக்கும்
இடையே பல நூற்றாண்டு யுத்தம்
மன்னர்களின் குல மனைவிகள் தற்கொலை
செய்து கொண்ட பிறகு
ஒருகுதிரை ஓடிக் கொண்டிருக்கிறது
ஒரு மோட்டார் ஓடிக் கொண்டிருக்கிறது
ஒரு நாவாய் ஓடிக் கொண்டிருக்கிறது
ஒரு நாடோடி ஓடிக் கொண்டிருக்கிறார்
ஒரு தேசமே ஓடிக் கொண்டிருக்கிறது
உப்பிற்குப் பதிலாக நெல் வாங்கிய அமணன்
கூரையோடுகள் சரிந்து
செத்துக் கிடந்தான்
எல்லோரும் சந்திக்கும் உலகத்தின் சாலையில்
சமணனாகிறான் ஒரு சடையன்
கொள்ளிடம் இல்லாமல்
அலைகிறது குடி வாழ்வு.
படங்கள்: இணையம்