சிள்வண்டுகள்
இரவின் காலிக்கோப்பையை
குளிர் நிரப்பும் நேரம்
அனைத்தும் மிகத்தொலைவில் விலகி இருக்கின்றன
அதிகம் நோயுற்றுவிட்டதாய்
பூமி அலுத்துக்கொள்கிறது
அனைந்த நட்சத்திரங்கள்
நங்கூரமிட்ட படகு மற்றும்
உன் சோபிதம் நிரம்பிய கண்கள்
சம்மதத்தின் துயரமானது
பூமியின் நாட்பட்ட
கடமைகளைக் கொண்டிருக்கும் போது
வானில் விசிறி எறிந்தேன்
ஒரு பிடிபட்டபறவையைப் போன்ற என் காதலை
தப்பிச்செல்லும் உன் குதூகலம்
அல்லது ஒரு கூர்நகக்கீறல்
உன்பாதங்களைக் குறுக்கும்
வழிநடையில் அல்லது மீன்களுக்கான கனவில்
பூனைகள் சோம்பலிடும்
போது காதலுக்கென முழுவாழ்விலும் விழித்திருப்பது
ஒப்புதலும் காத்திருப்பும் சிரிப்பினூடே
அருவிகள் மற்றும் காய்கனிகள்
அங்கே
உன் நெற்றியில் தொடங்கிச்செல்கிறது பால்வீதி
உந்திச் சுழிகள்
பசும் புற்கள் ஈத்தரில் நனைந்து மினுங்க
வீனஸ் கைகளை விரிக்கும்போது தேகமெங்கும்
சிபிலிஸ் படர்கிறது
இரவுகளை வரலாறாக்கும் காவியத்தில்
எதுவும் இடம்பெறுவதில்லை
தூய வன்மம் சிந்தும் உன் உதடுகளின் அருகே
அந்தக்காலிக்கோப்பையை
மஞ்சள் வெயில் நிரப்பும் போது
உதிரும் இலைகள்
வந்திறங்கும் பறவைகள்
சன்னலில் ஓய்ந்து நழுவும் இசை
பகலைஆமோதிக்கும் உன் வறண்ட புன்னகை
காதலுக்கான ஓயாத அலைவரிசை
இன்னுமின்னும்
தக்கார்
ஆலயத்தின் வருடாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணிக்கையிடும் வேலைக்கென முதன் முதலாக அழைக்கப்பட்டிருந்தேன்
பல கோடி ருபாய்த்தாள்கள் தங்க வெள்ளி நகைகள் போக சல்லடைகளில் சலிக்கப்படும் நாணயங்களை கணக்கிட்டு அளிக்க வேண்டும்
அதற்கான கூலி எதோஷ்டம் எனினும் பெற்றுக்கொண்டு
கை உதறி கண்காணிப்புகளில் புன்னகையுடன் வெளியேறிவந்த
பணம் எண்ணும் நம்பிக்கையான அத்தக்கூலி நான்
மிக நல்ல நேர்மையான பையன் என்று தக்கார் கூட பாராட்டினார்
ஏனோ பிறகான வருடங்களில் ஆலயம் என்னை அழைக்கவில்லை
மிகுந்த வருத்தமெனினும் அதற்கான காரணத்தை உங்களிடம் சொல்லத்தான் வேண்டும்
யார் எவரோ இட்ட ஒரு பழைய செல்லாத நிக்கல்
பத்து பைசாவை (அதற்கு பொட்டுக்கடலையும் வெல்லக்கட்டியும் சிறுவயதில் வாங்கித்தின்று இருக்கிறேன்) அவ்வளவு க்யூட்டான விளிம்புகளையும் மையத்தில் இராஜ முத்திரையும் கொண்ட அச்சிறு உலோகத்தை (நான் சிறுவயதில் அதைப்பெற இப்பூமிக்கும் அப்பால் இனிப்பு மிட்டாய் ஒரு மாங்காய் கீற்று இன்னும் தோழனுடன் பகிர தன்மானமான செலவிற்காய் அழுகையுடன் மன்றாடி இருக்கிறேன்)தலையைச்சொறிவது போலநடித்து எனது காது மடலுக்குள்
செருகிக்கொண்டு கண்காணிப்பைத்தாண்டி வந்து விட்டேன்
தவறுதான் மன்னியுங்கள்
ஆலயங்கள் யாரிடம் இருக்கிறதோ
செல்லாததெனினும் இன்றளவும் முத்திரைகள் அழிந்த அந் நாணயம் என்னிடமே இருக்கிறது
பிறப்பும் இறப்பும்
எப்போதும் இரண்டு சொல்லுக்கு இடையேதான் வசிக்க வேண்டியதாகிறது
அவ்விரு கணுக்குகளுக்கிடையே துளிர்கிறது மலர்காம்பு
நீருக்கும் நிலத்திற்குமிடையேதான்
எல்லா வழக்குகளும்
சூரியன் சந்திரன் இரவுபகல்
சரிதான்
புதிராய்த்தான் இருக்கிறது அடிவானமும் காலூன்றி நிற்கும் தரையும்
தாய் தந்தை
தத்துவம் நடைமுறை
சிரிப்பிற்கும் அழுகைக்கும்
வேலைக்கும் ஓய்விற்கும் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும்
நினைவிற்கும் மறதிக்கும்
இளமைக்கும் முதுமைக்கும் போகட்டும்
கொக்கிற்கும் மீனிற்கும் வானத்திற்கும் நிலவிற்கும் கடவுளுக்கும் மனிதருக்கும் நன்மைக்கும் தீமைக்கும்
போலல்லாது
தெருவில் கண்ணியமான உடையுடன்
கொஞ்சம் இசை கேட்கலாம் குளிர்ந்த காற்றில் புகைக்கலாம்
உரையாடியதும தீர்ந்ததும்
புணர்ந்ததும் உணர்ந்ததும்
கோளுக்கும் நாளுக்கும்
சொன்னதும் கேட்டதும்
பெற்றதும் இழந்ததும்
உற்றதும் மற்றதும்
அன்றும் இன்றும்
அப்பிடியும் இப்பிடியும்
நம்பிக்கையும் சந்தேகமும்
மென்மையும் வன்மையும்
பெண்ணுமாணுமாய்த்தான் எங்கும் போக வரவும்
எழுதவும்வாசிக்கவும் அத்துடன் கூடவும் பிரியவும்
எப்போதும் இரண்டு சொல்லுக்கிடையேதான்
நம்பிராஜனுக்கு
புனிதப்பதற்றம்
எல்லா நிலங்களிலும் நிலவு ஒளி வீசுகிறது
காதலின் பாடல்
இப்போது துவங்கிவிடும்
ஒரு ராயல் பெண்மணி எப்போதும் தன் கணவனின் அல்லது காதலனின் கள்ள வைப்பாட்டி இவளாகத்தான் இருக்கும் என என்மீது சம்சயப் படுகிறாள்
அவளின் பதற்றம் சுவராசியமாகி விடுகிறது
அடைகாக்கும் கொம்பன் பாம்புகளை பிடிக்க உச்சியிலேறும்
காதலர்களை அவை தீண்டி தரைவீழும் போது
நாங்கள் இறைச்சிகளை
மீட்டுருவாக்கம் செய்து கொள்வது வழக்கம்
மிஞ்சினால் அது ஒரு கோடைகாலச் சம்பவம் இல்லையெனில்
அடுத்த வினாடி உணவு
அப்புறம் அந்த வெள்ளைப் பெண்மணிக்கு அவர்களின் பண்ணைச்சவுக்குகள் எங்கள் முலைகளை வருடியஅழகியல் தெரியாது
தெரியாது உடலுறவு என்பது வேட்டைக்கும் இனவிருத்திக்கும் இடையே ஆன சாகசம் அல்லது
புனிதக்குடும்பங்களில் நேர்ந்துவிடும் கடவுள் பரியந்தக்கேளிக்கை பிறகு
அதுவே கறுத்த யோனிகளிடம் செய்து கொண்ட சொர்க்க நரக விளையாட்டும்தான்
பெரும் ஆலயப் பீடங்களின் சாலையில் அந்த அப்பெண்மணி வெகுநேரமாக
என்னை உற்றுப்பார்க்கிறாள்
நான் காரின் கதவுகளை திறந்து விட்டிருக்கிறேன்
அவர்கள் உணவுகளுடன் அபாட்மெண்ட் திரும்புகிறார்கள்
இந்த பெருநகரம் என்னைச்சிவந்தவளாக்கும் வாக்குறுதிகளை அல்லது எனது கடைசிக்கையிருப்புடன் ஷட்டர்களை இழுத்து மூடுகிறது
ஈஜிப்டில் இருந்து மேற்கே கிரேக்கம் வரை கல்வி கற்க வந்திருப்பவளுக்கு
பருத்த உதடும் சுருட்டை முடியும்
தைத்த யோனியும் சிலபிரதிகளும்
மட்டுமே அடையாளமல்ல
பின்புறம் கைகள் கட்டப்பட்டு கழுத்தில் மிதிபட்டுச்சாகும் ஒருவனுக்காக
கன்னி நிலத்தில் இருந்து மூச்சுத்திணறும்
இருண்ட கண்டத்தின் கதைகளை பல்கலைக்கழங்களின் நுழை வாயிலில் விசிறுவதும்தான்
இப்போது அந்தப் பெண்மணி என் காரை நெருங்கிக் கொண்டிருக்கிறாள்.
ப்ரான்ஸ் பனானுக்கும் அடிச்சிக்கும்