”பெண் தன்னை எழுதுதல் வேண்டும். பெண்களைப் பற்றி எழுத வேண்டும். பெண்களை எழுத்தின்பால் கொண்டுவர வேண்டும். பெண் தனது சொந்த இயக்கத்தின் மூலம் பிரதிக்குள் தன்னை வார்க்க வேண்டும்; இந்த உலகத்திலும் சரித்திரத்திலும் தடம் பதிக்க வேண்டும்.” – ”Laugh of Medusa”, Helene Cixous, 1976: p.875.
பிரான்ஸியப் பெண்ணிய ஆளுமையான பேராசிரியர் Helene Cixous தனது “The Laugh of the Medusa” எனும் புகழ்பெற்ற கட்டுரையில் பெண் எழுத்தின் இயங்கியல் குறித்து, ”அவள் தன்னைத்தானே எழுத வேண்டும். அதுவே ஒரு புதிய கலக எழுத்தின் கண்டடைதலாக அமையும். அவளுக்கான விடுதலையின் தருணம் வந்து வாய்க்கும் போது, அதுவே அவளது வரலாற்றின் தவிர்க்கமுடியாததும் இன்றியமையாததுமான உடைப்புகளையும் நிலைமாற்றங்களையும் கொண்டுவந்து சேர்க்கும்” (Helene Cixous, 1976: p.880) எனக் குறிப்பிடுகின்றார். இது உலகளாவிய நிலப்பரப்புக்களில் வாழும் எல்லாப் பெண்களுக்குமான கூற்றே எனலாம். அவ்வகையில், சிங்களக் கவிதாயினிகளான சீதா ரஞ்சனி, சுகர்ஷனி தர்மரத்ன, இந்தியக் கவிதாயினி மம்தா காலியா, ஆர்மேனியக் கவிதாயினி லோலா கௌந்தகிஜியன் ஆகியோரின் ஐந்து கவிதைகளை மையமாக வைத்து பொதுவெளியில் பெண்கள் சந்திக்கும் பாலியல் சார்ந்த அத்துமீறல்கள், வீடுகளில் பெண்களின் பணிகளுக்கு எவ்விதமான பெறுமானமும் வழங்கப்படாமல் அவர்களின் உழைப்பு சுரண்டப்படுதல் எனும் இருவேறு விடயங்கள் அணுகப்பட்டிருக்கும் விதத்தினை நோக்குவது இக்கட்டுரையின் எதிர்பார்ப்பாகும்.
பொதுவாகப் பெண்ணுடல்கள் பாலியல் பண்டங்களாகப் பார்க்கப்படும், நடாத்தப்படும் சமூக மனநிலை குறித்துக் காலங்காலமாகப் பல்வேறு பெண்கள் வலியுடன் பதிவுசெய்தே வந்துள்ளனர். அந்த அடிப்படையிலான இருவேறு சிங்களக் கவிதைகளை நோக்குவோம்.
முழங்கையால் மார்பில் உரசுதல்
சிறுமூளையும் கலங்கிடும்வண்ணம்
‘நொன்ஸ்டொப்’ கொண்டாட்டத்துடன்
தொலைதூரப் பயணப் பேருந்து
ஆடியதிர்ந்து நகர்கிறது
இடப்புறம் அமர்ந்த பயணி
கைகளைக் கட்டியவனாய்த் தூங்கிவிழுகிறான்
தூக்கக் கலக்கத்தில் சரிந்த தலை
அடிக்கடி சாய்கிறது
என் தோள்மீது
இடைக்கிடை அவன் முழங்கை
என் இடப்புற மார்பை
தொட்டுரசித் தடவுகிறது
”சிரியாமே சாரா – நெகேவி ஹத மோரா”
‘எழில்வளத்தின் சாரம்
மனமெங்கும் பொங்கும் பிரவாகம்’
பாடல் அதிர்கிறது
அட, இந்தக் காமுகனிடத்தினில்
பொங்கிப் பிரவாகிப்பது
என்னவாய் இருக்குமிப்போ?
ஒரு தட்டுத் தட்டுகிறேன்
அவன் துயில் கலைகிறது
உறக்க மிருகத்தின் கண்கள்
எனைப்பார்த்துச் சிரிக்கின்றன
”இந்தப் பக்கத்தில் இருந்ததென்னவோ
புற்றுநோய்க் கலங்களால்
சிதைவுற்ற மார்பகமொன்றுதான்
அறுவைக் கத்தியால்
அதை வெட்டியெறிந்து கனகாலமாயிற்று
அழகான மார்பகமிருப்பது
இதோ இந்த வலப்புறம்தான்”
பிருஷ்டத்தில் தீப்பற்றியதுபோல
துள்ளிக்குதித்தெழும்பிப் போய்விட்டான்
இடப்புறமாய் நகர்ந்தமர்ந்தேன்
இப்போது வலப்புறமாய்
மற்றோர் ஆண்பயணி
மெதுவாக வந்தமர்ந்தான்
அவனும் முழங்கையால்
மார்பைத் தடவும் ஒருவனாய் இருந்துவிட்டால்?
என்ற கேள்வியோடு முடியும் கவிதை சீதா ரஞ்சனியுடையது. தனது உடல்மீது நிகழ்த்தப்படும் அத்துமீறலுக்கு எதிரான எதிர்ப்பை ஒருவித எள்ளலுடனும் அறச்சீற்றத்துடனும் பதிவு செய்கிறது இக்கவிதை. இலங்கையின் சமூக, அரசியல், இலக்கியச் செயற்பாட்டில் மிகப் பிரபலமான ஆளுமையான சீதா ரஞ்சனி கவிதாயினி, வானொலி நாடகப் பிரதியாளர், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பத்தி எழுத்தாளர், சுதந்திர ஊடகப் பேரவைத் தலைவர், ஊடகவியலாளர், சமூக, அரசியல் மற்றும் பெண்ணியச் செயற்பாட்டாளர், பாடலாசிரியர், ‘எய’ எனும் பெண்ணிய சஞ்சிகையின் ஆசிரியர், தென்னாசிய ஊடக மகளிர் அமைப்பின் அமைப்பாளர், இலங்கை ஊடகக் கல்வி மற்றும் இலங்கை பத்திரிகைத்துறை முறைப்பாட்டுப் பிரிவுகளின் நிர்வாக உறுப்பினர் எனப் பல்பரிமாணங்கள் கொண்டவராக, பன்முகத் தளங்களிலும் தனது பங்களிப்பினை இடையறாது நல்கிப் பணியாற்றி வரும் ஒரு பன்முக ஆளுமையாகத் திகழ்கிறார்.
ஒரு வீட்டில் பெண்கள் செய்யும் பணிகளோ எண்ணில் அடங்காதவை. அத்தகு பணிகளை இடையறாது ஆற்றிவரும் பெண்ணை ஆங்கிலத்தில் ”Home-maker” – இல்லத்தை உருவாக்குபவள் என்றும் தமிழில் ‘இல்லத்தரசி’ என்றும் அழைத்து கௌரவப்படுத்துவது மொழிமரபின் செழுமைதான் என்றாலும், ”வீட்டில் அவள் சும்மாதான் இருக்கிறாள்” என்று மனச்சான்றே இல்லாமல் சர்வ சாதாரணமாகச் சொல்லும் வழமை இன்றும் நம் மத்தியில் நிலவத்தான் செய்கின்றது. சீதா ரஞ்சனியின் மற்றொரு கவிதை அது குறித்த ஆதங்கத்தை இப்படிப் பேசுகிறது:
சோற்றுப்பொதி
துப்புரவாக்குதல்
தோல் நீக்குதல் சீவுதல்
கழுவி வெட்டுதல்
இடித்தல் அரைத்தல்
தேங்காய் துருவுதல்
பிழிதல்
பலசரக்குத் தூள்சேர்த்தல்
அளாவுதல் அடுப்பினில் வைத்தல்
சமைத்தல் அவித்தல்
பொரித்தல் சுண்டுதல்
அகப்பையால் கிளறுதல் கிண்டுதல்
அடுப்பிலிருந்து இறக்கி வைத்தல்
மேசையில் பரத்துதல்
பீங்கானில் பரிமாறுதல்
சோற்றுப் பொதிகட்டல்
தூசு தும்பையகற்றுதல்
கழிவுகளை அப்புறப்படுத்தல்
பத்துப்பாத்திரம் தேய்த்தல்
துடைத்தல் கூட்டுதல்
துப்புரவாக்குதல்
ஒரு நாளைக்கு
ஒருதரம் இருதரம் மூன்றுதரம்
சோற்றுப் பீங்கானுக்காய், பார்சலுக்காய்
சென்று சேரும் அந்த உழைப்பு
அந்தக் களைப்பு
அந்த நேசம்
அவ் அர்ப்பணிப்பை எல்லாம்
ஒருசில நிமிடங்களில்
விழுங்கித் தீர்க்க முடிகிறதே!
ஒரு சிறு பாராட்டு
நன்றியுணர்வுடன் ஒரு பார்வை
அதெல்லாம் எதற்கு?
அவளொரு தாய்
அவளொரு மனைவி
அவர்கள் பெண்கள்தாமே!
என்று நிறைவுறும் இக்கவிதையில் தொனிக்கும் ஆதங்கம் அனேகமான பெண்களின் ஆழ்மனதில் சதா கனன்று கொண்டிருக்கும் அக்னிச் சுவாலையின் துளிச் சிதறல்தான்.
இவ்விரண்டு அம்சங்கள் குறித்தும் சுகர்ஷினி தர்மரத்னவின் ஒரு கவிதை இவ்வாறு சொல்கிறது:
”பஸ்ஸில் ரயிலில்
நின்று தளர்ந்து கால்கள் துவள்கையில்
கரங்கள் நீள்கின்றன
ஐயா, உங்கள் மனைவியும்
அபாயகரமான பயணத்தில்
தனித்திருப்பார்.
கேட்கிறதா கேட்கிறதா
வீட்டின் மூலையில் சமையலறையில்
பாத்திரங்களின் கலகலப்பு
கழுவும், அடுக்கும், நடமாடும்
சப்தங்கள்
மாமிச உணவுகளின் வாசனைகள் எழுகிறதா?”
நீண்ட காலமாகச் சிங்களத்தில் எழுதி வரும் சுகர்ஷனி ஒரு கவிதாயினி, சிறுகதை எழுத்தாளர். 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த, ‘கிரிஹிச தரனய’ (சிகரம் தொடுதல்) எனும் கவிதைத் தொகுதிக்காக 2013ஆம் ஆண்டு அரச சாகித்திய விருது கிடைக்கப் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகிப் புக்ககம் சென்று கூட்டுக் குடும்ப அமைப்பில் வாழுமொரு பெண்ணின் மனநிலையை மிக அழகாகப் படம் பிடித்துக்காட்டும் பின்வரும் ஆங்கிலக் கவிதையை எழுதியவர் மம்தா காலியா. இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதிவரும் இந்தியக் கவிதாயினி ஆவார்.
மணமுடித்து எட்டு வருடங்களின் பின்…
திருமணமுடித்து வருடங்கள் எட்டாக…
முதன் முறையாய் – எந்தன்
பிறந்தகம் சென்றேன்.
“நீ மகிழ்வோடிருக்கிறாயா?”
பெற்றோரின் கேள்வியின் அபத்தம் புரிந்து
வாய்விட்டுச் சிரித்திருக்கவேண்டும்–பதிலாய்
விம்மியழுது விட்டேன்.
விம்மல்களுக்கிடையில் ‘ஆம்‘ என்பதாய்த் தலையசைத்தேன்.
எனக்குச் சொல்லவேண்டும் போலிருந்தது,
செவ்வாய்க் கிழமை நான்
மகிழ்ந்திருந்தது பற்றி…
புதன் கிழமையன்று
துக்கத்துடனிருந்தது பற்றி…
ஒருநாள் 8 மணியளவில்
களிப்புற்றிருந்தது பற்றி…
8.15 அளவில் நான்
இடிந்துபோயிருந்தது பற்றி..
(இப்படி எல்லாவற்றையுமே)
கூறவேண்டும் போலிருந்தது.
எப்படி ஒருநாள் எல்லோருமாயொரு
முலாம்பழம் சுவைத்து
வாய்விட்டுச் சிரித்தோம் என்பதனை…
எப்படி ஒருமுறை இரவெலாம் அழுதழுது
கட்டிலில் கிடந்தேன் என்பதனை…
என்னையே நான் வெறுத்து
நொந்து வருந்துவதைத் தவிர்க்க
எவ்வாறெல்லாம் போராடினேன் என்பதனை ….
பன்னிருவர் வாழுமொரு குடும்பத்தில்
மகிழ்வுடன் வாழ்வது இலகுவல்ல
என்ற ஒரு சேதியினை…
(இப்படி அனைத்தையும்)
சொல்லவேண்டும் போல்
இருந்தது எனக்கு.
ஆனால்… அவர்களோ
ஆட்டுக்குட்டிகளாய்த் துள்ளித்துள்ளியோடும்
என்னிரு பிள்ளைகளையே
வைத்தவிழி வாங்காது பார்த்தபடி இருக்கக் கண்டேன்.
சுருக்கங்களோடும் கைகள்…
சோர்ந்துபோன முகங்கள்…
பழுப்புநிற இமைமயிர்கள்…
இவையெல்லாம்…
நம்பவே முடியாதளவு இயல்பாகவேயிருந்தன.
எனவே… நான்
அனைத்தையும் விழுங்கியவளாய்
மிகவும் திருப்தியானதொரு
புன்னகை பூத்தேன்.
தான் சொல்ல விழைவதைத் தன் பெற்றோரிடம்கூட வாய்விட்டு, மனந்திறந்து சொல்ல முடியாத மனத்தடையினால், துணிவின்மையால் அல்லலுறும் பெண்களின் குரலாய் அக்கவிதை ஒலிக்கிறது. மணமுடித்துப் போன பெண் எவ்வாறு இருத்தல் வேண்டும் என காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்ட கற்பிதமான மரபு விலங்குகள் அவர்களின் நாவுகளையும் பிணைத்துள்ள அவலத்தை மிக எளிய நடையில் மனதில் தைக்குமாறு கூறுகிறது மம்தாவின் கவிதை.
இறுதியாக, 1979 ஆம் ஆண்டுமுதல் அமெரிக்காவில் வாழும் ஆர்மேனியக் கவிதாயினியான லோலா கௌந்தகிஜியனின் ஒரு கவிதையை நோக்குவோம். ஆர்மீனிய அமெரிக்கக் காலாண்டிதழான அராரத் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிவரும் ஊடகவியலாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான இவரது இக்கவிதை, ஆண்கள் – பெண்கள் ஆகிய இருதரப்பாரினதும் பணிகளுக்கு இடையிலான ஒரு சமன்பாட்டை வகுக்கிறது. காலங்காலமாகப் பெண்களின் வாழ்வும் பணிகளும் சமூகத்தின் விழிகளால் பார்க்கப்படுமாற்றை மறுதலித்து எழும் உள்ளார்ந்த அரசியல் விமர்சனத்தைத் தனக்குள் கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான கவிதை இது:
வாழ்க்கை
மிக மெல்லியதாக
அவள் வெங்காயங்களை
அழகாக அரிகிறாள்
ஒரு கட்டிடத் தொழிலாளி, வயது 25
கீழே வீழ்ந்து இறக்கிறான்
கொத்தமல்லி, லவங்கம், இஞ்சி
சேர்க்கிறாள்
ஒரு படைவீரன், வயது 21
வெடிகுண்டு புதையுண்ட
பாதையைக் கடக்கிறான்.
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து
அவள் இறைச்சி உருண்டைகளை
வெளியிலே எடுக்கிறாள்
ஓர் ஊடகவியலாளன், வயது 43,
தலையில் சுடப்பட்டு இறக்கிறான்.
அடுப்பின் குறைந்த சுவாலையில்
பாத்திரத்தில் சில கண்ணீர்த்துளிகளைச் சேர்த்து
சுவைச் சாற்றினை கலக்குகிறாள்.
இவ்வாறு இக்கவிதைகள் ஐந்தையும் அடிப்படையாக வைத்து நோக்கும்போது, பெண்கள் வீடு – வெளி எனும் இருவேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் தமது நிலையினையும், தாம் சார்ந்த சமூகம் குறித்த விமர்சனங்களையும் தம்முடைய எழுத்துக்களின் வழியே மிகக் கூர்மையாக முன்வைத்திருப்பதை அடையாளப்படுத்தக் கூடியதாக உள்ளது. சிங்களத்தில் இருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும் இக்கட்டுரை ஆசிரியரால் மொழியாக்கம் செய்து எடுத்தாளப்பட்டிருக்கும் இக்கவிதைகளின் வழியே, நிலம் கடந்தும் மொழிகள் கடந்தும் பெண்களின் பாடுகள் பெரிதும் ஒத்த தன்மை உடையனவாகவே நிலவி வருகின்றமையை நாம் கூர்ந்து நோக்கலாம்,
உசாத்துணைகள்:
- Signs: Journal of Women in Culture and Society 1976, [vol. 1, no. 4] © 1976 by The University of Chicago.
- லறீனா அப்துல் ஹக், (2008) மௌனத்தின் ஓசைகள் (ஆங்கில-சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு), வர்தா பதிப்பகம், கெலிஒய, இலங்கை.
- லறீனா அப்துல் ஹக், (2020) அழுகைக்குக் குரலில்லை (ஆங்கில-சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு), புதுஎழுத்து, காவேரிப்பட்டினம், இந்தியா
- சீதா ரஞ்சனி (2021) உரங்க விங்சத்தியக குருலு பித்தர (சிங்களக் கவிதைத் தொகுதி), எஸ். கொடகே பதிப்பகம், கொழும்பு
கட்டுரையாசிரியை குறித்து:
லறீனா அப்துல் ஹக் ஓர் எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர், பாடகி, இசையமைப்பாளர் எனப் பன்முஏக ஆளுமை கொண்டவர். இவர் தற்போது இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மொழிகள் துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர் இதுவரை மொழிபெயர்ப்பு உள்ளிட்ட சுமார் இருபது நூற்களையும், தானே எழுதி, மெட்டமைத்து, இசையமைத்துப் பாடிய ‘சுயமி’ எனும் இசைப்பேழையினையும் வெளியிட்டுள்ளார். அண்மையில் தனது பன்முக இலக்கியப் பங்களிப்புகளுக்காக இந்தியாவின் ஸ்பாரோ இலக்கிய விருதையும், ஜுனைதா ஷெரீஃப் இலக்கிய விருதினையும் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் குறித்த விபரங்கள் வருமாறு:
ஆய்வு
தமிழ் மொழியும் இலக்கியமும் சில சிந்தனைகள் (2003), வர்தா பதிப்பகம், கெலிஒய, இலங்கை.
செ. கணேசலிங்கணின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு (2004), குமரன் புத்தக இல்லம்: சென்னை-கொழும்பு.
பொருள் வெளி (2012) ஆசிரியர் வெளியீடு, இலங்கை.
நீட்சி பெறும் சொற்கள் (2015) மணற்கேணி பதிப்பகம், புதுச்சேரி, இந்தியா.
வார்த்தைகளின் வலிதெரியாமல் (குடும்பவியல் சார்ந்த கட்டுரைகள்) (2012), இலக்கியச் சோலை, இந்தியா.
ஆர்த்தெழும் பெண் குரல்கள் (2021) புதுஎழுத்து: காவேரிப்பட்டினம், இந்தியா
நாவல்
ஒரு தீப்பிழம்பும் அரும்புகளும் (2004) வர்தா பதிப்பகம், கெலிஒய, இலங்கை.
சிறுகதை
எருமை மாடும் துளசிச் செடியும் (2003) வர்தா பதிப்பகம், கெலிஒய, இலங்கை.
தஜ்ஜாலின் சொர்க்கம் (2016) கொடகே பதிப்பகம், கொழும்பு, இலங்கை.
கவிதை
வீசுக புயலே (2003) வர்தா பதிப்பகம், கெலிஒய, இலங்கை.
ஷேக்ஸ்பியரின் காதலி (2021) புதுஎழுத்து, காவேரிப்பட்டினம், இந்தியா
மொழிபெயர்ப்பு
நம் அயலவர்கள் (சிங்களச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு), இணை மொழிபெயர்ப்பாளர்: எம். மன்சூர் (2005)இ த்ரீவீலர் பதிப்பகம், கொழும்பு, இலங்கை.
மௌனத்தின் ஓசைகள் (ஆங்கில-சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு), (2008) வர்தா பதிப்பகம், கெலிஒய, இலங்கை.
‘ரிஷிவரையாகே அலுத் அசப்புவ’ (சொர்க்கபுரிச் சங்கதிகள் சிறுகதைத் தொகுதியின் தெரிவுசெய்யப்பட்ட 10 சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு), இணை மொழிபெயர்ப்பாளர்: ஜி.ஜி. சரத் ஆனந்த (2017) கொடகே பதிப்பகம், கொழும்பு, இலங்கை.
‘அலுயம் சிஹினய’ (தமிழினி ஜெயக்குமரனின் சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு), இணை மொழிபெயர்ப்பாளர்: ஜி.ஜி. சரத் ஆனந்த (2017) தோதென்ன பதிப்பகம், கொழும்பு, இலங்கை.
ஒரு நூலின் மகத்துவம் (2017) குமரன் புத்தக இல்லம், சென்னை-கொழும்பு. (சிங்களத்தில் இருந்து தமிழுக்கு)
அழுகைக்குக் குரலில்லை (ஆங்கில-சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு), (2020) புதுஎழுத்து, காவேரிப்பட்டினம், இந்தியா
பதிப்பு
கவிஞன் இதழ்களின் முழுத்தொகுப்பு (2015) மணற்கேணி பதிப்பகம், புதுச்சேரி, இந்தியா.
இஸ்லாமிய சரித்திரக் கதைகள் (கவிஞர் அப்துல் காதர் லெப்பையின் கதைகூறும் கவிதைகள்), (2016) ஆசிரியர் வெளியீடு, இலங்கை.