1.மரங்களைப் பற்றிய கனவு
என்னுள் உள்ள ஒன்று மரங்களைப் பற்றிக் கனவு காண்கிறது.
அமைதியான வீடு, கொஞ்சம் பசுமை, ஓரளவு இடம்
தொல்லைப்படுத்தும் நகரத்தின் சலம்பல்களிலிருந்து கொஞ்சம் தள்ளி..
தொழிற்சாலைகளிலிருந்தும்
பள்ளிகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும் சற்றே விலகி..
எனது வாழ்விலிருந்து
சில கட்டற்ற சரணங்களையாவது உருவாக்குவதற்கு
ஓடைகள் மற்றும் பறவைகளின் துணையுடன் மட்டுமே
செலவிடுவதற்கு
எனக்கு நேரம் கிடைக்குமென்று நினைக்கிறேன்.
எங்குமிருந்தும் சற்று தள்ளிய அந்த இடத்தில்
அப்போது என்னிடம் வரவேண்டும் அது, அதுதான் மரணம்,
என்னுள் உள்ள ஒன்று இன்னும் மரங்களைப் பற்றிக் கனவு காண்கிறது.
அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், நிதானத்துக்கான ஏக்கம்.
உலகின் பாதியளவுக்குக் கலைஞர்கள்
சுருங்கியோ வீழ்ந்தோ போய்விட்டார்கள்.
யாராவது தீர்வு கண்டவர் உண்டா?
அவன் சொல்லட்டுமே.
சில வேளைகள் நமது உண்மையான ஈடுபடுதலை இரந்து நிற்கும்போது
எனது இதயத்தை புலம்பலை நோக்கி மடிக்கிறேன்
ஒவ்வொரு பிரச்சினையின் கூர்வாட்களும் வழியைக் குறிக்கின்றன
எப்படி இருக்கக்கூடாதென்று நினைக்கிறேனோ
அப்படித்தான் இருக்கிறது.
மிதமான நாளொன்றின் யார்தான் கோர்த்தது?
2. லில்லிகள்
வயல்களில் விசிறியடிக்கும் லில்லிகளைப் போல
நான் ஏன் இருத்தல் கூடாது.
காற்றின் விளிம்பில்
அவை எழுகின்றன
விழவும் செய்கின்றன.
கால்நடைகளின் நாக்குகளிலிருந்து
அவற்றுக்கு எந்த அடைக்கலமும் இல்லை
அலமாரிகளோ ஒதுக்கிடமோ இல்லை
கால்களும் கூட.
அந்தப் பழம் வாக்கியத்தைப் போல
ஒரு அற்புதமாக
நான் இருக்கவே விரும்புகிறேன்.
நான்
ஒரு லில்லியாக இருந்தாலோ
ஒசினிச்சிட்டின் பசிய முகம்
என்னை ஸ்பரிசிப்பதற்காக
நான் நாள் முழுவதும்
காத்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
அந்த இறகு மென்மை வயல்களிலும் கூட
என்னை நான் மறந்துவிடமுடியுமா என்ன?
வான்கோ
முரட்டுத்தன்மை வாய்ந்த ஏழைகளுக்கு
உபதேசிக்கும்போது
யாரோ ஒருவரை உய்விக்க வேண்டுமென்று
கூறியது-
தன்னைப் பற்றிதாகவே இருந்திருக்கக் கூடும்.
அவன் லில்லியாக இருந்தவனில்லை
அவன் பிரகாசமான வயல்களிலே
திரிந்திருக்கிறான்
லில்லி அவனுக்கு
கூடுதலான கருப்பொருட்களை மட்டுமே கூடுதலாக அளித்தது
தீர்வுக்கு
அவனது வாழ்க்கையை எடுத்துவிட்டது.
இந்த உலகில்
நான் தனியாகவே எப்போதும் இருப்பேன் என்று நினைக்கிறேன்
கருப்பு நிறமும் வெள்ளை நிறமும் கலக்காத
ஆரக்வி நதியைப் போல
கால்நடைகள் மேயும் நிலத்தில்
அவற்றின் நாவுகளில் எந்த எதிர்ப்புமின்றி
உருகி மறையும் லில்லிகளைப் போல-
ஒரு சிறு சரசரப்புக்கும்
விருட்டென்று எழுந்து மிதந்து பறந்து மறையும்
ஒசினிச்சிட்டைப் போ