வானில்
மெல்லத் ததும்பி நிற்பதுபோல்
ஒரு தயக்கம் காட்டியது
வானூர்தி.
மூச்சொலி கலந்த
பறநர் அறிவிப்பு
‘நாம் சிங்கப்பூரில்
தரையிறங்கப்போகிறோம்’ என்றது.
நீள்வட்டக் காலதர்வழி
எட்டிப் பார்த்ததில்
கனவுலகொன்று
மஞ்சள் ஒளிப்புள்ளிகளாய்த்
தென்பட்டது.
புதுநிலந்தொடுவது
கால்கள் பெறும் காலப்பேறு.
காணாவொன்றைக் காண்பதே
களிகொள்காட்சியின்பம்.
வான்துறையகம் இறங்கிக்
குடிநுழைவேற்று வெளியேறினேன்.
அந்தத் துறைக்கூடமே
சொல்லிற்கடங்காத கட்டடம்.
அண்ணாந்து வியப்பதா
தரையழகின்
நுண்ணார்ந்து மகிழ்வதா என்ற
வினைக்குழப்பூட்டுவது.
அன்பழகரும்
பிச்சினிக்காட்டாரும்
ஆடைபோர்த்தி வரவேற்று
அழைத்தேகினர்.
அங்கே என் நண்பருள் நனியர்
நல்லானும் வந்திருந்தார்.
உந்து நிறுத்தகக் கடலில்
அடித்தளச் சுற்று
எத்தனையென்று
அளக்கவுமில்லை.
வெளிக்காற்றுணர்ந்து
வீடடைந்தோம்.
விடியற்சிற்றுறக்கம்
விழிதாழ்த்தியது.
காலையூண் உண்டு
கடிதே விடுதியேகினோம்.
என்னைச் சுற்றிலும்
நான் கண்டது அடுக்ககக்கடல்.
தலைமேல் உயரும்
பல்லடுக்குகளிடையே
வானுக்கு வாய்த்த இடம்
சிறுதுண்டுதான்.
இன்பா பொறுப்பினில்
இன்னகர்ச் சிற்றுலா.
அது சிற்றிந்தியச் சிங்கை.
காணுமிடமெங்கும்
தமிழ்க்குரல்
தமிழ்ச்சொல்
தமிழெழுத்து.
அதற்குத் தாய்மடித் தன்மையன்றி
வேறொன்றுமில்லை.
தமிழ்த்தென்றல் நிலமென்ற
சிலிர்ப்பு.
பெயரளவிற்கே அயல்நாடென்ற
அடையாளம் தகும்.
உதிரங்கலந்து உறவாகிய
உள்ளூர்க்களையழகு அங்கு.
கடல்சூழ்நிலமொன்றினை
எத்தனை வளஞ்சூழ முடியும் ?
பல திறத்தோர்
எவ்வாறு பழகிவாழ முடியும் ?
ஒழுங்கும் ஒறுப்பும்
எவ்வாறு அரசாள முடியும் ?
தூய்மையும் எழிலும்
எவ்வாறு கைக்கோக்க முடியும் ?
வெய்யிலும் மழையும்
எங்கெங்கு எழில்தூவ முடியும் ?
வான்பரப்பையும் நிலத்தடியையும்
எவ்வாறு குடைந்தாள முடியும் ?
உழைப்பும் கொண்டாட்டமும்
எங்ஙனம் உயிர்ப்பூட்ட முடியும் ?
பெண்ணுரிமையும் பெரும்பாதுகாப்பும்
எவ்வாறு நிலைநாட்ட முடியும் ?
யாவற்றுக்கும் ஒரே விடை
சிங்கப்பூர்.
உமறுப்புலவர் உயரரங்கினில்
உயர்தமிழ்மக்கள் அவையில்
உணர்ச்சியுறப் பொழிந்தது
நானடைந்த நற்பேறு.
கடற்கரையோரக் கவியரங்கினில்
காற்றாட,
கால்நனைத்தாட,
கவிகலந்தாட,
வாய்த்த முகிலொளிந்த சுடர்மாலை.
பெரியார் சிறியார் வேறுபாடற்ற
தமிழார் அவைக்குரிய தகைமை.
மற்றொருநாள்
கவிப்பயிலரங்கென்று
கடிநகர் நடுவே
கவிமாலை ஏற்பாடு.
கவிதை இயல்புகள்
இயம்பப் புகுந்து
தமிழின் விடைகள் ஈறாய்
நிகழ்ந்த நன்மாலை.
பிறகெல்லா நாளும்
ஊர்சுற்றியாய்
ஒவ்வோரிடமாய்க் கண்டு
வியப்பால் களைப்பெய்தினேன் என்பதே
ஒரு தொடர்ச்சுருக்கம்.
ஒருவர் அயல்நாடென்று
ஒன்றேயொன்றைக் காண விரும்பின்
சிங்கப்பூர் வருக.
உலகின்
ஐம்பது பெருநகரங்களின்
தொகுப்புரு நகரம்.
முழுவளச்செழிப்பின்
முந்துறுநாடு.
கயற்சுருள்வாலும்
அரிமாச் சீற்றமும்
தோன்ற நிற்கும்
சிங்கைச் சின்னத்தை
என் வாழ்நாளெங்கும்
செயற்படுமேடைதனில்
வைத்திருப்பேன்.
தமிழை
தமிழ்மக்களை வாழவைக்கும்
மண்ணுக்கு
என்னால் இயன்ற
எளிய கைம்மாற்றுப் போற்றல்
இஃதொன்றே !