காதலன் – கிழவன் – பிராய்டு
I
உங்கள் தெளிவான கண்களின் அடிப்பகுதியைப் பார்ப்பதற்கு
அடை மழையிலும் வந்த என்னிடம்
நினைவின் எந்த இடத்திலும் பொருந்தும் ஒரு கதை இருக்கிறது.
II
பழைய காயத்தை இன்னும் எப்படி உண்மையாக்குவது எனத் தெரியாமல்
கருணைக் கொலையால் இறக்கும் முன்பு
பிராய்டிடம் இருந்தவை மூன்று பழைய பொருட்கள்
ஒரு முறை காதலியாக இருந்த பெண்ணின் நினைவு
ஒரு கேள்வி
ஓர் உடல்.
“எதுவும் செலவாகாத அன்பு” என இரகசிய பெயரில்
காதலியாக இருந்தாள் மின்னா பெர்னேஸ் ( Miss Bernays)
அவளே பிராய்டு வெளிப்படுத்தாத இரகசியம்.
மெழுகுவர்த்தியின் ஒளியில் அவளுக்குச் நீச்சலுடை செய்வது எப்படி?
என்ற கேள்வியை ஏன் உலர்ந்த மஞ்சள் இதழ்களால் மூடினார்?
மஞ்சள், இரகசியங்களைப் பாதுகாக்கும் நிறம்
மஞ்சள், சூரியனை அருகில் வைத்துக்கொள்ளும் வழி
மஞ்சள் நீடிக்காத ஆசையின் பள்ளத்தாக்கு
மஞ்சள் விருப்பமானவர்களைக் குறிக்கும் பழைய உடல்
கருப்பை பொறாமை இல்லாமல்
1856 ஆண்டில் தயாரிக்கப்பட்ட அவருடல் தேவையற்ற பொருளானதும்
விண்வெளியில் இருப்பவர்களை விட தனிமையாக இருந்தார்
நாளாக நாளாக பிராய்டின் மூளை குதிகாலுக்கு வந்தது
கால்களால் சிந்திப்பதும் இறந்துவிட நினைப்பதும் ஒன்றுதான்
பிராய்ட் கருணைக்கொலை மூலம் இறந்தார்
ஒரு குழந்தையின் காலடி தளத்தை முத்தமிட்ட உதட்டால்
பிராய்டின் இறப்பையும் முத்தமிடுகிறேன்.
பன்றி வியபாரி வரிசைப்படுத்திய உலகின் முதல் பிரச்சனை காதல்
நான் இறகுப்பந்து விளையாடும் போது
பன்றி விற்பனையாளரை சந்திக்க நினைத்தேன்
அவருடைய பிரச்சனைகளில் முதல் மற்றும் கடைசி பிரச்சனைகளால் வருந்துகிறார்.
நான் உட்பட இடையில் இருக்கும் பிரச்சனைகள் எதுவும் அவருக்கு பொருட்டல்ல
மழைப்பெய்யும் போது
கதவுக்குப் பதிலாய் கூரையையே திறந்திருக்கும்
அவருடைய வீடு யாருக்கானது என்று பன்றிகள் சண்டையிடுகின்றன.
அதனால் அவருக்கு இரண்டாவது பிரச்சனை ஏற்படும்
அப்போது அவருடைய தலையிலிருந்து
விழுந்த முடிகளின் கணக்கை எழுதத் தொடங்குவார்.
அதிலிருந்துதான் முதல் பிரச்சினை தொடங்கும்
அவரோடு சேர்ந்து வாழ்வது பற்றிய முடிவிலிருந்து
தன்னை விலக்கிக்கொண்ட அவரின் காதலியின் ஞாபகம் வரும்
காதலிகள் மட்டும் ஏன் வலியை விளைவிக்கும் நிலமாக இருக்கிறார்கள் ?
என்ற கேள்விக்குப் பிறகு
இதயத்தைக் கழட்டி வைக்கும் இடம் எது என்று அழத்தொடங்குவார்
எல்லா மின்விளக்குகளும் அனைந்த இடத்தை
அவருடைய இதயத்தின் வரைபடம் என்று சொல்லி
பைத்தியத்தை தன் வாயாக வைத்திருக்கும் விலங்கு போல
பேசியபடியே இருப்பார்
நீருக்குள்ளே பல நூறு பலூன்களை மூழ்கடித்தவர் போல ஓய்ந்து
அவர் மௌனமாக அழும் கண்ணீரில்
மிகக்குறைந்த சப்தம் கேட்கும்
பிரிந்து சென்ற பெண்களுக்காக அழும்
எல்லா ஆண்களின் சாயலும் அவர் முகத்திலே இருக்கும்.
உழவன்
சால் கொட்டைகளைப் போன்ற கண்களுடன்
இப்போது பக்கத்தில் உறங்கும் இந்தப் பெண்தான் என் வீடு.
அவளைப் போலவே,
என்னைச் சுற்றியுள்ள அனைத்தும் அவளுடன் ஓய்வெடுக்கின்றன.
அவள் எழுந்தவுடன் எல்லாம் மாறும்.
கதவு தடுக்குப் படல் மீண்டும் திறக்கும்,
நிறம் பின்வாங்கி வெளியேறிய பொருள்கள் மீண்டும் அசையும்
காலடிகள் வாசலை வளவை உயிர்ப்பிக்கும்,
நிழலால் ஈரமாகும் பொருள் இல்லாத நாளில்
கோழிகளை ஆட்டுக்குட்டிகளை எருமைக் கன்றுகளை
கட்டாந்தரையை சூரிய ஒளி எழுப்பும்
நான் என் வார்த்தைகளுக்கும் வயலுக்கும் திரும்புவேன்,
பறவைகளின் குரலும் புழுதி மண்ணும் என் நாளைச் சூழ்ந்து கொள்ளும்
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததைப் பற்றிய நினைவின்றி
உழு கருவிகளோடு வயலில் இறங்கும் எனக்கு
உயிர் வாழ்வதற்கு மறதி பழங்கால வழிமுறை.