‘இல்லாத இன்னொரு பயணம்’ என்று தனது கவிதைத் தொகுப்புக்குப் பெயரிட்டு ந. ஜயபாஸ்கரன் தனது ‘அன்னப் பாடல்’( SWAN SONG)-ஐ எழுதியுள்ளார்.
‘முதன் முதலாகத் தமிழ்க் கவிஞன் தன் மூல ஆதாரத்தை தமிழ் இலக்கிய மரபைக் கொண்டு நிர்ணயிக்கும் முயற்சி’ என்று நகுலனால் துவக்கத்தில் வரையறுக்கப்பட்ட ந.ஜயபாஸ்கரனின் கவி இருப்பு, மரபுக்குள் புராணிகத்துக்குள் வரலாற்றுக்குள் உணர்வுக்குள் விலக்கப்பட்டதைத் தேடித் தேடி அடிக்குறிப்புகளையிட்டு, நிகழில் இல்லாதது போன்ற ஒரு பழைய தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டே நவீன கவிதையின் தவிர்க்க இயலாத இருப்பாக மாறியுள்ளது. குத்தும் விழிப்பின் உணர்வை விலக்காத தன்பரிவின் மொழியை தனியான த்வனியாக ‘இல்லாத இன்னொரு பயணம்’ தொகுதியில் ஒரு வெற்றியைச் சாதித்துமுள்ளார் ஜயபாஸ்கரன்.
எமிலி டிக்கன்ஸன், குருதத், திருப்பூவனத்து பொன்னனையாள், அங்கம் வெட்டுண்ட பாணன், ஆஹா சாகித் அலி என மேற்கும் கிழக்கும் முயங்கி நிறைவேறாமையின் வலியும் சுமையும் நிறைந்த சிலுவையோடு, கவிதைப் பாத்திரங்களாக அலையும் கடையைப் பூட்டிவிட்டு, தொல் தமிழ் மரபின் நூலிழைகள் பழுப்பேறிய துண்டை உதறித் தோளில் இட்டுக்கொண்டு வெளியேறிய ந. ஜயபாஸ்கரனின் பழுப்பேறிய வரைபடத்தில் யாழ்ப்பாணமும் திரிகோணமலையும் இராவணனும் இடங்களாகவும் கதாபாத்திரமாகவும் சேர்ந்துள்ளனர்.
வான்கோவின் மஞ்சளில் ஜயபாஸ்கரனின் தனிக்கவிதை பிரபஞ்சமான வெண்கலப் பாத்திரத்தின் மஞ்சளையும் சேர்த்து மங்கலம், அசுத்தம், ஆபாசம் எனப் பல அர்த்த அடுக்குகள் உடைய துயர வர்ணமாக மஞ்சள் ஜயபாஸ்கரனின் கவிதைக் கடையில் தனியாக ஒளிர்கிறது.
தொழிலாகவும் வாழ்க்கையின் ஆதாரமாகவும் தந்தையின் வெண்கலப் பாத்திரக் கடையை எடுத்து நடத்திய ஜயபாஸ்கரன் அந்த கடை இருப்பையே சிலுவையாக, அந்தக் கடையின் இருள், நிழல், ஒளிகளையே கர்ப்பத்தின் பாதுகாப்பாகப் பார்த்து, அதை தனது கவிதையின் ஆதாரமாகவும் ஆக்கியவர். அந்தப் பிரபஞ்சத்தில் நமது தனிப்பட்ட தோல்விகளையும், ஆற்றாமைகளையும், வெளிப்படுத்தாத காமத்தையும் அடையாளம் காணச் செய்ததுதான் அவரது சாதனை.
தமிழ் இலக்கிய மரபின் சுமையை இறக்க முயன்று, அதன் கர்ப்பப் பாதுகாப்பிலிருந்தும் வெளியேறி ‘நவீன’ கவிஞனாக, நெடுங்காலத்துக்குப் பின்னர் உணர்ந்து, காலை எட்டிவைத்து இன்னொரு பயணம் தொடங்கியவனின் கதை இந்தக் கவிதைகள் என்று ஜயபாஸ்கரனின் ‘அறுந்த காதின் தனிமை’ தொகுதிக்கு குறிப்பொன்றை எழுதியிருந்தேன்.
‘இல்லாத இன்னொரு பாடல்’ தொகுதியின் வழியாக, இதுதான் இறுதி, கிளம்புகிறேன் என்ற என்ற உத்தேசத்தில் இதுவரை இல்லாத உறுதியையும், விடுபடல் உணர்வையும், தொனி கம்பீரத்தையும் எட்டியுள்ளார் ஜயபாஸ்கரன்.
‘இல்லாத இன்னொரு பயணம்’ கவிதைகளை ஒரு நீள்கவிதையாகவும் படிக்கலாம். தன் பயணத்தில் நிகழ்ந்த எல்லா நிறுத்தங்களிலும் நெய்விளக்குகளை ஏற்றிவைத்து, இதுதான் இப்படித்தான், இவர்கள்தான் என்று சொல்வதன் மூலம் ஒரு சரடு நமக்குக் கிடைத்துவிடுகிறது.
ந. ஜயபாஸ்கரனின் பயணத்தைத் தொடங்கிவைத்த கவியும், ஆகிருதியுமான எமிலி டிக்கன்ஸன் இந்தப் புத்தகத்திலும் பரவியிருக்கிறாள். அவள் ஆழ்ந்து உறங்கும் ஆம்ஹெர்ஸ்ட் நகரம் இருக்கிறது. நடுவில் உடன் வந்து சேர்ந்த ஆஹா சாஹித் அலி இருக்கிறார். தற்செயலாக அவரது கல்லறையும் ஆம்ஹெர்ஸ்டுக்கு அருகிலேயே உள்ளது. ந. ஜயபாஸ்கரனின் கவிதையுலகில் எல்லா இடங்களும் நிறைவேறாமை நீளத்துயில் கொள்ளும் கல்லறைகளின் இடமாக ஆம்ஹெர்ஸ்ட் தோற்றம் கொண்டுவிடுவது இப்படித்தான். விடுதலை என்பது நிறைவேறாமல் போன ஈழ நிலத்தில் இன்றிருக்கும் ஒரு நிலவறையும் அவருக்கு ஆம்ஹெர்ஸ்ட்டாகவே தோற்றம் கொள்கிறது.
வனத்தில் புதைந்த இல்லத்தில்
ஒற்றை மனித இருப்பு
திரையடர்ந்த பலகணி வழியே
பார்வைக்கு அப்பால் ஆன
பதுங்கு நிலவறை
கார்லோவின் குரைப்பொலி மெலிதாக
வின்னியின் பூனைகள் தென்படவில்லை
பார்க்கும் இடமெல்லாம் ஆம்ஹெர்ஸ்ட்
தனது கடையை மூடிவிட்டு வெண்கலக் கடையை விட்டு வெளியேற்றப்பட்டதான ஒரு தோல்வியுணர்வையும் கழிவுணர்ச்சியையும் ஜயபாஸ்கரன் வெளிப்படுத்தினாலும் அவரது கவிதையின் நிலம் அமெரிக்காவையும் யாழ்ப்பாணத்தையும் வன்னி நிலத்தையும் ஈழத்து மொழியையும் அகப்படுத்தியுள்ளதற்கு அவர் பிரத்யேகமான மகிழ்ச்சியைக் கொள்ளவேண்டும்.
இல்லாத இன்னொரு பயணம் என்று சொன்னாலும் கடையை மூடியபிறகுதான் அவர் வெற்றிகரமான பயணத்தையே தொடங்கியிருக்கிறார் என்பதுதான் இத்தொகுப்பு தரும் சுபமான செய்தியாகும்.
ஈழக்கவிதைகள் வழியாகவே நாம் பிரத்யேகமாகப் பார்த்த ஒரு மன, நில இருப்பை, தமிழ்நாட்டிலிருந்து ஒரு நவீன கவிஞன் சென்று அகப்படுத்தியிருக்கும் கவிதைகளைத் தனியாகவே நாம் வாசித்துப் பேசவேண்டும். நவீன கவிதைப்பரப்பில் மிகச் சின்ன இடத்தை எடுத்துக்கொண்ட ஜயபாஸ்கரனின் இந்த விரிவு கவனிக்க வேண்டியது. பொதுவாக எந்தத் தாக்கத்தாலும் பெரிதாக மாறாத ஜயபாஸ்கரனின் அக, புற இயல்புகள் ஈழப்பயணம்,அங்கே சில மாதங்கள் மேற்கொண்ட தங்கலில் மாறியிருக்கின்றன. ஜயபாஸ்கரனின் சார்பு, ஏக்கம், தாக்கம் எதில் நங்கூரமிட்டிருக்கிறது என்பதைப் பரிசீலிப்பதற்கான சான்றுகள் ஈழம் தொடர்பில் அவர் எழுதியிருக்கும் கவிதைகள். அவரது தனியுணர்வுத் திணையை அடிக்கோடிட்டுக் காட்டுபவை.
ந. ஜயபாஸ்கரன் பிடிவாதமாகச் சாதித்திருக்கும் பழந்தன்மை, மோனம், தொனியின் தனிச்சன்னதிக்குள், நவீன இலக்கியும் வர்த்தகச் சந்தை ஆன ஒரு காலத்தின் டமாரச் சத்தங்களைத் தாண்டி, ஒரு நவீன கவிதை வாசகன் வருவான், வந்து அமர்ந்து அமைதிகொள்வான் என்ற நம்பிக்கையை வைப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை.
லா. ச. ரா. சொல்கிற “ஆழ்ந்த மவுனத்தின் விறுவிறுப்பு”
காற்றில் இருக்கிறது இங்கு
சாலைகளில்
ஒழுங்கைகளில்
வளவுகளில்
பெயர்களாகிவிட்ட இடங்களில்
இதழ் பிரிக்கிற கார்த்திகைப் பூக்களில்
பொருளற்றுப் போய்விட்ட
பரித்தியாகங்கள்
வன்மங்கள்
குரூரங்கள்
காணாமல் ஆக்கப்பட்ட வலிகள்
வற்றாப்பளை கண்ணகை அம்மன்
வலதுகையில்
ஒற்றைச் சிலம்புடன்
எதிரே விரியும் நந்திக்கடலின் ஓலம்
படைவீரர்களின் அடர் இருப்பு
வன்னிக்காடுகளின் மவுனம்
அன்பு ஜயபாஸ்கரன் சார்,
உங்கள் இத்தனை நாளைக்கான வலிகளும், நிறைவேறாமைகளும் உங்கள் இந்த நூலில் சிறகுபெற்றுப் பறக்கத் தொடங்கியிருக்கின்றன.
நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடரலாம் . இல்லாதது எது என்பதை பிறகு கணக்குப் பார்த்துக்கொள்ளலாம் ஜயபாஸ்கரன்…. சார்.
இல்லாத இன்னொரு பயணம் – கவிதைகள்
‘கருப்பை முட்டையுள் பறவைகள் பல நிறம் கலந்த சித்திரம்’ பற்றிக் கைவல்ய நவநீதம் சொல்கிறது பலவண்ணக் கோபுரம் உடைந்து சிதறி இறுதியில் ஒரே வெண்மையில் உறைந்து விடுவதை நாஸ்திகரான ஷெல்லி பாடுகிறார். தத்துவமும் கவிதையும் அரைகுறையாய் தெரிந்த உலோக வியாபாரி மஞ்சள் என்ற ஒரு வர்ணத்தையே சேமித்து வைத்திருக்கிறான். மங்கலம், அசுத்தம், ஆபாசம் எனப் பல அர்த்த அடுக்குகள் உடைய வர்ணமான மஞ்சளைப் பித்தளை வெண்கலத் துயர் மஞ்சளுடன் தான் அடையாளப்படுத்திக் கொள்கிறான் அவன். வின்சென்ட் வாங்கோவோவைக் கடைக்கு அழைத்திருந்தால் பித்தளைத் திருவாசி சித்திரை வெயிலைப் புணரும் கணத்தில் அவருக்குப் புதிய மஞ்சள் சேர்க்கை கிடைத்திருக்கக்கூடும் என்றும் நினைத்துக் கொள்கிறேன்.
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த “திருக்கோண மலையில் பல வடிவம் எடுக்கிறது. இராவணனின் மாத்ரு மோகம் தாயார் அரண்மனையிலிருந்து கோணேஸ்வரரை வழிபட வேண்டும் என்பதற்காகக் கை வாளால் திருக்கோண மலையைப் பிளந்திருக்கிறான். தாயின் அந்திமக் கிரியைகளுக்காக கன்னியா தேசத்தில் எழும் உஷ்ணத்தின் வெவ்வேறு அளவுகளில் அவனுடைய தாப உணர்வின் வெப்ப அளவு போல் கன்னியா, இராவணேஸ்வரன் தமிழ் வித்யாலத்தைக் கடக்கும்போது அந்தப் பள்ளியில் இன்றும் சீதையின் பெயரில் ஒரு மாணவியாவது பதிவேட்டில் இல்லாமல் போக மாட்டாள் என்று தோன்றுகிறது சானகியை மனச்சிறையில் கரந்த இராவணக் காதல் சிறிது புரிகிறது.
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்