தாங்கள் வாழும் திணைகள், அதன் அரசியலை, வாழ்வியலை வரலாற்றில் இடம் பெறச் செய்பவர்களில் படைப்பாளர்களே முதலிடம் வகிக்கிறார்கள். அவர்கள் புனையும் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் ஊடாகவும் அபுனைவு ஊடாகவும் தங்கள் சமகால வாழ்வியல் சிக்கல்களையும் அதற்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். எனவே படைப்பாளர்கள் வழியேதான் சமகாலத்தில் வாழ்ந்த மக்களின் சமூக அரசியலை அதன் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்குச் சங்ககாலக் கவிதைகளையே முன்னோடியாக எடுத்துக்கொள்ளலாம். அதன் வழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான மாநுட நாகரிகத்தை படைப்பின் வழியே நாம் அறிந்துகொண்டோம். அதன் பின்னர் நடந்த / நடக்கின்ற தொல்பொருள் ஆய்வுகளுக்குக்கூட ஆதரமாக அமைவது எழுத்துவழிக் கிடைத்த தடயங்களே.
நொய்வமும் தேக்கமும்
ஐரோப்பியர்கள் அலைகடலையும் ஒரு பொருட்டாக மதியாது, தங்கள் நாடுகளைக் கட்டியெழுப்ப, உயிரைப் பணையம் வைத்து அலைகடலைக் கடந்து ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் கனிம வளம் தேடி அலைந்தனர். அந்நாடுகளிலிருந்து பெரும் செல்வத்தை அவர்கள் சூறையாடிச் சென்றனர். அதற்காகச் சுதேசிகளைப் பயன்படுத்திக்கொண்டனர். தங்கள் சொந்த நாட்டிலேயே அவர்கள் கொத்தடிமைகளாகி வந்தேறிகள் நாட்டைச் செழிப்பாக்கினர். இப்படியாக டாவர்கள் குடியேறிய நாடுகளில் நெடுக சுரண்டல்களும் சூறையாடல்களும் நிகழ்ந்ததாக வரலாறு மெய்ப்பிக்கிறது. இவ்வாறான எல்லா வகை சுரண்டலையும் தாண்டி எஞ்சியிருக்கும் நிலத்தைப் பண்படுத்தி உழைத்து வளமாக்கியதையும் அதனைத் தெய்வமாக வணங்கியதையும் நம் கவிஞர்கள் பாடிச்சென்றிருக்கிறார்கள்.
பூமியெனும்
பாழடைந்த கிரகத்திற்கு
தங்கள் உதிரத்தால்
உயிரூட்டிய பிரம்மாக்கள்
இவர்கள்
இந்த மண்ணில்தான்
விதைக்கப்பட்டிருக்கிறது
தங்கள் உழைப்பால்
காலத்தை வென்றவர்களின்
சரித்திரம்
பசியின்
எல்லைகளை உடைத்த
மூதையர்களின் வியர்வை மொழியில்
கவிதை பேசும் இம்மண்
என்னுயிருள் படர்ந்து
மண் வாசம் வீசும்
ஒவ்வொரு துளி
சுவாசத்திலும்
என்னுயிர் மண்டியிட்டு
யாசிக்கும் கடவுள்
இம்மண்
(ம.கனகராஜன்)
வாழும் நிலத்தின் கலாச்சாரச் சிக்கல்களிலிருந்தோ, படைப்பாளியின் உள்ளார்ந்த தத்துவத் தவிப்பிலிருந்தோ கவிதைகள் முளைத்து எழுகின்றன. மலாயா மண்ணில் பெருவாரியான தோட்டப்புறங்களைப் பிரிட்டிசார் நிறுவுகிறார்கள்.மலாயா மண் அதற்கான சிதோஷ்ண நிலைக்கு உகந்தது எனக் கண்டுபிடித்த பின்னர் ரப்பர் மரக் காடுகள் எழுகின்றன. அதிலிருந்து பாலைக் கறப்பது வெள்ளையர்கள் திட்டம். அதிலிருந்து கிடைக்கும் நொய்வம் அப்போது சூடு பிடித்துக்கொண்டிருக்கும் தொழிநுட்பத் துறைக்குத் தீனிப் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் அதன் உற்பத்தி இரட்டிப்பாகி உழைப்பாளிகளின் உதிரத்தைத் தாகம்கொண்ட மிருகம்மாதிரி கோரிக்கொண்டே இருந்தது. எத்தனையோ தலைமுறை ரப்பர் உற்பத்திக்காக உழைத்தும் பிரதிபலன் கிடைக்காமலேயெ அடிமைப்பட்டுக் கிடந்தது. அந்தத் துயரம் கவிதைகளாகப் புனைந்திருக்கிறார்கள். பால்மரத்தின் பகுதிகளைக் குறியீடாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைக்குள் வாசகன் வியர்வையின் மணத்தை ஏற்றிக்கொள்ள முடிகிறது. இந்தக் கவிதை அதற்கொரு சான்று.
பற்றி எரியும் பால் மரங்கள்
இலைகளை உதிர்க்கிறது
ஒரே தொனியில் கேட்கும்
அதன் விதைகள்
வெடித்து விழும் சத்தம்
உக்கிரமாகி காதைக் கிழிக்கிறது
இப்போது வடுக்களில் பாலுக்கு
பதில் இரத்தம் அமிலம் நஞ்சு
கூலியாய் வந்ததாய் மீண்டும் மீண்டும்
சொல்வதில்
இப்போது எந்தக் கேள்வியும் இல்லை
எந்தப் போராட்டமும் இல்லை
என்னிடம் மீந்திருப்பது ஒரு பழைய வெட்டுக் கத்தி
வன்முறைகளில் பீறிட்டு தெரிக்கிறது பால்மர இரத்தம்
மீண்டும் வரலாறு எரிந்து விழுகிறது
(பூங்குழலி)
குறியீடு என்பது கருத்தல்ல. அது கவிதையை பல அலகுகளாகப் பயணிக்கச்செய்யும் ஒரு கருவி. வாசகர்கள் ஒரு கவிதையை ஒரே மாதிரி புரிந்துகொள்வதில்லை. வாசகனின் வாழ்வனுபவத் திசைக்கே அவன் சிந்தனையை வழி நடத்தும். பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயரும் மனிதர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைக் கவிதை வழியே சொல்லிச் செல்கிறார்கள். நாட்டின் பொருளாதார வள்ர்ச்சிக்கு ஈடுகொடுத்து அவர்களால் முன்னகர முடியாமையைக், குறைந்த பட்சம் கவிதையின் ஊடாகவே சொல்லித் தங்கள் இயலாமையைச் சொல்லிவிடுகிறார்கள். அவ்வகைக் கவிதைகளில் இதுவும் ஒன்று.
மலேசியாவில் மரம் என்ற சொல் ரப்பர் மரம் என்ற பொருளாகவே திரண்டு வருகிறது. அந்த அளவுக்கு வரலாற்றை அது தனதாக்கிக்கொண்டு துலங்கி நிற்கிறது. காலனித்துவர்கள் மலாயாவைக் கையகப்படுத்தியபோது இங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அப்போது மலாயாவில் வாழ்ந்தப் பல்லின மக்களில், முதலாளிகளுக்கு உழைப்பைத் தயக்கமின்றித் தருவபர்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் சமரசமற்ற விசுவாசிகள் என்பதனையும் கண்டறிந்தார்கள். எனவே அவர்களைச் சுயநலமிக்க முதலாளிகள் பயன்படுத்திக்கொண்டார்கள். பெருங்காடுகளை அழித்து, அதனை விளைநிலமாக்க அவர்கள் பெரும் உழைப்பைச் செலுத்தினார்கள். அதன் பொருட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் , பூமி புத்ரா என்று சொல்லிக்கொள்ளும் ஓரினத்தைச் செழிக்கச்செய்யவும் இவர்களின் உழைப்பு பேரளவுக்குக் கைக்கொடுத்தது. ஆனால் கடுமையாக உழைத்த வர்க்கத்தினரின் வளர்ச்சியில் தேக்கம் கண்டது. நாட்டின் துரித வளர்ச்சிக்கு ரப்பர் பெரும்பங்காற்றினாலும், உழைத்த மக்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டனர். அவர்கள் மரத்தை நட குனிந்தவர்கள் குனிந்த வாக்கிலேயே மங்கிப் போனார்கள் என்பதை சொல்லும் கவிதை இது.
இவன் நட்ட மரங்கள்
நிமிர்ந்துவிட்டன
இவன்
நடும்போது குனிந்தவந்தான்
இன்னும் நிமிரவே இல்லை.
(கோ.புண்ணியவான்)
படிம உத்தியில் எழுதப்பட்ட கவிதைகள், அவற்றின் பொருளை விஸ்தரித்துக் காட்டும் தன்மைகொண்டவை. கவிதைகள் எழுப்பும் அவலக் குரலைப் படிமமாக வாசகன் விரித்துணர்ந்துகொள்ள முடியும். ஒரு கவிதையை தன் அகக் கண்கொண்டு நோக்கும் வாசிப்பாளன் ஓர் இனத்தின் தீராத உழைப்பை உணரமுடியும். அந்த இனம் ஏன் அதிலிருந்து எழ முடியாமல் இருந்தது என்பதையும் காணமுடியும். ரப்பர் மரம் எப்படிச் சுரண்டப்பட்ட மக்களின் குறியீடாகிறதோ அதேபோல, அதிலிருந்து வடியும் பாலைப் படிமமாக்கிக்காட்டுகிறார் டாக்டர் சண்முக சிவா.
எல்லா முதலாளிகளும்
இந்தப் பாலிலிருந்துதான்
பல பொருட்கள் செய்கிறார்கள்
கண்களுக்குத் தெரியாமல்
கைவிலங்குகளும் செய்வார்கள்
எங்கள் கைகளில் பூட்டியும்
மகிழ்வார்கள்.
(டாக்டர் சண்முக சிவா)
தேர்தல் களம்
பள்ளிக் காலத்திலிருந்தே பெருக்கல் குறி நம்மை அலைக்கழித்திருக்கிறது. “பன்னெண்டாம் வாய்ப்பாடு சொல்ரா’ என்று நம் கணித அறிவைச் சோதிக்காத உறவினர்களை நாம் எண்ணற்ற முறை எதிர்கொண்டிருப்போம். பல சமயம் அதனால் அவமானப்பட்டுமிருப்போம். கணக்கைச் சரியாக ஆளத்தெரிந்தவன் பிழைத்துக்கொள்வான் என்ற பொதுபுத்திக்காரர்களின் அபிப்பிராயமே நம்மை பரிசோதனைக்குள்ளாக்க நேரிடுகிறது. பொருளாதார பலம் நம்மைச் செழிப்பாக வழி நடத்தும் என்ற காரணத்தாலே இந்த பரிசோதனைகள். பெருக்கல் வகைமை ஒரு ‘அதிகாரத் தோரணை’ கொண்ட கணக்கு என்று ஒரு கவிஞன் நமக்குச் சுட்டிக்காட்டும்போதுதான் நாம் அதிர்ச்சியடைகிறோம். அரசியலில் லாபம் சம்பாதிப்பவர்கள் பிற்காலத்தில் பெருக்கல் குறையை எப்படிப் புரிந்து பலனடைந்தார்கள் என்பதை இக்கவிஞர் சொல்வதைப் பாருங்கள். பெருக்கிக் கொண்டால்தான் நாற்காலியைத் தற்காத்துக்கொள்ள முடியும். எனவேதான் நாம் போடுகின்ற குறி சரியான கட்டத்தில் இருக்கவேண்டும் என்று நம்மை அங்கதத் தொனியில் எச்சரிக்கிறார் கவிஞர்.
நாங்கள் பெருக்கல் குறி போட்டோம்
அவர்கள் பெருக்கிகொண்டார்கள்
(நடா)
இன்றைக்கு நிறைய எழுதிக்கொண்டிருப்பவர் முனியாண்டி ராஜு என்ற கவிஞர். வாக்காளன் களவு போகும் கதை இன்றைக்கு நேற்று நடக்கும் கதையல்ல. அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்களுக்கு வாக்குச்சிட்டுதான் துருப்புச் சீட்டு. வார்த்தை மந்திரப் பிரயோகம்தான் அதிகாரத்தைக் கைப்பற்ற உபயோகிக்கும் அஸ்திரம். அதனை அடிப்படையாகக் கொண்டே அரசியல் களத்தை வென்றெடுக்கிறார்கள். வாக்காளர் கவனக்குறைவை சாடும் இந்தக் கவிதையை பாருங்கள்.
ஒரு தேர்தலுக்குள் களவுபோன வாக்காளன்போல்
என்னைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்
ஓட்டுப் பெட்டிக்குள் ஒளிந்துபோன உண்மைகளாய்
நான் ஒளிந்திருப்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்
வார்த்தைச் சலவைகளில் தொலைந்ததிலிருந்து
ஓவ்வொரு பண நோட்டிலும்
உங்கள் அழுக்கு ரேகை
தொடக்கூசும் ஒன்றிரண்டு விரல்களிலும்
இன்னும் காயாமலேயே இருக்கிறது ‘மை’
(முனியாண்டி_ராஜ்).
பிரக்ஞைபூர்வமாகக் கோட்பாடு சார்ந்த கவிதைகள் மலேசியாவில் எழுதப்பட்டதில்லை. ஏனெனில் இந்தியத் தேசத்தைப் போல கவிஞர்களிடையே அவ்வாறான பரந்துபட்ட வாழ்க்கையையோ அரசியலையோ அவர்களுக்குக் கிட்டவில்லை. ஆனால் பெண்ணியம் சார்ந்த எழுத்துகள் இருக்கவே செய்தன. தாயோடு, அக்காள் தங்கையோடு மனைவியோடான வாழ்க்கை அனுபவத்தை அவர்கள் கடந்து வராமல் இருக்க முடியாது. அவ்வாறான தருணங்களில் அவர்களின் அகம் தொந்தரவுக்குள்ளாகி எழுதப்பட்ட சில நல்ல கவிதைகள் நமக்கு வாசிக்கக் கொடுத்திருக்கிறார்கள்.
நாங்கள் திட்டமிட்டே போட்ட
பரமபதத்து கட்டத்துக்குள்
பெண்ணே நீ வகையறியாமல்
மாட்டிக்கொண்டாய்
எங்களின் உதட்டுக்கு மேலே
கறுத்து அடர்ந்த
ஆண்மையில் கைவைத்தவாறு
நாங்கள் புன்னகைக்கிறோம்
உங்கள் குலத்திற்கே
நாங்கள் வேலிபோட்டவர்கள்
எங்களது சொப்பன தேச
எல்லைக்கோடுகளை எப்படியெப்படியோ
திருத்தினோம் விஸ்தரித்தோம்
அப்போதெல்லாம் நாங்கள் போட்ட விடுகதை
உங்களுக்குப் புரியவே இல்லை
உங்களது கண்களுக்குள்
இருட்டைப் பிழிந்து
வெளிச்சத்தை அபகரித்தோம்
உனக்குக் கல்லைக் காட்டினோம்
கணவன் என்றாய்
புல்லைக் காட்டினோம்
புருஷன் என்றாய்.
வடிவ கச்சிதத்தால், புதிய புதிய சொல்லிணைவால், குறியீட்டுத் தன்மையால் இக்கவிதை அர்த்தபுஷ்டி கொள்கிறது.
(அக்கினி)
மானுட வேட்டை
மலாயாவின் வரலாற்றில் மிக மோசமான மானுடக் கொடுமை நடந்த ஆண்டு 1941 தொட்டு 1945 வரை. இரண்டாம் உலக யுத்தம் உச்சம்தொட்ட காலக் கட்டம் இது. அப்போது மலாயா காலனித்துவ ஆட்சியில் பிடிபட்டிருந்தது. கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. பிரிட்டிசாரின் காலனித்துவ ஆட்சிக்கு முன்னரும் அது நடந்தது. அதன் பின்னர் சப்பானியர் மலாயாவுக்குள் நுழைகிறார்கள். பிரிட்டிஷாரில் கைப்பிடிக்குள் இருந்த இந்தியாவைக் கைப்பற்றும் நோக்கத்தில சயாம் வழியே பர்ம இந்தியா எல்லைவரை ரயில் தண்டவாளம் அமைக்கத் திட்டமிடுகிறார்கள். அதன் பொருட்டுப் பெருவாரியாக அகப்பட்ட இனத்தவர் மலாயா இந்தியர்கள். 450 மைல்தூரம் தண்டவாளம் அமைக்கக் கடுமையான நோயாலும், பசிக்கொடுமையாலும், மானுட வதையாலும் இறந்தவர் எண்ணிக்கை ஒரு லட்சம் இருக்கும் எனக் கணக்கிடுகிறார்கள். வரலாற்றின் கரும்புள்ளி இது. இதனைக் கவிஞர் காசிதாசன் இப்படிப் பதிவு செய்து வைக்கிறார்.
இணைக்கோடுகளாய்
ஓடுகின்ற தண்டவாளங்கள்
இரும்புத் துண்டுகளா
இல்லை
எங்கள் மூதாதையரின்
எலும்புத் துண்டுகளா?
குடிமகன் கோரிக்கை
நாடு விடுதலை அடைந்தபின்னரும் ஒரு இனத்தின் சோக வரலாறு முற்றுப்பெறுவதில்லை. அந்த நாட்டின் குடிமகனாக ஆவதற்கு அவன் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்தத் தவறுகளுக்கு அடிப்படையில் அவனே காரணமாகவும் இருந்திருக்கிறான். அக்கறையின்மை அதற்குக் காரணம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. குடிமகன் தகுதியை அடையமுடியாத ஒருவனுக்கு நாடு வழங்கும் பல வாய்ப்புகள் கைக்குக்கிடைக்காமல் நழுவிவிடும். அதனால் அவன் அடைந்த இன்னல்கள் சொல்லி மாளாதவை. ஆனாலும் தான் வாழ்ந்த நாட்டுக்கு அவன் விசுவாசியாகவே இருந்திருக்கிறான் என்பதைக் கீழ்க்காணும் கவிதை அங்கதமாக்கிக்காட்டுகிறது.
மெர்டேக்கா மெர்டேக்கா
என்று தொண்டை கிழியக் கத்தி
குனிந்து தேசியக் கொடியைத்
தூக்கிப்பிடித்துக் குதூகளித்த
தருணத்தில்
அவன் ஜேப்பிலிருந்து
சிவப்பு ஐசி விழுந்து
கெக்கேவென்று சிரித்தது
என்று கேலித் தொணியில் பாடுகிறார்
(ஜெகவீரபாண்டியன்)
மலேசியப் படைப்பிலக்கியம் சிறுகதையில் அடைந்த தூரத்தை நவீனக்கவிதைகள் எட்டிப்பிடிக்கவில்லை. இருந்தாலும் சில நல்ல கவிதைகளை வடித்துத் தந்திருக்கிறார்கள் நம் கவிஞர்கள். மலேசியாவில் வாழ்கின்ற சமூகத்தின் இடர்பாடுகளை உற்றுநோக்கியதால் , உண்மைத் தன்மை வாய்ந்த சில கவிதைகளாவது நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. கவிதைப் படைப்பிலக்கியத்தில் ஆர்வங்கொண்டு ஈடுபடும் எழுத்தாளர்களால் நல்ல கவிதைகளைத் தரமுடியும் என்றே மேற்காணும் கவிதைகள் நமக்குக் கட்டியங்கூறுகின்றன.