அந்தி குழையும் வேளையில்
மேற்கு வானத்தின்
வண்ணம் சுமந்து
கூடடைந்த பறவை
கிளையின் அசைவில் விழித்து கொண்டதில்
தன் அலகால்
விண்மீன்களைப் பொறுக்கிச்
சேகரிக்க எத்தனிக்கிறது
முற்றத்தில் விழும் நிலவொளியில்
தனிமை தகிக்கிறது
நீண்ட இரவுகளை விழுங்கிய நிலவு
மெல்ல தேய்கிறது..!
—-
மௌனத்தின் இடைவெளியை
நெருக்கத்தின் மூச்சுக்காற்று
நிரப்ப விழைகிறது
சுழல் காற்றுக்கு உடையாத
நீர்க்குமிழியொன்று
எதிர்க்காற்றின் திசையில்
தன்னை கட்டிக் கொள்கிறது
உடைய மறுத்த வேளையில்
சொற்களற்ற ஒரு பார்வையில்
மலரினும் மெல்லிய கவிதை பூக்கிறது:
***
அந்தப் பெருங்காடு
தன் அடர் வனப்பில்
ஒளிக் கீற்றை ஊடுருவ விடவில்லை:
எந்தப் பறவைக்கும்
கூடு கட்ட
இடம் கொடுக்கவில்லை:
வளர்ந்து நின்ற மூங்கில்களில்
வண்டு துளைக்க உடன்படவில்லை:
அதன் கிளைகளில்
பழுத்த இலைகள்
உதிர்வதை அனுமதிக்கவில்லை:
காற்றின் அசைவுகளுக்கு நடனமாடவில்லை:
கடைசி வரை
வெறும் காடாகவே இருந்தது..!