நேர்காணல் செய்தவர் : நதன் கார்டல்ஸ்
இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர்களில் ஒருவர் செஸ்லோ மிலோஸ். நோபல் பரிசு பெற்றவர். தீவிரமான மோதல்கள் கொண்ட உலகத்தில் வாழ விதிக்கப்பட்ட மனிதனின் குரல் என்று நோபல் பரிசுக் கமிட்டியின் குறிப்பு இவரது கவிதைகளைப் பற்றித் தெரிவிக்கிறது. மனம்நிறை கவனம்தான் இவரது சமயத்துவம் என்பதை இந்த நேர்காணல் மூலம் தெரியப்படுத்துகிறார்.
கேள்வி: உங்கள் கவிதைத் தொகுப்பில் கதேயின் மேற்கோள் ஒன்றைத் தந்திருக்கிறீர்கள். “நலிவின் காலகட்டங்களில், எல்லா மனப்போக்குகளும் தன்னிலை சார்ந்ததாக இருக்கும்; ஒரு புதிய சகாப்தத்துக்கான கனிதல் ஏற்படும்போது அனைத்து மனப்போக்குகளும் புறநிலையில் இருக்கும்”. உங்களைப் போன்றே கதேயும் புறநிலைக் கலையைப் பாராட்டுகிறார். கற்பனாவாதப் போக்குக்கு செவ்வியல் காலம் வழிவிட்ட கதேயின் காலகட்டத்திலேயே இசையில் புறநிலை ஒழுங்கு குலைந்தது என்றும் நீங்கள் கருத்து தெரிவித்திருக்கிறீர்கள். புறநிலைக் கலை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை விவரிக்க இயலுமா?
பதில்: ஓவியம், இசை, சினிமா, கவிதை என பல மொழிகள் கொண்ட உலகில் நாம் வாழ்கிறோம். அந்த மொழியோடு எதார்த்தம் என்ற ஒன்றும் உள்ளது. அந்த எதார்த்தத்தை நமது மொழியால் முழுமையாகப் கைப்பற்றிவிட முடியாது. ஆனால் அந்த எதார்த்தத்தை நமது புலன்களால் நேரடியாக உள்வாங்கிக்கொள்ள இயலும். அந்த எதார்த்தம்தான் கலையை மதிப்பிடுவதற்கான பெரிய அளவுகோள் என்று நான் நம்புகிறேன். அந்த எதார்த்தம்தான் கலையைத் தீர்மானிக்கிறது. ஒரு கலைப்படைப்பு எதார்த்தத்தை எந்த அளவு கைப்பற்றுகிறதோ அதைச் சார்ந்து அழகியல் மதிப்பு உள்ளது. செசானின் ஓவியங்களில் அதை யாரும் காணமுடியும். அவர் தன்னைக் கவர்ந்த மலையான சான் விக்டோயிரை வரைவதை விரும்பினார். அவர் இயற்கைக்கு விசுவாசமாக இருக்க விரும்பினார். புறநிலை எதார்த்தம் என்பது அவரைப் பொருத்தவரை அதுதான். அதை அடைவதற்கு அவர் முயற்சித்தார். “அழகு என்பது சத்தியத்தில் உள்ளது, சத்தியமே ரசிக்க உகந்தது” என்பது அவரது நம்பிக்கை. மேலும் தனது நெறி என்பது எதார்த்தம்தான் என்றும் செசான் அறிவித்தார். வஸ்துக்கள் துண்டுகளாக நொறுங்குவதை அவர் அனுமதிக்காதவர்.
நான் தொகுத்த சமீபத்திய தொகுப்பான எ புக் ஆப் லூமினஸ் திங்ஸ்(A Book of Luminous Things) நூலில், எதார்த்தத்தை நோக்கிய வழிபாட்டு அணுகுமுறை கொண்ட கவிதைகளை நான் தேடுவதை உங்களால் உணரமுடியும். இந்தக் கவிதைகளில் வார்த்தைகள் அதனளவில் வார்த்தைகளாக அல்லது வார்த்தைச்சேர்க்கைகளாக மட்டுமே இல்லை. வார்த்தைகளைத் தாண்டிய ஏதோவொன்று இந்தக் கவிதைகளில் உள்ளது. அதைத்தான் ஒரு கவிஞன் கைப்பற்ற முயற்சிக்கிறான். அது ஒரு நிலப்பரப்பாக, மடியில் உள்ள மலராக, நபர்களிடையிலான ஒரு உறவாக..
இதை எனது “முறையீடு” என்ற கவிதையில் நான் பேச முயன்றிருக்கிறேன்.
ஒருவேளை நமது சொற்கள்
வனத்தில் மரக்கிளைகளையோ
ஆரஞ்சு மொட்டுகளையோ அண்மித்துவந்து
பேதமற்று ஒன்றாகிவிடுமென்றால்
ஒரு மகத்தான நம்பிக்கையை
நாம் எப்போதும் காப்பாற்றியிருக்கிறோம் என்று பொருள்
மேற்கொண்டு அதை எப்படி நான் தக்கவைத்துக்கொள்வது?
வஸ்துக்களுக்குப் பெயரிடுவதன் வாயிலாக.
உண்மை என்னவெனில் நமது கடந்தகாலத்திய உலகம் அதாவது 19-ம் நூற்றாண்டுக்கு முந்தைய புறநிலைக் கலை உலகம், தனக்கேயுரிய வரம்புகளைக் கொண்டிருந்தது. ப்ரூஸ்ட்தான் சிறந்த உதாரணம். ப்ரூஸ்டுக்கு எதார்த்தம் மிக முக்கியமானது. ஆனால், அந்த எதார்த்தம் அவரது தன்வயமான எண்ணப்போக்கு, அவரது நினைவுகளைக் கடந்துவர வேண்டும். அவர் நினைவின் வழியாக எதார்த்தத்தை மறுகட்டுமானம் செய்தார். ஆகவே குறைந்தபட்சமாக எதார்த்தத்தின் ஒரு பகுதியையாவது கைப்பற்றும் தன்வயமான அணுகுமுறைகளுக்கும் எதார்த்தத்துடனான தொடர்பையே முற்றிலுமாக இழந்த முழுமையான தன்வயக் கட்டுமானங்களுக்கும் (மாயை) இடையே நாம் வித்தியாசம் கண்டேயாக வேண்டியுள்ளது.
கேள்வி : ஜெர்மானிய எழுத்தாளர் ஓடோ மார்குவார்ட், கலையில் மட்டுமின்றி சமூகத்திலும் தன்வயப் பார்வைகளே இன்று ஆட்சிசெலுத்துவதாகவும் “புனைவின் காலகட்டத்தில்” நாம் வாழ்வதாகவும் வாதிடுகிறாரே? அவரவர் பிரமைகளை அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சிலர் அதை ஊழிக்காலமாகப் பார்க்கலாம். இன்னும் சிலர் பொன்னுலகமாகப் பார்க்கலாம்.
பதில்: நான் ஒப்புக்கொள்கிறேன். மனித மனத்துக்கு கற்பனை உருக்களை உருவாக்குவதற்கான அளவிலாத திறன் உண்டு. மொழியின் மீதான சார்பு கூடியிருப்பதை என்னால் பார்க்கமுடிகிறது. ஒரு மரத்தைப் பற்றிப் பேசுவதற்குப் பதில், நாம் மரம் பற்றி எழுதப்பட்டதைப் பேசுகிறோம். அல்லது மரத்தைப் பற்றி எழுதப்பட்ட எழுத்தைப் பற்றிய எழுத்தைப் பேசுகிறேன். அல்லது அந்த மரத்தின் பிம்பத்தைப் பற்றிப் பேசுகிறோம். கலாசாரக் குறிப்புகளோ முடிவற்றவை. பேஷன் தொடங்கி நகைச்சுவை முதல் தொலைக்காட்சி வரை, இந்தக் குறிப்புகளின் அலைகளில் இன்று நீந்திக்கொண்டிருக்கிறோம். இந்தக் குறிப்புகள் எப்படியாயினும் உண்மையானவை அல்ல. அவை குகையில் உள்ள நிழல்கள். மூடுண்ட இந்தக் குறிப்புகளின் கோளத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறதென்று தெரியாது. புறநிலைக் கலையின் உலகளாவிய தன்மைக்கு எதிரானது அதுவே.
அழகியல் ரீதியான சரிவு உண்மை சார்ந்த கருத்தோட்டத்தின் சிதைவோடு தொடர்புடையது. அவநம்பிக்கைவாதமோ சமூக ஒழுங்கில் பேரிடரை ஏற்படுத்துவது. சந்தேகப்படுதலின் மூன்று தலையாய மேதைகளான ப்ராய்ட், மார்க்ஸ், நீட்சே ஆகியோர் மனித மனங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை எனது வாழ்க்கையிலும் எனது போலந்து தேசத்திலும் நான் சாட்சியாக இருந்து கண்டிருக்கிறேன். இயற்கை ஒழுங்கை கண்துடைப்பு என்றும் அதன் பின்னால் பாலுணர்ச்சியின் உந்துதல், பொருளாதாரம், அதிகாரத்திற்கான விருப்புறுதி என பிற தீர்மானிக்கும் சக்திகள் மறைந்துள்ளன என்றும் பகுத்தறிவுக்காட்பட்டு அவர்கள் சந்தேகித்தனர். இதன் விளைவாக, இரண்டாம் போப் ஜான் பால், நமக்கு ‘விசுவாசம் மற்றும் பகுத்தறிவு’ குறித்து நினைவூட்ட வேண்டிவந்தது.
பகுத்தறிவின் எதிர்காலம் குறித்து போப் சரியாகவே கேள்வி எழுப்புகிறார். தன்வயமாக இல்லாத பொதுக் கருதுகோள்களின் அடிப்படையில் நாம் ஒருவரையொருவர் இன்னும் புரிந்துகொள்ள இயல்கிறதா? ஒவ்வொருவரும் அவருக்கேயான உண்மையின் பாற்பட்டுச் செல்வது புறநிலை எதார்த்தத்தை மறுப்பதாகும். அத்துடன் அது தார்மிக ஒழுங்கின் சிதைவுக்கும் இட்டுச்செல்லும். அதனால்தான் தன்வயமாவதையும் சிதைவையும் இணைத்து கதே பேசுகிறார். பகுத்தறிவு இல்லாமல் உலகளாவிய தன்மை இருக்க இயலாது என்பது கதேவுக்கு புரிந்திருந்தது. கலை பற்றிப் பேசும்போது நான் சத்தியம் என்பதற்குப் பதிலாக எதார்த்தம் என்ற பதத்தையே பயன்படுத்துகிறேன். இருபதாம் நூற்றாண்டின் எதார்த்தம் என்பது அபரிமிதமான மனித வாதைகளால் ஆனது. மனிதனால் மனிதனுக்காகப் பூமியிலேயே உருவாக்கப்பட்ட நரகம் தான் அந்த எதார்த்தம். அப்படியான எதார்த்தம் உடனடியாக குறிப்பிட்ட படிநிலை உணர்வை ஏற்படுத்துவதோடு கலைப்படைப்புகளையும் அதற்கேற்ப மதிப்பிடுகிறது. அப்போது நமது தன்வயத்தன்மையின் மதிப்புக்கு ஒரு வரம்பு வந்துவிடுகிறது.
போர் மற்றும் கம்யூனிஸ ஒடுக்குமுறை அனுபவத்தின் சுமை எங்களை ஒரேமாதிரியாகச் சிந்திக்கச் செய்கிறது. அதனால்தான் கவிதையில் ‘போலிஷ் பள்ளி’ என்ற ஒன்று இருப்பதாக நான் கருதுகிறேன்.
போலந்து கவிஞர்களான நானும் விஸ்லவா சிம்போர்ஸ்காவும் நோபல் பரிசு பெற்றது விபத்தொன்றும் அல்ல. அவர் வரலாற்று உள்ளடக்கங்களை எழுதாமல் அந்தரங்க விஷயங்களைக் குறித்தே எழுதினார். ஆனால் அவரில், எதார்த்தத்தின் மீதான வழிபாட்டுணர்வை உணர்கிறேன். அவரது கவிதைகளில் ஒன்றில் :
அடுத்து என்ன, அடுத்து என்ன? என்று முடிவற்று கேட்பதிலேயே
நான் தரித்துவிட இயலாது
வரலாற்றின் வாய்ப்புகளில் நிலைத்துவத்தில் அன்றாடம் நான் விசுவாசம் கொள்கிறேன்
விடாமல் தொடரும் பயங்கர உணர்வில்
நான் எப்படி ஆப்பிள்களில்
என் பற்களைப் பதிக்க முடியும்.
நுகர்வோர் ஜனநாயகங்களின் மேல் வசைமொழிகளைக் குவிக்க வேண்டியதில்லை. சில முட்டுச்சந்துகள் தொடர்பான ஆழமான விழிப்பு வந்திருக்கிறது. மேற்குலக கவிதையை எடுத்துக்கொண்டால், குறிப்பாக அமெரிக்காவில், ஒருவகையான இறையியல் தேட்டம் ஏற்பட்டுள்ளது. சமயத்துவத்துக்கான நெருக்கடியைப் பார்க்கமுடிகிறது.
கேள்வி : விஞ்ஞானிகள் மனித மரபணுவை வரிசைப்படுத்தி ஆழ்ந்த புறவய எதார்த்தத்துக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் கலாசாரத்திலும் ஆன்மிக வாழ்க்கையிலும் தன்வயத்தன்மை நுழைந்து நலியவைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் ஒரே நேரத்தில் புதிய யுகத்துக்கான கனவிலும் நலிவிலும் இருக்கமுடியுமா?
பதில்: கட்டுமானத்துக்கும் நொறுங்கலுக்குமிடையே ஒரு போட்டி நடக்கிறது. ஒவ்வொரு அம்சமும் இன்னொன்றோடு தொடர்புடையதாக உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னெடுப்புகள் சமயத்துவக் கற்பனையைச் சிதைத்துவிட்டது.
அந்தக் காரணத்தினால்தான் விசுவாசிகளும் அவிசுவாசிகளும் ஒரே படகில் பயணிக்கிறார்கள். ஏனெனில் கற்பனையின் தரம் என்பது நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது தொடர்பானதல்ல; தொழில்நுட்ப கலாசாரமும் அறிவியலும் எந்த வகையில் அந்தக் கற்பனையைக் கட்டுப்படுத்திவைத்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. மத விசுவாசிகள் அவிசுவாசிகள் இரண்டு பேரிடமும் குறிப்பிட்டவொரு போதாமையைப் பார்க்க முடிகிறது. ரோமன் கத்தோலிக்கனான எனக்கு தேவாலயம் செல்பவர்களும் தேவாலயம் செல்லாதவர்களும் வேறுபட்ட நோக்கை வைத்திருக்கிறார்கள் என்று நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. எ புக் ஆப் லூமினஸ் திங்ஸ் தொகைநூலுக்கான முன்னுரையில் கூறப்பட்டிருப்பதைப் போல தெளிவாகப் பிரியும் கோடுகள் இல்லாமல் போகும்போது, மேல் எது கீழ் எது என்று தெரியாமல் ஆகும்போது, நன்மை எது தீமை எது என்று கண்டுபிடிக்க முடியாத நிலை வரும்போது அது நூதனமான அவநம்பிக்கைவாதத்துக்குள் மூழ்குகிறது. தனது வண்ணங்களை இழக்கிறது. இந்தப் பூமியிலுள்ள வஸ்துக்கள் மீதாக மட்டுமின்றி வெளியிலும் காலத்தின் ஓட்டத்திலும் கூட, நிமிடங்கள், நாட்கள் மற்றும் ஆண்டுகளின் மேல் சாம்பல்தன்மை படர்கிறது. நல்ல கவிதை, இந்தப் பற்றாக்குறையில்தான் முக்கியமானதாகிறது. ஏனெனில் அது ஒருமையைப் பார்க்கிறது, பொதுமையை அல்ல. இந்தப் பூமியிலுள்ள வஸ்துக்களை அது நேர்மையோ, வழிபாட்டுணர்வோ, வண்ணமாகவோ இல்லாமல் கவிதையால் பார்க்க இயலாது. கவிதையால் வாழ்க்கையை அதன் எல்லா வலி மற்றும் பரவசத்தோடு சேர்த்துப் பொதுமைப்படுத்திய தொனியில் சுருக்க இயலாது. அத்தியாவசியம் காரணமாக, கவிதை இருப்பின் பாற்பட்டுள்ளது. பெயரிடுதல் என்பது நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்வது.
கேள்வி : அப்படியெனில் இருப்பின் சொஸ்தப்படுத்துதலானது மகத்தான மதிப்புணர்ச்சியில்தான் நிகழ்வதாகக் கருதுகிறீர்களா??
பதில்: ஆமாம். எனது கவிதையிலும் கட்டுரைகளில் மதிப்புணர்ச்சியை மட்டுமல்ல, பக்தியையும் நான் வெளிப்படுத்துகிறேன். மனம்நிறை கவனம் என்பதுதான் துல்லியமான மதிப்புணர்வு. மனம்நிறை கவனம் என்பது ஜப்பானிய ஹைக்கூவிலும், செசானது ஓவியங்களிலும் டச்சு ஸ்டில் லைப் சித்திரங்களிலும் வெளிப்பட்டிருக்கின்றன. கவிதையில் நீங்கள் அதை நிலைபேறுடைய தருணம் என்கிறீர்கள்.
கேள்வி : மனம்நிறை கவனத்துக்கும் கவிஞனின் நிலைபேறுடைய தருணத்துக்கும் என்ன தொடர்பு?
பதில்: காலம் நின்றுவிடும்போது மனம்நிறை கவனம் நிகழ்கிறது. காலம் என்றால் என்ன? காலம் என்பது துயரம். காலம் என்பது நமது வருத்தங்கள், நமது அவமானம்; நாம் எதை நோக்கி பாடுபடுகிறோமோ எதிலிருந்து தப்பித்து ஓட நினைக்கிறோமோ அவை அனைத்தையும் காலம் கொண்டிருக்கிறது. காலம் நின்று நிலைகொள்ளும் தருணத்தில், எதார்த்தம் துயரத்திலிருந்து விடுதலையடைந்துவிடுகிறது. அப்போதுதான் கலையில் வஸ்துக்களின் தூய தரிசனத்தைப் பார்க்கமுடியும். வஸ்துக்கள் அவையளவில் அல்ல, நமது மாசுகளைச் சாராத நிலையில் அதனளவில் உள்ளன.
நம்மைப் பற்றிய அனைத்தும் மறைந்துவிடுகின்றன; கலைந்துவிடுகின்றன. பார்க்கும் விழி பிச்சைக்காரனுடையதா அல்லது ராஜாவினுடையதா என்பது முக்கியமல்ல.
ஸ்பிக்னியூ ஹெர்பெர்ட்டின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. கவிதையின் தலைப்பு கூழாங்கல்.
கூழாங்கல் என்பது பரிபூரணமான உயிர்
தனக்கு இணையாக
தனது வரம்புகள் பற்றிய முழுகவனத்துடன்
ஒரு கூழாங்கல் அர்த்தத்தால் மட்டும் நிரம்பி
எதையும் ஞாபகப்படுத்தாத நெடியுடன்
எதையும் தூர விரட்டாமல்
வேட்கைகளைத் தூண்டாமல்
அதன் திண்மையும் அமைதியும்
நியாயமும் குரூரமும் கொண்ட கண்ணியம்
அதை என் கையில் ஏந்தும்போது கனமான குற்றவுணர்வை அடைகிறேன்
அத்துடன் அதன் மாண்புமிக்க உடல் பொய்யான கதகதப்பால் ஊடுருவியுள்ளது
கூழாங்கற்கள் அதன் முடிவுவரை பழக்கப்படுத்த முடியாதவை
அவை நம்மைப் பார்க்கும்
அமைதிகொண்ட ஸ்படிகத் தெளிவுக் கண்கள் கொண்டு.
கேள்வி : நமது உலகமயமாகும் சூழலில் மனம்நிறை கவனத்துக்கு எதிரான ஒன்று நிகழ்கிறது. வேகம், முடுக்கம், கூச்சலின் பாற்பட்ட ஒன்று நிகழ்கிறது. கூழாங்கற்கள் அல்ல, கணிப்பொறிகள்தான் நமது காலத்தின் சின்னம்.
செஸ்லோவ் மிலோஸ் : ஆமாம். உண்மைதான். அதேவேளையில் சூழியல் பிரக்ஞை என்ற நம்பகத்தகுந்த மகத்தான அணுகுமுறை ஒன்று பரவி வருவதையும் நாம் புறக்கணிக்க இயலாது. சூழியல் உணர்வு என்பது அடிப்படையில் மனம்நிறை கவனத்துக்கான அறைகூவல்தான்.
செஸ்லா மிலாஸூ – 1911 ஆம் ஆண்டு பிறந்த போலந்து நாட்டு அமெரிக்கர். கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞராக அறியப்பட்ட இவர் 1980ஆம் ஆண்டு இலக்கியதிற்கான நோபல் பரிசைப் பெற்றவர்.
படங்கள்: இணையம்.