நம் இயற்கையும் இயல்புகளும் என்ற கருப்பொருளில் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2024 சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளான சீனம், மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளிலும் நவம்பர் 8 முதல் 17 வரை நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட நாடு கொரியா மற்றும் கொரிய இலக்கியம் பற்றி பேசுவதற்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. கொரிய இலக்கியத்திற்கும் சிங்கப்பூரின் இலக்கியத்திற்குமான தொடர்பு குறித்த உரையாடல் நடைபெற்றது. இந்த உரையாடலில், சிங்கப்பூர், கொரியா மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையே உள்ள எழுத்தாளர்களின் பங்கு, சிங்கப்பூருக்கும் கொரியாவிற்கும் இடையில் இலக்கியத்தை மொழிபெயர்ப்பதன் தன்மையைப் பற்றி உரையாடினார்கள். சிங்கப்பூர் இலக்கியத்திற்கே உரிய கியாசு போன்ற வட்டார வழக்குகள் பற்றிய பேச்சும் எழுந்தது. கொரிய மொழியிலும் இம்மாதிரியான வட்டார வழக்குகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமை பற்றியும் பேசப்பட்டது. மொழிபெயர்ப்பில் மாறுபடும் கலாச்சார அடையாளங்களைக் காப்பது பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. கொரிய படைப்புகளை மொழி பெயர்ப்பதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
பரனாக்கான் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பாரம்பரிய உணவான அயம் புவா கெலுவாக் சமையலைப் பற்றியும் தனது எழுத்துகளைப் பற்றியும் பரனாக்கான் எழுத்தாளரான ஜோசபின் சியா பகிர்ந்து கொண்டார். அவருடைய எழுத்துக்களைப் போலவே அவரது இயல்பான பேச்சும் புன்னகையும் இருந்தது. அவர் பங்கேற்ற இன்னொரு நிகழ்வான How to Tell a Million Stories Before Grandma Dies நிகழ்விற்குத் தமிழர்களின் கூட்டம் வெகுவாக இருந்தது. மலாய் மொழியில் பாட்டியை Nenek என்றும், சீனத்தில் Nai Nai என்றும், தமிழில் பாட்டி என்ற சொல்லிற்கு ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு பெயர்களை வைத்து அழைக்கின்றோம். பாட்டிகளிடையே பொதிந்திருக்கும் கதைகளைக் கலாச்சார விசயங்களை இந்தத் தலைமுறை உள்வாங்குகிறதா அல்லது அலட்சியப்படுத்துகிறதா எனச் சுவாரசியமான உரையாடலாக இருந்தது. ஜோசபின் சியா அவரது பள்ளிக் காலங்களில் பரனாக்கான் பிள்ளைகளை OCBC என்று அழைத்துச் சீண்டுவார்கள் என்றார். சீனர்கள் ஆனால் சீனர்கள் அல்லாதோர் Orang China Bukan China – Chinese people but not chinese பற்றியும், ஒரு மைலோ டின் எப்படித் தனது வாழ்க்கையை மாற்றியது என்பதையும் நகைச்சுவையோடு பேசினார். கலந்துரையாடலில் ஒன்பது யார்டு சேலையின் நூலாசிரியர் பிரசாந்தியும் கலந்துகொண்டார். எனக்கு எந்தக் கடையில் ருசி ஊறுகாயைப் பார்த்தாலும் மின்னல் போல் இவரது நினைவு வந்து போகிறது என்பது வேறு கதை. அவரது நூலை வாசித்தவர்களுக்குக் காரணம் புரியும். இந்த நிகழ்விற்கு ஓரளவு அரங்கு நிறைந்த கூட்டம் இருந்தது.
தமிழ்மொழியைப் பிரதிநிதித்து எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஆண்டு கலந்துகொண்டனர்.
இயற்கை சார்ந்த எழுத்துகள் எவ்வாறு சுற்றுப்புறப் பாதுகாப்பிற்குப் பங்களிக்கின்றன என்பதைப் பற்றியும், தனது எழுத்துலகப் பயணம் எவ்வாறு இயற்கை உலகத்திலிருந்து தொடங்கியது என்பதைப் பற்றியும் பேசிய தியடோர் பாஸ்கரனின் சிறப்புரையாற்றினார். இயற்கை சார்ந்து வெளியாகிய புனைவுகள், கவிதைகள் பற்றிய நூல்களின் பெயர்ப் பட்டியலை மேற்கோள் காட்டிவிட்டு சிறப்புரைக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தை விடச் சீக்கிரமாக முடித்துக்கொண்டார். கேள்வி பதில்களை வைத்து நிகழ்ச்சியைக் கொண்டு செல்லும் சூழல் உருவானது, கேள்விகளுக்கான அவரது பதில்களும் மேலோட்டமாக இருக்க நெறியாளர் அதனை நயமாகக் கையாண்டார். அவர் கலந்துகொண்ட இன்னொரு நிகழ்வு இளையர் கருத்தரங்கம். இதில் இயற்கையும் அதைச் சார்ந்த வாழ்வியலும் செவ்வியல் இலக்கியங்களிலும் புலம்பெயர் இலக்கியங்களிலும் எவ்வாறு பிரதிபலிக்கப்படுகின்றன என்பதைக் குறித்து மாணவர்கள் பங்கேற்றுப் பேசியது குறிப்பிடும்படியாக இருந்ததென நண்பர்கள் தெரிவித்தார்கள்.
எழுத்தாளர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளுக்கு நான் செல்ல முடியாத சூழல். அதே நேரத்தில் வேறோரு நிகழ்வும், அலுவலக வேலையும் சிக்கிக்கொண்டதால் கலந்துகொள்ள முடியவில்லை. அவருடைய நிகழ்வுக்கான கூட்டம் மிகக் குறைவாக இருந்ததென வருத்தப்பட்டார்கள்.
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் மூன்று நிகழ்வுகளில் கலந்துகொண்டார். முதலில் அவருடனான நேர்காணல் நடந்தது. மிகவும் சிறப்பாக இருந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு, தயார் செய்து வந்திருந்த கேள்விகள் மேலோட்டமாகவும் பதில் சொல்ல இயலாதபடி சுவாரசியமின்றியும் இருந்தன என்பது என்னைப் போன்ற பலரின் கருத்து. அவருடைய சிறந்த ஓரிரு கவிதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வந்திருந்தால் அதைப் பற்றி மட்டுமே அரைமணி நேரம் பேசக்கூடிய தகுதிபெற்றவர், ஆனால் அதிகமான கவிதைகள் திரையில் காட்டியது ஆர்வத்தை இழக்கச்செய்தன. அதனாலே சுவாரசியமின்றி டல்லடித்தது நிகழ்வு. அடுத்ததாக நிகழ்ந்த சங்க இலக்கிய நிகழ்வின் தலைப்பு கவரும்படி இருக்கவே அந்நிகழ்வில் கலந்துகொண்டேன். தலைப்பு மட்டுமே ஆர்வமூட்டும்படி இருந்தது, சங்க இலக்கியத்திற்கும் பாடல், இசை, நடிப்புக்கும் தொடர்பற்று இருந்தன. அவரவர் தனித்தனியாகத் தன்னுடைய புலமையை, தனக்குத் தெரிந்ததைப் பேசிக்கொண்டே சென்று இடையிடையே சங்க இலக்கியம் என்ற சொல்லை இணைத்துக்கொண்டனர். நடுவில் கவிஞர் என்ன செய்வதென தவித்துக்கொண்டிருந்தார், நல்லவேளை முனைவரின் முன்னுரை கைகொடுத்தது.
அடுத்தநாள் இளங்கோ நடத்திய நவீன கவிதைப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மரபிலக்கியம் பற்றியும் பாடல் கட்டுமானம், காலப்பகுப்பு, சங்கம் மருவிய காலம், காப்பியகாலம், வானம்பாடி காலமென எனத் தொடர்ந்தது கொஞ்சம் சுருக்கியிருக்கலாமெனத் தோன்றியது. பின் நவீன கவிதைக்குள் சென்று நேற்றும், இன்றும், அது தோன்றிய கால வரிசையில் பிரித்துக் காட்டி கவிதையின் நுணுக்கங்கள், நவீன கவிதை தொடக்கத்தில் இருந்த சவால்கள், அதன் வகைமைகள் என நீண்ட தனது அனுபவங்களின் பகிர்வினை இரண்டு மணி நேரத்தில் இயன்றவரை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. இந்நிகழ்வில் முழுமையாகப் பேசுவதற்கான வாய்ப்பு அமைந்தது. மனத்துக்கு நிறைவாக இருந்ததென இளங்கோ சொன்னார். இன்னும் இப்படியான பயனுள்ள நிகழ்வுகளை அடுத்த ஆண்டும் ஏற்பாடு செய்யச் சொல்லி நண்பர்களிடமிருந்து குரல் வழிப் பதிவுகள் வந்துகொண்டிருந்தன.
படம்: கவிமாலை
சரியான படைப்பாளரை வரவழைப்பதும், அவர்களை முறையாகப் பயன்படுத்துவதும் மிக முக்கியம். அதே போல் அவர்கள் பகிர நினைப்பதற்குச் சரியான நேரம் கொடுக்காமல் அவர் முன் தம் புலமையைக் காட்டி நிகழ்வினை நாமே ஆக்ரமித்துக் கொண்டிருப்பதையும் தவிர்க்க வேண்டுமென இந்நிகழ்வுகள் உணர்த்தின.
ஆர்ட்ஸ் ஹவுஸ், அரும்பொருளகம் மற்றும் தேசிய நூலகம் ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளில் வழக்கம்போல் தமிழ் மக்களின் பங்களிப்பு அதிகபட்சமாக 50-60 பேரைத் தாண்டியிருக்காது என நினைக்கிறேன். இவர்கள்தான் மாறி மாறி மற்ற தமிழ் நிகழ்வுகளில் பங்கேற்றனர். அதிகமானோரை ஈர்ப்பதற்கு என்ன செய்யலாமென ஆலோசனைகளை விழாவிற்கான கமிட்டியை நியமித்துக் கருத்துகளைக் கோரலாம். எழுத்தாளர் விழாவானது எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் பாலமாக இருக்கவேண்டும், ஆனால் படைப்பாளர்களே வருவதற்கு முன்வருவதில்லை. தமிழ் நிகழ்வுகளை இன்னும் சீராக்க வேண்டும், பொது ஜன சமூகத்தை ஈர்க்கும் ஓரிரு நிகழ்வுகளையும் நடத்துவதற்கும் ஆராயலாம். இப்படியே தமிழ் நிகழ்வுகளில் பங்களிப்பு குறைந்துகொண்டே சென்றால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிகழ்வுகளின் எண்ணிக்கைக் குறைந்துபோக வாய்ப்புண்டு. எழுத்தாளர் விழாவில் தமிழ்மொழி நிகழ்வுகளுக்கு எப்படி பொதுமக்களையும் ஈர்ப்பது என்ற கருத்தெடுப்பு நடத்தி அதை நடைமுறைப்படுத்தலாம்.
The Seven Moons of Maali Almeida என்ற நூலுக்கு 2022ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற இலங்கை எழுத்தாளர் செகான் கருணதிலக்கவை, பூஜா நான்சி நேர்காணல் செய்திருந்தார். அவருடைய துடிப்பான பேச்சு எல்லோரையும் கவர்ந்தது. இந்த நிகழ்வைப் பற்றி Writing ‘Like a drunk uncle’ என்று கட்டுரை ஒன்று The Straights Time-ல் வெளியாகியிருக்கிறது. விக்டோரியா அரங்கிற்கு வெளியே அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கு நின்ற நெடுங்கூட்டத்தைக்கண்டு அந்தப் பக்கம் போகாமல் புக்கர் பரிசுபெற்ற நூலை மட்டும் வாங்கிக்கொண்டு பின்புறமாக திரும்பி வந்துவிட்டேன். இப்படியான கூட்டம் தமிழ் எழுத்தாளருக்கு எப்போது நிற்குமென்ற ஏக்கமும் பிறந்தது.
படம்: The Strait Times
இந்த ஆண்டு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த யோங் ஷு ஹூங் தலைமையிலான குழுவினருக்குப் பாராட்டுகள். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாகத் திட்டமிட்ட உழைப்பு சீராக நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்விலும் தெரிந்தது.
அடுத்து சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2025ஆம் ஆண்டு நவம்பர் 7 முதல் 16 வரை, Shape of Things to Come என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SG60ஐ முன்னிட்டு மிகச் சிறப்பான நிகழ்வுகளாக இருக்குமென எதிர்பார்ப்போம்.