சிந்திப்பதென்றால் என்னவென்பதை நாம் புரிந்துகொள்ளும்வரை கவிதை என்றால் என்னவென்பதையும் நாம் புரிந்துகொள்ளவே போவதில்லை என்கிறார் ஹைடக்கர். அவர் மேலும் சொல்கிறார். மிக சுவாரஸ்மான விஷயம் என்னவெனில், சிந்திப்பது இயற்கையாகவே சிந்திப்பதிலிருந்து வேறுபட்ட ஒன்று, விரும்புவதிலிருந்து வேறுபட்ட ஒன்று. இந்த வேறுபட்ட ஒன்றைப் பிடிக்கவே பொறிவைக்கிறது கவிதை.
000
நமது ஆழ் அனுபவங்கள் அனைத்தும் மொழியற்றது என்றே எனது உள்ளுணர்வு கூறுகிறது. காட்சிகள் இருந்தாலும் பார்ப்பதற்கும் சொல்வதற்குமிடையில் வார்த்தைகளால் விவரிப்பதற்குமான இடைவெளியை விவரிப்பதற்கு வார்த்தைகள் இருக்காது, உதாரணத்துக்கு. வார்த்தைகளுக்குள் இடமுடியாததைக் குறிப்பதற்கு மொழிவழியாகக் கண்டுபிடிக்கும் பாதைகளில்தான் கவிதையின் வேலையாக உள்ளது.
000
ஒவ்வொரு புதிய உருவகமும் ஒரு புதிய சிந்தனை, மெய்மை சார்ந்த புராணிகத்தின் ஒரு விள்ளல். கலையின் அறியாத அம்சத்தின் ஒரு பகுதி உருவகம், எனினும் சத்தியத்தைத் தேடும் மகத்தான வழி அதுதான் என்பதில் நான் நிச்சயமாக இருக்கிறேன். அப்படி எப்படி இருக்கமுடியும்? எனக்குத் தெரியவில்லை. நான் திருப்திப்படுத்தும் அளவுக்கு என்னால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள முடிந்ததில்லை. கவிதை என்னை ஏன் ஈர்க்கிறதென்றால் சிந்தனையாளர்களை அது தொந்தரவு செய்கிறது.
000
அசாத்தியமான இக்கட்டு குறித்துதான் எல்லாக் கலைகளும் பேசுகின்றன. அதுவே அதன் ஈர்ப்பு. “வார்த்தைகள் என்னைக் கைவிடுகின்றன” கவிஞர்கள் தொடர்ந்து சொல்வது. நாதியற்ற நடவடிக்கைதான் ஒவ்வொரு கவிதையும் அல்லது கடைசிப் பணயம். உங்களால் உறங்க இயலவில்லையெனில் அல்லது அமேசான் காட்டில் ஒரு பொந்தில் மாட்டிக்கொண்டவராக இருந்தால் கடவுள்தான் லட்சியப் பார்வையாளர். அவரும் இல்லாமல் போனால், இன்னும் மோசம்தான்.
000
கண்களைத் திறந்து பார் என்று எதார்த்தவாதிகள் அறிவுறுத்துகிறார்கள். கற்பனைக்காரர்கள் எச்சரிக்கிறார்கள்: நன்றாகப் பார்க்க வேண்டுமானால் கண்களை மூடு. கண்களைத் திறந்தபடியிருக்கும் உண்மையும் உண்டு. கண்களை மூடியிருக்கும் உண்மையும் உண்டு. தெருவில் செல்லும்போது இரண்டு உண்மைகளும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதில்லை.
000
எமிலி டிக்கின்ஸன் நிச்சயமின்மைகளுடன் வாழ்பவள், அதிலேயே திளைக்கவும் செய்கிறாள். பிரமாண்டமான கேள்விகளுக்கு முன்னால் அவள் கவசமின்றி இருக்கிறாள், ஹெய்டக்கர் சொல்வதைப் போல. இருப்பதின் இயற்கையே அவளுக்குப் போதுமான உள்ளடக்கமாக உள்ளது. பிரக்ஞையின் மகத்தான விந்தை தன்னையே அனுமானித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் ஆச்சரியம் அது.
000
கடவுள்கள் இருக்கிறார்களா சைத்தான்கள் இருக்கிறார்களா என்பது விஷயமேயில்லை. ஒவ்வொரு உண்மையான கவிதையின் ரகசிய லட்சியமும் கடவுளைப் பற்றியும் சைத்தான்களையும் பற்றியும் வினவுவதே – அவர்களின் இன்மையை அங்கீகரித்தபடியே.
(அமெரிக்க கவிஞர் சார்லஸ் சிமிக் எழுதிய கட்டுரைகளின் தேர்ந்தெடுத்த தொகுதி ‘தி லைப் ஆப் இமேஜஸ்’ நூலிலிருந்து)
தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன்