கவிஞனின் கண்களுக்கு மட்டும் ஒரு காட்சி வேறொரு பரிமாணமாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது. இந்தப் பார்வை சராசரி மனிதனுக்கு வாய்ப்பதில்லை! ஒரு நல்ல படைப்பாளனால் மட்டுமே இதனைக் கவித்துவ உணர்வோடு அணுகமுடியும் என்று தன்னைத் திறந்து காட்டுகிறது. ஒரு தேர்ந்த படைப்பளாரால் மட்டுமே தன் உடலைச் சித்திரமாக வரைந்து கலையாக உருவாக்க முடியும் என்பதால்தான் அவள் நிர்வாணமாக நிற்க துணிகிறாள். இங்கே வரைபவன் மட்டும் நிர்வாணத்தைக் கலையாக மாற்றும் வித்தை அறிந்தவனல்ல, கலைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவளும் கலைஞனாகிவிடுவாள். தூய கலை என்று வரும்போது அப்பார்வை கலைகளில் மட்டுமே கவனம்கொள்ளும். இச்சைக்கோ காமத்துக்கோ அங்கே இடமிருப்பதில்லை. அதேபோலத்தான் காட்சிகள் தன்னைத் திறந்து காட்ட ஒரு நல்ல கவிஞனைக் கண்டடைகிறது. இந்தக் கவிதையை வாசியுங்கள்.
அம்மா இறந்தபோது
ஆசுவாசமாயிற்று
இனி நான் இரவு நிம்மதியாகப் பட்டினிகிடக்க முடியும்
எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள்
இனி என்னால்
காய்ந்து பறப்பதுவரை தலை துவட்டாமலிருக்கமுடியும்
முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை
இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து
தூங்கி வழிந்து புத்தகம் வாசிக்கலாம்
ஓடிவரும் ஓர் அலறல்
என்னைத் திடுக்கிடச்செய்யாது
இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது
கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை
பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதி கசிய செத்த
பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து
தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம்
நேற்றோடு இல்லாமலாயிற்று
இனி நான்
சென்ற இடத்தில் தூங்கிக்கொள்ளலாம்
நான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்குள்ள வீடு
நேற்று அணைந்தது
தன் தவறால்தான்
நான் துன்பப்படுகிறேன் என்ற
கர்ப்பகாலப் பிரமைகளிலிருந்து
அம்மா நேற்று விடுதலைபெற்றாள்.
ஒருவழியாக அவள் என்னைப்
பெற்று முடித்தாள்
[கல்பற்றா நாராயணன்]
தன் வாழ்நாளில் அம்மாவுக்கு ஒரு மகன் எவ்வளவு தொல்லையாக இருந்திருக்கிறான் பாருங்கள். சில பல தருணங்களில் நாமும் தாயன்பைப் புரியாமல் அவளை உதாசீனப்படுத்தியது உண்டு. அந்தத் தொல்லைகளையெல்லாம் அவள் எப்படிச் சகித்துக்கொண்டு தாய்மைப் பாசத்தை எந்த நிபந்தனைகளுமற்றுக் கொட்டியிருக்கிறாள் என்பதையும் சொல்லும் கவிதை இது.
என் அம்மா வயது முதிர்ந்து படுக்கையில் கிடந்த போது அவள் சதா முணுமுணுத்துக்கொண்டே இருந்தாள். எங்களுக்கு அது வழக்கமாகிவிட்டதால் நாங்கள் யாரும் அந்த முணுமுணுப்பைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏதோ பழைய உறவை, சம்பவங்களை, செய்யாமல் விட்டதை, நிறைவாகச் செய்தும் அதிருப்தியின்மையால் வாடுதல், பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய கவலை, என அவள் நினைவை உரசிக்கொண்டே இருந்திருக்கலாம். இவையெல்லாம் அவளின் ஆழ்மனப் பதிவுகள். அதனால் அதனை முணுமுணுப்பால் கடக்கும் முயற்சி இதுவென நினைத்துக் கொள்வோம். நான் எங்காவது வெளியே போய்விட்டால் ‘அவன ரொம்ப நேரமா பாக்கலியே’ என்று ஏங்குவாள். எந்நேரமும் அவள் இருப்பது அரை வெளிச்சம் கொண்ட ஒதுக்குப்புற அறையில். அறைக்கு வெளியே என்ன நடக்கிறது என்று பெரும்பாலும் அவளுக்குத் தெரியாது. ஆனால் தன் மகன் வீட்டில் இல்லை என்பது அவளுக்கு எப்படித் தெரியும் என்பது வியப்பாகவே இருந்தது. ஒருநாள் நான் வெளியே போய்விட்டு மழையில் நனைந்தபடி வீட்டுக்குள் நுழைந்தேன். அவள் அறையைக் கடக்கும் போது. “ஒடனே போய்ச் சுடுதண்ணியில குளிச்சிடுப்பா” என்றாள். “இந்த மழையில நனைஞ்சி சளி பிடிச்சா ரெண்டு ஒரு மாசத்துக்கு விடாது,” நான் குளித்துவிட்டு வந்தேன். ”நல்லா தலைய தொவட்டு, சுடுதண்ணிய குடி.” உடல் நலத்தோடு இருந்தபோது முடியைக் கோதி உலர்ந்துவிட்டதா என உறுதிசெய்துகொண்டதும் உண்டு. நான் மழையில் நனைந்து வீட்டுக்குள் நுழைந்ததை அவள் தன் கண்களால் பார்க்காமலேயே உணர்ந்திருக்கிறாள். நான் குளித்துவிட்டு வந்ததும் அவள் பார்க்கவில்லை. ஆனால் தலையை நன்றாகத் துவட்டு என்ற கரிசன வார்த்தையை மட்டும் தவறாமல் சொல்கிறாள். இவை எல்லாமே ரத்த உறவின் ஆத்மார்த்த உணர்வன்றி வேறென்ன? அவள் விழிகொண்டு நம்மைப் பார்க்கவில்லை என்றாலும் பிரக்ஞை பூர்வமாக நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறாள். அவளிடம் எஞ்சியிருக்கும் உயிர் துடிப்பில் எஞ்சிய நினைவாகப் பிள்ளைகளின்றி வேறென்ன இருந்துவிடமுடியும்? பிறந்த தருணம் தொட்டுப் பிள்ளைகள் தாயின் பாதுகாப்பை நம்பி இருக்கின்றன.
சிறு வயதில் அவளின் அரவணைப்பும் அன்பும் பாராமரிப்பும் தேவையாக இருக்கிறது. பருவ வயதை அடைந்தவுடன் தன்னால் இனி சுய காலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கை வந்துவிடுகின்றது. பால்ய காலத்திலும், பதின்ம வயது காலத்திலும் தாயின் அரவணைப்பு அவசியமாக இருந்தது. ஆனால் தன்னால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற நிலை வந்ததும் அம்மாவுடனான பிணைப்பு மெல்ல அறுபட ஆரம்பிக்கிறது. இந்தத் துண்டிப்பு தனக்கென ஒரு காதலி கிடைக்கும்போது அம்மாவின் நினைப்பு முற்றிலுமாக அறுபடத் தொடங்குகிறது. தனக்கான நட்புகள் அதிகரிக்கும்போது தாயன்பைவிடக் காதலியும் நண்பர்களும் பெரிதாகத் தெரிகிறார்கள். அப்போது தாய் ‘சிறிதாகி’ விடுகிறாள். தனக்குப் பிள்ளைகள் பிறந்துவிட்டபோது பெற்ற தாயைவிடத் தன் பிள்ளைகளே எல்லாரைவிடவும் மேலாகக் கருதுகிறார்கள். தொடக்கக் காலத்தில் தாய் மீது வைத்திருந்த ஒட்டுமொத்த பாசத்தையும் இப்படித்தான் பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆனால், தனக்கான உறவுகள் பெருகப் பெருக தாய் பிள்ளை மீது வைத்திருந்த தொடக்கக் காலப் பாசத்தின் அளவு குறைவதே இல்லை! அவளின் நித்தியமான பாசத்துக்குச் சோதனை வந்தாலும் அன்பு முன்னர்ப் போலவே ‘நிறைந்த கிண்ண பாசம்’ கிஞ்சிற்றும் குறையாமல் இருந்துகொண்டே இருக்கிறது.
அவளின் அன்பு எந்நாளும் குறைவில்லாமல் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
ஒருமுறை ஒரு விபத்தில் எனக்குச் சில சிறாய்ப்புகள் உண்டாகி ரத்தத் துளிகள் துளிர்ந்து காய்ந்திருந்தன. அதனை எதார்த்தமாகப் பார்த்தவள் அப்படியே உறைந்து போய்விட்டாள். உடனே உளுத்தம் பருப்பு பத்து போட்டு மூன்றே நாட்களில் வீக்கத்தையும் வலியையும் வற்ற செய்தாள். அது அவள் கை மருத்துவத்தின் பலனா? அல்லது தாய்மை உணர்வின் மந்திர சக்தியா?
அறுபது வயதிலும் அம்மா சீனத் தவுக்கேயின் செம்பணைத் தோப்பில் வேலை செய்தாள். நான் தொடர்ந்து படிக்கவேண்டும் என்பதற்காக நான் பள்ளி விட்டு வந்து அவளை வேலை இடத்திலிருந்து ஏற்றிவர சைக்கிளை மிதித்துக் கொண்டு போனேன். வெயில் கொளுத்தும் உச்சி நேரம் அது. அவள் தார் சாலையில் செருப்பில்லாமல் நடந்து வந்துகொண்டிருந்தாள். என்னைக் கண்டதும், “ஏம்பா இந்த வேகாத வெயில்ல வந்த? நான் நடந்து வந்திற மட்டனா?” என்றாள். நான் கலங்கிப்போனேன்.
பல சமயங்களில் மகன்கள் தாய்க்கு எவ்வளவு தொல்லையாக இருந்திருக்கிறோம். அந்த அன்பை ஏந்திவரும் சொற்களை எப்படியெல்லாம் புறக்கணித்திருக்கிறோம்? சிறுமையான சொல்லாயுதம் கொண்டு எப்படியெல்லாம் சுட்டிருக்கிறோம். அந்தச் சிறுமைகளையெல்லாம் புனிதமான தாயன்பு கொண்டு அவர்கள் சகித்துக்கொண்டதை நாம் உணர்வதே இல்லை அவள் உயிரோடு இருந்த வரை!.
மேற்காணும் கவிதை தாயின் மாண்பை அவள் இறந்த பின்னர்தான் முழுமையாய் உணர்ந்ததாய்ச் சொல்கிறது. அவள் இறந்த பிறகுதான் மகனைப் பற்றிய கவலையிலிருந்து முற்றாக விடுபடுகிறாள். இனி அந்தத் தாயின் மகன் சுதந்திரமாகப் பட்டினி கிடக்க முடியும். “போய் ஒரு வா சாப்பிடு கண்ணு’ என்ற ‘தொல்லை’ இனி இருக்காது. “அய்யோ அங்க போவாதே ஒன்னு கெடக்க ஒன்னு நடந்திடும்!” என்று மகனை கவனப்படுத்த தேவை இருக்காது. “ந்தா கைவெளக்க எடுத்திட்டு போ. நட்ட நடு ராத்திரி.பாம்பு பூராண் ஏதும் கெடந்தா தெரியாது” என்றும் அவள் அஞ்சவேண்டியதில்லை. இரவில் வீட்டுக்குத் திரும்ப வேண்டியதில்லை. எங்காவது உறங்கி எழுந்து வரலாம். நேற்றோடு மகன் வருகைக்காக விடிய விடிய எரிந்துகொண்டிருந்த வீட்டு விளக்கு அணைந்துவிட்டது. அதுபோலவே அந்தக் கட்டற்ற அன்புத் தொல்லையும் நேற்றோடு நிறைவை எய்திவிட்டது. இனி அந்தத் தாய்க்கு மகனின் தொல்லைகள் இல்லை.
அந்தத் தூய அன்பை எப்படியெல்லாம் எடுத்துக்கொண்டது பிள்ளை மனம். ‘வயிறார சாப்பிடு’, ‘நல்லா தூங்கு’, ‘அய்யோ ஒடம்பு நெருப்பா சுடுதே’ போன்ற வார்த்தைகளைப் பல தருணங்களில் தொல்லையாக எடுத்துக்கொண்ட பிள்ளைகள் இருக்கத்தான் செய்தார்கள். எந்த எதிர்ப்பார்ப்புமற்ற அந்த அன்பை எவ்வாரெல்லாம் நிராகரிப்புச் செய்திருக்கிறோம். ஒருநாள் திடீரென அவள் இல்லாமல் போன போதுதான் தாயின்பின் தூய்மை, விடிகாலை வெளிச்சம்போலத் துலங்கிவருகிறது.
மேற்காணும் கவிதையின் அந்தக் கடைசிவரிதான் நம்மை உலுக்கிவிடுகிறது. கர்ப்ப காலம் என்பது, அந்தப் பிள்ளைப்பேறின் ஒன்பது மாதங்கள் மட்டுமல்ல. தன் மகன் பிறந்து வளர்ந்துகொண்டிருக்கும் காலம் முழுதும் கர்ப்பகாலம் என்கிறார் கவிஞர். நாம் தாய் வயிற்றில் இருந்தபோது அவள் பட்ட சிரமங்கள் நாம் வளர்ந்து முதிர்ந்த பருவத்திலும் வற்றாது நிலைத்து இருந்ததைச் சொல்லும்போது இக்கவிதை நல்ல கவிதையாக உருப்பெற்று உயிர்க்கொள்கிறது. தாய் உயிரோடு இருக்கும் வரை அவளின் பாசத்தைப் பாசாங்காககே புரிந்துகொண்ட பிள்ளைகள் அவள் போன பின்னரே அதன் சத்தியத்தை உணர்ந்துகொள்ளமுடிகிறது. பின்னர் அதனை நினைத்துக் கதறுவது நம்மில் பலருக்கு நடந்திருக்கிறது ஒரு நகை முரண்தான்.
பிள்ளை தொப்புள் கொடியிலிருந்து பிரிந்து வந்துவிடுகிறான் என்பதால் பிள்ளை தாய்மீது கொண்ட உறவு உண்மையானதாக இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா. மாறாகத் தாய் ஏன் இறக்கும் வரை அவன் மீதான அன்பை பாசத்தைக் குறைவில்லாமல் பொழிந்துகொண்டே இருக்கிறாள். ஏனெனில் அந்தத் துண்டிக்கப்பட்ட தொப்புள் கொடியின் மிச்சம் அவள் சாகும் வரை ஏந்திக்கொண்டே இருக்கிறாள் என்பதாலா?
கவிதையை மீண்டும் உள்ளுணர்ந்து வாசியுங்கள். கவிதையிலிருந்து கசிந்துவரும் உணர்வை உங்களால் இப்போது துல்லியமாய் உள்வாங்கிக்கொள்ள முடியும்.