இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் கன்னட இலக்கியமும் புதிய பரிமாணத்தை அடைந்து – பழம் கன்னடம் – இடைக்காலக் கன்னட இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு நவோதய இலக்கியம் என்ற புதிய வடிவத்தைக் கண்டுகொண்டது. இது புனைகதை, நாடகம், அபுனைவு, விமர்சனம், காவியம், கவிதை, மெல்லிசை கீதம், இதுபோல வெவ்வேறு வடிவங்களில் விரைவாக வளர்ந்து இலக்கிய வளர்ச்சிக்கு வெகுவாகக் காரணமானது. இதில் முக்கியமான வடிவங்களாக மெல்லிசைப்பாடல், கவிதை, உரைநடையின் அழகுடன் கூடிய சானட் அமைப்பினைக் கொண்ட கவிதைகள் முக்கியமானவை.
நவோதயக் கவிதைகள் சிறப்பாக உணர்ச்சிகளின் தீவிர வெளிப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தது. முந்தைய கவிதைப் பரம்பரையைவிட மாறுபட்ட பார்வையைக் கொண்டதாகவும், அழகியல் நடையிலிருந்து புதியவகையான கவிதை வடிவமாகவும் விளங்கின. மெல்லிசைப் பாடல்களும், கவிதைகளும் இருபதாம் நூற்றாண்டிலிருந்து இதுவரை ஏற்ற நடை, பாவனை, சிந்தனைகளின் வெளிப்பாட்டில் மாறுபட்டுக் கொண்டே செழிப்பாக வளர்ந்தது.
நவீன கன்னடத்துக்கு முன்னுதாரணமாக விளங்கிய கவிஞரான பி.எம்.ஸ்ரீகண்டய்யா புத்தம்புதிதான கன்னடமொழியில் ஆங்கில கவிதைகளை மொழிபெயர்த்து “ஆங்கிலக் கவிதைகள்” என்னும் தலைப்பில் ஒரு கவிதைத்தொகுப்பை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் கன்னட மொழி இலக்கியத்தை வளர்க்கும் விதத்தில் பல கட்டுரைகளையும், சொற்பொழிவுகளையும் வழங்கினார். நவோதயக் காவியம் மற்ற நவோதயக் கவிஞர்களுக்கு ஊக்கமளித்து கன்னடத்தில் புதிய வகையான இலக்கியத்தை செழிப்பாக வளர்க்கக் காரணமானது. குவெம்பு, தா.ரா. பேந்த்ரே இவர்கள் பிற்காலத்தில் தத்துவக் காவியங்களை இயற்றினார்கள். கே.எஸ்.நரசிம்ம சாமி, பூ.தி.நரசிம்மாசார் இந்த நவோதயக் கவிதைகளுக்கு அதிக மெருகேற்றினார்கள்.
இந்த நவோதயக் கவிதைக் காலத்தில் குழந்தைகள் இலக்கியமும் வளர்ந்தது. தேவுடு, கையார கிங்கினி ரை, டி.எம்.ஆர்.சுவாமி, சித்தய்ய புரானிக், ஜி.பி. ராஜரத்தினம் போன்றவர்கள் குழந்தைகள் கவிதை, குறுங்கவிதை, குழந்தைக் கதைகள் எழுதி அதை வளர்ச்சியடைச் செய்தனர்.
நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், லாவணிப் பாடல்கள் ஆகியவற்றையெல்லாம் திரட்டித் தொகுக்கும் வேலையையும் சிலர் அக்கறையுடன் செய்தார்கள். இது கன்னட நாட்டுப்புற இலக்கியம் வளரக் காரணமானது. அப்போது கன்னடத்து சிறப்பான நாட்டுப்புற கலையான யட்சகானமும் வளர்ச்சியடைந்தது. சிவராம காரந்த யட்சகான கலையில் ஆய்வுகளைச் செய்து மேம்படுத்தி அந்தக் கலைக்கு புதிய வடிவத்தைக் கொடுத்து, தேசிய அளவில் ஒரு மதிப்பையும் பெற்றுக் கொடுத்தார். நாட்டுப்புறக் கலையின் முக்கியத்துவத்தை அறிந்து அதை சிலர் பதிவு செய்யவும் தொடங்கினார்கள்.
இப்படி இந்த இலக்கிய வளர்ச்சியில் பல உள்ளீடற்ற சக்கையான படைப்புக்கள் வந்தாலும் அது புதிய விழிப்புணர்வைக் ஏற்படுத்தியது. பல கவிஞர்கள் தங்கள் வாழ்க்கையின் அல்லது சமுதாயத்தின் தோல்விகளைத் தீவிரமாக அனுபவித்து, நவோதயக் காவியத்தில் மாறுபட்ட புதியவகையான காவியம், கவிதைகளை இயற்றினார்கள். காவியம் மனித அனுபவங்களின் எல்லாப் பக்கங்களையும் உள்ளடக்கிய வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்ற தோரணையில் உருவான படைப்புகள் நவ்ய கவிதையாக மலர்ந்தது.
கோபாலகிருஷ்ண அடிகா அவர்கள் ‘பூமி கீதா’, ‘சண்டே மத்தளே’ போன்றவற்றை எழுதியதன் வழியாக நவ்ய கவிதையைத் தொடங்கி வைத்தார். உணர்ச்சிகளிலிருந்து நடைமுறைக்கு இறங்கிய சோதனை அடிப்படையிலான கவிதைகள் ‘மண் வாசனை’ என்ற புதிய சொல்லுக்கும், காமத்திற்கு பாம்பை உவமையாக சொல்வதும் சாதாரணமானது. உண்மையில் பாம்பின் உவமை இந்தியக் கலாச்சாரத்தில் குண்டலினிக்கும், யோகாவுக்கும் தொடர்புடையது; அது மேற்கத்திய ‘ஏவாள்’ காமத்து அறிகுறி என்பது சாதாரணமானவர்களுக்கு புரிவது சிரமமானது. இது நவோதயத்தின் குறைபாட்டை ஈடு செய்தது.
லங்கேஷ், அடிகா போன்றவர்களின் புதுப் புது உவமானங்கள், புரியாத சொல்லாடல்கள், இறுக்கம், புலமை ஆகியவை மக்களிடம் சென்று சேர்வதில் சிரமமிருந்தது. இப்படி அது நவ்ய இலக்கியத்தின் அருட்பார்வை உள்ளவர்களுக்கு மட்டுமே என்றாகி அடிப்படை நோக்கத்திலிருந்து விலகியது. படிப்பவர்களின் வட்டம் சுருங்கியது. ஆனால் ‘நவ்ய’ கன்னட மொழியின் திறமையையும், வெளிப்பாட்டின் எல்லையையும் உயர்த்தியது. அது நுட்பமான, அந்தரங்கம் அறிந்த அல்லது இரகசியமான அனுபவங்களை வெளிப்படுத்தும் ஊடகமானது.
கவிதைகள் சாதாரண மனிதர்களை நெருங்கும் வகையில் தலித் கவிதைகள் – புரட்சிக் கவிதைகள் போன்ற வடிவங்களில் வந்தன. தலித் கவிதைகளில் சாதாரணமாக எழுச்சியூட்டும் தன்மை இருக்கும். ஆனால் எழுச்சியூட்டும் கவிதைகளில் தலித் உணர்வு இருக்குமா என்று சொல்லமுடியாது. இது நவ்ய இலட்சணத்திற்கு எதிரான நடவடிக்கையாக அல்லது உரத்த குரலில் பாடும் பாட்டுக்களாக இருக்கும். பொதுவாக இது சமத்துவமின்மை, சுரண்டல்களுக்கு எதிரான செய்திகளைக் கொண்டிருக்கும்.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதி இலக்கியம் பொதுவாக போராட்ட இலக்கியமாகவே இருக்கிறது. அந்த நவோதயம், நவ்யம், தலித், முற்போக்குக் கவிதைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படி நடந்ததென்று சொல்ல முடியாது. ஒன்றன் குறையை மற்றொன்று நிரப்பிக்கொண்டே, சில சமயம் ஒன்றுக்கொன்று துணையாகவே வெளிப்பட்டிருக்கின்றன. இது ஒன்றோடொன்று இணைந்து நவீன கன்னடக் கவிதைப் பரம்பரையை உருவாக்கியது என்று சொல்லலாம்.
தற்போதும் நவோதயம், நவ்யம், தலித் கவிதைகள், முற்போக்குக் கவிதைகள் ஆகியவை அனைத்தும் ஒன்றாகவே இருக்கின்றன. இந்தப் பரம்பரைக்கு முந்தைய பழங்கன்னடம், இடைக்காலக் கன்னடங்களின் ஓராயிரம் ஆண்டு வரலாறின் பரம்பரை இணைந்திருக்கின்றன மற்றும் துணையாகவே இருக்கின்றன.
பம்பனின் ‘சம்பூ’, பசவண்ணரின் ‘வசனம்’, குமாரவியாசரின் ‘ஷட்பதி’, சர்வஞரின் ‘திரிபதி’ ஆகியவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. புதிய துளிர், பழைய வேர் என்பதைப்போல பழமை புதுமையுடன் இணைந்திருக்கிறது. கவிதைகளில் இந்த போராட்டக் குரல் என்றும் இருப்பதுதான். ‘வசன’த்தில் இதைத் தெளிவாகக் காணலாம்.
காலத்திற்கு ஏற்றபடி கவிதை எதிர்வினை செய்துள்ளது. நவீன இலக்கியத்தில் மேற்கத்திய இலக்கியத்தின் – குறிப்பாக ஆங்கில இலக்கியத்தின் தாக்கம் அதிகம். மேற்கத்திய ரொமான்டிசம்; மாட்ரனிஸம்; பெமினிஸம் சார்ந்த வடிவங்களுடன் கலந்துரையாடி நவீன கன்னடக் கவிதை உருவாகி இருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டு ஒரு வகையில் கன்னட இலக்கியத்தின் பொற்காலம். அந்தக் காலம் கண்ட பல வகைகளையும், வளர்ச்சியையும் கன்னட இலக்கியம் எப்போதும் கண்டதில்லை. இந்தக் காலத்திலும் மகா காவியங்களும், சிருங்காரக் காவியங்களும், நீண்ட கதைக் கவிதைகளும், மெல்லிசைப் பாடல்களும், புதிய அழகியலின் (சானட்) கவிதை- உரைநடை- கவிதைகள், பாடல்கள்- சில சினிமாப் பாட்டுக்களும் நல்ல இலக்கிய நயமுடன் இருக்கின்றன. குறுங்கவிதைகளும், கவிதை நாடகங்களும் இயற்றப்பட்டுள்ளன.
இது கன்னட இலக்கியத்தைப் பற்றி குறிப்பாக கவிதை வளர்ச்சியடைந்த விதத்தைப் பற்றிய மேலோட்டமான பார்வைதான். இது கன்னட இலக்கியம் வளர்ந்த விதத்தை சுருக்கமாகச் சொல்லும் ஒரு எளிய முயற்சி.